முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

மனிதகுரங்குகளைப் போல சைகைகள் மூலம் செய்திகளை பரிமாற்றும் நாட்டுக்குரங்குகள் – கண்டறிந்துள்ளது ஆய்வு

Read time: 1 min
பெங்களூரு
21 நவ 2019
மனிதகுரங்குகளைப் போல சைகைகள் மூலம் செய்திகளை பரிமாற்றும் நாட்டுக்குரங்குகள் – கண்டறிந்துள்ளது ஆய்வு

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”
-54:1 குற்றாலக்குறவஞ்சி
(குறத்தி மலைவளங்கூறுதல்)

என குற்றால மலையின் அழகை விவரிக்கும் போது ஆண் குரங்குகள் (வானரம்) பெண் குரங்குகளிடம் (மந்தி) கனிகளைக்கொடுத்து  சைகைகள் மூலம் கொஞ்சி விளையாடும் அழகிய காட்சியினை “குற்றாலக் குறவஞ்சியில்” 18ஆம் நூற்றாண்டிலேயே ஆவணப்படுத்தியுள்ளார்  திரிக்கூடராசப்பக்கவிராயர். 

நாமும் இதுபோன்ற மந்திகளின் வழித்தோன்றல்களே என பரிணாம வரலாறு ஆணித்தரமாக நிரூபித்தாலும் நாம் அதை பல நேரங்களில் உணரத்தவறி விடுகின்றோம். நடத்தை ரீதியிலும், பழக்க வழக்கங்களிலும் நாம் நம் குரங்குச் சகோதரர்களுடன் பல்வேறு அடிப்படைகளில் ஒற்று நிற்பதை நாம் அவ்வப்போது கவனிக்க மறந்து விடுகின்றோம். நம் கையாளும் தகவல் பரிமாற்ற யுக்திகள் இதற்கு ஒரு சிறந்த சான்று. மொழி சார் தகவல் பரிமாற்றம் என்னும் அதி நவீன யுக்தியை மனிதர்கள் இன்று பரிணமித்திருந்தாலும், குரங்குகளை உள்ளடக்கிய மற்ற சில உயர் விலங்குகளும் (primates) இத்திறன் வளர்ச்சியில் பெரிதும் பின்தங்கி இருந்துவிடவில்லை.

மனிதர்களை உள்ளடக்கிய குரங்குகள் மற்றும் இதர உயர் விலங்குகளின் தகவல் பரிமாற்றத்திற்கு அடிப்படையாக விளங்குவது, முக பாவங்கள், சைகைகள் மற்றும் குரலெழுப்புதல் போன்ற சில அடிப்படை சமிக்ஞைகளே ஆகும். சமீபத்திய ஆய்வொன்றில் பெங்களூருவின் தேசிய உயர் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பானெட் மகாக் (bonnet macaque) எனும் நாட்டுக்குரங்கான மகாகா ரெடியேடாவின்  (Macaca radiata) சைகை ரீதியிலான தகவல் பரிமாற்ற ஆற்றலை ஆராய்ந்து அதை ஏற்கனவே அறியப்பட்ட பிற மனிதக்குரங்கினங்களின் ஆற்றளுடன் ஒப்பிட்டும் பார்த்துள்ளனர்.

மனிதக்குரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட பிற ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு சைகையானது “ஒரு ஏற்பி உயிரினத்திடமிரிந்து பதில் பெரும் வண்ணம் வெளிப்படுத்தப்படும் தொடர்ச்சியற்ற, எந்திரத்தன்மையுடனான, பயனற்ற ஒரு உடல் அசைவாகும்” என வரையறுக்கப்படுகிறது. மனித உளவியல் ஆய்வுகளிலிருந்து தழுவப்பட்ட இந்த  வரையறையானது இந்த ஆய்விலும்  குரங்குகளின் பல்வேறு சைகைகளை ஆராய பயன்படுத்தப் பட்டுள்ளது.

“மனிதக்குரங்குகள் அல்லாத இதர உயர் விலங்குகளின் மொழியியல் பண்புகளை புரிந்துகொண்டு அவற்றை ஒப்பிடுவதே இவ்வாய்வின் பிரதான குறிக்கோளாக இருந்ததால், பிற ஆய்வுகளில் பயன்டுத்தப்பட்ட அதே வரையறைகளை இங்கும் பயன்படுத்த வேண்டியது அவசியமாயிற்று”, என விளக்குகிறார் இவ்வாய்வின் முதன்மை ஆசிரியர் முனைவர் ஸ்ரீஜதா குப்தா.

இவர் தற்போது யார்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருந்துவருகிறார்.

ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை அடைவதற்காக இந்த நாட்டுக்குரங்குகள் 32 வகை சைகைகளை சமூக ரீதி தகவல் பரிமாற்ற நோக்கத்துடன் வெளிப்படுத்துகின்றன என இவ்வாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சைகைகளின் உத்தேச பயன்பாட்டு நோக்கங்களின் அடிப்படையில் இவர்கள் அவற்றை “செயல்பட்டுத் தொகுதிகளாக” (functional repertoires) முதலில் வகைப்படுத்தியுள்ளனர். 

“ஒரே மாதிரியான அல்லது ஒரே வகையிலான நடத்தைகளை உள்ளடக்கிய நடத்தைப்பட்டியலானது ஒரு “செயல்பாட்டுத் தொகுதி” எனப்படும்” என விவரிக்கிறார் முனைவர் குப்தா. இக்குரங்குகள் அடிக்கடி வெளிப்படுத்திய நடத்தைகள் -  “இணைப்பு”, “சண்டை” அல்லது “விளையாட்டு” என மூவகை தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு குரங்கு மற்றொரு குரங்கினை சுத்தபடுத்தும் நடத்தையான அல்லோக்ரூமிங்க் (allogrooming) அல்லது சோசியல் க்ரூமிங்க் (social grooming) எனும் சமூக நடத்தை ஒரு இணைப்பு வகை நடத்தையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே, ஒரு குரங்கு மற்றொரு குரங்கின் மென்மயிரை ஆய்வது, அவற்றிலிருக்கும் புறவொட்டுண்ணிகள் அல்லது உலர்ந்த தோல் பகுதிகளை அகற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கும். சில நேரங்களில் இவ்வாறு அகற்றப்படும் ஒட்டுண்ணிகளை அந்த சுத்தப்படுத்தும் குரங்கு உண்ணவும் கூடும்! ஆனால் சில நேரங்களில் ஒரே குழுவைச்சேர்ந்த குரங்குகளைடையே மோதல்கள்களும் ஏற்படும். இதுபோன்றச் சூழல்களில் வெளிப்படுத்தப்படும் நடத்தைகள் சண்டை நடத்தைகளாகும்.

“விளையாட்டு நடத்தைகள் வரையறுக்க சற்று கடினமானவை. ஆனால் தொடர்ச்சியாக இக்குரங்குகளை கவனித்து வந்தால் சில நடத்தைகள் விளையாட்டு நோக்கத்துடன் தான் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை நம்மால் கவனிக்க முடியும். பெரும்பாலும் இவ்வகை நடத்தைகள் குட்டிகள் மற்றும் இளவயது குரங்குகளிடமே அதிகம் காணப்படும்” என விவரித்தார் முனைவர் குப்தா.

இந்த நாட்டுக்குரங்குகள் சைகைகளை மேற்குறிப்பிட்ட நோக்கங்கள் அல்லாமல், இரை தேடுதல், பயணங்களை அறிவுறுத்துதல் மற்றும் தாய்-சேய் அளவளாவுதல் போன்ற நோகங்களிற்கும் பயன்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர்.

சமிக்ஞைகளை கவனித்து பதிலளிக்க வேண்டிய “ஏற்பி” குரங்கானது எந்தவொரு எதிர்வினையும் ஆற்றாத நேரங்களில், சைகைகளை வெளிப்படுத்தும் குரங்கானது ஒரே சைகையினை விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதை ஆய்வாளர்கள் கவனித்துள்ளனர். இதனால், இச்சைகைகள் தகவல் பரிமாற்ற நோக்கத்துடனே தான் வெளிப்படுத்தப்படுகின்றன என வாதாடுகின்றனர் அவர்கள்.  சுவாரசியமாக பேராசிரியர் சின்கா மற்றும் முனைவர் குப்தா இணைந்த நடத்திய வேறொரு ஆய்வில் பந்திப்பூரில் இருக்கும் இதே வகை நாட்டுக்குரங்குகள் மனித செயல்பாட்டுகளிற்கு எதிர்வினையாக சில புதிய சைகைகளை வெளிப்படுத்துவதை கண்டறிந்துள்ளனர். பந்திப்பூர் தேசிய பூங்காவானது கர்நாடக மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தளமாகும். இங்கே இக்குரங்குகள் சுற்றுலா பயணிகளிடம் கைகளை நீட்டுவது, உணவை வேண்டுவது போன்ற சைகைகளை வெளிப்படுத்துவது அறியப்பட்ட ஒரு நடத்தையாகும். ஆனால் தற்போதைய ஆய்வின் மூலம் இதுப்போன்ற கைவழிச் சைகைகளை காட்டுவாழ் குரங்குகள் பிறகுரங்குகளிடமிரிந்து எளிதாக கற்றுக்கொண்டு அச்சைகைகளை தேவைக்கேற்ப திட்டமிட்டு வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவை என்பதை இவர்கள்  ஆவணப்படுத்தியுள்ளனர்.

பெருங்குரங்குகள் அல்லாத உயர் விலங்குகளின் சிக்கலான சைகை ரீதி தகவல் பரிமாற்றத்தைப் பற்றிய அடிப்படை புரிதலை ஏற்படுத்த முனைந்த ஒரு முதல் முயற்சி இவ்வாய்வாகும். 

“இதுநாள் வரை சிம்பான்சிகள், போனோபோக்கள், கொரில்லாக்கள் மற்றும் ஒராங்குட்டான்கள் மட்டுமே மொழியை-ஒத்த தன்மைகளுடன் கூடிய தகவல் பரிமாற்ற கட்டமைப்புகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதே திறன்கள் ஒரு காட்டுவாழ் சிறுக்குரங்கினத்தின் தகவல் பரிமாற்ற கட்டமைப்பிலும் இருப்பதை எங்களின் தற்போதைய ஆய்வு முடிவுகள் தெளிவுப்படுத்தியுள்ளன” என்கிறார் முனைவர் குப்தா.

இதுபோன்ற ஆய்வுகள் மனித மொழியியல் பரிணாமத்தினை புரிந்துகொள்ள வழிவகுப்பதோடு நில்லாமல் நாம் நம் குரங்குச் சகோதரர்களுடன் எவ்வளவு அருகில் ஒற்று நிற்கின்றோம் என்பதை உணரவும் உதவுகின்றன.

“எங்கள் ஆய்வு அறிவிக்கும்  பிரதான செய்தி மிகவும் வெளிப்படையானது. இன்று நம்மைச்சுற்றி உலவும் அனேக உயிரினங்களைப்போல மனித இனமும் பல லட்சமாண்டுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவே ஆகும். எனவே, நம்மைச்சுற்றி வாழும் அனைத்து பல்லுயிர்களுடன் நாம் சிறிய அல்லது பெரிய அளவில் பிணையப்பட்டுள்ளோம். மனரீதி மற்றும் தகவல் பரிமாற்ற திறன்களோ, உடலியில், உருவவியல், மற்றும் சமூகவியல்களிலோ நாம் பிற உயிர்களுடன் ஒரு மறுக்க முடியாத இயற்கை வரலாற்றினை பகிர்ந்துவருகிறோம். இயற்கையுடனும் பிற உயிர்களுடனும் நாம் அளவளாவும்போது, நாம் பகிர்ந்துவரும் இந்த இயற்கை வரலாறானது நமக்குள் ஒரு பச்சாதாபத்தைத் தூண்ட என்றுமே தவறி விடக்கூடாது”, எனக்கூறி முடித்தார் முனைவர் குப்தா.