Sorry, you need to enable JavaScript to visit this website.

உலகம் வியந்த தமிழகத்தின் உலோகவியல் நுட்பங்கள்

Read time: १ मिनिट
உலகம் வியந்த தமிழகத்தின் உலோகவியல் நுட்பங்கள்

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, 2500 ஆண்டுகளுக்கு முன்பே உலோகவியலில் சிறந்து விளங்கிருந்தது. 1800 ஆம் ஆண்டிற்கு பிறகு நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் மூலமாக, இந்திய தீபகற்பத்தில் கிடைத்த கால்நடைகளுடன் தொடர்பான இரும்பு பொருட்கள், உலோகப் பொருட்கள், வெண்கலப் பாத்திரங்கள், ஆயுதங்கள் மற்றும் பாண்டங்கள் போன்ற மரபுசார் இரும்பு கைவினைப் பொருட்களின் வாயிலாக இரும்புசார் உலோகவியலில் தமிழ்நாடு உலகளவில் நிபுணத்துவம் பெற்றிருந்தது தெரிய வருகின்றது. உலகெங்கிலும் பிரபலமான "டமாஸ்கஸ் வாள்" (Damascus sword) என்னும் வாள் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட உயர் கரிம எஃகு உருவாக்கத்தின் சிறப்பினை பறைசாற்றுவதாய் இருக்கிறது. குறிப்பாக கிரேக்கம், பெர்சியா, மற்றும் ரோமானிய வரலாற்றுக் குறிப்பில் இத்தகைய இரும்பு பொருட்கள் பற்றிய சிறப்பு குறிப்புகள் காணப்படுகின்றன. இக்குறிப்புகள் கிமு முதல் நூற்றாண்டிற்கும் முந்தியவை.

சமீபத்தில், பெங்களூரு தேசிய உயர் ஆய்வு நிறுவனத்தை (National Institute of Advanced Studies (NIAS), Bengaluru) சேர்ந்த பேராசிரியர் சாரதா ஸ்ரீநிவாசன் அவர்கள் பதிப்பித்த இரண்டு ஆய்வுக்கட்டுரைகளில் இந்தியாவின் தொன்மையான உலோகவியல் செயல்முறைகளை பற்றிய தரவுகளை ஆவணப்படுத்தியுள்ளார். இந்த ஆய்வு முடிவுகள் தொன்ம உலோகவியல் எனும் சிறப்பு பிரிவில், மெட்டிரியல்ஸ் அண்ட் மெனுபாக்ச்சரிங் ப்ராசஸ் (Materials and Manufacturing Processes) எனும் ஆய்வு சஞ்சிகையில் ஆய்வுக்கட்டுரைகளாக வந்துள்ளன.

தனது ஒரு கட்டுரையில், பேராசிரியர் சாரதா சீனிவாசன், ஆதிச்சநல்லூரில், இரும்பு யுகத்தில், தகரம் மற்றும் வெண்கல உலோகவியலை பயன்படுத்திய உயரிய தொழில்நுட்ப உத்திகள் குறித்து அறிவியற்பூர்வமாக விளக்கியுள்ளார். தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த உலோக அகழ்வுக் கள சான்றுகள், உலோகவியல் தொடர்பான அகழ்வாய்வுகளில் இதுவரை கிடைத்த மிகச்சிறந்த மாதிரிகளாக கருதப்படுகின்றன. குறிப்பாக, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து இன்றுவரை கேரளத்தில் இந்த மரபு பாதுகாக்கப்பட்டு வருவதை இந்த கண்டுபிடிப்பின் மூலமாக அறிய முடிகிறது. இன்னும் ஒரு ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் தெற்கு ஆற்காடு மாவட்டத்தில் உள்ள மேல் சிறுவளூரில் உள்ள உயரிய கரிமம்-இரும்பு உற்பத்தி செய்யததற்கான ஆதாரங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

தனித்துவம் வாய்ந்த செயல்முறை தொழில்நுட்பப் பயன்பாட்டின் விளைவாக, உலோகப்பொருட்கள் நுண்ணிய அளவிலும் தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளன. உலோகங்களின் கலவை மற்றும் உருவாக்கப்பட்ட முறைகளை அறிந்துகொள்வதற்காக, மின்னணு நுண்ணோக்கியினைக் (Electron Microscope) கொண்டு இந்த உலோகப் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன. நுண்ணாய்வின் மூலம் உலோகத்தின் தனித்தன்மை அறியப்படுவதுடன், அவற்றின் உருவாக்கதில் தொடர்புடைய தொழில்நுட்பம் அறியப்படுகிறது. ஆதிச்சநல்லூரில் தொடர்பான ஆய்வில், இரும்புக்காலத்தை சேர்ந்த மிக நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்டு  வார்க்கப்பட்ட வெண்கல வகைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். இவை கிமு 100 முதல் 50திற்கு உட்பட்டதாகும். அதிக வெப்பத்தில் வார்க்கப்படும் இவ்வகை வெண்கலத்தை, 'பீட்டா வெண்கலம்’ (Beta Bronze) என்றழைக்கப் படுகின்றது. உலோகவியலில், இரு உலோகங்களுக்கு இடைபட்ட “உலோக இடையீட்டுச் சேர்மங்கள்” நிலையை ஆங்கிலத்தில் பீட்டா நிலை (Beta Phase) என்று அழைக்கப்படுகிறது. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலப்ப பொருள்கள் பீட்டா வெண்கலம் வகையை சார்ந்தாகும். இந்த பீட்டா வெண்கலம் மிக அதிக வெப்பத்தில் செம்பு மற்றும் வெள்ளீயம் கொண்டு வார்க்கப்படுவது. இவற்றிலும் குறிப்பாக 23 சதவீதம் வெள்ளீயம் சேர்த்து உருவாக்கப்படும் மிக உயரிய வகை பீட்டா வெண்கலம் மிகச்சிறந்த வலிமை கொண்டாதாகும்.

"இந்த ஆதிச்சநல்லூர் பாண்டங்களில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய பண்புகளாவன ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான தடிமன் கொண்ட தன்மையினை இழைத்து இவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேல் பொறிக்கப்பட்டுள்ள அலங்காரத் துளைகள் உயர்-வெள்ளீய வெண்கல வெளிப்பாடுகள் உலோகவியலில் உலகளவில் நமக்குள்ள தனித்துவத்தினையும், மேன்மையினையும் எடுத்துரைக்கின்றன" என்கிறார் பேராசிரியர் சாரதா சீனிவாசன். இப்படிப்பட்ட நுண்ணிய வார்ப்பு உயரிய வெள்ளீய வெண்கலப் பாண்டங்கள் உலகில் எங்கும் காணக்கிடைக்காதவை. இவ்வகை நுட்ப வேலைப்பாடுகளை  செய்துவரும் குழுக்களைப் பற்றியும் இன்று அருகி வரும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் பேராசிரியர் சாரதா சீனிவாசன் ஆவணப்படுத்தியுள்ளார்.

மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் தென்னாற்காடு, மேல் சிறுவலூரில் உள்ள வார்ப்பு எஃகின் உருவாக்கத்தில் கரியகப் புடமிடல் பற்றிய குறிப்புகளை அவனப்படுத்தியுள்ளார். கரியகப் புடமிடுதல் என்பது இரும்பு உலோகக் கலவைகளை உருகுநிலைக்கு மேல் சூடாக்கி கரிமத்துடன் (carbon) இணைக்கும் தொழில்நுட்பமாகும். இரும்பினை கரிமப் பொருட்களுடன் சேர்த்து 1400 டிகிரி வெப்ப அளவுக்கும் குறையாமல் பல மணிநேரம் வார்க்கப்பட்டே உயரிய வுட்ஸ் எஃகு உருவாக்கப்படுகிறது. இந்த முறையினையே கரியகப் புடமிடல் (Carburisation) என வழங்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கிடைத்த ஆதாரங்களுடன் ஒத்து போகின்றது. மேலும் இது கிமு இரண்டாம் நூற்றாண்டில் சோசியசு (Zozimus) பற்றிய கிரேக்க குறிப்புகளுடன் ஒத்துபோகின்றது. இவ்வகை உயரிய கரிம  எஃகு கொண்டே மேற்கு ஆசியாவில் பரவலாக ஏற்றுமதி செய்யப்பட்ட டமாஸ்கஸ் வாள் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் பரவலாக அறியப்படும் இந்த உயரிய கரிம உட்சு எஃகு (Wootz  steel) தென்னிந்தியாவில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. “உட்சு” எனும் இந்த சொல்லாடல் கூட “உருக்கு” எனும் சொல்லிலிருந்தே பிறந்து “உக்கு” என திரிந்து “உட்சு”  என மருவியிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. உட்சு எஃகு எனப்படும் இந்த கலப்பு உலோகத்தின் தன்மை மைக்கேல் பாரடே உட்பட உலகெங்கிலும் உலோகவியல் விஞ்ஞானிகளை பெரிதும் வியக்க வைத்திருக்கிறது.

மேலும் மேல்சிறுவலூரில் கிடைத்த வார்ப்புத் துண்டங்களை ஆய்வு செய்ததில் அவைகள்  அதி உயரிய கரிம எஃகினால் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. எஃகு என்பது  இரும்பு மற்றும் சிறு அளவிலான கரிமம் கலந்த உலோகக் கலவையாகும். பொதுவாக எஃகில் 0.4 சதவீதம் மட்டுமே கரிமம் கலக்கப்படும் ஆனால் இந்த அதி உயரிய கரிம எஃகில் 1.5 முதல் இரண்டு சதவீதம் வரை கரிமம் கலக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய  எஃகு முன்னமே காரியகப் புடமிடல் முறைகளின்  உருவாக்கப்பட்டிருக்கக் கூடும் என இந்த ஆய்வு கூறுகின்றது. 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த  யாத்ரீகர்கள் தென்னிந்தியாவில் மூன்று வகையான கரியகப் புடமிடும் செயல்முறை நுட்பங்கள் இருந்ததாக குறிப்பிடுகின்றனர். அவையாவன, டெக்கானி அல்லது ஐதராபாதி செயல்முறை, மைசூரு செயல்முறை மற்றும் தமிழ்நாடு செயல்முறை. இவற்றுள் தமிழ்நாடு செயல்முறை மிகவும் தொன்மையும் தனித்தன்மையும் வாய்ந்ததென அறியப்படுகிறது.

இருப்பினும் இந்த தொன்மம் நிறைத்த உலோகவியல் நுட்பங்கள் அருகி வருவதாக நம்மை எச்சரிக்கிறார் பேராசிரியர் சாரதா சீனிவாசன். "இத்தகைய வார்ப்பு உலோகம் செய்யும் சமூகத்தினர் அதிக அளவில் பரதப்புழா நதிக்கரையிழும், உலோகக் கண்ணாடி செய்யும் கைவினையாளர்கள் அரன்முலாவிலும் வசிக்கின்றனர். சென்ற வருடம் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களது வாழ்வாதாரத்தினை புனரமைக்க வேண்டிய முக்கியத்துவத்தையும், இப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை அவனப்படுத்தி இந்த பண்பாட்டு மரபினை காக்க வேண்டியதும் மிக அவசியமானதாகும்" என்கிறார் பேராசிரியர் சாரதா சீனிவாசன்.

இத்தகைய ஆய்வுகள் தென்னிந்தியாவின் தொன்மமான உலோகவியல் தொழில்நுட்பத்தினையும், உலோகவியலில் தென்னிந்தியர்களுக்கு  ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது. இந்த கண்டுபிடிப்பு வரலாற்று வாய்ந்த தொல்பொருள் ஆய்வுகள், பெருங்கற்காலம் மற்றும் இரும்பு யுகம் தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்துகின்றது.

"இப்படிப்பட்ட தொன்ம சான்றுகள் குறித்த அறிவியல் பார்வையும், விழிப்புணர்வும் நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு இன்னும் அதிகமாக நாம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. தொல்லியல் அறிவியல் குறித்த ஆர்வத்தினை வளரும் பருவத்தினருக்கு இன்னும் நாம் அதிகமாக ஊட்ட நாம் கடமைப்பட்டு உள்ளோம்" என்று முடித்தார் பேராசிரியர் சாரதா சீனிவாசன்.