முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

இரண்டு மலைத்தொடர்களில் காணப்படும் ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த புதர்த் தவளை வகைப் பற்றிய ஒரு அறிவியல் கதை

Read time: 1 min
Dharwad
15 அக் 2020
இரண்டு மலைத்தொடர்களில் காணப்படும் ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த புதர்த் தவளை வகைப் பற்றிய ஒரு அறிவியல் கதை

கிழக்குத் தொடர்ச்சிமலை புதர்த் தவளை [பட உபயம்: ப்ருத்வி ராஜ்

திரைப்படங்களில் ஒரே கதாநாயகர் இருவேடங்களில் எந்தவொரு பெரிய உருவ மாற்றம் இல்லாமல் இரண்டு இடங்களில் நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இது கதைகளில் மட்டும் நிகல்பவை அல்ல நிஜத்திலும் கூட நிகல்பவை தான். இந்தியாவைச் சேர்ந்த ஊர்வனவியாளர்களின் குழு ஒன்று கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழ்பவை எனக் கருதப்பட்ட ஒரு தவளை இனத்தை  மேற்குத் தொடர்ச்சிமலையில் ஒரு மழை இரவில் கண்டுபிடித்துள்ளார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்? நிச்சயம் இருக்கிறது! இந்த தவளை இனம் முன்னதாக சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குத் தொடர்ச்சிமலைகளில் கண்டறியப்பட்டது. ஆயிரம் கிலோமீட்டர் என்பது நமக்கு மிகப்பெரிய தூரம் இல்லை என்றாலும் ஒரு தவளையால் கடப்பதற்கு மிகவும் கடினமான தொலைவாகும். இந்த தவளையின் கண்டுபிடிப்பு, தற்போது விலங்குகளின் வகைப்பாட்டிலும் மேற்குத் தொடர்ச்சிமலையின் உயிரின வாழ்விடவியல் பற்றிய நமது புரிதலிலும் பல வியப்பூட்டும் கேள்விகளை எழுப்புகிறது.

மேற்குத் தொடர்ச்சிமலையில் இருள் சூழ்ந்த மழை இரவில் சேறும் சகதியிலும் அட்டை கடிகளுக்கும் மற்றும் தவளைகளின் ஒலிக் கச்சேரிக்கு இடையிலும் தவளைகளைத் தேடுவது ஒரு அலாதியான அனுபவம் தான். அவ்வகையில், ஒரு களப்பணியில் திரு அமித் ஹெக்டே பார்த்த ஒரு தவளை அவரை வியப்பிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. ஏனென்றால், அந்த தவளை கிழக்கு தொடர்ச்சி மலைக்கே உரிய அகணிய உயிரியாக   கருதப்பட்ட ஒரு தவளை இனமாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்பட்ட இந்த சிற்றினம் உருவ அமைப்பில் சில வித்தியாசங்களோடு கிழக்குத் தொடர்ச்சிமலையில் மட்டுமே வாழும் புதர்த் தவளையை (பிஜர்வர்ய கலிங்கா - Fejervarya kalinga) ஒத்திருந்தது. ஆனால் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் இந்த இனத்தின் தவளைகளைவிட உருவத்தில் சற்று பெரிதாக இருந்தது.

“உருவியல் பண்புகளை மட்டும் பயன்படுத்தும் எந்தவொரு வகைப்பாட்டியாளரும் இந்த இரு தவளைகளை வெவ்வேறு சிற்றினம் என்றே கருதுவார்கள்” எனக் கூறுகிறார் அமித்.

மேலும், கர்நாடக பல்கலைக்கழகம் மற்றும் இந்திய விலங்குகள் ஆராய்ச்சி நிறுவனைத்தைச் (Zoological Survery of India) சேர்ந்த பிற ஊர்வனவியாளர்களின் துணையோடு ஆய்வாளர்கள் இந்தக் கண்டுபிடிப்பை உன்னிப்பாக கவனிக்கத் ஆராயத்தொடங்கினார்கள். அவர்கள் வெர்னியர் அளவியை (Vernier caliper) பயன்படுத்தி அந்த தவளையின் நீள்மூக்குப்பகுதி (snout) முதல் எச்சவாய் (vent) வரை அனைத்து உடற்பாகங்களையும் கவனமாக அளந்து கிழக்குத் தொடர்ச்சிமலை புதர்த் தவளையின் உடல் அளவீடுகளோடு ஒப்பிட்டு பார்த்தனர். மேலும், இவ்விரு தவளைகளின் தாயனை (DNA) குறிப்பான்களை ஒப்பிட்டு பார்த்த பின்னர் இவ்விரண்டும் ஒரே சிற்றினத்தை சேர்ந்தது என்று உறுதிப்படுத்தினர். இதன் முடிவுகளை சூடேக்சா (Zootaxa) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சிமலை புதர்த் தவளை [படம்: அமித் ஹெக்டே]

சிற்றினங்கள் அளவிலான வேறுபாடுகளை அடையாளம் காண உதவும் 16s ரைபோ கருவமிலம் (RNA) எனப்படும் மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் வரிசைப்படுத்தினர். அதனை இந்தியாவில் காணப்படும் பிற புதர்த் தவளைகளின் சிற்றினங்களோடு ஒப்பிட்டு பார்த்தனர். இந்தியாவில் மொத்தம் 37 வித்தியாசமான புதர்த் தவளை சிற்றினங்கள் காணப்படுகிறது. இந்த 16s ரைபோ கருவமிலத்தின் பகுப்பாய்வு, மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சிமலைகளில் காணப்படும் புதர்த் தவளைகள் மிகவும் தொடர்புடையவை என்றும் உண்மையில் ஒரே சிற்றினத்தை சேர்ந்தது என்றும் எடுத்துக்காட்டுகிறது.

ஆராய்ச்சியாளர்கள், தாயனை வரிசைகளின் அடிப்படையில் ஒரு ‘பரிணாம மரபுத்தொகுதி மரத்தை’ (சிற்றினங்களுக்கு இடையே உள்ள பரிணாம உறவுகளை கண்டுபிடிக்கும் ஒரு வரைபடம் - phylogenetic tree) உருவாக்கினர். “மேற்குத் தொடர்ச்சிமலை புதர்த் தவளைகள் கிழக்குத் தொடர்ச்சிமலையில் காணப்படும் தவளைகளிடம் சற்று மாறுப்பட்டவை என்று பரிணாம மரபுத்தொகுதியல் ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன,” என்று இந்த ஆய்வின் முடிவுகளை அமித் விவரிக்கிறார். இவ்விரு தவளைகளின் மரபணு வரிசைக்கு இடையில் மிகவும் சிறிய (0.2%) வித்தியாசத்தை மட்டுமே ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இது, இரண்டு தவளைகளும் ஒரே சிற்றினம் என்பதையே காட்டுவதாக கூறிகிறார் அமித்.

இயற்கையில், ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த விலங்குகளில் குறிப்பாக தவளைப் போன்ற நீர்நில வாழ்விகள் ஒரு குறிப்பிட்ட சிறிய புவிப்பரப்புகளில் மட்டுமே காணப்படும். ஆனால், இந்திய தீபகற்பத்தின் இரு வேறு மலைத் தொடர்களில் ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த இரண்டு மாதிரிகளைக் கண்டுபிடித்தது, தவளைகளின் பரவல் முறைகளை மேலும் நன்கு உற்று நோக்கி அறிந்துக் கொள்ள ஆய்வாளர்களை கட்டாயப்படுத்தியுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் பல்லுயிர் வளமை நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், வடகிழக்கு பகுதிகளுக்கும் உயிரினங்கள் பரவலை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இணைக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் முன்மொழிகின்றனர்.

“இருப்பினும், ஏன் இந்த இரு மாதிரிகளும் அளவுகளில் மாறுபடுகின்றன? இதற்கான காரணம், மலை உயரங்களில் வேறுபடுகின்ற சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு நன்கு தக அமைத்து கொள்வதினால் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது இடஞ்சார்ந்த தகவமைதலாகவும் அல்லது இரு வேறுபட்ட புவி மண்டலங்களுக்கு ஏற்றவாறு தகவமைதலாகவும் அல்லது மிக வேகமாக நிகழும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு தகவமைதலாகவும் இருக்கலாம்,” என்று விவரிக்கிறார் அமித். இதனை உறுதிப்படுத்துவதற்கு இத்தவளைகளின் இயற்கை வரலாறு மற்றும் மரபியல் குறித்து மேற்கொண்டு ஆய்வுகள் தேவை.”

தற்போதைய கண்டுபிடிப்பு, தவளைகள் எவ்வளவு தொலை தூரம் மற்றும் பரந்த அளவு பரவ முடியும் என்பதையும் அதன் உடலின் பாகங்களின் அமைப்பில் காலநிலையின் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்வு, இந்தியாவில் உள்ள நீர்நில வாழ்விகளின் மரபணு பகுப்பாய்வு குறித்த கூடுதல் ஆய்வுகளையும் கோருகிறது. இதனால், புதிய சிற்றினங்கள் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்படுகின்றன, அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற பாதுகாப்பு கொள்கைகளையும் இயக்குகின்றன.