ஐம்பத்தி மூன்று வயதுடைய சீலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டது), ஒரு நாள் காலையில் எழுகையில் தனது அடிவயிற்றில் சற்று வலியினை உணர்ந்துள்ளார். தனது மகளின் திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில், திருமண வேலைக்கு மத்தியில் அந்த வலியினை உதாசீனப்படுத்தியுள்ளார் சீலா. திருமணம் முடிந்து விருந்தினர்களை வழியனுப்பிய பின், தனது வலியின் தீவிரம் அதிகரிக்கவே, ஒரு மகப்பேறு மருத்துவரை நாடியபோது, சீலாவின் பிறப்புறுப்புப் பாதை, கருப்பை மற்றும் கருப்பையின் வாய் பகுதி ஊடொலி (ultrasound) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இச்சோதனைக்குப்பின் அந்த மகப்பேறு மருத்துவர், சீலாவை ஓர் புற்றுநோய் மருத்துவரைப் பார்க்குமாறு பரிந்துரைத்துள்ளார். அப்போது, சீலாவிற்கு ஒரு கனமான செய்தி காத்திருந்தது. ஆம், அவர் மூன்றாம் நிலை கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
சீலாவின் இந்த அனுபவமானது பல கருப்பை புற்றுநோயாளிகள் எதிர்கொள்ளும் ஒரு அனுபவமே ஆகும். இந்தியாவில் 10000 பெண்களில் சுமார் 1.7-15.2 பேரிடமும் கருப்பை புற்றுநோயானது அறியப்பட்டுள்ளது. இது உலக அளவில் கருப்பை புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் இரண்டாம் இடம் ஆகும்.
"பெரும்பாலாக நான் சந்தித்த நோயாளிகள், அவர்களின் கடைசி நாற்பது மற்றும் ஐம்பதாவது அகவையில் தான் இருக்கிறார்கள். இந்த இறுதி நிலை நோய்களுக்கு, வெகுசில வைத்திய முறைகள் மட்டுமே இருப்பதால் அவர்களில் பெரும்பாலோர் கைவிடப்பட்டதைப் போன்று உணர்ந்துவிடுகின்றனர்". என விவரிக்கிறார் சென்னையில் புற்றுநோயால் வாடும் குடும்பங்களுக்கு ஆலோசகராக இருக்கும் திருவாளர் இரங்கக்குமார்
கருப்பை புற்றுநோய் இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பரவும் வரையில், அதிக நேரங்களில் குறித்தறியப்படாமலே இருந்து விடுகிறது. ஆனால், இவற்றை முன்னதாகவே ஆய்ந்து கண்டுபிடிக்கும் பட்சத்தில், இந்த தீங்கிழைக் கழலைகள் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவாத வகையில் அறுவைச்சிகிச்சையின் மூலம் களைந்தெடுக்க முடியும். புற்றுநோயிற்கான வேதிச்சிகிச்சையுடன் சேர்த்து இந்த கண்டறியும் அணுகுமுறையும் இணையும் போது நோயாளிகளின் வாழ்க்கைத்தரமும், உய்வுத்திறனும் மேம்படுகிறது.
உடற்சோதனை முறை, ஊடொலி முறை மற்றும் புற்றுநோய் எதிரியாக்கியினைக் (CA-125) கண்டறியும் இரத்த பரிசோதனைகள் உள்ளிட்டவை கருப்பைப் புற்றுநோய் பரிசோதனையில் தற்போது நடைமுறையில் இருக்கும் முறைகளாகும். இவை அனைத்தும் அதற்கான கட்டுப்பாடுகளுக்குட்பட்டது. அதாவது, புற்றுநோயை உடற்சோதனை மூலம் சரியாக கண்டறிவது அச்சோதனையை மேற்கொள்ளும் மருத்துவரின் நிபுணத்துவத்தை சார்ந்தே உள்ளது. பல சந்தர்ப்பங்களில் வேறு சில உபாதைகளையும் கருப்பை புற்றுநோயென்று தவறாக ஊகிக்கப்படுகிறது. ஊடொலி முறையும் கழலைகளை தீங்கிழைக் கழலைகளா அல்லது தீங்கற்ற கழலைகளாவென பிரித்தறிய உதவாது. நோய் எதிரியாக்கி பரிசோதனையானது துல்லியமாக இருந்தாலும், அவை நோயை ஆரம்ப நிலைகளில் கண்டறிய உதவுவதில்லை. மேலும், கருப்பையின் உட்சதை வளர்ச்சி அல்லது வீக்கம் போன்றவற்றால் கூட CA-125 எதிரியாக்கியின் அளவைகள் அதிகரிக்கக்கூடும். ஆகவே, இந்த முறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தால் கூட நோயினை ஆராம்ப நிலையில் கண்டறிவது இயலாது .
"முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டறியப்பட்டால் நோய்க்கான தீர்வு விகிதம் 90% ஆகவும், இரண்டாம் நிலையினைக் கடந்து கண்டறியப்படால் இவ்விகிதம் வெறும் 5-10% ஆகவும் குறைந்துவிடுகிறது. எனவே கருப்பை புற்று நோயை அதன் ஆரம்ப நிலைகளில் கண்டறிவது மிகவும் முக்கியமாகிறது” என கூறுகிறார் விசாகப்பட்டினத்தின் டாடா புற்றுநோய் மையத்தின் முன்னாள் இயக்குனரான மருத்துவர் திரு. இரகுநாதரவ் அவர்கள்.
சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவரும் பேராசிரியருமான திரு. இராஜ்குமார் அவர்கள் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழு சமீபத்தில் கருப்பை புற்றுநோயினை முதல் நிலைகளிலே சுலபமாக இரத்த பரிசோதனை முறையில் கண்டறிய ஏதுவாக ஐந்து புரதக்குறிப்பான்களை (protein markers) கண்டுபிடித்துள்ளனர். இச்சோதனை முறையினை சந்தைக்கு கொண்டு வந்தால், இதன் செலவுகள் தற்போதுள்ள கணிப்பான் வழி உடலுறுப்பு ஊடுகதிர்ப்படத்திற்காகும் (CT Scan) செலவுக்கு ஈடாகவே இருக்கும். மேலும், இது ஒரு சுலபமான பரிசோதனை முறை என்பதால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வர வேண்டிய தேவையிருக்காது . அவர்கள் ஈரல் திறனாய்வு சோதனை மற்றும் கேடயச்சுரப்பி பரிசோதனை முறைகளை போலவே இலகுவாக இரத்த மாதிரிகளை அவரவர் வீட்டில் இருந்தே எடுத்தனுப்பி பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆராய்ச்சி சமீபத்தில் ஜர்னல் ஆஃப் ப்ரோடியோமிக்ஸ் (Journal of Proteomics) என்னும் ஆய்விதழில் வெளியானது. மேலும், இந்த ஆய்விற்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நிதி உதவி நல்கியுள்ளது.
ஆய்வாளர்கள் அவர்களின் ஆய்விற்காக கருப்பை புற்றுநோய் நோயாளிகளின் இரத்த மின்மங்களை சேகரித்து, சுமார் 3,149 புரதங்களை உயர் பகு திறன் பொருண்மை நிறமாலைமானியின் (high-resolution mass spectrometry) உதவிக் கொண்டு சலித்தெடுத்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முறையில், முதலில் புரதங்களை ஓர் அடைப்பட்ட அறையில் ஆவியாக்கி, அதனுள் மின்புலத்தைச் செலுத்தி மின்னூட்டத்திற்கு உள்ளாக்குவார்கள். ஆவியான புரதங்களை அவற்றின் மின்னூட்டத்திற்கு ஏற்ப அதன் எதிர் மின்னூட்டத்தை நோக்கி நகரும். லேசான அல்லது எடைக்குறைவான மின்னணுக்கள் வேகமாக நகருவதால் உணர்கருவி அதனை முதலில் கண்டறியும். அனைத்து பதக்கூறுகளையும் இம்முறை பகுப்பாய்வு செய்த பின், புரதங்களை அவற்றின் அளவு மற்றும் மின்னூட்டத்திற்கு ஏற்ப வகைப்படுத்தி, மாதிரிகளில் உள்ள புரதத்தின் அளவை வெகு வேகமாக கண்டுபிடிக்க இம்முறை உதவுகிறது.
அடுத்த கட்டமாக, ஆராய்ச்சியாளர்கள் புற்று நோயாளிகளின் இரத்த மாதிரிகளையும் நோய் பாதிக்கப்படாத ஆரோக்கியமானவர்களின் இரத்த மாதிரிகளையும் ஒப்பிட்டு பார்த்தபோது நோயாளிகளின் மாதிரிகளில் சுமார் 455 புரதங்கள் கிட்டத்தட்ட இரு மடங்காகவும், 52 புரதங்கள் பாதியாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 52 புரதங்கள் கருப்பைப் புற்றுநோய் ஆராய்ச்சியில் முன்கூட்டியே அறியப்பட்டப் புரதங்கள் ஆகும். இதனால் இந்தப் புரதங்களை வகைப்படுத்துவது இலகுவாக அமைந்தது. ஆனால், தேர்ந்த வல்லுனர்களால் மட்டுமே இவ்வாறு பொருண்மை நிறமாலைமானி (mass spectrometer) வழியே பதக்கூறுகளை வகைப்படுத்தத முடியும் என்பதால் இந்தப் புரதங்களை சுலபமாக கண்டறிய வேரொரு வழி ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவைப்பட்டது.
நொதிசார் எதிர்ப்புரத சோதனை என்னும் எலிசா (ELISA) பரிசோதனை இதற்கு ஒரு மலிவான மாற்று சோதனை முறையாக அமைந்தது. இந்த முறையில் புரதங்களை ஒரு சிறிய 96 பகுதிகள் அல்லது 384 பகுதிகள் உடைய தட்டில் புரதங்களுக்கேற்ற எதிர்மத் தொகுதிகளைக் கொண்டு கண்டறிய இயலும். தட்டில் உடைய ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு பதக்கூறுகளை கொண்டிருக்கும் என்பதால் இந்த சோதனை முறை ஒரு சிக்கனமான மாற்று சோதனை முறையாக அமைக்கிறது. இந்த முறையில் சற்று இலகுவாக இருந்தாலும் 500க்கும் மேற்பட்ட புரதங்களை கண்டறிவது என்பது ஒரு சிக்கலான செயலாகும். எனவே, ஆராய்ச்சியாளர்கள் குறைந்த அளவிலான புரதங்களை கண்டறிவதற்காக இன்னொரு முறையை கையாள வேண்டியதாக இருந்தது.
வெவ்வேறு சேர்வு விதியின் முறையில் புரதங்களின் சார்பு கொண்டும் அவை உயிர்மத்தில் எங்கே உள்ளது என்பதைக் கொண்டும் ஆராய்ச்சியாளர்கள் 25 புரதங்களை புற்றுநோயை கண்டறிய உதவக்கூடியதாக தேர்ந்தெடுத்தனர். இவற்றை மேலும் வேகமாக கண்டறிய குவாண்டிபாடி நெடுவரிசை சோதனை என்னும் முறையை கையாண்டனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த முறையில் ஒரே நேரத்தில் பல எலிசா சோதனைகளை ஒருங்கிணைந்து நடத்துவதால் நேரமும் முயற்சியும் சேமிக்கப்படுகிறது. பகுதிகளுக்கு பதிலாக இந்த நெடுவரிசை சோதனை முறை கண்ணாடி படலங்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட 21 புரதங்களை கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட குவாண்டிபாடி நெடுவரிசை (Quantibody array) பரிசோதனை முறை 96 கருப்பை புற்று நோயாளிகளின் பதக்கூறுகளையும், 218 நோய் அல்லாதவர்களின் மாதிரிகளையும் சோதித்தனர் இவற்றுள் ஆறு புரதங்கள் நோயாளிகளின் மாதிரிகளில் மட்டுமே அதிகமாக மேம்பட்டு காணப்படுவது விளங்கியது. இவ்வாறு ஈட்டப்பட்ட முடிவானது முன்னரே பொருண்மை நிறமாலைமானியில் ஈட்டப்பட்ட முடிவுகளோடு ஒத்ததாக அமைந்திருந்து குறிப்பிடத்தக்கது. சோதனை முறையை இவ்வாறு எளிமைப்படுத்தியப்போதும் இதை இலகுவாக செயல்படுத்த, ஒரு எளிய சோதனை கருவி இந்த ஆராய்ச்சி குழுவிற்கு தேவைப்பட்டது.
அப்பொழுது அவர்களுக்கு கைக்கொடுத்தது புள்ளியியல்.
"நாங்கள் பண்பு காட்டு சோதனை (Discriminant Analysis) என்னும் புள்ளியியல் முறையைக் கையாண்டு புரதங்களை பிரித்து வகுத்தோம். இந்த முறை எங்களுக்கு நோயற்றவர்களையும் நோயுள்ளவர்களையும் பிரித்தறிய உதவியாக இருந்தது", என்று கூறுகிறார் மருத்துவர் இராஜ்குமார் அவர்கள்.
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த 21 புரதங்களின் முடிவுகளையும் இந்த தேர்வுக்கு உட்படுத்தினர். தேர்வானது நோயாளிகளின் மாதிரிகளில் நோயினை சரியாக பகுத்தறிந்தால் அவற்றை ‘உடன்பாட்டு மெய்’ என்றும் அதுவே சாதாரண மாதிரிகளில் தவறாக பகுத்து அறிந்து அவற்றை ‘உடன்பாட்டு பொய்’ என்றும் பிரித்தனர். இந்த மெய்-பொய் விகிதங்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இணைப்புரதங்களை மாதிரிகளில் இருந்து சரியாக கண்டெடுத்தனர்.
பின்னர், 118 கருப்பை புற்றுநோய், 20 முதல் நிலை கழலைகள் மற்றும் 238 நோய் அல்லாதவர்களின் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட இறுதித் தேர்வுக்கு மேற்குறிப்பிட்ட புரதங்களில் ஒன்பது மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்வனைத்து மாதிரிகளும் தனித்தனியே எலிசா சோதனை முறைக்கு உட்படுத்தப்பட்டு ஒவ்வொரு புரதமும் சோதிக்கப்பட்டது. இதில் CA125, IGF BP2, SPP 1 என்னும் புரதங்களின் அளவு புற்றுநோய் உடையவர்களின் மாதிரிகளில் அதிகமாக காணப்பட்டது. அதேபோன்று அடிப்சின் (Adipsin) மற்றும் TSP1 என்னும் புரதங்களின் அளவு முதல்நிலை நோயாளர்கள் மற்றும் நோயற்றவர்களை விட நோயற்றவர்களின் மாதிரிகளில் மிகவும் குறைவான நிலையில் காணப்பட்டது. 78 நோய் அல்லாதவர்களின் மாதிரிகளையும் 82 கருப்பை புற்று நோயாளிகளின் மாதிரிகளையும் பல்மாறி (multivariate (multiple proteins) analysis) ஆய்வு கொண்டு பகுத்தறிந்த போது. இவர்களின் இந்த புதிய சோதனை முறையானது புற்றுநோய் மாதிரிகளில் 94.87 சதவிகிதம் குறிப்பு தன்மையிலும் மற்றும் 90.4 சதவிகிதம் இணக்க சோதனையிலும் சிறப்பாக விளங்கியது.
"இந்த எலிசா சோதனை, கருவிகலப்பெட்டி கொண்டு எந்த ஒரு ஆய்வகத்திலும் மேற்கொள்ளலாம். இந்த எலிசா நெடுவரிசை முறை ஆராய்ச்சிக்கு தயாராக உள்ளதால் இதனை நோயைக் கண்டறியும் மருத்துவ சோதனைக்கு பயன்படுத்தலாம்", எனக் கூறுகிறார் மருத்துவர் இராஜ்குமார்.
இருப்பினும் இந்த ஆய்வு வெறும் 5% முதல் நிலைப் புற்றுநோயாளிகளிடமிருந்தும், சில வரம்பு நிலை கருப்பை புற்றுநோயாளிகளிடமிருந்தும் பெறப்பட்ட மாதிரிகளைக்கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதலால், எங்கள் முறை முதல் நிலை கருப்பை புற்றுநோயை எவ்வளவு சரியாக கண்டறிகிறது என்பதை அறிய மேலும் சில தரவுகள் தேவைப்படுவதாக அமைகிறது.
மரபணு சோதனை முறையின் மூலம் யாரெல்லாம் கருப்பை புற்றுநோய் பாதிக்கத்தக்க ஆதார கூறுகள் உடையவர்கள் என்று கண்டறிய முடிகிறது. இதில் அதிக ஆபத்துக்கான ஆதாரங்கள் இருக்கும் பெண்கள் அவர்களின் கருப்பையை முற்காப்பு ஓபோரெக்டோமி (prophylactic oophorectomy) என்னும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றும் முறையை தேர்வு செய்யலாம். இது அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை 80 சதவிகிதம் குறைக்கின்றது. “முற்காப்பு ஓபோரெக்டோமியானது பெண்களின் இயக்கு நீர் சுரக்கும் திறனை இழக்கச்செய்வதோடு அவர்களின் இனப்பெருக்க வாய்ப்பையும் குறைக்கிறது. இந்த இயக்குநீர்கள் இருதயம் மற்றும் எலும்புகளிலும் பாதுகாப்புக்கு தேவைப்படுபவை”, என்று கூறுகிறார் திரு. ரகுநாத ராவ் அவர்கள். இந்நிலையில் தற்போது உள்ள பரிசோதனை முறையானது பெண்களை சீராக கண்காணித்து நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளவர்களை கண்டறிய உதவுகிறது. இதன்மூலம் அவர்களை முதலிலேயே சரி செய்ய தேவையான முன்னெடுப்புக்களை நம்மால் எடுக்க முடியும்
அடுத்தக்கட்டமாக ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் இந்த புது முயற்சியை சந்தைக்கு கொண்டுவர இருக்கின்றனர். “பயோடெக்னாலஜி இன்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ட் கவுன்ஸில் (BIRAC) எங்களுக்கு நிதி உதவி வழங்க இருக்கிறது”, என்று கூறுகிறார் ராஜ்குமார். கல்விக் கூடங்களையும் தொழிற்சாலைகளையும் ஒருங்கிணைக்க இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட முயற்சியே இந்த (BIRAC). ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் கண்டுபிடித்த இந்த புதிய புரத சோதனை முறைக்கு காப்புரிமையும் பதிவு செய்துள்ளனர். இதனால் இவர்கள் பணிபுரியும் புற்றுநோய் நிறுவனத்திற்கு உரிமத் தொகை கிட்டும்.
குவாண்டிபாடி நெடுவரிசை போன்ற பரிசோதனை முறைகளை மேற்கொள்ள தொழில் நிபுணர்களை தற்போது ஆராய்ச்சியாளர்கள் நாடி வருகின்றனர். அவர்களால் பின்னர் இந்த சோதனை முறையை ஆரோக்கியமான, கருப்பை கோளாறுள்ள மற்றும் கருப்பை புற்றுநோயுள்ள பல பெண்களிடமும் சோதிக்கவுள்ளனர்.
கருப்பை புற்றுநோயை முதல் நிலையிலேயே கலைந்து எடுப்பது குறித்த ஆய்வுகள் இன்றைய நிலையுல் மிகவும் முக்கியமாகிறது. 30 வருட கருத்துரை வழங்கல் அனுபவத்தில் திருவாளர். இரங்ககுமார் கூறியதாவது “நிறைய நேரங்களில் நாங்கள் பார்க்கும் நோயாளிகள் கடைநிலை நோயில் இருப்பார்கள். அவர்களுக்கு நாங்கள் அனுதாபமும், உலவியல் ஆதரவும் மட்டுமே அளிக்கக்கூடிய நிலையில் உள்ளோம். நோயாளிகளும் அவர்களது குடும்பத்தாரும் உடல் அளவிலும் மனதளவிலும் சோர்ந்துபோய் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு மிகக்கொடிய நிலையில் இருப்பார்கள். ஒரு அறிவுரையாளராக அவர்களுக்கு என்னால் கொடுக்க முடிந்தது அனுதாபம் மட்டுமே. தற்பொழுது இந்த நிலை மாறுபடும் என நம்புகிறோம். பேராசிரியர் ராஜ்குமார் மற்றும் அவர்களது குழு இதற்கான செயற்கரிய வேலையைச் செய்து வருகிறது”