Sorry, you need to enable JavaScript to visit this website.

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் புது வகை கேடயவால் பாம்பினம் கண்டுபிடிப்பு!

Read time: 1 நிமிடம்
Photo : Dr. V. J Jins

இந்தியா சுமார் 270 வகை பாம்பினங்களுக்கு இருப்பிடமாக திகழ்கிறது. இதில் சுமார் 60 இனங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகும். பல்லுயிர் வெப்ப மையமாக (biodiversity hotspot) விளங்கும் இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில், புதுப்புது தாவர மற்றும் விலங்கினங்கள் கண்டறியப்படுவது அடிக்கடி நிகழும் ஒன்றாகும். அப்படிப்பட்ட ஒரு முயற்சியில், கோவையிலுள்ள  சலீம் அலி பறவையியல் மட்டும் இயற்கை வரலாற்று மையம் (Sálim Ali Centre for Ornithology and Natural History (SACON)) மற்றும் லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமும் (Natural History Museum (NHM)) இணைந்து யூரோபெல்டிஸ் பூபதீயி (Uropeltis bhupathyi) எனும் புதுவகை கேடயவால் பாம்பினத்தை தமிழ் நாட்டின், கோவையிலுள்ள ஆனைக்கட்டி மலைகளில் கண்டறிந்துள்ளனர்.

கேடயவால் பாம்புகள் யூரோபெல்டிடே (Uropeltidae) எனும் பாம்புக்குடும்பத்தை சார்ந்தவையாகும். இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. யூரோபெல்டிடே பாம்புகள் தங்கள் வால்களின் நுணிகளில் கெரட்டின் எனப்படும் புரதத்தாலான கேடயம் (keratinous shield) போன்ற அமைப்பைக்கொண்டமையால் இவை “கேடயவால் பாம்பு” எனும் பெயர் பெற்றுள்ளன. இதே புரதம் தான் பல விலங்குகளின் கொம்புகளுக்கான மூலப் பொருளாகும். இவை இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படும் நிலத்தடியில் குழித்தோண்டி வாழக்கூடிய நச்சுத்தன்மையற்ற பாம்புகளாகும். இவ்வகை பாம்பினங்கள் பலவற்றின் பல்வகைமை, உயிரியல் மற்றும் இயற்கை வரலாற்றுத்தகவல்கள் இன்னும் அறியப்படாமலேயே உள்ளது

புதிதாக கண்டறியப்பட்ட யூரோபெல்டிஸ் பூபதீயி இனமானது சூடாக்சா (Zootaxa) எனும் ஆய்விதழில் ஆய்வறிக்கையாக விவரிக்கப்பட்டுள்ளது. இப்பாம்பு சுமார் 27-39 செண்டிமீட்டர் நீலத்தையும், கரும்பழுப்பு நிறமுள்ள உடலுடன் கூடிய  மிதமான வாற்கேடயத்தையும் கொண்டுள்ளதோடு, உடலின் மேற்பகுதியில் பன்னிறங்காட்டும் செதில்களையும் அடியில் சாம்பல் நிறத்தையும் கொண்டிருப்பதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஊர்வனவியலாளர்களில் ஒருவரான முனைவர் சுப்பிரமணியம் பூபதி அவர்களின் ஊர்வனவியல் பங்களிப்பை கவுரவப்படுத்தும் விதமாக அவரின் பெயர் இப்பாம்பினத்திற்கு சூட்டப்பட்டுள்ளது  இந்த இனத்தின் மாதிரிகள் SACON வளாகத்துள்ளிருந்தே சேகரிக்கப்பட்டதால்,  ஆய்வாசிரியர்கள் இப்பாம்பினத்தின் பொதுப்பெயராக “பூபதியின் யூரோபெல்டிஸ்” அல்லது “பூபதியின் கேடயவால்” எனும் பெயர்களைப்பரிந்துரைக்கின்றனர்.

சரி, இவ்வாறு ஒளிந்து வாழும் ஒரு பாம்பினத்தை ஆய்வாளர்கள் எப்படி கண்டெடுத்தனர்? இவ்வாய்வின் தலைமை ஆய்வாசிரியரான  முனைவர் வி.ஜெ. ஜின்ஸ் அவர்கள், தாம் யூரோபெல்டிட் பாம்புகளை பற்றி படித்துக்கொண்டும் அவற்றை இனங்காண இருக்கக்கூடிய பாகுபாட்டியல் திறவிகளை நோக்கிக்கோண்டும் இருந்த காலங்களை நினைவுக்கூறுகிறார். “எனது முனைவர் பட்டப்படிப்பின்போது, பாகுப்பாட்டியல் ரீதியில் சரியாக வகைப்படுத்தப்படாத பல புது யூரோபெல்ட்டிட் பாம்பினங்களை நான் அடிக்கடி காடுகளில் கண்டுவந்தேன். அவற்றின் உருவியல் பண்புகளை உற்றுநோக்கயேதுவாக அவற்றை புகைப்படங்களும் எடுத்து வந்தேன். SACON வளாகத்திலிருந்த (முன்னதாக யூ. எல்லியோடி என வகைப்படுத்தப்பட்டிருந்த) ஒரு பாம்பானது  யூ. எல்லியோடி போன்ற உடல் நிறப்பாங்குடனும் சற்றே மாறுபட்ட அடிவயிற்று செதில் எண்ணிக்கையுடனும் இருந்ததைக் கண்டபோது ஆச்சரியம் அடைந்தேன். யூ. எல்லியோடிக்கு 167 அடிவயிற்று செதில்கள் இருக்கும். ஆனால் இந்த புதுப்பாம்புகளில் 200க்கும் மேற்பட்ட செதில்கள் காணப்பட்டதோடு அவற்றின் தலைச்செதில்களின் வடிவம் மற்றும் அளவுகளும் சற்றே மாறுபட்டு இருந்தன” என ரிசர்ச் மேட்டர்ஸிற்கு அளித்த பேட்டியில்  கூறினார் முனைவர் ஜின்ஸ்.

இதற்கு பின்னர், முனைவர் ஜின்ஸ் அவர்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலைகளிலுள்ள யூரோபெல்டிட் பாம்பினங்களின் பாகுபாட்டியலில்  ஆராயும் வாய்ப்பு அமைந்துள்ளது. மண்ணைத்துளைத்து வாழும் பாம்புகளின் பாகுப்பாட்டியலில் நிபுணரான லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த முனைவர் டேவிடின் தலைமையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. “நாங்கள் அருங்காட்சியகத்திலிருந்த பல யூரோபெல்டிட் இனங்களின் மாதிரிகளை ஒப்பிட்டப்பின்னர், நான் ஆனைக்கட்டி மலைகளில் புகைப்படமெடுத்திருந்தது ஒரு புது இனமாக இருக்கக்கூடும் எனும் முடிவிற்கு வந்தோம்” என்கிறார் முனைவர் ஜின்ஸ்.

இதைத்தொடர்ந்து ஆய்வாளர்கள் களக்கணக்கெடுப்புகளில் ஈடுபட்டு, தங்கள் கண்டெடுத்த மாதிரிகளை அருங்காட்சியகத்திலிருந்த மாதிரிகளுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். இதில், இவர்களின் மாதிரிகளின் உடல்மேல் 17 மேல்புற செதில்களும், அடியில் 202 – 220 கீழ்புற செதில்களும் இருந்ததை கண்டறிந்துள்ளனர். இதர கேடயவால் பாம்பினங்களைப்போலே யூ. பூபதீயி யும் சாதுவாகவும், தம்மை தூக்கினால் கடிக்க முற்படாமலும், கைகளில் எளிதாக சுருண்டுக்கொண்டும் இருந்துள்ளது. வழக்கமாக இப்பாம்புகள் மண்ணிற்குள் புதையுண்டு வாழக்கூடியவையாக இருப்பினும், அவை வெளியே வரும் சமயங்களான காலை நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் ஆய்வாளர்கள் தங்கள் களப்பணிகளை மேற்கொண்டு இவற்றை கண்டெடுத்துள்ளனர்

இந்தப்புது இனத்தின் பரவல் எல்லைகளை புரிந்துகொள்ளுவதற்கு முன் அதுகுறித்த பல முக்கிய தகவல்களை சேகரிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ”நாங்கள், குழிதோண்டுதல் அல்லது திட்டமிட்ட மாதிரி உக்தியை கையாளுதல் போன்ற எந்த ஒரு படர்ந்த கணக்கெடுப்பு முறைகளையும் இந்த ஆய்வில் பயன்படுத்தவில்லை. ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியுடன் கூடிய முழு ஆனைக்கட்டி மலைப்பகுதிகளிலும்  தீவிரமான  களப்பணி மேற்க்கொண்டால் இவ்வினத்தின் பரவல் மற்றும் அடர்த்தி நிலவரம் தெளிவாக விளங்கக்கூடும்” என்கிறார் முனைவர். ஜின்ஸ்

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழும் பல்வேறு உயிரினங்களைப்போல, யூ. பூபதீயி யும்; செங்கல் தொழிற்சாலைகளால் மண் சுரண்டப்படுதல் மூலம் வாழ்விடங்களை இழத்தல், சாலையில் வாகனங்களால் கொல்லப்படுதல் மற்றும் உயிர்கொல்லி பூஞ்சை நோய் போன்ற நோய்கள் என பல குறிப்பிடத்தக்க அச்சுருத்தல்களை எதிர்கொள்ளுகின்றன. “இருப்பினும் இந்த புது இனம் கண்டறியப்பட்ட இடஞ்சார்ந்து நன்கு பரவியிருக்கக் கூடியதாக விளங்குவதால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தினுள்ளே இவ்வினத்தின் நல்லதொரு எண்ணிக்கையிலிருக்கக்கூடும் என நாங்கள் எதிர்பார்கிறோம்” என நன்நம்பிக்கையுடன் கூறுகிறார் முனைவர் ஜின்ஸ்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் இதுப்போன்ற புதுப்புது இனங்களின் கண்டுபிடிப்புகள், சுதந்திரத்திற்குப்பின் அறியப்படாத நம் தேசத்தின் பல்லுயிர் வளமைப்பற்றிய அறிவினை மேம்படுத்த உதவுகிறது. “இந்திய நீர்நில வாழ்விகள் மற்றும் ஊர்வனவிலங்குவளத்தின் பாகுபாட்டியலாய்வுகள் பெரும்பாலும் ஆங்கிலேய குடியேற்றக்காலத்திலேயே நிகழ்ந்துள்ளன. 19ஆம் நூற்றாண்டிற்குப்பின் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஊர்வன விலங்குகளின் பாகுப்பாட்டியல் நடவடிக்கைகள் பெரிதும் நடைபெறவில்லை” என குறிப்பிடுகிறார் முனைவர் ஜின்ஸ்.

இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் மரமேரும் நண்டுகள் மற்றும் நிலத்தடியில் வசிக்கும் தவளைகள் போன்ற சில இன்றியமையா கண்டுபிடிப்புகளும் இங்கு நிகழ்ந்துள்ளன. ”பல ஆய்வாளர்களின் தீவிர களக்கணக்கெடுப்புகள் மற்றும் தேடல்களின் விளைவாக கடந்த பத்து ஆண்டுகளில் பல புது இனங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆய்வு மேற்கொள்ள முனையும் இதர ஆராய்ச்சியாளர்களுக்கு உந்து சக்தியாக எங்களின் இந்த கண்டுபிடிப்பு இருக்கும் என நம்புகிறோம்.  அங்கே இன்னும் ஏனைய ஊர்வனவிலங்கினங்கள் நம்மால் கண்டுபிடிக்கப்படுவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றன” என தன் இறுதி கருத்துக்களக்கூறி முடித்தார் முனைவர் ஜின்ஸ்.