கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் - திருக்குறள் (படைச்செருக்கு 774)
போரில் வீரன் ஒருவன் தன் கையிலுள்ள வேலை யானைமீது எறிந்து முன்னேறுவதை இக்குறள் குறிக்கின்றது. யானைகள் எனும் பெருங்காட்டுயிர்களை மனிதன் கட்டுப்படுத்தி வழிநடத்துவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கில் இருந்துவருகிறது. நமது பண்பாட்டு நுட்பங்களிலும் யானைகளின் தடயங்கள் பெருமளவில் இருப்பதற்கு, அவற்றை நாம் பழக்கப்படுத்தியதே காரணம். ஆசிய யானைகள் சமூக விலங்குகள். பெண்யானைகள் ஒன்றிணைந்து தாய்வழிச் சமூகமாக வாழக் கூடியவை. இவை மந்தையாக ஒன்றிணைந்து உணவுக்காக நகரக் கூடியவை. பருவமடைந்த ஆண் யானைகள் தனியாகவோ அல்லது சிறு ஆண் குழுக்களாகவோ வாழக்கூடும். இனப்பெருக்கக் காலங்களில் பெண்யானைகளுடன் கூடி, பிறகு தனித்து சென்றுவிடுகின்றன. இவற்றுக்கு மாறாக, பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் பெருங் காட்டுவெளிகளில் திரியும் காட்டு யானைகளைப் போலல்லாமல், சிறு வெளிகளுக்குள்ளேயே வாழ்பவை. அவற்றுக்கான உணவு, நீர் மற்றும் சுகாதாரம் முதலிய தேவைகள் மனிதர்களைச் சார்ந்தது. இருப்பினும் இப்படி தனிமைப்படுத்தப்படுதல், இவற்றின் வாழ்வியலைப் பாதிக்கலாம். அப்படி மன உளைச்சலுக்கு உள்ளாவதாலேயே அவை முரட்டுத்தனமாக நடந்துகொள்கின்றன. இப்படிப்பட்ட யானைகளின் மனவியல் கூறுகளை அறிந்துகொள்வது எப்படி? அதற்கு அவற்றின் வாலின் மயிரிழைகளே சாட்சியம் என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு முடிவு.
பொதுவாக யானைகள் மற்றும் மற்ற பாலூட்டிகளின் உடலிலுள்ள மயிரிழைகள் அவற்றின் உடல் வெப்ப நிலையினைச் சமன் செய்கின்றன. அதோடு அல்லாது, இந்த ரோமங்களில் உள்ள இயக்குநீர் (Hormone) தடயங்கள், அவற்றின் மனவியலையும் நமக்கு வெளிப்படுத்தக் கூடியது. யானைகளின் ரோமங்களில் உள்ள கார்டிசோல் (Immunoreactive cortisol) எனப்படும் இயக்குநீர் மூலமாக அவற்றின் மனநலன் குறித்தும் அறிய முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு. இந்திய மற்றும் ஜப்பானிய ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து கண்டறிந்த சமீபத்திய ஆய்வு முடிவுகளில், பழக்கப்படுத்தப்பட்ட ஆசிய யானைகளின் வாலில் உள்ள ரோமங்களில் இருந்து இந்த இயக்குநீர் மூலக்கூறுகள் அளவீடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. இந்த ஆய்வு முடிவுகள் “பியர் ஜே” (PeerJ ) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளிவந்துள்ளன.
யானைகளின் வால் ரோமங்களிலிருந்து இதுவரை அவற்றின் உணவு, இடம்பெயர்வுகள் மற்றும் காலவரிசைத் தரவுகள் முதலியவற்றையே நாம் அறிந்துகொள்ள முடிந்தது. முந்தைய ஆய்வுகளில் ஆசிய யானைகளின் மனவியலை அறிந்துகொள்ள அவற்றின் சாணம், சிறுநீர் அல்லது இரத்த மாதிரிகள் கொண்டே ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தன. இவை சரியான சோதனைத் தெரிவுகளெனினும், இவற்றிலும் சில குறைபாடுகள் உள்ளன. “சாணம், சிறுநீர் மற்றும் இரத்தத்திலுள்ள வளர்ச்சிதை மாற்றக்கூறுகள் மூலம் யானைகளின் மன அழுத்தத்தினை அறிந்துகொள்ள முடியுமெனினும், அவை 12 முதல் 36 மணி நேரத்திற்குள்தான் சாத்தியம் ஆகும். ரோமங்களின் மூலமாக அவற்றின் முந்தைய காலத்தின் மனநிலையினைக்கூட நம்மால் அறிந்துகொள்ள முடியும்” என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரான முனைவர் சஞ்சீதா சர்மா போக்ரேல்.
ஆய்விற்காக முடி மாதிரிகளைப் பயன்படுத்துவதில் பல்வேறு நன்மைகளும் உள்ளன. இரத்த மாதிரிகளை மிருகங்களிடமிருந்து எடுப்பது, அவற்றுக்கு வலி உண்டாக்கும். ஆனால், முடி மாதிரிகளில் இத்தகைய சிரமங்கள் இருப்பதில்லை. உடல் ரோமங்களைக் காட்டிலும் வாலிலுள்ள ரோமங்கள் அடர்த்தி மற்றும் நீளமானவை. “யானைகளின் உடலிலுள்ள ரோமங்கள் அவற்றின் உடல்வெப்ப இயக்கத்தினைச் சீர்செய்பவை. வாலிலுள்ள ரோமங்களானது பூச்சிகளை விரட்டப் பயன்படுத்தப்படுத்தப்படுபவை. ஆதலால், அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்கின்றன” என்கிறார் முனைவர் போக்ரேல்.
இந்த ஆய்வினை ஜப்பானின் இரண்டு விலங்கியல் பூங்காக்களான கொயோட்டோ நகரப் பூங்கா மற்றும் கோபே ஓஜி விலங்கியல் பூங்காவிலுள்ள 6 ஆசிய யானைகளின் மீது நடத்தப்பட்டன. முதலாவதாக ஆய்வாளர்கள் யானைகளின் வால் ரோமங்களின் வளர்ச்சி விகிதத்தினை அளவீடு செய்தனர். அடுத்ததாக அவற்றின் தோல் பகுதிக்கு அருகிலுள்ள வாலின் ரோமங்களை வெட்டி எடுத்துள்ளனர். இதனால் யானைகளின் தோலுக்கோ மயிர்க்காலுக்கோ எந்த வித வலியோ சேதமோ ஏற்படாமல் ரோமங்களை எடுத்துள்ளனர். மாதிரி சேகரிப்பின்போது ஆய்வாளர்கள் விலங்கு உரிமை நெறிமுறைகளை முழுமையாகக் கடைபிடித்துள்ளனர். பின்னர், அந்த ரோமங்களில் இருந்து கார்டிசால் என்னும் இயக்குநீரினை அளவீடு செய்துள்ளனர்.
ஆய்வாளர்கள் ஆறு யானைகளுக்கு முடி வளர்ச்சி விகிதம் மாறுபட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இந்த விகிதமானது ஒவ்வொரு யானைகளுக்கும் தனித்துவமானது. மேலும், ஒவ்வொரு யானைகளின் நாளொன்றைய முடி வளர்ச்சி விகிதத்தினையும் அளவீடு செய்தனர்.
“நீண்ட மற்றும் வேகமாக முடி வளரும் விலங்குகளின் மன அழுத்த நிலைகளை நீண்ட காலத்துக்கு முன்பிருந்து நம்மால் கணிக்க முடிகின்றது. உதாரணமாக, ஒரு யானையின் மன அழுத்த நிலையினை மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்து எங்களால் கணிக்க முடிந்தது” என்கிறார் முனைவர் போக்ரேல்.
ஒவ்வொரு யானைக்கும், ஆய்வாளர்கள் அவற்றின் முந்தைய கால உடல்நலம் குறித்த பதிவுகளையும், மிருகக் காப்பாளர் குறித்து வைத்திருந்த உயிரியல் நிகழ்வுகளையும் ஒப்பாய்வு செய்தனர். தொற்றுநோய்கள், காயங்கள், இரத்த சோகை மற்றும் வாய் புண்கள் போன்ற நோயியல் அழுத்தங்களின் பதிவுகள் இருப்பதை அவர்கள் கவனித்தனர். உறைவிடத்துக்குள் நுழைய முரண்படுதல் போன்ற மன அழுத்தக் காரணிகள் மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் இனப்பெருக்க கால அழுத்தங்கள் போன்றவை அதிகரிக்கும் போது அவற்றின் கார்டிசோல் அளவுகளும் அதிகரிப்பதாகக் கண்டறிந்தனர். அதே நேரத்தில், மற்ற யானைகளுடனான சமூகத்தொடர்பு, சரியான உறைவிடம் மற்றும் வாழ்வியல் சூழல் வழங்குதல் முதலிய செயல்பாடுகள் அவற்றின் மன அழுத்தை குறைத்து, கார்டிசோல் அளவீட்டையும் குறைக்கின்றன.
விலங்குகளின் மன அழுத்த நிலைகளைப் படிக்கவும், அவற்றின் முந்தைய வாழ்வியல் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளவும் வாலின் ரோமங்களை இப்போது பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கூடுதலாக, இறந்த யானைகளின் ரோமங்களில் உள்ள கார்டிசோலின் அளவைப் பகுப்பாய்வு செய்வதால் அவற்றின் வாழ்வியல் பற்றிய நுண்ணறிவோடு பரந்த சுற்றுச்சூழல் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும். “உதாரணமாக, வறட்சி, தீ அல்லது நோய் பரவல் முதலிய சம்பவங்கள் காரணமாக கார்டிசோல் உச்சநிலை அடைந்திருந்தால், நாம் அவற்றின் பின்விளைவுகள் மற்றும் தாக்கங்கள் குறித்து அவதானித்துக்கொள்ள முடியும்” என்கிறார் போக்ரேல்.
இன்னும் அதிக எண்ணிக்கையில் விலங்கினங்களுக்கு எ இந்த ஆய்வினை அதிகரிப்பது, மூலக்கூறினைப் பிரித்து பகுப்பாய்வு செய்யும் உத்திகளை அதிகரிப்பது இந்த ஆய்வில் மிகச் சிறந்த பங்களிப்பை நல்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சாணம், சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகளின் உள்ள கார்டிசோலின் அளவைப் படிப்பது மற்றும் அவற்றை முடி மாதிரிகள் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, பண்படுத்தப்பட்ட ஆசிய யானைகளில் மன அழுத்த பகுப்பாய்வாக முடி மாதிரிகளைப் பயன்படுத்துவதை வலுசேர்க்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மற்ற அளவீடுகள் மூலமாக கார்டிசோல் அளவை ஆய்வு செய்து வரும் உயிரியல் பூங்காக்களுடன் நாங்கள் இப்போது இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். மிருகங்களின் பல்வேறு உடலியல் மற்றும் மனவியல் கேள்விகளுக்கான பதில்களை நோக்கி எங்கள் ஆய்வினை நகர்த்துகிறோம்” என முடித்தார் போக்ரேல்