முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

அருகிவரும் புல்வெளிக்காடுகள்

2 மே 2019
அருகிவரும் புல்வெளிக்காடுகள்

மேற்கு தொடர்ச்சி மலை - அதனுடைய மெய்சிலிர்க்கும் அழகிற்கும், உயரமான மலைகளுக்கும், அடர்ந்த வனங்களுக்கும் மற்றும் அதன் விரிந்த புல்வெளிக்காடுகளுக்கும் பெயர்பெற்றது. பல்வேறு ஆய்வுகள் இவ்வகை இயற்கை காடுகள் மனித செயல்பாட்டினால் மாற்றங்களுக்கு உட்பட்டு அதனால் ஏற்பட்ட சுற்றுசூழலியல் மாற்றங்கள் மற்றும் நிலச்சரிவு, வெள்ளம் முதலிய அழிவுகளுக்கு ஆட்படுவதையும் விளக்கியுள்ளன. திருப்பதி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER),  பெங்களூரு  ஏட்ரீ என்று அழைக்கப்படும் அசோகா சுற்றுசூழலியல் ஆராய்ச்சி நிறுவனம் (ATREE), கேரளா ஹ்யும் சுற்றுசூழலியல் மற்றும் வனஉயிரியல் ஆய்வு மையம் (Hume Centre for Ecology and Wildlife Biology) மற்றும் தமிழ்நாடு காந்திகிராம் பல்கலைக்கழகமும் சேர்ந்து நடத்திய சமீபத்திய ஆய்வொன்றில் சோலை புல்வெளிக்காடுகள் அருகி வருவத்திற்கான காரணிகளை பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு அதன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இந்திய புல்வெளிக்காடுகளுக்கு பல சிக்கலான வரலாறுகள் உண்டு. முந்தைய காலகட்டங்களில் அதனுடைய சூழலியல் முக்கியத்துவமும் தனித்தன்மையையும் உணராமல் வெற்றுநிலங்கள் என்று வகைப்படுத்தி விவசாயம் மற்றும் தோட்டப் பயன்பாட்டிற்காக மாற்றி அழிக்கபட்டன. மேற்கு தொடர்ச்சி மலையினை சார்ந்த சோலை புல்வெளிக்காடுகள் மிகவும் தனித்துவம் உள்ளவை. பரந்து விரிந்த இந்தக்காடுகள் அடர்ந்த மலை உச்சிகளில் ஈரப்பதம் மிக்க பகுதிகளில் மட்டும் இருக்கிறது. இந்த ஆராய்சியில், ஆய்வாளர்கள் 1973, 1995, 2003 மற்றும் 2017ஆம் ஆண்டுகளின் செயற்கைகோள் படங்களைக் கொண்டு மனிதன் நிலங்களை பயன்படுத்துவது அருகிலுள்ள புல்வெளிக்காடுகளை எப்படி பாதிக்கின்றன என்று ஆய்வு செய்து, அதன் முடிவுகள் பையாலஜிக்கல் கன்சர்வேஷன் (Biological Conservation) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. இந்த ஆராய்ச்சி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள பாபாபுடன்கிரி, நீலகிரி, அகத்தியமலை, பழனி மலை பகுதிகளில் உள்ள சோலை புல்வெளிக்காடுகளில் மேற்கொள்ளப்பட்டது.  "மலை உச்சிகளில் பரவியுள்ள புல்வெளிக்காடுகள் வெகுவாகக் குறைந்து வருகின்றன மேலும் மேற்குத்தொடர்சி மலைகளின் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ள சோலை புல்வெளிக்காடுகளின் நிலை பற்றிய முழுமையான ஆய்வு செய்திருப்பது இதுவே முதன்முறை" என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஏட்ரீயை சேர்ந்த ஆய்வாளர் முனைவர். மிலிண்ட் பய்யன்.

ஆய்வாளர்கள் மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள இவ்வகை புல்வெளிக்காடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் ஆய்வு தரவுகளை சேகரித்தனர்.  சோலை புல்வெளிக்காடுகள்  தவிர்த்து 60  சதவீதம் புல்வெளிக்காடுகள் சார்ந்த நிலங்கள் கடந்த 45 ஆண்டுகளில் பெரிதும் மாறுதலுக்கு உட்பட்டுள்ளன. காடுகளின் பாதுகாப்பு முயற்சிகளிலும் இந்த சோலை காடுகளை சுற்றியே அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் இவைகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரிதும் மாறுதலுக்கு உட்படாமல் இருப்பது ஆய்வு முடிவில் தெரிய வருகின்றது. 516 சதுர கிலோமீட்டர் கொண்ட பெரிய புல்வெளிக்காடு நிலப்பரப்புகள் 1973 ஆம் ஆண்டு முதலே பெரும் அழிவுக்கு உள்ளாகி வருவதும் அவற்றில் 88 சதவீத இழப்பு நீலகிரி மலையுச்சி மற்றும் ஆனைமலை-பழனி மலைத்தொடரிலும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மரப்பயன்பாட்டிற்காக வளர்க்கப்படும்  தைல மரம் (யூகலிப்டஸ்), கருவேலம் (அக்கேசியா) மற்றும் ஏங்கு (பைன்) போன்ற வேற்றுநாட்டு தாவரங்கள் சோலை காடுகளின் சரிவுக்கு காரணிகளாக இருக்கின்றன. 1996 ஆம் ஆண்டு  முதலாகவே இவ்வகை மரங்கள் வளர்ப்பு தடை செய்யப்பட்டு இருப்பினும் கால் நூற்றாண்டு கடந்த பின்னரும் இவ்வகை தாவரங்கள் பரவுவதும் புல்வெளிக்காடுகளின் சரிவுக்கு வழி கோலுகின்றன. இதனுடன் மலை நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், தேயிலை தோட்டம், மூங்கில் பயிரிடுதல் மற்றும் மனித குடியேற்றம் போன்ற காரணிகளும் இடம் பெறுகின்றன. இதற்கு விதிவிலக்காக, சில மலை உச்சிகளில் உள்ள புல்வெளிகள் மற்றும் மூணாரின் புல்வெளிக்காடுகளும் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையாக இருப்பது சற்று ஆறுதலான செய்தி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இப்படி குறைந்து வரும் புல்வெளிக்காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவையினையும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். அதிகமான இயற்கை ஆர்வலர்கள் சோலை காடுகளை பாதுகாப்பதையே முதன்மையாக கருதுகின்றனர். அனால் புல்வெளிக்காடுகள் அதிகமான அழிவிற்கு உள்ளாகி வருவது இவ்வாய்வின் மூலம் கண்கூடாக தெரிகிறது. புல்வெளிக்காடுகள் பார்ப்பதற்கு எவ்வுயிரினத்தையும் அரவணைக்காத வெற்று நில அமைப்பு போல தென்பட்டாலும் அவைகள் சுற்றுசூழலில் ஏற்படுத்தும் நன்மைகளை இன்னும் நாம் முழுதாக புரிந்து கொள்ளவில்லை என்பது திண்ணம். காடுகளை பாதுகாப்பது என்பது காடுகள் சார்ந்த மரங்களை அதிகமாக நடுவது மட்டுமே எனும் கருத்தியல் மற்றும் இவ்வகை புல்வெளிக்காடுகளை வேறு தாவர இனங்கள் கொண்டு நிரம்பிவிடும் அதிரடி முடிவுகள் நமக்கு அதிக தீமைகளையே விளைவிக்கும். சுற்றுசூழல் மற்றும் அதன் சிக்கலான செயல்பாடுகளை அறிந்துகொள்வதால் மட்டுமே இவ்வகை இயற்கை பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காண முடியும்.

"சரியான அறிவியற்பூர்வமான இயற்கை பாதுகாப்பு வழிமுறைகள் மூலமாக இயற்கையை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும், இல்லையென்றால் அது எதிர்காலத்தில் மிகப்பெரும் இயற்கை பேரிடருக்கு வழிவகுத்துவிடும்" என்று அறிவியற்பூர்வமான இயற்கை மீட்பின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் ஹ்யும் சுற்றுசூழலியல் மற்றும் வனஉயிரியல் ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர் திரு. சி. கே. விஷ்ணுதாஸ்.

இந்த ஆய்வு உலகின் மிக முக்கியமான பல்லுயிர் காடுகளில் ஒன்றாகிய  மேற்குதொடர்ச்சி மலைகளில் சோலை புல்வெளிக்காடுகளின் இன்றைய நிலையை விளக்குகிறது. "புல்வெளிக்காடுகளின் அதீத இழப்பு பல்வேறு வேற்று நாட்டு தாவரங்கள் அங்கே வளரவும், பயிர்செய்யப்படவும் வாய்ப்பளித்து விடுகிறது, இந்த ஆய்வு எதிர்காலத்தில் புல்வெளிக்காடுகளின் பாதுகாப்பிற்கும் அவற்றின் மீட்பு முயற்சிகளுக்கும் கை கொடுக்கும்" என்று இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் முனைவர். பான்யன்.

"இவ்வகை இயற்கை வாழிடங்களின் சுருக்கம் பறவைகள், விலங்குகள் மட்டுமல்லாது அதனை சார்ந்துள்ள மனிதர்களின் வாழ்வாதாரத்தினையும் பாதிக்கிறது. தற்போது தமிழ்நாடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கில் இந்த ஆய்வு முடிவுகளை கருத்தில் கொண்டு புல்வெளிக்காடுகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று நம்மிடம் கூறுகிறார் திருப்பதி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த முனைவர். வி. வி. ராபின்.

சுருக்கம் : திருப்பதி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER),  பெங்களூரு  ஏட்ரீ என்று வழங்கப்படும் அசோகா சுற்றுசூழலியல் ஆராய்ச்சி நிறுவனம், கேரளா ஹ்யும் சுற்றுசூழலியல் மற்றும் வனஉயிரியல் ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு காந்திகிராம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் சோலை புல்வெளிக்காடுகள் அருகி வருவத்திற்கான காரணிகளை பற்றிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.