முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

புற்றுநோய் சிகிச்சையில் புதிய விடியலை நோக்கி நகர்த்தும் மீநுண் தொழில்நுட்பம்

Read time: 1 min
மும்பை
30 செப் 2019
புற்றுநோய் சிகிச்சையில் புதிய விடியலை நோக்கி நகர்த்தும் மீநுண் தொழில்நுட்பம்

மீநுண் தொழில்நுட்பம் எனப்படும் “நானோ தொழில்நுட்பம்” இன்று அறிவியலில் மிகப்பெரும் மாற்றத்தினை உண்டாக்கி வருகின்றது. மூலக்கூறு அளவிலும் கூட பருப்பொருட்களை கையாளும் தொழில்நுட்பமே மீநுண் தொழில்நுட்பம். மீநுண் துகள்கள் கரிமம் சார்ந்த மற்றும் சாராதவை என இரு வகைகளில் உள்ளன, இவைகள் மிக நுண்ணிய அளவினைக் கொண்டதாகும். இப்படிப்பட்ட மீநுண் பொருட்களை, அகச்சிவப்பு ஒளியின் (Infrared light) உதவியுடன் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வகை மீநுண் தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் சிகிச்சையில்  புதிய நம்பிக்கையினை விதைத்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் ஆரம்ப நிலையில் இருந்தாலும், செறிவூட்டப்பட்ட தொடர் ஆய்வுகளின் மூலமாக இந்த ஆய்வு முடிவுகளை மனித சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியும் என ஆராய்சியாளர்கள் திடமாக நம்புகிறார்கள். மும்பை  தொழில்நுட்பக் கழகத்தை (Indian Institute of Technology, Bombay) சேர்ந்த பேராசிரியர் ரோகித் ஸ்ரீவத்சவா, பூனே அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்- தேசிய வேதியல் ஆய்வகத்தினை (CSIR- National Chemical Laboratory) சேர்ந்த முனைவர் கலியபெருமாள் செல்வராஜ் அவர்களது ஆய்வுக்குழுக்கள் இணைந்து  நடத்திய ஆய்வில் கொழுப்பு மற்றும் தங்க உலோகத்துடன் சேர்த்து கலப்பு மீநுண் பொருட்களை தயாரித்துள்ளனர். இவற்றினைக் கொண்டு புற்றுநோய்க்கு  சிகிச்சை அளிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர்.

ஆய்வாளர்கள் ஒளியில் வினையாற்றக்கூடிய தங்கம்-கொழுப்பு கலப்பு மீநுண் துகள்களை உருவாக்கியுள்ளனர். இவற்றினை மருந்துடன் உடலில் செலுத்தும் போது குறிப்பிட்ட பகுதிக்கு  தேவையான நேரத்தில் மருந்தினை வெளியிடக்கூடியவை. மேலும் இவை உடலின் செயல்பாடுகளில் இணக்கமாகவும், நச்சற்றதாகவும் விளங்குவதாக  தெரிவிக்கின்றது.

"நாங்கள் அறிந்தவரையில், புற்றுநோய்க்கான மீநுண் மருத்துவம் என்பது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இவ்வகை மீநுண் மருந்துகள் செல்களில் தன் இலக்குகளை அடைவதிலும், தசைகளில் இணக்கமின்மை காட்டுவதாலும் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும், இவற்றை களைவதே எங்கள் இலக்காகும்" என்கிறார் தேசிய வேதியல் ஆய்வகத்தினை சேர்ந்த முனைவர் ராஜேந்திர பிரசாத்.

இன்போசிஸ் நிறுவனம் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தினால் நிதி நல்கப்பட்ட இந்த சமீபத்திய ஆய்வு பையோகாஞ்சுகேட் கெமிஸ்ட்ரி (Bioconjugate Chemistry) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.

தற்போதுள்ள நிலையில் புற்றுநோய் மருந்துகளை நாம் உட்கொள்ளும் போது அவை உடலில் நோயற்ற மற்ற செல்களிலும் தாக்கம் செலுத்தி அழிக்கின்றன. இதனாலேயே புற்றுநோய் சிகிச்சையில் அதிகமான பக்க விளைவுகள் காணப்படுகின்றன. தங்கம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் வடிவமைக்கப்பட்ட இந்த கலப்பு மீநுண் பொருட்கள் கோள வடிவமைப்பு கொண்டவை. இந்த மீநுண் பொருட்களுக்குள் புற்றுநோய் மருந்தினை போதித்து அனுப்ப முடியும். கொழுப்பு மூலக்கூறின் உள்ளே புற்றுநோய் மருந்து பொதிந்து வைக்கப்பட்டிருக்கும், தங்க மீநுண் துகள்கள் இந்த கொழுப்பு சவ்வின் உள்ளேயும் வெளியேயும் அடுக்கப்பட்டிருக்கும்.

மருந்துடன் அனுப்பப்படும் இந்த மீநுண் துகள்கள் உடலில் செலுத்தப்படும் போது அவைகள் உடலில் புற்றுநோய் செல்கள் மட்டுமே இருக்கும் பகுதிகளை அடைந்து மருந்துகளை வெளியிடும் தன்மை கொண்டவை. ஒளியில் வினையாற்றக் கூடிய இந்த மீநுண் பொருட்கள், அகச்சிவப்பு ஒளியில் சிதைவடைந்து புற்றுநோய் மருந்தினை வெளிப்படுத்துவதோடு அல்லாமல் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தி புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு  உதவுபவை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மற்ற உலோகங்களை ஒப்பிடும் போது, தங்கத்தில் ஒளியினை வெப்பமாக மாற்றும் திறன் மிகுதியாக இருப்பதினால் அது பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த சிதைவடைந்த மீநுண் துகள்களை உடல் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாமல் வெளியேற்றப்படுவதாக  இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த தங்க மீநுண் துகள்கள் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை இரண்டிற்கும் பயன்படுத்த முடியும். இந்த துகள்கள் உடலில் எங்கு பயணிக்கின்றன என்றும் நம்மால் பார்க்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

"முந்தய ஆய்வு குறிப்புகளில் மீநுண் மற்றும் ஒளிவெப்ப சிகிச்சை இரண்டும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் குறித்த குறிப்புகள் இருந்தாலும், தங்க மீநுண் துகள்கள் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகள் கொண்ட மீநுண் கலப்புகளை இணைத்து புற்றுநோய் கண்டறிதலுக்கும் சிகிச்சைக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த முழுமையான ஆய்வு முடிவுகள் வந்ததிருப்பது இதுவே முதல் முறை" என்று இவ்வாய்வின் சிறப்பினை விளக்குகிறார் முனைவர் பிரசாத். "இந்த கலப்பின மீநுண் துகள்களின் செயல்திறனை மற்ற புற்றுநோய் சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும்போது, இந்த துகள்கள் 90 சதவீத புற்றுநோய் செல்களை அழிக்க முடிந்தது" என்கிறார் இந்த மீநுண் துகள்களை செல்களின் மீது ஆய்வு செய்த முனைவர் தீபக் சௌகான். 

ஆய்வாளர்கள் இந்த மீநுண் துகள்களை தற்போது எலிகளின் மீது பரிசோதனை செய்கின்றனர்.

இந்த தொழில்நுட்பத்தை எப்போது நாம் பயன்படுத்த முடியும் எனும் நம் கேள்விக்கு, "இந்த மீநுண் மருந்துகளை மருத்துவமனை மற்றும் பொது மக்களிடம் கொண்டு வருவதென்பது சவாலாகவே உள்ளது" என்கிறார் முனைவர் பிரசாத். "இந்த மருந்துகளின் உடலியல் செயல்பாட்டினை முதலில் பெரு விலங்குகளான பன்றி மற்றும் குரங்குகளின் மீது சோதனை செய்த பின்பே மனிதர்களின் மீது சோதனைப் பயன்பாடு செய்ய முடியும். பின்னர் தான் இவற்றின் முடிவுகளைக்  கொண்டே உணவு மற்றும் மருத்துவ கழகத்தின் (Food and Drug Administration) அனுமதி பெற்ற பின்னரே இது பொது பயன்பாட்டிற்கு வரும்" என்று முடித்தார் பிரசாத்.