முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்நிலை அமைப்பை உயிர்ப்பிக்க அவசரக் கொள்கை மாற்றத்துக்கான அழைப்பு

மதுரை
10 பிப் 2022
மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்நிலை அமைப்பை உயிர்ப்பிக்க அவசரக் கொள்கை மாற்றத்துக்கான அழைப்பு

படங்களின் உபயம்: ஆய்வுரையின் ஆசிரியர்கள்

அறிவியல் மேலாண்மை வழிமுறைகள் அதிகம் தேவைப்படும் வண்டியூர் கண்மாய் (படங்களின் உபயம்: ஆய்வுரையின் ஆசிரியர்கள்)

தமிழ் நாட்டின் மதுரை மாநகரம் மித வறட்சியான மண்டலத்தில் அமையப்பெற்று குறைந்த நீர் ஆதாரங்களைக் கொண்டு ஒழுங்கற்ற மழைப் பொழிவைப் பெறுகின்றது.  வரலாற்று ரீதியாக, வண்டியூர் கண்மாய் தொடர் அமைப்பு (Vandiyur Tank Cascade System - VTCS) எனப்படும் இயற்கையான சேமிப்பு ஆதாரங்களின் வலையமைப்பு, மதுரையின் தண்ணீர் தேவையைப் போதுமான அளவு பூர்த்திசெய்து வருகின்றது. இருப்பினும் சமீப காலத்தில், நிலப் பயன்பாடுகளில் ஏற்படும் அதிவேகமான மாற்றங்களினால், இந்த நகரமானது நீர் சேமிப்பு கொள்ளளவை பாதிக்கும் கடுமையான நீர் பற்றாக்குறை மற்றும் தொடர் வறட்சியான சூழலைத் தீவிரமாக எதிர்கொள்கின்றது.

வைகை ஆற்றின் துணை ஆறானது மதுரை நகரின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிவரை பாய்கின்றது. இந்த நகரத்தின் புவியியல் அமைப்பு இயற்கையான மேடுகளையும் பள்ளங்களையும் ஆற்றுப்பாதையில் கொண்டுள்ளது. இதனால், நீரானது வைகை துணை ஆற்றில் கலக்கும் முன் அதை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில்    இயற்கையாகவே பாய்கின்றது.

இந்த நிலபரப்பைப் பயன்படுத்தி, 1600களில் ஆட்சிப் புரிந்த ஆட்சியாளர்கள் வைகை ஆற்றுப்பாதை வழியில் இருக்கும் நீர் சேகரிப்புப் பகுதிகளில் எட்டுப் பெரிய கண்மாய்களை அமைத்துள்ளார்கள். அவை, உயர்ந்த-தாழ்ந்த சரிமாணத்தில் நிலைநிறுத்தப்பட்டன. ஆகையால், இந்த இயற்கையான நீரின் ஓட்டம் வைகை ஆற்றில் கலப்பதற்கு முன்பு தொடர் விளைவால் ஒவ்வொரு கண்மாய்களுக்கும் வந்துசேர்கின்றது. இந்தக் கண்மாய்களின் சங்கிலியானது வண்டியூர் கண்மாய் தொடர் அமைப்பு (VTCS) என்று அழைக்கப்படுகின்றது. 

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் பம்பாய்யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வண்டியூர் கண்மாய் தொடர் அமைப்பு குறித்து விரிவான ஆய்வு நடத்தி, தங்கள் கண்டுபிடிப்புகளை எஸ் என் அப்லெய்டு சயின்சஸ் (SN Applied Sciences) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர். ஒரு காலத்தில் வரலாற்று மற்றும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த வண்டியூர் கண்மாய், தற்போது அலட்சியப்போக்கு, அறிவியல் அறிவு போதாமை மற்றும் முறையான பராமரிப்புக்கான போதிய கொள்கை இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றது என்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மேலும், இந்தப் பாரம்பரிய நீர் சேமிப்பு அமைப்பானது நகரத்தின் விரைவான  நகரமயமாக்கலினால் வேகமாகப் பாதிப்படைகின்றது.

“இந்த நீர் அமைப்பின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஓடும் ஆற்றில் இருந்து வாய்க்கால் மூலம் நீர் நிரப்பப்படும் வழக்கமான கண்மாய்களைப் போல் அல்லாமல், இந்த வண்டியூர் கண்மாய் தொடர் அமைப்பு (VTCS)  ஆற்றின் ஓட்டப்பாதையிலேயே உட்பொதிக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. ஆகையால், ஒரு கண்மாய் நிரம்பாவிட்டால் இந்த ஆறானது மேலும் கீழ்நோக்கி முன்னேறாது” என்று இந்த ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தும் கிராமப்புறப் பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்றுவழிகளின் மையத்தை (Centre for Technology Alternatives - CTARA) சேர்ந்த முனைவர் பென்னன் சின்னசாமி கூறுகிறார்.  

மேலும், இந்தக் கண்மாய்கள் இரு மடங்காகி நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக ஆகின்றன. இதன் விளைவாக, இந்தக் கண்மாய்கள் நிலத்தடி நீர்நிலைகளுக்கும் கிணறுகளுக்கும் போதுமான அளவு நீர் அளித்து, மக்களின் பல்வேறு நீர் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.


வண்டியூர் கண்மாய் தொடர் அமைப்பின் வரைபட விளக்கம் (பட உபயம்: ஆய்வுரையின் ஆசிரியர்கள்)

கண்மாய்  அமைப்பின் தற்போதைய நிலையை சரிபார்க்க ஆராய்ச்சியாளர்கள் நீர் சமநிலை அணுகுமுறை ஆய்வை மேற்கொண்டனர். ஆற்றில் இருந்து கண்மாயிக்கு எவ்வளவு தண்ணீர் பாய்கின்றது, மழைப்பொழிவு, கண்மாயின் அளவு மற்றும் அம்மண்டலத்தின் நீர் தேவைகள் உள்ளிட்ட காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்தனர். அவர்கள் இரண்டு தசாப்த காலக்கட்டத்துக்கான, மனிதவழி செயல்பாடுகள் மற்றும் நகரமயமாக்கல் நடவடிக்கைகளினால் ஏற்படும் அளவுரு மாற்றங்களையும்  காரணியாகக் கொண்டிருந்தனர். இந்தக் குழுவானது விரிவான கள பகுப்பாய்வு மற்றும் கூகுள் எர்த் (Google Earth)இன் புவி வரைபடங்களின் தொலை உணர்வு தரவுத்தளம் ஆகிய இரண்டையும் மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தியுள்ளது.

இந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும்  உள்ளூர் பங்குதாரர்களான ‘டெவலப்மென்ட் ஆஃப் ஹ்யூமன் ஆக்க்ஷன் (Development of Humane Action - DHAN) அறக்கட்டளை’ எனப்படும் லாபநோக்கற்ற அமைப்பு ஒருமித்தமாக, VTCS தற்போது மோசமான நிலையில் இருப்பதாகவும், சரியான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றது என்றும் கூறுகின்றனர். மேலும், மேற்கூறிய வெளிப்புற அளவுருக்கள் கண்மாய்களின் சேமிப்புத் திறனைக் கடுமையாகப் பாதிக்கின்றது, இதனால் அப்பகுதியின் 'நீர் வரவு-செலவு' அல்லது பயன்பாட்டிற்குக் கிடைக்கும் நீர் பாதிக்கின்றது.

ஆரம்ப காலக்கட்டத்தில், இந்த நிலத்தைக் கிராமப்புறம் அல்லது நகர்ப்புறம் என்று பிரித்துப் பார்க்காமல் ஒரே உருப்படியாகக் கருதப்பட்டது. வரையறுக்கப்பட்ட நீர்நிலை அமைப்பு இல்லாத போதிலும், முந்தைய மன்னர்கள் பாரம்பரியமாக வடிவமைக்கப்பட்ட கண்மாய்களை நன்றாக நிர்வகித்தார்கள். இதனால் நகரத்தில் தண்ணீரைத் தேக்கிவைத்து மக்களின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தனர்.

இருப்பினும், சமீப காலங்களில், நிலப் பயன்பாட்டு நிலப்பரப்பு (LULC) கொள்கைகள் உருவாக்கப்பட்ட பிறகு, இந்த நிலம் கிராமப்புறம், பகுதியளவு கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளாக வரையறுக்கப்பட்டது. அதன்படி, இந்தக் கண்மாய்கள் வெவ்வேறு முகமைகளின் நிர்வாகத்தின் கீழ் வருகின்றன, அவை அவற்றின் வரையறுக்கப்பட்ட மண்டலத் தேவைகளின் அடிப்படையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இதற்கு மேலாக, வண்டியூர் கண்மாய் தொடர் அமைப்பில் உள்ள ஒவ்வொரு கண்மாய்களும் ஓர் ஒருங்கிணைந்த நீர்நிலையாகப் பார்க்கப்படாமல் ஒரு தனிப்பட்ட உருப்படியாகவே பார்க்கப்படுகின்றன. ஆகையால், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட இந்தக் கண்மாய்களைத் தனிப்பட்ட முறையில் நிர்வகிப்பது முழு அமைப்பையும் சேதப்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

"கண்மாய்களின் பாரம்பரியமான இருப்பு/ செயல்பாடுகள் மற்றும் கொள்கையுடனான தொடர்புகள் பற்றிய அறிவியல் புரிதலின் போதாமையினால், ஒரு உரிமை இல்லாநிலை ஏற்பட்டு சொற்பமான மேலாண்மை செயல்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது," என்கிறார் முனைவர் சின்னசாமி.

மேலும், நில மாற்றம், கட்டுமானம் மற்றும் தீவிர விவசாயம் போன்ற செயல்பாடுகளால் மண் அரிப்பு அதிகரித்து, கண்மாய்களில் வண்டல்மண் படிகின்றது. இதனால், கண்மாய்களின் நீர் சேமிப்புத் திறன் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. போதிய மேலாண்மை மற்றும் கண்மாய்களின் தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால், மதுரை நகரம் மிக வேகமான நீர் சமநிலையின்மையை எதிர்கொள்கின்றது, என்று முனைவர் சின்னசாமி கூறுகிறார்.

இதற்காக, ஆராய்ச்சியாளர்கள் நீர் வரவு-செலவுக்கான அளவுருக்களை மதிப்பிட்டுள்ளனர். நீர் வரவு-செலவு கணக்கு என்பது கணக்கியலுக்கு ஒப்பானது, அதில்தான்  நாம் நீர் உள்ளீடு மற்றும் வெளியீட்டைக் கணக்கிடுகின்றோம். நிலத்தடிநீர் மறுஊட்டம்  (வழங்கல்) மற்றும் நிலத்தடிநீர் பயன்பாடு (தேவை) சமநிலையில் இருக்கும்போது நிலத்தடிநீர் இருப்பளவுகள்  தக்கவைக்கப்படுகின்றன. இந்த சமநிலையை நீர்வழிவு, நீராவியாதல், நீராவிப்போக்கு (அதிகப்படியான ஆகாயத் தாமரை போன்ற தாவரங்களிலிருந்து வெளிப்படுபவை) மற்றும் மேற்பரப்பு இழப்புகளான நீர் திருட்டு முதலியவற்றால்  ஏற்படும் நீர் இழப்பைக் குறைப்பதன் மூலம் அடைய முடியும். சேமிப்பு அங்கத்தை சேர்ப்பதினால் நிலத்தடிநீரின் மறுஊட்ட இருப்பளவுகள் வியத்தகு முறையில் மேம்படுகின்றது.

சுமார் 20 ஆண்டுகளாக, ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காரணி மாறுதல்களை ஆய்வு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் நகரமயமாதலின் 300 சதவீத அதிகரிப்பால் 40 சதவீதம் நீர்பிடிப்பு நீர்வழிவால்  இழக்க நேர்ந்துள்ளது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர். குறைக்கப்பட்ட  விவசாயம் நீர்வழிவின் வேகத்தைக் குறைப்பதற்கான மற்றும் நிலத்தடிநீர் மறு ஊட்டத்துக்கான வாய்ப்புகளையும்  மேலும் குறைத்தது. மேலும், அவர்கள் மழைப்பொழிவின் மாறுதல்களை மதிப்பீடு செய்தபோது, ​​சராசரி மழையில் (931 மில்லி மீட்டர்) சிறிய மாற்றம் இருந்தபோதிலும், வெள்ள காலங்களில்  கண்மாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் நீர் வழிவு அதிகரித்துள்ளன.

"கண்மாய் தொடர் அமைப்புகள் காலநிலையின் தீவிரமான சூழலை சமாளிப்பதற்கும் அதன் வேகத்தைக் குறைப்பதற்கும் ஒரு இடையகமாக செயல்பட முடியும், அதில் குறிப்பாக, எதிர்கால வறட்சிக்காக வெள்ளநீரை சேமிப்பதாகும்" என்கிறார் முனைவர் சின்னசாமி. இருப்பினும், தற்போதைய கொள்கைகளுடன் கண்மாய் புத்துயிர் திட்டம் என்பது ஒரு சவாலான பணியாகவே இருக்கும், என்று மேலும் கூறுகிறார்.

சில உடனடித் தீர்வு நடவடிக்கைகளாக வண்டல் மண்ணை அகற்றுவது, கண்மாய்களில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்றுவது மற்றும் கண்மாயின் கரைகளைப் பலப்படுத்துவது முதலியவை வண்டியூர் கண்மாய் தொடர் அமைப்பை உயிர்ப்பிக்க உதவும் என்று இந்த ஆசிரியர்கள் கூறுகிறார்கள். DHAN அறக்கட்டளை, பொது-தனியார் கூட்டாண்மையுடனும் CTARA உடன் தொழில்முறை கூட்டாளியாகவும்  புத்தாக்கப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

மேலும், "தொடர் அமைப்பில் உள்ள கண்மாய்கள் முதன்மையாக சிறந்த மேலாண்மை மற்றும் செயல்திறனுக்காக ஒரு ஒருங்கிணைந்த அகமாக முழுமையாக நிர்வகிக்கப்பட வேண்டும்" என்று முனைவர் சின்னசாமி வலியுறுத்துகிறார். கொள்கை மாற்றங்கள் காலத்தின் தேவை என்று கூறுகிறார். ஒரு சிக்கலை ஒரு கண்மாயில் மட்டும் தீர்ப்பது மொத்த அமைப்பை சரிசெய்யாது, ஆனால், கண்மாய்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதால் அது ஒரு சங்கிலிபோல் ஊடுருவிச் சென்றடையும்.

Tamil