முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

பெருந்தொற்றுக் காலத்தில் உணவு பாதுகாப்பின்மையை எதிர்த்துப் போராட உதவும் சிறுதானியங்கள்

Read time: 1 min
Hyderabad
11 நவ 2021
பெருந்தொற்றுக் காலத்தில் உணவு பாதுகாப்பின்மையை எதிர்த்துப்  போராட உதவும் சிறுதானியங்கள்

உலகளாவிய உணவு பாதுகாப்பை உறுதி செய்ய சிறுதானியங்கள் உதவும்
பட உபயம்: T K நளியக்கா (விக்கிமீடியா காமன்ஸ் வலைத்தளம்)

சமீபத்திய கொரோனா பெருந்தொற்று, நம் நடைமுறை வாழ்கையில் பல்வேறு சவால்களை முன்வைத்துள்ளது. இந்தச் சவால்கள், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பசி நெருக்கடியோடு ஒன்றுசேர்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில், உலகளவில், சுமார் 690 மில்லியன் மக்கள், நாட்பட்ட பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (UNFAO) கருத்துப்படி, இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கும் மேலாக, விவசாயத்தில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு மட்டுமல்லாமல் பசி மற்றும் நோய்களால் வளரும் நாடுகள் இரட்டிப்பாக பாதிப்படையக்கூடும். ஆகையால், உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, அதாவது, நிலையான உணவு விநியோகச் சங்கிலிகளின் உதவியுடன் போதுமான அல்லது சத்தான உணவுக்கான நம்பகமான வழிவகையை அமைப்பது தற்போது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

அண்மையில் வெளியான ஆராய்ச்சிக் கருத்துக் கட்டுரையில், ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் புது தில்லியின் தேசிய தாவர மரபணுத்தொகுதி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (NIPGR) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உணவு பாதுகாப்புக்காக சிறுதானியங்களின் சாகுபடியை வலுப்படுத்த ஒரு வரைபடத்தை அளித்துள்ளனர். சிறுதானியங்களின் பண்பு அல்லது தரத்தை மேம்படுத்த உயிரித் தொழிநுட்ப வழிமுறைகளை அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த ஆய்வு, NIPGR நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டு Trends in Plant Science எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.

கேழ்வரகு, தினை, பனிவரகு, குதிரைவாலி, வரகு, சாமை மற்றும் சில தானிய வகைகள் சிறுதானியங்கள் அல்லது உருநயமற்ற தானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் பாரம்பரிய பயிர்களாக உலகெங்கிலும் பயிரிடப்பட்ட அவை, இப்போது அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் முதலிய பணப்பயிர்களின் வருகையால் இந்தியா உட்பட குறிப்பிட்ட சில பிராந்தியங்களுக்கு வரையறுக்கபப்ட்டுள்ளன. இவற்றின் அடிப்படை ஊட்டச்சத்து மதிப்பு தவிர, மேம்பட்ட உணவுத்திட்டம் சார்ந்த நன்மைக்காக இந்த சிறுதானியங்கள் அறியப்படுகின்றன.

சிறுதானியங்கள், உணவு பாதுகாப்புக்குப் பல்வேறு வழிகளில் பங்களிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்குச் சான்றளிக்கும் வகையில், சிறுதானியங்கள் பிற தானியங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது குறைந்த விளைச்சலைக் கொண்டிருந்தாலும் நல்ல வருவாயைக் கொடுத்து காலநிலை மாற்றம், ஊறுவிளைவிக்கும் உயிரினம் மற்றும் நோய்களிடம் இருந்து சிறப்பாக தாக்குப்பிடிக்கின்றன. மேலும், துல்லியமான மதிப்புகள் இல்லாது இருப்பினும் சிறுதானியங்களின் கரிம கால்தடங்கள் (பயிரிடும் பொழுது வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கரியமில வாயுவின் அளவு) அரிசி மற்றும் கோதுமையை விட குறைவாகவே இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. ஆகையால், சிறுதானியங்களின் சாகுபடி, பிரதானமான உணவாக இருக்கும் அரிசி மற்றும் கோதுமையின் மீதான உலகளாவிய சார்பைக் குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் உணவில் பல்வகைமைக்கும் பங்களிக்கின்றன.

பெருந்தொற்றுக் காலத்தின் போதும் எவ்வாறு, சிறுதானிய சாகுபடியைப் பிரதானமாகக் கொண்டு உணவு பாதுகாப்பின்மையிலிருந்து தப்பிக்க முடியும் என்பதற்கான அறிவையும் ஆராய்ச்சியாளர்கள் வழங்கின்றார்கள். உலகில் சிறுதானியங்கள் விளையும் பகுதிகள் பசி நிறைந்த இடங்களுடன் ஒத்துப்போவதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது. எனவே  அப்பகுதிகளுக்கு, தகுந்த சிறுதானிய வகைகளும் மேம்பட்ட பண்புகளும் நல்ல விவசாய மற்றும் பொருளாதார மதிப்புகள் அடைவதற்குத் தேவைப்படுகின்றன. இதனை, பொருத்தமான மரபணு யுக்திகள் மற்றும் உயிரித் தொழில்நுட்ப தலையீடுகளைக் கொண்டு செய்ய முடியும்.

இந்தியாவில் சிறுதானிய மூலவுயிர்முதலுரு (germplasm - புதிய தாவரங்கள் வளரக்கூடிய உயிருள்ள இழையம்), புது தில்லியில் உள்ள ICARஇன் தேசிய தாவர மரபணு வளங்கள் செயலகம் (NBPGR) மற்றும் ஹைதராபாத் சர்வதேச மிதவறட்சி வெப்ப மண்டலத்துக்கான ஆராய்ச்சி நிறுவனம் முதலிய பல்வேறு களஞ்சியங்களில் சேமிக்கப்படுகின்றன. இந்தப் பாதுகாப்பு முயற்சி, ஆராய்ச்சியாளர்களை விவசாயிகளுக்கான திறன் மேம்படுத்தப்பட்ட தாவர வகைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த உதவும்.

“பல்வேறு திறன் மேம்படுத்தப்பட்ட சிறுதானிய வகைகள் விவசாயிகளிடம் அவர்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன” என்று NIPGRஇன் விஞ்ஞானியும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் ஆசிரியருமான முனைவர் மனோஜ் பிரசாத் கூறுகிறார். மேலும் இத்தகைய செயல்பாடுகள், பணப்பயிர்களின் சாகுபடி அதிகளவு இருக்கும் நம் நாட்டில் சிறுதானிய சாகுபடியைத்  தக்கவைத்துக் கொள்ள உதவுகின்றன.

வெவ்வேறு அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி சிறுதானிய சிற்றினங்களின் மேம்பாட்டுக்கான வழிமுறையையும் இந்த ஆய்வின் ஆசிரியர்கள் பரிந்துரைக்கின்றனர். பல்வேறு உயிரியல் துறைகளின் ஆய்வில் இருக்கும் தரவுகளின் ஒருங்கிணைப்பு, மரபணுத்தொகுதி தொகுப்பாக்க யுக்திகளைப்  பயன்படுத்திக்  கையாளக்கூடிய மரபணுக்களைக் கண்டறிய உதவுகின்றது. இந்த மரபணுக்களை மாற்றியமைப்பதன் மூலம் தாவரங்களிடம் தேவையான பண்பை வெளிப்படுத்த முடிகின்றது. அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் மூலம் சிறுதானிய விவசாயத்தை உயிர்ப்பிப்பது, வருங்காலத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகைகளை, உலக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடை எதிர்த்துப் போராட உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள், ICARஇன் அகில இந்திய ஒருங்கிணைந்த சிறுதானிய ஆராய்ச்சித் திட்டத்தின் (AICRP-SM) மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். “பெருந்தானியங்களைக் காட்டிலும் சிறுதானிய விவசாயத்தை உழவர்கள் விரும்புவதில் தலைகீழ் போக்கு நிலவுகின்றது. ஏனென்றால், சிறுதானியங்கள் கடினமான பயிர்களாகவும் குறைந்தப்பட்ச வேளாண் இடுபொருட்கள் தேவைப்படும் பயிர்களாகவும் இருக்கின்றன” என்கிறார் முனைவர் பிரசாத். மேலும், பாரம்பரிய வகைகளைப் பாதுகாப்பது, விளைச்சலை அதிகரிப்பதற்கு ஆராய்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் பயிர்களினால் கிடைக்கும் வருமானத்தை உறுதி செய்வது முதலியவை விவசாயிகளை சிறுதானிய சாகுபடியைத் தேர்வு செய்ய வைக்க உதவும் என்று அவர் கூறுகிறார். இதனோடு சிறுதானிய விவசாயம், உணவில் பல்வகைமையை உறுதி செய்யும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை ஊக்குவிக்கும்.