Sorry, you need to enable JavaScript to visit this website.

2021ஆம் ஆண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்

Read time: 1 நிமிடம்

ஊட்டம் பெரும் இந்தியா - ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் செரிவூட்டப்பட்ட உணவுகள்

நாம் அன்றாடம் வேலை செய்வதற்கான சக்தியை உண்ணும் உணவிலிருந்து பெறுகிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம், அவ்வளவு ஏன் சில நேரங்களில் அது உயிரிழப்பு ஏற்படவும் காரணமாக அமைந்துவிடும். எனவே நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.

ஒரு நாடு முன்னேற்றமடைவதற்குத் தொழில்நுட்பமும், அறிவியலும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்நாட்டு மக்களின் ஆரோக்கியமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவது ஒரு அரசின் கடமை. 2019 ஆம் ஆண்டு யுனிசெப் அறிக்கையானது,  ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 69% இறப்புகளுக்குக் காரணமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது.  இந்த ஊட்டச்சத்து குறைபாட்டினை எதிர்கொள்ள பல்வேறு உத்திகளை நம் நாடு கையாண்டு வருகிறது. குறிப்பாக, மராட்டிய ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையம் மற்றும் டாட்டா ஊட்டச்சத்து குழுவுடன்  பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த முன்னெடுப்புகளால் கூடிய விரைவில் இந்தியா ஊட்டச்சத்து குறைபாடில்லாத நாடாக முன்னேறும் என்று நம்புகிறோம்.

பரிணாம வளர்ச்சியினால் வண்ணத்துப்பூச்சிகளும் அந்துப்பூச்சிகளும் உலகை வெவ்வேறு முறைகளில் உணர்கின்றன - என்கிறது ஆய்வு

நாம் வாழும் உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. அது பிற உயிரினங்களான தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என எல்லா உயிரினங்களுக்கும் சொந்தம். பூச்சி இனங்களில் நம் மனதைக் கவர்வது வண்ணத்துப்பூச்சிகளே ஆகும். இதற்குக் காரணம் அவற்றின்  இறக்கைகளில் காணப்படும் பலவிதமான வண்ணங்களே ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வண்ணத்துப்பூச்சியை ரசிக்காதவர்களே இல்லை எனலாம்.

வண்ணத்துப்பூச்சிகள், அந்துப்பூச்சிகள் பற்றி பல அறிவியல் தகவல்களை இக்கட்டுரையில் காணலாம். மேலும் இவற்றுக்கிடையேயான வேறுபாடுகளையும் நுட்பமாக ஆராய்கிறது இக்கட்டுரை. இப்பூச்சிகளின் கண்கள் எவ்வாறு ஒளி சிமிட்டல் விகிதங்களில் ஒரு ஒளி மூலத்தை உணர்கின்றன என்று ஆய்வு செய்துள்ளனர். பகலாடிகளான வண்ணத்துப்பூச்சிகளும் இரவாடிகளான அந்துப்பூச்சிகளும் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகிறது என்பதையும் தன் ஆராய்சிகளின் மூலம் விளக்கியிருக்கிறார் பேராசிரியர் சஞ்சாய்.

தென்னிந்தியாவில் உள்ள நிலத்தடிநீர் நெருக்கடி - நீர் மேலாண்மைக்கான தீர்வுகள் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் சென்னை சந்தித்துவரும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று குடிநீர்ப் பற்றாக்குறை ஆகும். வறட்சியான பருவநிலை, குறைவான மழையளவு போன்றவற்றால் பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரையே நம்பியிருக்கின்றனர். அன்றாடம் குறைந்து வரும் நிலத்தடி நீரானது நம் நாட்டின் முன்னேற்றத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இவ்வாறு குறைந்துவரும் நிலத்தடிநீரினை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இக்கட்டுரை நன்கு விவரிக்கிறது. தேசிய மையத்தின் அறிக்கையானது, 2030 ஆம் ஆண்டில், 40 சதவீத மக்கள் தொகைக்கு குடிநீர் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் நீர் பற்றாக்குறை காரணமாக சிறு மற்றும் குறு தொழில்களும் மற்றும் வேளாண்-சார்  தொழில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகக்கூடும்  என்று எச்சரிப்பதோடு அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

கருப்பை புற்றுநோயைக் கண்டறியும் குறிப்பான்கள்

நம் நாடு மருத்துவதுறையில் பல்வேறு முன்னேற்றங்களைப் பெற்றிருந்தாலும், புற்றுநோயை எதிர்கொள்வது என்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. இந்தியாவில் 10,000 பெண்களில் சுமார் 15 பேருக்கு  கருப்பை புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது உலக அளவில் கருப்பை புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் இரண்டாம் இடம் ஆகும். எவ்வளவு சீக்கிரம் நோயாளி மருத்துவமனைக்கு வருகிறாரே அவ்வளவு சீக்கிரம் அவர் குணமடையும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

கருப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? மேலும் பரவாமல் தடுப்பது எப்படி? புற்றுநோயின் நிலைகள்? வழங்கப்படும் மருத்துவ முறைகள்? போன்ற தகவல்களை இக்கட்டுரை வழங்குகிறது. மரபணு சோதனை முறையின் மூலம் யாரெல்லாம் கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று கண்டறிய முடிகிறது. இதில் அதிக ஆபத்துக்கான ஆதாரங்கள் இருக்கும் பெண்கள் அவர்களின் கருப்பையை முற்காப்பு ஓபோரெக்டோமி (prophylactic oophorectomy) என்னும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றும் முறை போன்றவற்றை விளக்குகிறது. இவற்றின் மூலம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 80 சதவிகிதம் குறைக்க முடியும் என்பதை ஆதாரபூர்வமாக இக்கட்டுரை விளக்குகிறது.

வெண்முதுகுப் பாறூக்கழுகுகளின் வாழ்வியல் ரகசியங்கள்- ஆய்வு முடிவுகள்

உலகில் காணப்படும் பெரும்பாலான இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக அறிவியளாலர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றில் ஒன்று வெண்முதுகுப் பாறூக்கழுகும் ஒன்றாகும். இரைக்கொல்லி பறவையான இவை காட்டிலுள்ள இறந்த மற்றும் அழுகிய நிலையில் இருக்கும் உயிரினங்களை உண்பதால் சுற்றுப்புற தூய்மையாளர்களாக செயல்படுகின்றனர். இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களை அலசுகிறது இக்கட்டுரை.

இந்தப் பாறூக் கழுகுகளின் எண்ணிக்கை குறித்து ஆராய்சியாளர்கள் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் கண்காணித்து வருகிறார்கள். இவற்றில் வெண்முதுகுப் பாறு, செந்தலைப் பாறு, இந்தியப் பாறு, கருங்கழுத்துப் பாறு போன்ற இனங்கள் இந்த காப்பகத்தில் காணப்படுகிறது. பாம்பே இயற்கை அறிவியல் மையம் நடத்திய சமீபத்திய ஆய்வில்,  பாறுக்கழுகுகளுக்கு போதுமான உணவு வழங்குதல், இவை வாழும் காடுகளைச் சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை ஏற்படுத்துதல், குறைந்துவருவதற்கான காரணங்களை ஆய்தல், மக்களுக்கு அவற்றைப் பாதுகாப்பதற்கான விழுப்புணர்ச்சியை ஏற்படுத்துதல் போன்ற செயல்களை செய்துவருகிறது.

அடுத்த ஆண்டில் அறிவியல் கட்டுரைகளின் மூலம் ஒரு உற்சாக பயணத்தை அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். தெளிவான விவரிப்புகளுடன் கூடிய பல அற்புதமான அறிவியல் கட்டுரைகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருவதற்காகக் காத்திருங்கள்