முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

பருக்கைகளின் சுவடுகள் : மேற்குத் தொடர்ச்சி மலையின் எறும்பினங்கள் ஒரு பார்வை

Read time: 1 min
ஸ்ரீநகர்
20 ஜூன் 2019
பருக்கைகளின் சுவடுகள் : மேற்குத் தொடர்ச்சி மலையின் எறும்பினங்கள் ஒரு பார்வை

பரந்து விரிந்த இந்தியா தீபகற்பத்தின் மேற்குப் பரப்பில், அழகிய மலைத் தொடர்களின் அணிவகுப்பாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை உலகின்  பல்லுயிரியற் காடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். உலகில் அச்சுறுத்தப்பட்ட இனங்களில், சுமார் 325 உயிரினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றன. அவற்றில் பல உயிரினங்கள் வேறெங்கும் காணப்படாது இந்த நிலவியல் அமைப்புக்கு மட்டுமே உரித்தான அகணிய உயிரிகளாகும் (Endemic organisms).  அகணிய உயிர்கள், உட்பிரதேசத்திற்குரிய உயிரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் யானைகள், புலிகள் போன்ற பெரு விலங்குகள் குறித்த ஆய்வுகள் அதிகமாக உள்ள நிலையில், எறும்புகள் போன்ற சிற்றுயிர்கள் தொடர்பான பல்லுயிரியல் ஆய்வுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. சிறீநகரில் உள்ள மத்திய மிதவெப்ப மண்டல தோட்டவியல் ஆய்வு நிறுவனம், பாட்டியாலா பஞ்சாபி பல்கலைக்கழகம் மற்றும் சோபியன்   ஜம்மு காஷ்மீர் அரசு கல்லூரியும் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வொன்றில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள எறும்பு இனங்களின் பல்லுயிர் தொகுப்பு பற்றிய ஆய்வு முடிவுகள் ஆக்டா எக்காலஜியா சினிக்கா (Acta Ecologica Sinica) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.

எறும்புகள் ஏறத்தாழ பூமியில் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. கொன்றுண்ணியாகவும், மாசு அகற்றியாகவும் இருக்கும் எறும்புகளின் பங்கு பூமியின்  நுண்சத்து சுழற்சியில் அளப்பரியதாகும். எறும்புகளை "சுற்றுசூழல் பொறியாளர்கள்" என்றால் அது மிகையாகாது. உணவுச் சங்கிலியில் பல நிலைக்கோணங்களில் பங்குகொள்ளும் எறும்புகள் தாவர விதை பரப்பலில் பெரிதும் உதவுகின்றன. இந்தியாவில் சுமார் 828 எறும்பினங்கள் அறியப்பட்டு உள்ளன, அவற்றில் 31 சதவீதம் நம் நிலவியல் அமைப்பிற்கே உரியவை. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 455 எறும்பினங்களும், இமயமலையில் 656 எறும்பினங்களும் இதுவரை அறியப்பட்டுள்ளன. ஆச்சர்யமூட்டும் வகையில் இந்தியாவில் பறவைகள், மீன்கள், பூக்கும் தாவரங்கள் மற்றும் பாலூட்டிகளைக் காட்டிலும் அதிகமாக இந்த நில அமைப்பிற்கே உரிய, அகணிய எறும்பினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் இமயமலையில் காணப்படுகின்றன.

தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வு தரவிற்காக, 2010 முதல் 2013 வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு எறும்பினங்களின் மாதிரிகளை ஆய்வாளர்கள் சேகரித்திருந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் வெவ்வேறு மலைகளில் எறும்பின மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மொத்தமாக 65 பேரினங்களில், 10 உபகுடும்பங்களில் 173 எறும்பினங்களை ஆய்வாளர்கள் சேகரித்திருந்தனர். இவற்றில் 6 இனங்கள் இந்தியாவில் முதன்முறையாக அறியப்படுகின்றன.

எறும்பினங்களின் பல்லுயிர்மை ஆய்வு செய்யப்பட்ட வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான தரவுகள் கிடைக்கப்பெற்றது. இதில் கேரளா பெரியார் புலிகள் காப்பகம் அதிகமான எறும்பின எண்ணிக்கை மற்றும் பல்லுயிர்மை கொண்ட  பகுதி என்றும், கேரளாவின் மணலாறு பகுதி குறைந்த எறும்பின எண்ணிக்கை மற்றும் இடுக்கி வன உயிரியல் சரணாலயம் குறைந்த எறும்பின பல்லுயிர்மை கொண்ட பகுதிகள் என இந்த ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் மலை ஏற்றத்தின் தன்மை எறும்பின எண்ணிக்கை மற்றும் பல்லுயிர்மையினை நிறுவுவதில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றன என்றும் இவ்வாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. "வெவ்வேறு மலை ஏற்றங்களில், இடைப்பட்ட மலை ஏற்றங்களில் தான் எறும்பினங்களின் எண்ணிக்கையும், உயிரியற் பல்வகைமையும்  அதிகமாக இருக்கின்றன. மலை ஏற்றம் அதிகரிக்க அதிகரிக்க எறும்பினங்களின் எண்ணிக்கையும் பல்வகைமையும் குறைகின்றன, சில வகையான எறும்பினங்களே மலையேற்ற விகிதங்களுக்கு தகுந்தவாறு முழுமையான சூழலியல் மாற்றத்திற்கு உட்பட்டு உள்ளன என்று எங்கள் ஆய்வில் தெரிய வருகிறது" என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதன் மூலமாக இடைப்பட்ட மலையேற்ற முகவுகளில் எறும்பினங்கள் பெருகுவதற்கு ஏதுவான சூழலியல் அமைப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆய்வின் மூலமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் இதுவரை புலப்படாத எறும்பின வகைகள் மற்றும் அவைகளின் சூழலியல் முக்கியத்துவம் குறித்து நம்மால் அறிய முடிகிறது.

"சிற்றுயிர் வகைகளை சார்ந்த எறும்பினங்களின் எண்ணிக்கை மற்றும் பல்லுயிர்மை பற்றிய இந்த ஆய்வின் அடிப்படை தரவுகள் எதிர்காலத்தில் சூழலியல் மாற்றங்களை கணிக்க ஒரு மிகப்பெரும் காரணியாக விளங்குவதால் இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நிகழ்காலம் மற்றும் எதிர்கால சூழலியல் மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்கும் இந்த ஆய்வு தரவுகள் பெரிதும் கை கொடுக்கும்" என்கின்றனர் இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.