முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

முடக்கு வாத நோய்க்கும் கோவிட்-19 தொற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள்

Read time: 1 min
Bengaluru
1 ஜூலை 2022
முடக்கு  வாத நோய்க்கும் கோவிட்-19 தொற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள்

முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும். இது தன்-எதிர்ப்பு நோய் வகைகளுள் (auto-immune disease) ஒன்றாகும்.    சமீபத்திய திறனாய்வு ஒன்று இந்த முடக்கு வாதத்துக்கும் கோவிட்-19 தொற்றுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

மார்ச் 2020 முதல், கொரோனா வைரஸும் (SARS-CoV2) அதனால் ஏற்பட்ட நோய்தொற்றும் நம் வாழ்வில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் என்பது பெரும் காலமாகத் தெரியலாம். ஆனால், அந்த நோயின் முழு விளைவுகளை நாம் அறிந்துகொள்ள அந்தக் காலம் மிகக் குறைவானதே ஆகும். முந்தைய பெருந்தொற்றுகளைப் போல் இல்லாமல்; ஆய்வாளர்களால் வெகு விரைவில் நோய் சம்பந்தப்பட்ட தரவுகளைச் சேகரிக்கவும் அதை ஆராயவும் முடிகின்ற ஒரு காலத்தில் நாம் தற்போது இருக்கின்றோம். இதன் விளைவாக கோவிட்-19 நம் உடலை எவ்வாறு பாதிக்கின்றது? ஏன் சிலர் மட்டும் எளிதில் இந்நோயால் தாக்கப்படுகின்றனர் அல்லது இறக்கின்றனர்? இவற்றுக்கான  சிறந்த சிகிச்சை முறைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகளை மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்களால்  தேடவும் அடையவும் முடிகின்றது.

இந்தியா, ஜப்பான்,  அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து கோவிட்-19 மற்றும் முடக்கு வாதம் சம்பந்தப்பட்ட ஆய்வறிக்கைகளை எல்லாம் திரட்டி திறனாய்வுக்குட்படுத்தி அம்முடிவுகளை ஒரு முறையான திறனாய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். கோவிட்-19 நுரையீரலைத் தாக்கும் அடிப்படைக்கும் முடக்கு வாத நோய், எலும்பு மற்றும் தசைகளைத் தாக்கும் அடிப்படைக்கும் ஒற்றுமைகள் உள்ளதை இவர்களின் கட்டுரை தெளிவுப்படுத்துகிறது.  செல்ஸ் (Cells) என்னும் ஆய்விதழில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் வெளியான இதுபோன்ற திறனாய்வுகள் முடக்கு வாத நோயாளிகள் மற்றவர்களைவிட கொரோனா தாக்குதலுக்கு எளிதில் ஆளாகக்கூடியவர்களாக இருக்கின்றனர் என்பதைத் தெளிவுப்படுத்தியுள்ளன. முடக்கு வாதம் போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு கோவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தற்போதைய ஆய்வின் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். முடக்கு வாத நோயாளிகளுக்கு கோவிட்-19ஆல் பாதிக்கப்படும் சாத்தியத்தோடு இறக்கும் ஆபத்தும் சற்றே அதிகரித்திருந்தை 2020 ஏப்ரலில் ஆங்கிலேய ஒன்றியத்தை (United Kingdom) சார்ந்த தரவுகள் காட்டியுள்ளன. சமீபத்திய ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. முடக்கு வாத நோயாளிகள் சராசரியாகவே ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த பல நோய்த் தொற்றுகளுக்கு ஆளாக்கூடியவர்கள். கோவிட்-19 நோயாளிகளும் இதே நோய்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

நம் உடல் முடக்கு வாத நோய் மற்றும் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக செயலாற்றும் முறைகளில் மூன்று முறைகள் இவ்விரண்டு நோய்களுக்கும் ஒத்துப்போகின்றன என இத்திறனாய்வின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  முதலாவதாக, இவ்விரண்டு நோய்களுமே நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு வகை செல்களான தைமஸ்-நிணநீர் உயிரணுக்களை (T-lymphocytes) முடக்கும் எதிர்வினைகளைத் தூண்டுகின்றன. ஆரோக்கியமான சூழலில் இந்த தைமஸ்-நிணநீர் உயிரணுக்கள், உடலில் ஊடுருவிய ஒரு வைரசைக் கண்டறிந்து, அவற்றை அழிக்கும் வேதிப்பொருட்களை வெளியிட்டு அவ்வைரசுகளைக் கொன்றழிக்கும். மேலும் இவை உயிரணுக்களுக்கு இடையே செய்திகளைக் கடத்தும் சைட்டோகைன் (cytokines) எனப்படும் உயிரணு தொடர்பி மூலக்கூறுகளை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டவை. ஆனால், நோய்களால் தைமஸ்-நிணநீர் உயிரணுக்களின் சில வேதியல் எதிர்வினைகள் முடங்கும்போது, அவை அதீதமாக சைட்டோகைன்களை உற்பத்தி செய்து வெளியிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. திசுக்களில் வீக்கம் ஏற்படுத்தல், உயிரணுக்களுக்குக் கிடைக்கும் பிராண வாயுவைத் தடுத்தல் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைத்தல் போன்ற விளைவுகள் இந்த அதீத சைட்டோகைனின்களால் ஏற்படுகின்றன. முடக்கு வாத நோயில் எந்த வைரசும் உடலைத் தாக்குவதில்லை என்றாலும், கோவிட்-19 தாக்கும் போது உடலில் தைமஸ்-நிணநீர் உயிரணுக்களில் வெளியாகும் அதே வகை சைட்டோகைன்கள் உற்பத்தியாவதோடு வீக்கத்தையும் விளைவிக்கின்றது. இதன் மூலம் இவ்விரண்டு நோய்களுமே உடலின் நோய் எதிர்ப்பாற்றலை ஒரே போன்ற மூலக்கூறுகளை அதீதமாக உற்பத்தி செய்யத்தூண்டி செயலாற்றுகின்றன என்பது தெளிவாகின்றது.

இரண்டாவதாக இவ்விரு நோய்களும் ஆஞ்சியோடென்சின் மாற்று நொதியான ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங்க் என்சைம் (Angiotensin Converting Enzyme- ACE) ஈடுபடும் சில வேதி வினைகளையும் ஒரேபோல பாதிக்கின்றன. நம் உடலின் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்தல், மின் அயனிகளின் அளவுகளைச் சரியாக வைத்திருத்தல் போன்ற செயல்களைப் புரியும்  ரெனின் ஆஞ்சியோடென்சின் சிஸ்டம் (ராஸ்) என்னும் பெரும் அமைப்பின் ஒரு பங்காக மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் திகழ்கின்றன. ஆஞ்சியோடென்சின் 1 என்னும் நொதியை அஞ்சியோடென்சின் 2 ஆக மாற்றுவது  ACE ஆகும். இதேபோல் ACE2 ஆனது அஞ்சியோடென்சின் 2ஐ அஞ்சியோடென்சின் 1-7 ஆக மாற்றக்கூடியது. அஞ்சியோடென்சின் 2 வீக்கத்தை விளைவிக்கும் நொதி. அஞ்சியோடென்சின் 1-7 அதை தடுக்கும் நொதி. கோவிட்-19 மற்றும் முடக்கு வாதம் இரண்டிலுமே அஞ்சியோடென்சின் 2 அஞ்சியோடென்சின் 1-7 ஆக மாறுவது தடைப்பட்டுபோவதால் இந்தக் கட்டமைப்பில் ஒரு  நிலைக்குழைவு ஏற்படுகின்றது. இதன் விளைவாக உடலில் அஞ்சியோடென்சின் 2 அதிகரித்து திசுக்களில் ஆபத்தான அளவுகளில் வீக்கம் ஏற்பட்டுவிடுகின்றது. 

இவ்விரண்டு நோய்களுக்கும் இருக்கும் மூன்றாவது ஒற்றுமை மாக்ரோபேஜஸ் (Macrophages) என்னும் இரத்த விழுங்கணுக்களை மையப்பட்டுத்தியுள்ளது. விழுங்கணுக்கள் உடலில் ஆரோக்கியமற்ற எந்த உயிரணுவையும் தாக்கி விழுங்கிவிடுபவை. இவ்வாறு விழுங்கப்படும் பட்டியலில் புற்று நோய் அணுக்கள், உயிரணுக்கழிவுகள் அல்லது பாக்டீரியாக்கள் அடங்கும். சராசரி மனிதர்களின் நுரையீரல் மற்றும் மூட்டுகளில் ஒரே போன்ற விழுங்கணுக்கள் இருக்கும். ஆனால் கோவிட்-19 நோயாளிகளின் நுரையீரல் விழுங்கணுக்கள் முடக்கு வாத நோயாளிகளின் மூட்டுகளில் இருக்கும் விழுங்கணுக்களுடன் ஒத்துபோகின்றன. அதாவது நோய் எதிர்ப்பு மண்டலமானது இவ்விரு நோய்களுக்கு எதிராகவும் ஒரே வகையான விழுங்கணுக்களை ஏவி எதிர்வினையாற்றுகின்றது. 
 
கோவிட்-19 மற்றும் முடக்கு வாத நோய்கள் ஒரே போன்ற வேதியல் பாதைகள் மூலம் உடலைப் பாதிப்பதால், முடக்கு வாதத்துக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு உதவும் நிலை உள்ளது. ஆனால் முடக்கு வாதத்துக்கு எதிரான மருந்துகளை எவ்வாறு கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்பதைப்பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என ஆய்வாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

“எந்தவொரு குறிப்பிட்ட முடக்கு வாத மருந்துக்கும் கோவிட்-19 தொற்றுக்கும் இடையிலான தொடர்புகள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை” என அவர்கள் எச்சரிக்கின்றனர். 

முடக்கு வாத நோயாளிகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்படும் அல்லது இறக்கும் ஆபத்து அதிகம் இருப்பது ஒரு முக்கிய சவால். முடக்கு வாத நோயாளிகளை அடிக்கடி கண்காணிப்பது மருத்துவ ரீதியில் ஒரு நல்ல யுக்தியாகத் திகழ்ந்தாலும் அவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்தால் கொரோனா தொற்றுக்குள்ளாகும் அபாயமும் இருக்கின்றது. இணையவழி மருத்துவ ஆலோசனை மற்றும் கண்காணிப்பு முறைகள் இதற்குத் தீர்வாக இருக்கின்றன. கானொளி காட்சிகள் மற்றும் மின்னஞ்சல் மூலம் உரையாடுதல் போன்ற இணையவழி முறைகளைத் தற்போது மருத்துவர்கள் இந்தியாவில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். முடக்கு வாத நோயாளிகள் கோவிட்-19 தொற்றுக்கு எளிதில் உள்ளாகக்கூடும் ஆபத்தைச் சரியாகக் கையாளுவது ஓர் அவசரத் தேவையாக இருந்தாலும், இவ்விரண்டு நோய்களுக்கும் பொதுவாக உள்ள வேதியல் பாதைகளைக்  கண்டறிந்தால் கோவிட்-19 தொற்றினை எதிர்கொள்ள மேம்பட்ட சில சிகிச்சை முறைகள் நமக்குக் கிடைக்கும் வாய்ப்பிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.