Sorry, you need to enable JavaScript to visit this website.

இமயமலைகளில் ஏற்படும் பனி உருகல் அரபிக்கடலை கடற்சுடர் பாசிகளால் ஒளிர்விக்கின்றது

Read time: 1 min
இமயமலைகளில் ஏற்படும் பனி உருகல் அரபிக்கடலை கடற்சுடர் பாசிகளால் ஒளிர்விக்கின்றது

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையின் கடற்கரைகளில் இருளின் இடையே கடல்நீரின்மேல் நீல ஒளியுடனான ஒரு போர்வை படர்ந்ததுபோன்ற ஒரு அழகிய காட்சியை மக்கள் கண்டனர். இது நாக்டிலுகா (Noctiluca) என்னும் ஈர்கசைவாழி (Dinoflagellates) வகையைச் சேர்ந்த மிதவைப் பாசிகளின் பெருக்கால் ஏற்பட்ட பாசித்திரளின் விளைவாகும். அலைகளின் மீது ஒளிவண்ணம் தீட்டிய இந்த நுண்ணுயிரிகளின் “உயிரொளி உமிழ்வு”த்திறனைக்  கண்டு மெய்சிலிர்த்த மக்கள் அவற்றை புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததை நாம் அறிந்திருப்போம். ஆனால் கடற்சுடர் எனப்படும் இந்த நாக்டிலுகா ஸ்கின்டில்லன்ஸ் (Noctiluca scintillans) ஒரு மகிழ்ச்சிக்கான ஆதாரமன்று. மாறாக அவை பருவநிலை மாற்றத்தால் நம் சமுத்திரங்களில் ஏற்படும் நீரின் வேதியியல் மாற்றத்தை நமக்கு சுட்டிக்காட்டும் ஓரு நிலைமானியாகும்.  ஆம், கடல்களில் இயல்பாக இருக்கக்கூடிய இருகலப்பாசிகளின் (Diatoms) இடத்தைக் கடந்த சில ஆண்டுகளாக இந்த நாக்டிலுகா வகை பாசிகள்  நிரப்பி வருகின்றன. இதன் விளைவாக கடல்நீரின் பிராணவாயுவின் அளவானது கணிசமாக குறைந்து வருகின்றது. அதிகரித்துவரும் இந்த நிகழ்வானது, புவி வெப்பமயமாதலின் விளைவாக இமயமலைகளில் ஏற்படும் பனி உருகலுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என சமீபத்திய அய்வொன்று கூறுகின்றது.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் தலைமையேற்று நடத்திய இந்த ஆய்வானது சைய்ன்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Scientific Reports) என்னும் ஆய்விதழில் ஆய்வறிக்கையாக வெளியாகியுள்ளது. இமய-திபத்திய பீடபூமியில் காணப்படும் பனிப்போர்வைகளின் அளவுகள் சமீபத்தில் குறைந்து வருகின்றன. இப்பனிப்போர்வைகளின் இழப்பால் அம்மலைகளில் இருந்து வீசும் பருவக்காற்றானது அதீத ஈரப்பதத்துடனும், மேலும் வெப்பமூட்டப்பட்டும் இருப்பதை இந்த ஆய்வு காட்டுகின்றது. இவ்வாறு கிளம்பும் காற்றானது வடக்கு அரபிக்கடலின் மேற்புற நீர்பரப்புகளை சூடாக்குவதால் அங்கு வெவ்வேறு வெப்பநிலை அடுக்குகளுடனான ஒரு நீர்நிலை உருவாக்கப்படுகின்றது. இதனால் அங்கே எற்படவேண்டிய நீரடுக்குகளுக்கு இடையான ஊட்டச்சத்து சுழற்சி பாதிக்கப்படுகின்றது. அதன் விளைவாக அடிமட்ட நீர் அடுக்குகளுக்கு சரியாக ஊட்டச்சத்து சென்றடையாத சூழல் ஏற்படுகின்றது. இத்தகைய சூழல் நாக்டிலுகா ஸ்கின்டில்லன்ஸ் போன்ற பாசிகளுக்கு சாதகமாகவும் பிற பாசி வகைகளுக்கு பாதகமாகமும் அமைகின்றது.

“நம் இந்தியக்கடற் பகுதிகளில் நாக்டிலுகா பாசிப்பெருக்குகள் கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது” என்று கூறுகிறார் செல்வி மஹி மங்கேஷ்வர். இவர் அரபிக்கடலில் ஏற்படும் உணவூட்ட மாறுதல்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் ஒரு கடற்சார் ஆய்வாளர். இவர் மேற்கூறப்பட்டுள்ள ஆய்வில் அங்கம் வகிக்கவில்லை. “உயிரொளி உமிழ்வுகள், மீன்களின் பெருமரணம் போன்ற பல்வேறு கண்ணுக்குப் புலப்படும் சம்பவங்களால் தான், வேகமாக மாறிவரும் பருவநிலையின் இதுபோன்ற விளைவுகளை நாம் இன்று கவனிக்கத் துவங்கியுள்ளோம்” எனவும் அவர் கூறுகிறார்.

நுண்ணுயிர் தாவர மிதவைகள் (Phytoplankton) பெரும்பாலும் நீர்நிலைகளில் மிதந்து வாழும் நுண்ணிய ஒரு செல்லுயிரிகளாகும். இவை இதர தாவரங்களைப் போல கரியமிலவாயுவை உட்கொண்டு சூரியசக்தியின் மூலம் ஆற்றல் பெறும் உயிரிகளாகும். எனவே உணவுச் சங்கிலியில் இவை அடிமட்ட நிலைகளில் இருந்து, தாமாக உணவை உற்பத்தி செய்ய இயலா சிறிய மீன்கள் முதல் சுறா போன்ற பெரும் கொன்றுண்ணிகள் வரையிலான பல்வேறு கடலுயிரிகளுக்கு உணவு வழங்கும் உயிரிகளாகவும் ஆற்றல் உற்பத்தியாளர்களாகவும் திகழ்கின்றனர்.

ஆனால் நாக்டிலுகா போன்ற சில தாவர நுண்ணுயிர் மிதவைகள் தாமாக உணவை உற்பத்தி செய்வதோடு நில்லாமல், இதர மிதவை உயிரிகள், அவற்றின் முட்டைகள் மற்றும் தங்களைச் சுற்றி உலவும் சத்துத் துகள்களை கொண்றுண்ணும் திறனையும் பெற்றுள்ளன. இதனால் இவை சத்துக்கள் குறைந்த நீர்ச்சூழல்களிலும் எளிதாக உயிர் வாழக்கூடியவையாக திகழ்கின்றன. வெப்பமூட்டப்பட்ட, சத்துக்குறைந்த நீரானது கடலின் மேற்பரப்பிலும் சத்துமிகுந்த குளிர்ந்த நீரானது கடலின் கீழ் அடுக்குகளிலும் இருக்கும் நிலை உருவாவதால், மேல் அடுக்குகள் தாவர நுண்ணுயிர் மிதவைகள் வளரத்தேவையான நைட்ரேட் மற்றும் மணிச்சத்துக்களை (phosphate) சரியான அளவுகளில் பெறுவதில்லை. ஆனால் இதுபோன்ற நைட்ரேட் இல்லாத நீர் சூழலானது பிற மிதவை உயிரிகளை கொண்றுண்ணும் நாக்டிலுகா  போன்ற உயிரிகளுக்கு மிகவும் ஏற்ற வாழ்வியல் சூழலாக அமைகின்றது

“இந்த அசாதாரணமான மாற்றங்கள் நாக்டிலுகா ஸ்கின்டில்லன்ஸ் போன்ற கலப்புண்ணிகளிற்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதால் இருகலப்பாசிகளிற்கு பதிலாக சமீப காலங்களில் இந்த நாக்டிலுகா பாசிகளே குளிர்கால பாசிப்படர்வு உயிரிகளாக இருந்து வருகின்றன” என இவ்வாய்வை மேற்கொண்ட ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

புவி வெப்பமயமாதலின் விளைவாக, எப்போதும் குளிர்ந்த நிலையில் இமய-திபத்திய பீடபூமியில்  வீசும் வடகிழக்கு  காற்றுகள் சமீபமாக அங்கு குறைந்து வரும் பனிப்போர்வைகளால் வெப்பமூட்டப்பட்டுவிட்டன.  இவை தன் அடர்த்தியையும் குறைத்துகொண்டுள்ளது. இந்த அடர்த்தி குறைந்த வெப்பக்காற்றானது குளிர்காலத்தில் நேராக அரபிக் கடலில் சென்று கலக்கின்றது. இமயமலைகளில் குறைந்து வரும் பனிப்போர்வைகளுக்கும் அரேபியக்கடல் அனுபவித்துவரும் கனிம நைட்ரேட் அளவின் சரிவுகளுக்கும் இடையே 1960 ஆண்டிலிருந்து சுமார் 40 ஆண்டுகளாக உள்ள இடைத்தொடர்பை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.  “கடந்த 40 ஆண்டுகளில் அரேபியக்கடலில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் கனிம நைட்ரேட் குறைந்து வருகின்றது. இது, ‘நிரந்தர பிராணவாயு குன்றிய மண்டலம் (permanent oxygen minimum zone)’ என்னும் ஒரு வகை நீர்ப்பகுதியின் விரிவாக்கத்தால் விளையும் நைதரசனிறக்கம் (denitrification) எனும் ஒரு செயல்பாட்டின் அதிகரிப்பால் தான் நிகழ்ந்திருக்கக்கூடும்” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆபத்தை உணர்த்தும் பாசிப்பெருக்குகள்

உலகளாவிய அளவில் புவி வெப்பமயமாதல் கடல்நீரில் ஏற்படும் இயற்பியல் மற்றும் உயிர்-வேதியியல் மாற்றங்களிற்கு உணவு-உற்பத்தி செய்யும் கடலுயிரிகள் எவ்வாறு எதிர் வினையாற்றுகின்றன என்பதை நமக்கு, இது போன்ற அதிகரித்துவரும் நாக்டிலுகா பாசிப்பெருக்குகள் காட்டிவிடுகின்றன. உருகும் பனிப்பாறைகள் மற்றும் வடிந்து வரும் பனிநிலைகள் மட்டுமே இனிமேல் பருவநிலை மாற்றத்தை பறைசாற்றும் காட்சிகளாக இருக்கப்போவதில்லை. “இனி வரும் காலத்தில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறிக்கும் நிழற்படங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் போது அனைவருக்கும் பரிட்சையமான, நமக்கு அருகே நிகழக்கூடிய இதுபோன்ற இருளில் ஒளிரும் மிதவைப்பாசித்திரள்களின் படங்களையும் இணைக்க வேண்டும் என நான் கருதுகிறேன்” என்கிறார் செல்வி மங்கேஷ்வர்.

அரபிக்கடலில் பிராணவாயு குறைந்த சூழலானது ஒரு நிரந்தரமான அம்சமாகவே மாறிவருகின்றது. இது, இச்சூழலில் வாழ தகவமைத்துக் கொண்டுள்ள பல உயிரிகளுக்கு சாதகமாக விளங்குகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இந்திய கடல்களில் காணப்படும் இழுதுமீன்கள் (Jellyfish) தற்போது தொடர்ச்சியாக  நம் கடல்களில் காணப்படுகின்றன. இது அதிகரித்துவரும் நாக்டிலுகா பாசிப்பெருக்குகளுடன் இணைந்து நிகழ்வது குறிப்பிடத்தக்கது.  இவ்வகை நாக்டிலுகா பாசிப்பெருக்குகள் விஷத்தன்மையற்றதாக இருந்தாலும், அவற்றின் பரவலானது நமது கடலின் நுண்ணிய சூழலியலை மிகவும் பாதிக்கவல்லது. பிற மிதவை நுண்ணுயிரிகளை உண்ணக்கூடிய இவை நெத்திலி, மத்தி போன்ற வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் பெற்ற பல முக்கியமான மீன் இனங்களின் முட்டைகளையும் கபளீகரம் செய்துவிடுகின்றன.

அரபிக்கடலை நம்பி வாழும் சிறு மீனவர்களை இவ்வகை பாசிப்பெருக்குகள் தற்போது பாதிக்கத் துவங்கிவிட்டன. கரைவலை மற்றும் செதில் வலைகளைக் கொண்டு மீன்பிடிக்கும் போது மீனவர்களின் வலைகளில் சமீபமாக பெரிய அளவில் இழுதுமீன்களே அகப்படுகின்றன. எந்தவொரு சந்தை மதிப்பும் இல்லாத இவ்வகை மீன்களால் மீனவர்களுக்கு நஷ்டமே விளைகின்றது. “இந்திய நீர்நிலைகளில் இதுகுறித்த ஆய்வு இன்னும் பெரிதாக இல்லாவிட்டாலும், சில ஆண்டுகளில் இவ்வகை பாசிப்பெருக்குகளால் மீனவர்கள் பிடிக்கும் பல முக்கிய மீன் வகைகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என நாங்கள் கருதுகிறோம்” என்கிறார் செல்வி மங்கேஷ்வர். இது இவ்வாறு இருக்க, இப்பாசிகளால் மீனவர்களுக்கு ஒரு நன்மையும் விளையத்தான் செய்கிறது. குறையும் பிராணவாயு அளவுகளால் அதீத மீன் இறப்புகள் கடல்களில் நிகழ்கின்றன. இதனால் சில நேரங்களில் ஏராளமான இறந்த மீன்கள் ஒருசேர மீனவர்களுக்கு கிடைத்து,  அவர்களுக்கு ஒரு குறுகிய கால பொருளாதார நன்மையை விளைவிக்கின்றன.  

பருவநிலை மாற்றத்தின் எச்சரிக்கை மணிகளை நாம் கடந்துவிட்டோம் என்பதையும், நாம் இப்போது அதன் ஆரம்ப நிலை விளைவுகளை கடல்சார் உயிரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளின் வாயிலாக காணத் துவங்கிவிட்டோம் என்பதையும் இந்த ஆய்வு நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த தெளிவான புரிதல் நமக்கு வேண்டுமேயானால், இவ்வாய்வில் திரட்டப்பட்டதுபோல இன்னும் அதிக அளவில் நமக்கு தரவுகள் தேவைப்படுகின்றன“ இந்திய கடலோரங்களை ஒட்டிய உயிரொளி உமிழ்வு திறன் கொண்ட பாசிப்பெருக்குகள் குறித்து தரவுகள் இன்னும் சரியாக நம்மிடம் இல்லை. இவற்றின் பருவகால போக்குகளை அறியவேண்டுமேயானால் இன்னும் தரவுகள் நமக்கு அவசியமாகின்றது. மக்களின் உதவியோடு அறிவியல் ரீதியில் இவ்வகை நிகழ்வுகளை ஆவணப்படுத்தினால் இவ்வகை பாசிப்பெருக்குகளின் பாதைகளை சீரான முறையில் கண்காணிக்கவும் அவற்றால் பயன்பெறவும் நம்மால் முடியும்” என வலியுறுத்துகிறார் செல்வி மங்கேஷ்வர்.