சென்ற வருடம், சூன் 2019, சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியான செய்தி ஒன்று வந்தது. சென்னை நகரின் நீராதாரங்களில் நீரின் அளவு 0.1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது, உலாவிக்கொண்டிருக்கும் நீருந்துகள், காலிக்குடங்கள் மற்றும் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் மக்களை பல்வேறு வளர்ந்த நகரங்களில், அதுவும் குறிப்பாக தென்மாநில நகரங்களில் நம்மால் காணமுடிகிறது. இந்திய அரசின், இந்திய மாற்றத்திற்கான தேசிய மையம் (National Institute of Transforming India (NITI) Aayog), 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 21 இந்திய நகரங்களில் 2020 ஆண்டிற்கு பிறகு நிலத்தடி நீர் வெகுவாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்கள் பட்டியலில் பெருநகரங்களான பெங்களூரு, டில்லி, வேலூர், சென்னை மற்றும் ஹைதராபாத் முதலிய நகரங்களும் அடங்கும். இந்தப்பற்றாக்குறைக்கு காரணம் என்ன? ஏன் தென் மாநிலங்கள் அதிகமாக பாதிப்பிற்குள்ளாகின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மும்பை இந்திய தொழில்நுட்பப் கழகம், கட்டுமானப் பொறியியல் துறையினை சேர்ந்த ஆய்வாளர்களான அகிலேஷ் எஸ். நாயர் மற்றும் பேராசிரியர். ஜெ. இந்து இதற்கான விடைகளை தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் அடிக்கடி ஏற்படும் வறட்சி மற்றும் அதன் எதிர் விளைவுகளையும் இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் இண்டர்நேஷனல் ஜெர்னல் ஆப் ரிமோட் சென்சிங் (International Journal of Remote Sensing) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.
தினமும் குறைந்துவரும் நிலத்தடிநீரானது, நீரேற்றம் முதலிய அடிப்படை தேவைகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்கால உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது. இந்தியா போன்ற தீவிர வேளாண்மை சார்ந்த நாடுகளில், நீர்ப்பாசனம் முதலிய தேவைகளுக்கு 90 சதவீதத்திற்கு மேல் நிலத்தடி நீரே பயன்படுத்தப்படுகின்றது. மேலும், தவறிய மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு போன்ற காரணிகளும் தற்போதைய நிலத்தடிநீர் பற்றாக்குறையை அதிகரிக்க பெரிதும் பங்காற்றுகிறது. போதிய மழை பொழிவு இல்லாததால் ஏற்படும் வறட்சியினால் நிலத்தடி நீர் இருப்புகளை கண்மூடித்தனமாக சுரண்டுவதற்கு காரணமாக அமைகிறது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நிலத்தடி நீர் அளவில் உள்ள ஏற்ற இறக்கங்களை காட்டும் முன்னாள் தரவுத்தொகுப்புகள் போதிய அளவில் இல்லாததால், முந்தைய ஆய்வுகள், தெற்கு மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் நெருக்கடியை குறைத்து மதிப்பிட்டுள்ளன. கடுமையான வறட்சியின் காரணத்தினால் நிலத்தடி நீரின் தேவை பெரிதும் அதிகரித்து வருவது, அதன் சேமிப்பின் வீழ்ச்சியினை உணர்த்துகின்றது.
பெரும்பான்மையான ஆய்வுமுடிவுகள் இந்தியாவின் வடமாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் குறைவினைக் குறித்தே வெளிவந்துள்ளன. பொதுவாகவே தென் மாநிலங்களில் நிலத்தடி நீரின் அளவு நிலையாகவே இருந்தது. எனினும் சில ஆண்டுகளாகவே பெங்களூரு மற்றும் சென்னை முதலிய தென்னிந்திய மாநிலங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை குறித்து நமக்கு தெரியவருகின்றது,” என்கிறார் பேராசிரியர் இந்து. “இந்தக் காரணிகளே முந்தைய ஆய்வுகள் மற்றும் தற்போதை உண்மைக் கள நிலவரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைக் கண்டறிய எங்களைத் தூண்டியது” என்கிறார் பேராசிரியர் இந்து.
[இடமிருந்து வலமாக] இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அகிலேஷ் நாயர், மும்பை இந்திய தொழில்நுட்ப கழகம்; முனைவர் ஜெ. ஸ்ரீகாந்த், பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு மையம் (CSIRO), ஆஸ்திரேலியா; பேராசிரியர் ஜெ இந்து மும்பை இந்திய தொழில்நுட்ப கழகம்.
இந்த ஆய்விற்காக, நாசாவினுடைய கிரேஸ் எனப்படும் புவியீர்ப்பு மீட்பு மற்றும் பருவநிலை பரிசோதனை செயற்கைகோள் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் கண்காணிப்பில் உள்ள 6000 கிணறுகளின் பதிமூன்றாண்டு (2003 முதல் 2016 வரை) நிலத்தடி நீர் தொடர்பான தரவுகளை ஆய்வாளர்கள் சேகரித்தனர். பெரும்பாலும், நிலத்தடி நீர்மட்டங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் 2009ஆம் ஆண்டு முதல் இருப்பதால், அதற்கு முந்தைய காலகட்டம் மற்றும் பிந்தைய காலகட்டம் எனும் இருவேறு காலநிலைகளில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களில், 2009ற்கு முன்பு நிலத்தடி நீரானது உயர்ந்திருந்ததாகவும், அதற்கு பின்னர் மாதத்திற்கு 0.25 சென்டிமீட்டர் வரை அதீதமாக குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதிய மழையின்மையின் காரணமாக, 2009 ஆம் ஆண்டில், இந்தியா மிக மோசமான வறட்சியினை சந்தித்தது. இது சராசரி மழை பொழிவை கொண்ட ஆண்டின் அளவினை விட 23% குறைவாக இருந்தது. மேலும், தென்னிந்தியாவின் நிலமானது அதிகமான கருங்கல் பாறைகளைக் கொண்டிருப்பதால் மழைநீர் எளிதில் உள்ளே ஊடுருவமுடியாது. இந்த சாதகமற்ற புவியியல் அமைப்பு நிலத்தடி நீர் தட்டுப்பாடிற்கு பெரும் பங்காற்றுகின்றன.
2009ஆம் ஆண்டிற்கு பிறகு, மாறுபட்ட மழைப்பொழிவு நிலத்தடி நீர் சேமிப்பில் பெரும்பங்காற்றுகின்றன. மேலும், சென்னை போன்ற நகரங்களின் விரிவாக்கம், நீர் நிலைகளினூடே மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள், நிலத்தடிநீர் மறுஊட்டமாவதினை தடைசெய்கின்றன. மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் இந்த இடையூறுகள், நிலத்தடி நீர் உட்புகுவதை தடுப்பதோடல்லாமல், வெள்ளம் மற்றும் நுண்கிருமிகள் அல்லது ரசாயன நிலத்தடிநீர் மாசுக்கலப்பிற்கும் பங்காற்றுகின்றன.
இந்தியா பல வறட்சிகளைக் கண்டுள்ளது, சமீபகாலங்களில் இது அதிகரித்துள்ளது. இந்திய மாற்றத்திற்கான தேசிய மையத்தின் அறிக்கையானது, 2030 ஆம் ஆண்டில், 40 சதவீத மக்கள் தொகைக்கு குடிநீர் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் நீர் பற்றாக்குறை காரணமாக சிறு மற்றும் குறு தொழில்களும் மற்றும் வேளாண் சார் தொழில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகக்கூடும் என்று எச்சரிக்கின்றது. நீர் பற்றாக்குறையானது வரும் காலங்களில், ஏற்கனவே சராசரிக்கும் குறைவாக உள்ள சமுக மற்றும் பொருளாதார நிலைகளை மேலும் பின்னுக்கு தள்ளக்கூடும். நடுத்தரப் பிரிவு மற்றும் வேலை பார்க்கும் மக்களிடம் வேலைவாய்ப்பின்மை முதலிய தாக்கங்களை இது ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் உலக அளவில் 75 சதவீத வேலைவாய்ப்புகள் நீரை அடிப்படையாகக் கொண்டவை.
நிலத்தடி நீரினை பாதுகாப்பது மற்றும் அதன் சரிவினைக் குறைப்பது, இதன் வழியாகவே இந்திய சமூக, அரசியல், பொருளாதார, தொழில் மற்றும் வேளாண் முதலிய புலன்களில் நிலைப்பேறடையச் செய்ய இயலும். இப்படிப்பட்ட நீர் பற்றாக்குறையை சமாளிக்க, காவிரி நதிநீர் பங்கீடு போன்ற மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் தொடர்பான மோதல்கள் நிறுத்தப்பட்டு, நீர் மேலாண்மை தொடர்பாக சுமுகமான, ஒருங்கிணைந்த முடிவுகள் எட்டப்பட வேண்டும்.
“அறிவியற்பூர்வமான நீர் மேலாண்மை முறைகள் மூலமாக நிலத்தடிநீர் பயன்பாட்டிற்கு வழிகாண வேண்டும். குறிப்பாக நீர்பாசனத்திற்காக அளவிற்கு அதிகமான நிலத்தடி நீர் பயன்படுத்துவதை தவிர்த்து வேறு நீர்சேமிப்பு முறைகள் மூலமாக தீர்வுகள் காணப்பட வேண்டும்” என்கிறார் பேராசிரியர் இந்து.
“பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாலும், சட்டத்திற்கு புறம்பான வழிகளில் நிலத்தடி நீரினை பயன்படுத்துவதை தடுப்பதன் வழியாகவும் இதை தடுக்க முடியும். நிலத்தடிநீர் பயன்பாட்டினை குறைப்பதற்காக, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மருவூட்டக் கிணறுகள், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயற்கை முறையில் நிலத்தடி நீரினை மருவூட்டம் செய்யும் உத்திகள் பின்பற்றப்படுகின்றன” என்றார் பேராசிரியர் இந்து. மேலும் இந்த மாநிலங்களில் தற்போது நிலத்தடி நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது என்ற தகவலையும் தருகிறார். “இப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை தேசிய அளவில் நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக இந்தியாவில் நிலத்தடி நீர் சேமிப்பில் பெரிதும் நாம் முன்னேற முடியும். எங்களது தற்போதைய திட்டப்பணியில் ஆஸ்திரேலியா, நாடுகளின் பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுமையத்தினை (CSIRO) சேர்ந்த ஆய்வாளர் முனைவர் ஜே. ஸ்ரீகாந்த் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றோம். இதில் இந்தியாவிற்கான நிலத்தடி நீர் சேமிப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றோம்” என்று முடித்தார் பேராசிரியர் இந்து.
மேலும் இந்த மாநிலங்களில் தற்போது நிலத்தடி நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது என்ற தகவலையும் தருகிறார். “இப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை தேசிய அளவில் நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக இந்தியாவில் நிலத்தடி நீர் சேமிப்பில் பெரிதும் நாம் முன்னேற முடியும். எங்களது தற்போதைய திட்டப்பணியில் ஆஸ்திரேலியா, நாடுகளின் பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுமையத்தினை (CSIRO) சேர்ந்த ஆய்வாளர் முனைவர் ஜே. ஸ்ரீகாந்த் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றோம். இதில் இந்தியாவிற்கான நிலத்தடி நீர் சேமிப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றோம்” என்று முடித்தார் பேராசிரியர் இந்து.