முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

இரைச்சலான வாகனங்களின் இடர்ப்பாடுகளை நாம் மட்டுமல்ல, விலங்குகளும் எதிர்கொள்கின்றன

Read time: 1 min
ஜெய்ப்பூர்
3 மார் 2022
இரைச்சலான வாகனங்கள் விலங்குகளுக்குக் கடும் துன்பத்தை  ஏற்படுத்துகின்றன. பட உபயம்: விக்கிமீடியா காமன்ஸ் வலைத்தளம் (சிறுத்தை மற்றும் வன ஊர்தி)

இரைச்சலான வாகனங்கள் விலங்குகளுக்குக் கடும் துன்பத்தை  ஏற்படுத்துகின்றன.
பட உபயம்: விக்கிமீடியா காமன்ஸ் வலைத்தளம் (சிறுத்தை மற்றும் வன ஊர்தி) 

ஜாலானா காப்புக்காடு என்பது ஆரவல்லி மலைத்தொடருக்கு மத்தியிலும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரின் மையப்பகுதியிலும் அமைந்துள்ள, சுமார் 29 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக் கொண்ட மூல வனப்பகுதி ஆகும். ஒருகாலத்தில், புலிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், மான்கள்,  பல்வேறு பறவை வகைகள் முதலிய வனவிலங்குகளைக் கொண்டிருந்ததால், ஜெய்ப்பூர் மகாராஜாக்களின் விருப்பமான வேட்டைத் தளமாக ஜாலானா வனப்பகுதி இருந்தது. மனித நாச செயல்களால் வருத்தமளிக்கும் வகையில் பெரும்பாலான பெரிய பூனை வகைகள் அழிந்துவிட்டன. இதனால், வெறும் 35 சிறுத்தைகள் மட்டுமே ஒரே உச்சநிலை வேட்டையாடிகளாக இன்று இருக்கின்றன.

சிறுத்தைகள் கூச்ச சுபாவம் உள்ளவையாகவும் எல்லைக்கு உட்பட்டவையாகவும் இருக்கின்றன. இருப்பினும், ஜாலானாவில், அவை சுதந்திரமாகச் சுற்றித் திரிவதையும் மனித நடவடிக்கைகள் உள்ள  மண்டலங்களில் அமைந்திருக்கும் பாதைகளைக் கடப்பதையும்கூட நம்மால்  காணமுடிகின்றன. பெரும் பூனை வகைகளின் பதுங்கி இரைத்தேடி அலையும் திகைப்பூட்டும் நடத்தை, வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் ஒரு தனித்துவமான மனித-ஊனுண்ணி சந்திப்பு சூழலை ஏற்படுத்துகின்றது.

இதனால், ராஜஸ்தான் வனத்துறை இந்தக் காப்புக்காடு பகுதியில் வாகனங்களைக் கட்டுப்படுத்தியது, சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவியது மற்றும் மனித ஊடுருவலை சோதனை செய்ய ரோந்து பணியை அதிகரித்தது.

"இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் காப்புக்காடு பகுதியை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்குமான போதிய அடிப்படை அறிவியல் தரவுகள் வனத்துறையிடம் இல்லை.  இதில் குறிப்பானது, இக்கட்டான சூழலான மனித-ஊனுண்ணி மோதல்கள் பற்றிய தரவுகள் இல்லாதது ஆகும்” என்கிறார் புனேவில் உள்ள ஜாலானா வனவிலங்கு ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர், திரு. சுவப்னில் கும்போஜ்கர்.

ஆகையால் திரு. கும்போஜ்கர், ஒரு உலகளாவிய வனவிலங்கு வல்லுநர்கள் குழுவுடன் இணைந்து, அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி ஜாலானா காப்புக்காடு பகுதியை நிர்வகிப்பதற்கும் வனவிலங்குகளில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களின் தாக்கத்தை ஆய்வுச் செய்வதற்குமான ஒரு ஆய்வுத்திட்டத்தை முன்வைத்தார். அண்மையில், இந்தக் குழு வன ஊர்திகளின் இரைச்சல் அளவு எவ்வாறு சில பாலூட்டிகளின் பறவைகளின் நடத்தையையும் எதிர்வினையையும் பாதிக்கின்றது என்பதை மதிப்பீடு செய்தது. ஐரோப்பியன் ஜர்னல் ஆஃப் வைல்டுலைஃப் ரிசர்ச் (European Journal of Wildlife Research) எனும் ஆய்வுச் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அவர்களின் அவதானிப்புகள், இரைச்சல் குறைவான மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நிறுவுகின்றன. அவர்களின் ஆய்வு,  சுற்றுச்சூழல் உலா (ecotourism) வழிமுறைகளுக்கு ஒரு அளவுகோலை வகுத்துள்ளது. இந்த ஆய்வின் விளைவாக, ஜாலானா அருகே அமையவிருக்கும் மற்றொரு காப்புக்காட்டில் தினசரி பயணத்திற்கு மின் வாகனங்களை வாங்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.

இந்த வனத்துறை 2017ஆம் ஆண்டில், ஜாலானாவை ஒரு காப்புக்காடாக அறிவித்து அதனுள் சிறுத்தைகள்  உலாவுவதற்கான அனுமதியையும் அளித்தது. வனத்தில் உலாவக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட வாகனங்களை (ஜிப்சி - கரடுமுரடான சாலையிலும் செல்லும் வாகனங்கள்) பயன்படுத்தும்படி வனத்துறை கட்டாயமாக்கியது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டில், தனது தொகுதியில் மேலும் ஆறு மின்சார வாகனங்களை (மஹிந்திரா மின்-வாகனங்கள்) வனத்துறை அதிகாரிகள் சேர்த்தனர்.

இந்த ஆய்வுக்குழு, சுமார் ஒரு வாரக் கால நீண்ட கண்காணிப்பின் மூலம் வன ஊர்திகளினால் ஏற்படும் சத்தத்திற்கு எவ்வாறு பல வகையான பறவைகளும்  பாலூட்டிகளும் எதிர்வினை ஆற்றுகின்றன என்பதை பதிவு செய்தது.

"சத்தம் மற்றும் ஒலிகளுக்கு, விலங்குகள் மூன்று வழிகளில் எதிர்வினையாற்றுகின்றன - அ) முதற்கட்ட விழிப்புணர்வு, b) கவனிப்பது மற்றும்   சுருக்கமாகப் பார்ப்பது, c) அச்சுறுத்தல் உணரப்படும்போது அங்கிருந்து விரைதல்," என்று இந்த ஆய்வின் தலைமை ஆசிரியரும் இஸ்ரேலின் நெகெவ்-எய்ளத் வளாகத்திலுள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் ரூவென் யோசெப் கூறுகிறார். இதற்கு முன்னர் இந்த ஆராய்ச்சியாளர், மஹாராஷ்டிராவின் போர் என்ற இடத்தில் புலிகள்மீது விரிவான ஆய்வுப்பணியாற்றியுள்ளார்.

விலங்குகள், மனிதர்கள் இருக்கும்போது எச்சரிக்கையாக இருந்து மேய்தலின் மூலமாகவும் ஓய்வு எடுத்தல் அல்லது உணவு தேடுதல் முதலியவற்றை நிறுத்துதல் மூலமாகவும் அசையாமல் நிற்பதன் மூலமாகவும் தனது எதிர்வினையை ஆற்றுகின்றன என்று உலகளாவிய ஆய்வுகள் காட்டுகின்றன. இத்தகைய எதிர்வினைகள் நீண்ட காலத்திற்கு நீடித்தால், அவை விலங்குகளின் இயல்பான நடத்தை முறைகளை மாற்றலாம்.

ஆகையால், மின்-வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சத்தத்தின் அளவு குறைவாக இருக்கும். விலங்குகளின் இயல்பான நடத்தைக்குக் குறைவான இடையூறு மட்டுமே இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சவுண்ட் மீட்டர் ஆப் (Sound Meter App) எனப்படும் கைபேசி செயலியைப் பயன்படுத்தி அனைத்து வாகனங்களின் இயந்திர இயக்கியின் (Engine)  சத்தத்தை - செயல்படுத்தாத நிலை, இயக்கும் நிலை  மற்றும் செயல்படும் வேகத்தை அதிகப்படுத்தும் நிலை முதலிய மூன்று வெவ்வேறு நிலைகளிலும் ஆராய்ச்சியாளர்கள் அளந்தனர். இந்தச் செயலி, சத்தத்தின் குறைந்தபட்ச, அதிகபட்ச மற்றும் சராசரி அளவுகளை, டெசிபல்களில் (Decibels)  அளப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், அனைத்து வாகனங்களின் மொத்த ஒலி அளவை இம்மூன்று நிலைகளிளும் அராய்ச்சியாளர்கள் அளந்தனர்.

வழக்கமான வன ஊர்திகளின் (இடம்) மற்றும் மின்-ஊர்திகளின் (வலம்) இரைச்சல் அளவைக் காண்பிக்கும் செயலியின் ஒரு அளவீடு 

அவர்களின் ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான விலங்கு எதிர்வினை அம்சம் எது என்றால் புலம்பெயர்தல் துவக்க தூரம் (Flight Initiation Distance - FID) ஆகும். FID என்பது ஒரு விலங்கு வாகனத்தைப் பார்த்து புலம்பெயர்வதற்கு முன்னர் இருக்கக்கூடிய மிக நெருக்கமான தூரமாகும். இந்த ஆய்வுக்குட்பட்ட ஒவ்வொரு விலங்கினத்திற்கும் புலம்பெயர்தல் தூரத்தை அளவிடுவதற்கு வீச்சறிவி உட்பொருத்தப்பட்டுள்ள  இரட்டை தொலைநோக்கிகள் ஆய்வு குழுவிற்கு உதவியன. அவர்கள் 13 வாகனங்களுக்கு, மேல் குறிப்பிட்டுள்ள மூன்று இயக்க முறைகளிலும் தினசரி அளவீடுகளைக் குறித்துக் கொண்டனர். மொத்தமாக,  227 FIDக்களை, ஐந்து பறவை இனங்களுக்கும் (174 FID) மூன்று பாலூட்டி இனங்களுக்கும்  (53 FID) ஆராய்ச்சியாளர்கள் அளவு எடுத்தனர்.

இருப்பினும், சிக்கலான தரவுத்தொகுப்புகளுக்கு மற்றும் பகுப்பாய்வுக்கு வழிவகுக்கும் பல காரணிகளை வனவிலங்கு கண்காணிப்புக்  கொண்டிருக்கலாம். இதற்குச் சான்றாக, வெவ்வேறு விலங்கினங்கள் (ஒலிகளை வித்தியாசமாக உணரக்கூடியவை), வானிலை மற்றும் வட்டைகள் (Tyres) (வனப்பாதையிலுள்ள சரளைக்கல் மீது உறையும்போது சத்தத்தைக் கூட்டும்) முதலிய காரணிகள் வனவிலங்கு கண்காணிப்பில் இடம்பெற்றிருக்கும். இது தவிர, இனங்கள் சார்ந்த அம்சங்களான மனிதர்களை அச்சுறுத்தலாகக் கருதுவது போன்ற அம்சங்களும் காட்டில் காரணியாகச் செயல்படுகின்றன.

எனவே, ஆய்வாளர்கள் புள்ளியியல் மற்றும் வரைகலை முறைகளைப் பயன்படுத்தி, கண்காணிப்புத் தரவில் உள்ள பொருத்தமற்ற அளவுருக்களைப் பொதுவாக்குவதற்கும் அகற்றுவதற்கும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் சிக்கலான தரவைப் பகுப்பாய்வு செய்ய ஜெனரல் லீனியர் மிக்சட் மாடல் (General Linear Mixed Model - GLMM) அணுகுமுறையைப் பயன்படுத்தினர். GLMM என்பது ஒரு தொடர் பகுப்பாய்வு உத்தியாகும். இதில் தேவையற்ற காரணியின் தரவுகள் பகுப்பாய்வின் ஒவ்வொரு தொடர்ச்சியான கட்டத்திலும் அகற்றப்பட்டு மிகத் தாக்கமான காரணியைத் தெரியப்படுத்துகின்றது.

"இந்த முறையின் மூலம், எங்களால் மிகவும் முக்கியமில்லா காரணிகளை அகற்றி கணிசமான பகுதிகளுக்குப் பகுப்பாய்வைக் குறுக்கமுடிகின்றது. இதனையடுத்து, ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பைக் கொடுக்கும் உயிரினங்களின் எதிர்வினைகளில் கவனம் செலுத்துகின்றோம்," என்கிறார் பேராசிரியர் யோசெப்.

மேலும் இந்த ஆய்வில், சுற்றுப்புறச்சூழல் காரணிகள் அல்லாது விலங்கின் எதிர்வினை புள்ளிவிவர ரீதியாக மிகவும் குறிப்பிடத்தக்க காரணியாக இருக்கின்றது என்று  அவர் கூறுகிறார். இதற்கு உதாரணம், முதலில் இந்தப் பகுப்பாய்வு பறவைகளிலும்  விலங்குகளிலும் இருபெரும் தரவுத்தொகுப்பை உள்ளடக்கி இருந்தது. இருப்பினும், பறவைகள் மரங்களில் வாழ்பவையாக இருப்பதால் சத்தத்தின் அளவுகளால் பாதிக்கப்படவில்லை என்பதையும் நில இடர்ப்பாடுகளைக் குறைந்த அச்சுறுத்தலாக உணர்கின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆகையால், அடுத்தடுத்த பகுப்பாய்விற்காகப் பறவைகளின் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் நீக்கினர்.

விலங்குகள் வழக்கமான கரடுமுரடான சாலையில்  செல்லும் வாகனங்களின் சத்தத்தை எந்தத் தூரத்தில் அச்சுறுத்தலாக உணரப்பட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்கிறதோ அந்தத் தூரம் மின்-ஊர்திகளைவிட அதிகமாக இருக்கின்றது என்பதை ஆய்வுக்குழு கவனித்துள்ளது. எளிமையாகக் கூறுகையில், விலங்குகளின் புலம்பெயர்தல் துவக்க தூரம் (FID) வழக்கமான வன வாகனங்களுடன் ஒப்பிடும்போது மின் வாகனங்களுக்குக் குறைவாக இருந்தது.

குறைந்த சத்தமுள்ள மின்-ஊர்திகள், விலங்குகளுக்குக் குறுகிய புலம்பெயர்தல் துவக்க தூரத்தை அளிக்கின்றன (படங்களின் உபயம்: ஆசிரியர்கள்)

"இந்தப் பகுப்பாய்வுகளிலிருந்து, விலங்குகளிடமிருந்து எதிர்வினையை எழுப்பும் ஒரு முக்கியக் காரணி வாகனத்தின் வகை என்று நாங்கள் முடிவு செய்தோம்" என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மேலும் விலங்கினங்களின் எதிர்வினைகளைப் பகுப்பாய்வு செய்தபோது, ​​​​மிக முக்கியமான எதிர்வினை சிறுத்தைகளிடமிருந்து (கூச்ச சுபாவமுள்ள உயிரினங்கள்) பெறப்பட்டன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

சுற்றுச்சூழல் உலாவை  நிர்வகிப்பதற்கு அறிவியல் வழிமுறைகள் மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"வனவிலங்கு ஆய்வை ஒரு ஜனரஞ்சகத் திட்டப்பணியாக அல்லது சாதாரன அடிப்படைப் புரிதலில் விட்டுவிட முடியாது. இதற்கு மாறாக, வனவிலங்குகளைப் பற்றிய உண்மையான புரிதலை அறிவியல் பூர்வமாகவும், முழுமையாகவும், தொழில் நெறிவோடு மட்டுமே செய்ய முடியும்" என்று பேராசிரியர் யோசெப் கூறுகிறார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் செய்யப்படும் எந்த மாற்றமும் அறிவியல் ரீதியாக முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். எந்த ஒரு வளர்ச்சி நடவடிக்கையும் சுற்றுச்சூழலில் ஒரு வித்தியாசத்தைக் கொண்டுவரும், அதை முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். எனவே, காப்புக்காடாக அறிவிக்கப்பட்டாலும், அந்தப் பகுதியை உள்ளூர் அதிகார வரம்பிற்கு விட்டுவிடமல் நுட்பமான சமநிலையைத் தொடர ஆட்சிகுழுவானது விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். "ஏனென்றால், தனியாகச் செயல்படும்போது தவறு நேர்ந்தால் சமநிலை பாதிக்கும் மனித-விலங்கு சகவாழ்தல் விரைவில் மோதலாக மாறும்" என்று இந்த ஆய்வின் ஆசிரியர்கள் எச்சரிக்கின்றனர்.