முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

முடக்குங்காய்ச்சல் - நோய் தடுப்பு மேலாண்மைக்கு முழுமையான நோய் தொற்றியல் ஆய்வுகளின் தேவை

Read time: 1 min25 ஏப் 2019
முடக்குங்காய்ச்சல் - நோய் தடுப்பு மேலாண்மைக்கு முழுமையான நோய் தொற்றியல் ஆய்வுகளின் தேவை

இந்தியாவில், பருவமழைக் காலம் வெயில் காலத்தின் முடிவு மட்டுமல்ல, அது பல்வேறு நோய் தொற்றுக்கான காலமும் கூட. நூறு கோடிக்கும் அதிகமாக இருக்கும் இந்திய மக்கள் தொகையில்,  பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவது என்பது இன்றளவில் மிகப்பெரும் சவாலாக உள்ளது. டெங்கி காய்ச்சல் எனப்படும் முடக்குங்காய்ச்சல் - கொசுக்களால் பரப்பப்படும் தொற்றுநோய். ஒவ்வொரு வருடமும் இந்நோய் மக்களிடம் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. சென்னை தேசிய நோய் தொற்றியல் நிறுவனம், ஜிப்மர் என வழங்கப்படும் புதுச்சேரி  ஜவாஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி நிறுவனம், புதுடில்லி கேம்பெல் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் முடக்குங்காய்ச்சல் நோயின் தன்மையினையும், நாட்டில் அதன் நோய்த்தாக்கம்  பற்றியும் கூறியுள்ளது.

டெங்கி என்பது ஏடிசு (Aedes aegypti) இன கொசுக்களின் பெண் கொசுக்களால் பரப்பப்படும் ஒரு வைரஸ் தொற்றுநோய் ஆகும். இந்த நோய் வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. அதீத நகர மயமாக்கல் மற்றும் நகரங்களை ஒட்டியுள்ள இடங்கள், கிராமப்புறங்களில் கூட டெங்கியின் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், இந்நோய்க்கு சிகிச்சைகள் அளித்து குணப்படுத்தப்படலாம். இந்நோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படாவிட்டால் உயிரையும்  எடுக்கும் தன்மையைக் கொண்டது. இந்நோய் பற்றிய அடிப்படை புரிதல் தான் நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை உத்திகளை வகுக்க உதவும்.

அண்மையில், பிளாஸ் நெக்லெக்டட் ட்ராப்பிக்கல் டிசீஸ் (PLOS Neglected Tropical Diseases) எனும் ஆய்வு சஞ்சிகையில் 2017 வரை கடந்த ஐம்பது ஆண்டுகள் இந்நோய் தொற்று பற்றி இந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் குறித்த திறனாய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. இந்த கட்டுரையில் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் முதல், முடக்குங்காய்ச்சல் நோயாளிகளின் மருத்துவ குறிப்புகள் மற்றும் நோய்பரவல் அறிக்கைகள் ஆகியவைகள் அடங்கும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளில் இருநூற்றி முப்பத்தி மூன்று கட்டுரைகள் இந்த ஆய்வு கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மற்றும் வடகிழக்கு பகுதிகள் வாரியாக தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வுக்கு இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை (Department of Biotechnology) நிதி உதவி அளித்திருந்தது.

டெங்கி வைரஸ் அதன் மேலுள்ள புரதத்தின் அமைப்பினை பொறுத்து நான்கு நுண்ணுயிர் வகைகளாக (ஆங்கிலத்தில் செரோடைப் - serotype என்று வழங்கப்படும்) வகைப் படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு சில நுண்ணுயிர் வகைகள் குறிப்பிட்ட  புவியியல் அமைப்புகளில் மட்டுமே நோய் உண்டாக்கக் கூடியவையாக அறியப்பட்டுள்ளது. சில வகைகள் ஆரோக்கியமான மனிதர்களிடம் கூட இருப்பதுண்டு, ஆனால் இவர்களுக்கு நோய்க்கான எந்த அறிகுறியும் இருக்காது, இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு நோய் பரவக்கூடும். இந்தியாவில் 38 சதவீதம் மக்களிடம் இந்நோய்த்தொற்று பரவலாக காணப்படுகிறது. இந்த தரவுகள் மூலமாக இந்நோய் அதிகமான மக்களை பாதித்தாலும் அவர்கள் குணமாகி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர் என தெரிய வருகிறது.

இந்த டெங்கி வைரஸ், இந்தியாவின் நான்கு பிராந்தியங்களில் இரண்டு வெவ்வேறு நுண்ணுயிர் வகைகளாக இருக்கின்றன.  முதல் முறை ஒரு நுண்ணுயிர் வகையினால் பாதிக்கப்பட்டவர் அதற்கான நோய் எதிர்ப்பினை தன் உடலில் ஏற்படுத்திக் கொண்டுவிடுவார், ஆனால்  மற்றோர் நுண்ணுயிர் வகையினால் இரண்டாம் முறை தாக்கப்படும் போது  அது அவரை வெகுவாக பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த முடக்குங்காய்ச்சல் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே, கொசு ஒழிப்பு மேலாண்மை, நோய் தடுப்பு வழிமுறைகள், போதுமான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை வசதிகள் மேற்கொள்வது மிகவும் அவசியமானதாகும். இந்தியாவில் கடந்த 2012ஆம் ஆண்டு மட்டுமே முடக்குங்காய்ச்சலுக்கான மருத்துவ செலவு சுமார் 3500 கோடிக்கும் அதிகமாகும். இதனுடன், முடக்குங்காய்ச்சல் சராசரியாக இரண்டு வாரங்கள் நீடிக்கிறது, அதற்கு ஒரு நாள் ஏற்படும் செலவாவது நாட்பட்ட மற்றும் உயிர்கொல்லி நோயான காசநோயினைக் காட்டிலும் இரு மடங்கு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டெங்கி தடுப்பூசி தற்போது நம் கைகளில் இருக்கும் சமீபத்திய தற்காப்பு ஆயுதமாகும்.  இந்த தடுப்பூசி பெற்றுக்கொள்வதின் மூலம் நமக்குள் இருக்கும் இயற்கையான நோயாற்றலை அதிகப்படுத்தி நம்மைக் காக்கும். இந்த தடுப்பூசிகள் சில வெப்ப நாடுகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. அனால் இந்தியர்களில் 57 சதவீதம் மட்டுமே டெங்கி வைரசுக்கு எதிரான நோயாற்றல் கொண்டுள்ளனர். மற்றவர்களுக்கு இந்த தடுப்பூசி போடுவதால் டெங்கி பாதிப்பின் தாக்கம் அதிகமாகவும் வாய்ப்புள்ளது. அதனால் தான் உலக சுகாதார மையம், டெங்கி தடுப்பூசி செலுத்தும் முன்பாக செலுத்தப்படுபவரின் நோய் எதிர்ப்பு தன்மையினை பரிசோதிக்க பரிந்துரைக்கிறது. இந்தியாவில், மக்களிடம் இந்த நுண்ணுயிர் வகைகளுக்கான எதிர்ப்பு தன்மையினைப் பற்றி மிகவேகமான கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.

இந்தியாவில் சமூகவாரியான கிருமித் தொற்றியல் கணக்கெடுப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன என்று இந்த ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. இவ்வைகை கணக்கெடுப்புகள் தான் நோய் தடுப்பு மேலாண்மைக்கு பெரிதும் உதவுகின்றன.

"வெவ்வேறு புவியியல் அமைப்புகளில்,  சமூகவாரியான, வயது ரீதியான கிருமித் தொற்றியல் கணக்கெடுப்புகள் பெருமளவு இன்று இந்தியாவின் தேவையாய் இருக்கின்றன. நாடெங்கிலும் இப்படிப்பட்ட முழுமையான கணக்கெடுப்புகள் தான் இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் மாற்றாக அமையும்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இன்று நில அமைப்பு, அதீதமான நகர மயமாக்கல், மக்களின் வாழ்வியல் எல்லாம் ஒன்றாக மாற்றத்திற்கு உட்படுகின்றன. இந்த மாற்றங்கள் கூட நோய் தொற்றுக்கான ஒரு காரணியாக விளங்குகிறது. புவி வெப்ப மயமாதல், மாறிவரும் சுற்றுசூழலியல் இவ்வகை வெப்பமண்டல தொற்றுநோய்கள் அதிகரிக்க வாய்ப்பளிக்கின்றன. இந்த நோய் தொற்று முறைகளும் சுற்றுசூழல்களுக்கு ஏற்ப தகவமைத்து கொள்கின்றன. இவற்றினை பற்றிய ஆய்வுகளே எதிர்காலத்தில் இவ்வகை நோய்கள் பரவாமல் தடுக்கும் வழிமுறைகளை கண்டறிய வழிவகை செய்கின்றன.