முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

பழுப்பு நிறக் கீரிகளின் உண்ணும் நடத்தையை உந்துதலின் விளைவால் உற்றுப்பார்த்த ஆய்வு

Bengaluru
21 பிப் 2020
பழுப்பு நிறக் கீரிகளின் உண்ணும் நடத்தையை உந்துதலின் விளைவால் உற்றுப்பார்த்த ஆய்வு

“மூங்கா வெருகெலி மூவரி யணிலொ
டாங்கவை நான்குங் குட்டிக் குரிய..”
550 (பொருளதிகாரம் - மரபியல்)

விலங்குகளின் இளமைப்பெயர்களை குறிக்கும் தமிழ் சொற்களுக்கான சூத்திரத்தை கி.மு 700லிருந்தே வகுத்து வைத்துள்ளார் தொல்காப்பியர். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் வரும் மேற்குறிப்பிட்டுள்ள சூத்திரமானது “மூங்கா” என்னும் ஒரு விலங்கின் இளமைப்பெயரை “குட்டி” எனக்குறிக்க வேண்டும் என்று கூறுகிறது. அணில், காட்டுப்ப்பூனை மற்றும் எலியுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்த “மூங்கா”வின் இளமைப்பெயரை “குட்டி” அல்லாமல் “பறழ்” அல்லது “பிள்ளை” எனவும் குறிக்கலாம் என சூத்திரம் கூறுகிறது. இன்றும் “பிள்ளை” என்னும் தொல்காப்பிய இலக்கணத்துடன் நம் வட்டாரங்களில் உலாவி வரும் “கீரி”களே இந்த “மூங்கா” விலங்காகும். “கீரிப்பிள்ளை” என்று நாம் அழைக்கும் இவ்விலங்கு தொல்காப்பிய காலம் முதல் தமிழகத்தில் வாழும் ஒரு விலங்காகவே இருந்துள்ளது.  

இந்த வரலாற்று விலங்கை தழுவிய ஆய்வொன்று சமீபத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விக்னேஷ் காமாத் என்னும் கள சூழலியலாளர் தமிழகத்தின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 2016 ஆம் ஆண்டில் தவளைகள் பற்றிய ஒரு ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது,  ஒரு நாள் தற்செயலாக  ஒரு  நீலகிரி மந்தி (Nilgiri Langur) வகைக் குரங்கின் பாதி மட்டும் புசிக்கப்பட்ட சடலத்தை அந்தக் காடுகளில் கண்டார். ஆர்வத்துடன், திரு. காமாத் இந்தக் குரங்கை கொன்ற விலங்கை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார்.

“அந்தக் குரங்கின் கொன்றுண்ணியானது மீண்டும் அச்சடலத்தில் எஞ்சிய மாமிசத்தைப் புசிக்க வரும் என்னும் நம்பிக்கையோடு அந்தச் சடலத்திற்கு முன்னே ஒரு நிழற்படப்பொறியினை (camera trap) பொருத்தினேன்” என்று அச்சம்பவத்தை விவரிக்கிறார் இவர். 

சுவரசியமாக, அந்தச் சடலத்தின் மீதங்களை உண்ண   பல வகையான சிறு பாலூட்டி விலங்குகள் வந்ததை இவரின் கருவிகள் பதிவாக்கியன. இவ்வாறு வந்த பல விலங்குகளில் ஒன்று மட்டும் இவரின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. அது ஹெர்பெஸ்டெஸ் ஃபுஸ்கஸ் (Herpestes fuscus)  என்னும்  ஒரு பழுப்பு நிறக் கீரி ஆகும்.

பழுப்பு நிறக் கீரிகள் மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் இலங்கை பல்லுயிர் வெப்பமையத்தில் மட்டுமே காணப்படக்கூடிய ஒரு பகுதிக்குரித்தான (endemic) சிறுபாலூட்டி விலங்கு. இது அதிகம் அறியப்படாத, எளிதில் காண முடியாத ஒரு அரிய வகை விலங்கினமாகும். இந்த அரிய தன்மையின் விளைவாக, இவற்றின் பரவல் எல்லைக்குள்ளே இருக்கக்கூடிய உத்தேசமான எண்ணிக்கையைக் கூட இதுவரை தெளிவாக வகுக்கப்பட முடியாமல் இருந்தது. ஆனால், சமீபத்தில் அதிகமாக காணப்படுவதாலும், நிழற்படப்பொறிகளின் தரவுகளாலும் இவற்றை “பாத்திக்கப்படக்கூடிய உயிரி (Vulnerable)” என்னும் முந்தைய நிலையில் இருந்து “குறைவான அக்கறை தேவைப்படும் உயிரி (Least Concern)” என்னும் நிலைக்கு  சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியமானது (International Union for Conservation of Nature (IUCN)) தற்போது  நிலையிறக்கம் செய்துள்ளது. இருப்பினும், இவ்விலங்குகளின் சூழலியல், நடத்தை பண்புகள் மற்றும் அவை எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகள் பற்றிய விபரங்கள் இன்னும் சரியாக அறியப்படாமலேயே உள்ளது.

சமீபத்திய ஆய்வொன்றில், பெங்களூருவின் குப்பி லேப்ஸில் (Gubbi Labs) ஆய்வாளராக இருக்கும் திரு காமாத், அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள சென்னை முதலைப்பண்ணை மற்றும் ஊர்வனவியல் மையத்தை (The Madras Crocodile Bank Trust and Centre for Herpetology) சார்ந்த முனைவர் சேஷாத்ரி கே.ஏஸ் உடன் இணைந்து இந்த பழுப்பு நிறக் கீரிகளின் உண்ணும் நடத்தையினை ஆவண படுத்தியுள்ளார். தற்செயலானதாக இருந்தாலும், நழுவித்தப்பிக்கும் திறன் கொண்ட இவ்விலங்குகளின் அறியப்படாத சில நடத்தை அம்சங்களைப் பற்றிய புரிதலை  இவ்வாய்வு மேம்படுத்தியுள்ளது. ஜர்னல் ஒஃப் த்ரெடெண்டட் டாக்ஸா (Journal of Threatened Taxa) என்னும் ஆய்விதழில் இது ஒரு ஆய்வுக்கட்டுரையாக பிரதியாகியுள்ளது.

‘தனிமனித கவனிப்பு’ மற்றும் ‘நிழற்படப்பொறியினால் காட்சிப்பதிவு’ போன்ற முறைகள் மூலம் பழுப்பு நிறக் கீரிகளின் உண்ணும் நடத்தையை ஆய்வாளர்கள், மூன்று வெவ்வேறு தருணங்களில் கவனித்துள்ளனர். “எளிதில் கையாளக்கூடியதாக விளங்குவதால், தப்பிக்கும் திறனுள்ள அரிய விலங்கினங்களை ஆராயும் இதுபோன்ற ஆய்வுகளிற்கு நிழற்படப்பொறிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆய்வாளர்கள் இதுபோன்ற அரிய விலங்குகளின் வாழ்க்கை முறைகள் பற்றிய நுண்ணறிவினை மேம்படுத்திக்கொள்ள இக்கருவி பெரிதும் உதவியாக உள்ளது. இவ்விலங்குகளின் எண்ணிக்கை, படர்வு மற்றும் நடத்தைப் பண்புகளை நாம் புரிந்து கொள்ள இந்த அறிவு பெரிதும் உதவும்” என்கிறார் திரு காமாத்.

குரங்கின் சடலத்தை கீரிகள் உண்ணும் இந்த வகை துப்புரவு நடத்தையில் நான்கு பிரதான அம்சங்கள்/நிலைகள் இருப்பதை இவ்வாய்வு ஆவணப்படுத்தியுள்ளது. அவை “உண்ணுதல் (feeding)”, “கண்காணிப்பு (vigilance)”, “நடை (walking)” மற்றும் “சீர்படுத்தல் (grooming)” ஆகிய நிலைகள் ஆகும். இவை அனைத்தும் நிழற்படப்பொறிகளினால் பல்வேறு இரவுகளில் எடுக்கப்பட்ட துள்ளியமான படங்கள் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு தருவாயில், காப்பகத்தின் உள்ளே, சாலை ஓரத்தின் அடர்ந்த புதர்களில் இருந்து வெளிப்பட்ட ஒரு சோடி பழுப்பு நிறக் கீரிகளின் உண்ணும் நடத்தையை இருகண்நோக்கிகள் மற்றும் ஒளிப்படக்கருவிகளின் உதவியுடன் ‘தனிமனித கவனிப்பு’ முறையில் ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். கீரிகள் சென்ற பின்னர் அவை வெளியேறிய அந்த இடத்தை உற்றுநோக்கிய போது, அங்கே கீரிகள் மண்ணை பறித்து ஒரு பள்ளம் தோண்டியிருந்ததை கண்டுள்ளனர். இது ஒருவேளை அங்கே இருந்த பூச்சிகள் மட்டும் இதர முதுகுத்தண்டில்லா உயிரிகளைத் தேடிய முயற்சியாக இருந்திருக்கலாம் என இவர்கள் கருதுகின்றனர்.  மூன்றாவதாக, ஒரு நாள் வீடுகளருகே ஒரு குப்பை கொட்டிடத்தில் ஒரு தனி பழுப்புநிறக் கீரி உண்ணுவதையும் ஆவணப்படுத்டியுள்ளனர்.

இது போன்ற உண்ணும் நடத்தைகளைத் தவிர, இக்கீரிகள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் உட்சாலைகளில் கொல்லப்பட்டு கிடந்த ஒரு தருணத்தையும் ஆவணப்படுத்தியுள்ளது இவ்வாய்வு. இக்காப்பாமானது கட்டுப்படுத்தப்பட்ட வாகனப்போக்குவரத்துடன் கூடிய பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும், இதுபோன்ற சாலைக்கொலைகள் இங்குள்ள அரிய வனவுயிர்களிற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே விளங்குகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

“சாலைக்கொலைகளை தவிர்க்க வேண்டுமானால் காப்பகத்திற்குள் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிப்பது அவசியமாகும். இரவு நேரங்களில் குறைந்த அடர்த்தியுடனான போக்குவரத்துக்கூட வனவுயிர்களிற்கு குறிப்பாக தவளைகள் போன்ற சிறிய விலங்குகளின் மரணத்திற்கு வழிவகுக்கும்” என்கிறார் முனைவர் சேஷாத்ரி.

சாலைகள் போன்ற தடுப்புகள் இயற்கை வாழ்விடங்களை பிளவு படுத்தி விலங்குகளின் நகர்வுகளை பெரிதும் பாதிக்கின்றன.

“எனவே இதுபோன்ற சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் மின்சார கம்பிகளை இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் உள்ளே கட்டுப்படுத்திக் குறைத்துக்கொள்ளவேண்டும்” என அறிவுறுத்துகிறார்.

கள உயிரியலாளர்களின் சூழலியல் ஆர்வம் மற்றும் ஒன்றிணைந்த கவனிப்புகள்,  மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அரிதான பெரிதும் அறியப்படாத ஒரு விலங்கினைப்பற்றிய நுண்ணறிவினை எவ்வாறு  நமக்கு வழங்கியுள்ளது என்பதை இவ்வாய்வு நமக்கு காட்டியுள்ளது. இந்தியாவின் பல வன்வுயிர்களின் பாதுகாப்பு நிலைகளை திரும்பிப்பார்க்க இயற்கை வரலாற்று அறிவானது மிகவும் அடிப்படையாக இருப்பதால் இதுபோன்ற ஆய்வுகள் மிகவும் அத்தியாவசியமாகிறது.

“நம் தேசத்தின் பல வனவுயிரிகளின் சூழலியல் மற்றும் நடத்தை பண்புகள் குறித்த அறிவியல் புரிதல்களில் பல இடைவெளிகள் இருக்கின்றன. குறிப்பாக பெரும் புலாலுண்ணி பாலூட்டிகள் போல் கவர்ச்சிகரமாக இல்லாத பல விலங்குகள் இதில் அடக்கம். ஆனால் இதுபோன்ற சிறிய மற்றும் பெரிதும் அறியப்படாத விலங்குகளின் சூழலியல் மற்றும் படர்வு எல்லைகள் பற்றி நாம் புரிந்துக்கொண்டால் மட்டுமே அவற்றைப் பேணி பாதுகாக்க முடியும்” எனக்கூறி முடிக்கின்றார் திரு காமாத்.          

Tamil