![பக்கே புலி ரிசர்விலிருந்து ட்ரைமரேசுரஸ் சலாசர் [பட வரவு: டாக்டர் .ஜீஷன் மிர்சா] சாலசரின் குழிவிரியன் – ஒரு மாயாவியின் பெயரைக்கொண்ட புதுப்பாம்பு சிற்றினம்!](/sites/researchmatters.in/files/styles/large_800w_scale/public/pitvipernew.jpg?itok=KBL37qjR)
உலகெங்கும் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமான மாயா நாவலான “ஆரி பாட்டரில்” பாம்புகளிடம் பேசக்கூடிய சக்தி கொண்ட ஒரு மாயாவி தான் சாலசார் சிலைத்தரின். தற்போது இந்த கதாப்பாத்திரம் நம் இந்திய பல்லுயிரிகளின் பட்டியலிலும் தன் பெயரை பதித்துள்ளது. ஆம், சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய குழிவிரியன் வகை பாம்பிற்கு சாலசாரின் குழிவிரியன் (Salazar’s pit viper) என பெயரிட்டுள்ளனர் ஆய்வாளர்கள் “நானும் இவ்வாய்வை மேற்கொண்ட இன்னும் இரு ஆய்வாளர்களும் ஹாரி பாட்டரின் தீவிர ரசிகர்கள். ஹாரிபாட்டர் உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்திய அதன் ஆசிரியர் ஜே.கே. ரௌலிங்கிற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்தப் புது பாம்பிற்கு சாலசார் சிலைத்தரினைத் தழுவிய பெயரை சூட்ட நாங்கள் விரும்பினோம்” என்கிறார் இவ்வாய்வின் முதன்மை ஆசிரியரான முனைவர் சீசான் மிர்சா.
டிரைமெரசுரஸ் சாலசார் (Trimeresurus salazar) என்னும் அறிவியல் பெயருடன் விளங்கும் இந்தப்புது பச்சை குழிவிரியன் பாம்பினத்தின் அம்சங்களை விவரிக்கும் ஆய்வறிக்கையானது சூசிசுட்டமேடிக்சு அன்ட் எவலூசன் (Zoosytematics and Evolution,) என்னும் ஆய்விதழில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஊர்வன மற்றும் சிலந்தி இனங்களை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு சூழலியல் பயணத்தின் பயணே இந்தக் கண்டுபிடிப்பு. இந்த ஆய்வுக்குழுவானது பெங்களூருவின் தேசிய உயிரி அறிவியல் மையம் (National Centre for Biological Sciences (NCBS), பம்பாயின் பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கம் (Bombay Natural History Society (BNHS)), புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரி மற்றும் குஜராத்தின் வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தை சார்ந்த ஆய்வாளர்களை உள்ளடக்கியது.
“எங்கள் தேடலின் ஒரு பகுதியாக, நாங்கள் அந்த மாநிலம் முழுவதும் 2019 ஆம் ஆண்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பயணித்தோம். அப்போது எங்களின் தனிப்பட்ட நிபுணத்துவத்தால் அறியக்கூடிய சிற்றினங்களை ஆவணப்படுத்தும் குறிக்கோளுடன் பக்கே புலிகள் காப்பகத்திற்கு வந்தபோதே இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது” என நினைவு கூறுகிறார் முனைவர் மிர்சா.
இந்த சாலசார் குழிவிரியனின் தனித்துவ அம்சமாக அவற்றின் கண்களின் கீழ் எல்லையிலிருந்து தலையின் பின்பகுதி வரை செம்மஞ்சல்-சிகப்பு நிற பட்டை ஒன்று காணப்படும். மேலும் இச்சிற்றனம் தன் சகோதர சிற்றினப்பாம்புகளை விட அதிக பற்கைளையும், சிறிய இரட்டைமடல் ஆணுறுப்பையும் (bilobed hemipenis) கொண்டிறுக்கின்றன. இமய மலைகளின் கிழக்குப்பகுதிகளில் பரவியுள்ள இந்த சிற்றினமானது கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 172 மீட்டர் உயரத்தில் கண்டறியபட்டுள்ளது. ஆனால் இதன் சகோதர சிற்றினமான டிரைமெரசுரஸ் செப்டென்ற்றினாலிஸ் (Trimeresurus septentrionalis) இதைவிட அதிக உயரங்களில் காணப்படுகின்றன. இமயமலைகளில் உள்ள பல உயிரிகளின் சிற்றினத்தோற்றத்திற்கு வழிவகுக்கும் காரணியாக அம்மலைகளின் அதீத உயர மாறல்கள் விளங்கி வந்தாலும், இந்த குழிவிரியன் பாம்புகளிற்கு அவ்விதி பொருந்துமா என்பது இன்னும் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
“இமயமலைகளில் ஒவ்வொரு சிற்றினமும் தனித்தனி உயரங்களில் தனித்துவமாக பரவியிருப்பது, அங்கு உயர மாறுதல்கள் பல உயிரிகளின் சிற்றினத்தோற்றத்திற்கு காரணியாக இருந்துவருவதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆனால் இங்கே எத்தனை குழிவிரியன் சிற்றினங்கள் உள்ளன என்பது இன்னும் சரியாக வகைப்படுத்தப்படவில்லை. மேலும் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பல சிற்றினங்கள் தவறாக வரையறுக்கப்பட்டவையாக இருக்கக்கூடும் என்பதால் இவற்றின் சரியான பரவல் எல்லைகள் நமக்கு சரியாக தெரியவில்லை” என்கிறார் சீசான். “இந்தக்குழிவிரியன் பாம்புகளும் ஒரு குறிப்பிட்ட உயரங்களில் வாழுவதற்கு தங்களைத் தகவமைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நம்மிடம் முழுமையான தரவுகள் இல்லாததால் அதைப்பற்றி நம்மால் தற்போது ஏதும் கருத்து கூற முடியாது” எனவும் கூறுகிறார்.
இதுபோன்ற ஒரு சவாலான நிலப்பரப்பில் ஒரு புது சிற்றினத்தை கண்டறிவதென்பது அவ்வளவு சுலபமான காரியமன்று. “களத்தில் சிற்றினங்களை சரியாக கண்டறிவது சிலநேரங்களில் முற்றிலும் முடியாத காரியமாகவே இருக்கும். பாம்புச்சிற்றினகளை கண்டறியப்பயன்படுத்தப்படும் உடலின் வெளிப்புற செதில்களின் தரவுகள் கூட சில நேரங்களில் போதுமான அளவில் கிடைக்காது” என சவால்களை விவரிக்கிறார் சீசான். வடகிழக்கிந்தியாவின் பல மாநிலங்களைப்போல அருணாச்சலப்பிரதேசமும் பல்லுயிரியம் சரியாக வகைப்படுத்தப்படாத பல காடுகளை உள்ளடக்கி உள்ளது. இத்தகைய பல்லுயுர் வெப்ப மையத்தில் சமீபமாக கண்டறியப்பட்டுள்ள பல ஊர்வன மற்றும் இருவாழ்விகளும் இதற்கு சான்று. இத்தகைய சூழலில் இங்கு இன்னும் பல குழிவிரியன் பாம்புகளை நாம் இனம் காண வாய்ப்புகள் உள்ளதா? “வடகிழக்கிந்தியாவின் பல குழிவிரியன் பாம்புகள் பச்சை நிறமுடையவையே. எங்களின் அடுத்த பயணத்திலேயே இன்னும் பல புது சிற்றினங்களை நாங்கள் கண்டறிந்தால் கூட நான் ஆச்சரியப்படமாட்டேன்” என்பது அவர் கூற்று.
இந்தியாவின் அறியப்பட்ட பல்லுயிர் புத்தகத்தில் தற்போது சாலசார் குழிவிரியனும் தன் பெயரை பதித்திருந்தாலும், அவை அவற்றின் வாழ்விடங்களில் ஏற்படும் சாலை அமைப்புப் பணிகள், சூழலியல் அழிப்பு மற்றும் அதீத காட்டுவளச்சுரண்டல் நடவடிக்கைகள் மூலம் பெரும் ஆபத்துகளை சந்தித்து வருகின்றன.
“அருணாச்சல பிரதேசக் காடுகளின் பலப்பகுதிகள் சாலை அமைப்பு, நீர்மின் நிலையங்கள், விவசாயம் மற்றும் இதர மனித-உந்துதலினால் ஏற்படும் அழுத்தங்களால் அழிக்கப்பட்டு வருகின்றன” என வருந்துகிறார் சீசான். சமீபத்தில் திட்ட ஒப்புதல் பெற்ற தீபாங்க் நீர்மின் திட்டம் ஏற்கனவே பெறும் அச்சுறுத்தல்களை சந்திக்கும் பல்லுயிர் வளத்திற்கு மேலும் ஒரு பின்னடை என்பது குறிப்பிடத்தக்கது. “அருணச்சல பிரதேசத்தின் காடுகளை அழிக்கும் திட்டங்களிற்கு அனைவரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த புது சிற்றனத்தை மட்டுமல்லாமல் இதுபோன்ற பல சிற்றினங்கள் தாங்கள் கண்டறியப்படுவதற்கு முன்னரே அழியாமலிருக்க உதவும்” எனக்கூறி விடைப்பெற்றார்.