முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

வித்தியாசமான இரு புதிய நீலக்குறிஞ்சி வகைகளை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

கேரளா
14 ஆக 2019
வித்தியாசமான இரு புதிய நீலக்குறிஞ்சி வகைகளை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

தன் நீலநிறப்பூக்களால் மலையினை நீலப்போர்வையால் போர்த்தி, நீலகிரி மலை எனப்பெயர் பெற வைத்த அதிசய தாவரம் நீலக்குறிஞ்சி. ஸ்ட்ரோபிலன்தஸ் குந்தியானஸ் (Strobilanthes kunthianus) என்ற அறிவியல்  பெயரால் அறியப்படும் இவ்வகை குறிஞ்சி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு  ஒரு முறை மட்டுமே மலரும் தன்மையுடையதாகும், ஸ்ட்ரோபிலன்தஸ் என்ற இத்தாவரபேரினத்தில் சுமார் 350 வகை சிற்றினங்கள் உள்ளடங்கியுள்ளது. சென்ற வருடம் மேற்குத்தொடர்ச்சிமலைகளில் மலர்ந்து அனைவரையும் கவர்ந்த குறிஞ்சி மலர்கள், தமிழகம் மற்றும் கேரள  ஆராய்ச்சியாளர்கள் புது வகைகளை கண்டுபிடிக்க உறுதுணையானது.

கேரளாவின் கார்மல் கல்லூரி,  மாலா, புனித தோமையர் கல்லூரி, பாளை,, WWI இன்னோவேடிவ்  சொலுஷன்ஸ் (WWI Innovative Solutions) மற்றும் தமிழகத்தின் புனித ஜோசப் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இரண்டு புதிய ஸ்ட்ரோபிலன்தஸ் சிற்றினங்களை சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் கண்டுப்பிடித்துள்ளனர்.

வெப்பமண்டல ஆசியா, மடகாஸ்கர் நாடுகளில் பரவலாக காணப்படும் ஸ்ட்ரோபிலன்தஸ் என்ற பேரினம் சுமார் 350 வகை பூக்கும் தாவரங்களைக்கொண்டது. இரு இதழ்களுடன் தொப்பி போன்ற இதன் பூக்கள் வெண்மை, ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறங்களில் பூத்து, காட்டின் நிலப்பரப்பிற்கு அழகு சேர்க்கின்றன. இந்த இரண்டு வகை ஸ்ட்ரோபிலன்தஸ்களும் சுமார் 8 முதல் 12 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்து நீலக்குறுஞ்சியைப் போலவே கூட்டாக ஒரேநேரத்தில் பூத்து மடிபவை. மகரந்தத்தின் உருவ வேற்றுமையே இவற்றை மற்ற இனங்களினின்று வேறுபடுத்துபவை. சிக்குமகளூர் மற்றும் ஹாசன் மாவட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பூண்டு உணக்கக் கொட்டில்-களில் உள்ள மாதிரிகளுடன் ஒப்பிட்டு பார்த்த ஆய்வாளர்கள், கண்டறியப்பட்ட மாதிரிகள் அறிவியலுக்கு புதியவகை என்று வெகுவிரைவில் அறிந்தனர். "பிளான்ட் சயின்ஸ் டுடே" என்ற அறிவியல் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, கருநாடகத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து அறியப்பட்ட இந்த இரண்டு வகைத்தாவரங்களையும் அறிவியலுக்கு புதுவராவாகச்சேர்க்கிறது.

ஸ்ட்ரோபிலன்தஸ் முல்லயங்கிரியென்சிஸ் (Strobilanthes mullayangiriensis)  என்ற பெயரிடப்பட்டுள்ள முதல் சிற்றினமானது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், வெளிர் இளஞ்சிவப்பு நிறப்பூக்களுடன், சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு புது வகை குறிஞ்சி ஆகும். சிக்குமங்களுர் முல்லாயனாகிரி மலையுச்சியில் இவ்வினம் முதலில் கண்டறியப்பட்டதால் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு இப்பெயரைச் சூட்டியுள்ளனர். 

ஸ்ட்ரோபிலன்தஸ் பீசிலேயி (Strobilanthes bislei) என்றழைக்கப்படும் இரண்டாவது குறிஞ்சி சிற்றினமானது சுமார் 2.5 மீட்டர் வரை வளர்ந்து, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நீல நிற பூக்களால், மத்திய மேற்குதொடர் மலைகளை அலங்கரிக்கும் தாவரமாகும்.  கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில், பிசிலே மலைகள் (Bisle Ghat) என்ற பல்லுயிர் மையத்தில் கண்டறியப்பட்டதால்  இது இப்பெயர் பெற்றுள்ளது.

இவ்விரண்டு செடிகளும் மற்ற குறிஞ்சி இனம்போல் கூட்டமாக வளரும், முதிர்ச்சியடைய சுமார் எட்டு முதல் பதினாறு வருடங்கள் ஆகும். ஆயினும்  பூவின் வடிவும், மகரந்தத்தின் அமைப்பினால் இவை மற்ற வகையினின்று  சற்றே மாறுபட்டுள்ளதைக்கண்ட ஆராய்ச்சியாளர்கள், இவற்றினை குறிஞ்சி  இன பட்டியலில் புது வரவாய் சேர்த்துள்ளனர்.

இயற்கை எழில் கொஞ்சும்  மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களின் தாவர மற்றும் விலங்கினங்கள், பல ஆராய்ச்சியாளர்களையும், இயற்கை  ஆர்வலர்களையும் பெருவாரியாகக் கவரும் தன்மையுடன் விளங்குகிறது. இம்மலைத்தொடர்கள்  தன்னகத்தே மேலும் பல ஆச்சர்யங்களை புதைத்து வைத்திருக்கக்கூடும் என்பதில்  ஐயமில்லை.

Tamil