பல்லுயிர் ஓம்புதலிலும் இயற்கையினை கூர்நோக்கி உணருவதிலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளாகவே சிறந்து விளங்கியிருந்துள்ளனர் என்பதற்கு பல சங்க இலக்கியங்கள் சான்றாக நிற்கின்றன. நிலப்பரப்புகளை ஐந்து வகைகளாக பிரித்த நம் இலக்கியங்கள் அவற்றின் உட்பிரிவுகளையும் அவ்வப்போது உற்று நோக்கியிருந்துள்ளன.
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது” - (அதிகாரம்:வான் சிறப்பு, குறள் எண்:16)
என ஆசான் வள்ளுவர் வான்சிறப்பில் பசுமையான புல்வெளிகளை உவமையாக பயன்படுத்தி, அந்த காலத்தில் பசும்புல் நிறைந்த நிலப்பரப்புகள் இங்கே இருந்துள்ளமையை ஆவணப்படுத்தியுள்ளார். இன்று உலகின் வியக்கத்தக்க இயற்கை நில அமைப்புகளில் ஒன்றாக பசும்புல்லால் ஆன “சமதளப் புல்வெளிக் காடுகள்” (Savannas) விளங்குகின்றன.
காடுகளுக்கும் புல்வெளிகளுக்கும் இடைநிலையாக விளங்கும், மரங்கள் அருகிய வெப்பமண்டலப் பகுதிகளான இச்சமதளப் புல்வெளிகள், கெட்டிமரங்கள், புதர்கள் மற்றும் புல்வெளிகளாலான நிலப்பரப்புகளாகும். இவை ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவலாக காணப்பட்டாலும், இந்தியாவில் அவை குளிர் மற்றும் இளவேனில் காலங்ககளில், இலைகளை உதிர்க்கும் உயர்ந்த மரங்களைக் கொண்ட காடுகளான “உலர் இலையுதிர் காடுகள்” (dry deciduous forest) என்று தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1975 இல் ராபெர்ட் விட்டேக்கர் எனும் பிரபல சூழலியல் வல்லுநர், வெப்ப மண்டலப்பகுதிகளில் காணப்படும் இது போன்றக் கணிக்க இயலா தாவரங்களை கொண்டிருந்த நிலப்பரப்புகளை “உறுதிப்படுத்தமுடியாத சூழல் மண்டலங்களாக” (ecosystems uncertain) வகைப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃப்ரான்டியர்ஸ் இன் ஈக்காலஜி அண்ட் எவல்யூசன் (Frontiers in Ecology and Evolution) எனும் ஆய்விதழில் வெளியான சமீபத்திய ஆய்வொன்றில், பெங்களூருவின் தேசிய உயிர் அறிவியல் மையத்தின் (National Centre for Biological Sciences) ஆய்வாளர்கள், சமதளப் புல்வெளிசமதளப் புல்வெளிக் காடுகளின் சாராம்சங்களாக விளங்கக்கூடிய தன்மைகளான புற்களால் எரியூட்டப்படும் காட்டுத்தீ மற்றும் பருவத்திற்கேற்ப ஏற்படும் வறட்சி போன்றவை இந்தியாவின் “உலர் இலையுதிர் காடுகளிலும்” காணப்படுவதை கண்டறிந்துள்ளனர். இந்த நிலப்பரப்புகள் சமதளப் புல்வெளிகள் தான் எனும் கருத்திற்கு வலுசேர்கும் வகையில் முடிவுகளைக்கொண்ட இவ்வாய்வு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (Department of Science and Technology) மற்றும் ருஃப்பர்டு சிறு நல்கை நிறுவனத்தின் (Rufford Small Grants Foundation) நிதி நல்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் தாவரத்தொகுதிகள் மற்றும் காடுகளை வகைப்படுத்தும் முறைகளானது ஆங்கிலேய குடியேற்ற காலத்தில் தொடங்கியவையாகும். மேற்கத்திய வனவியல் கலாச்சாரத்தை பயின்ற வனவியலாளர்கள், அடிப்படையில் இங்கிருந்த வெட்டுமரங்கள் மற்றும் இதர மரங்களின் பயன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இந்நிலப்பரப்புகளை இவ்வாறு தவறுதலாக வகைப்படுத்துள்ளனர்” என்கிறார் இவ்வாய்வின் முதன்மை ஆசிரியரான முனைவர் ஜெயஸ்ரீ ரத்னம்.
“அவர்கள் மரங்களின் மீது மட்டுமே கவனம் செலுத்தியமையால், மரங்களை குறைந்த எண்ணிக்கையிலே கொண்டிருந்த இப்பகுதிகளின் பல்வேறு தாவரத்தொகுதிகள் அனைத்தும் காடுகளாகவே வகைப்படுத்தப்பட்டன. இதனால், அவர்கள் திறந்தவெளி மரக்கவிகைகளைக்கொண்டிருந்த சமதளப் புல்வெளிகளை, மூடிய மரக்கவிகைகளுடனான அடர்ந்த காடுகளிலிருந்து வேறுப்படுத்த தவறி விட்டனர்” என கூடுதலாக கூறுகிறார்.
மரத்தின் உயரம், மரப்பட்டையின் தடிமன், இலைகளின் திட்டவட்ட பரப்பளவு (specific leaf area) என அழைக்கப்படும் இலைகளின் அலகுப்பொருண்மை பரப்பளவு போன்ற பண்புக்கூறுகளை ஆய்வாளர்கள் ஆய்வுத்தரவுகளாக சேகரித்துள்ளனர். இந்த அளவைகளை இவர்கள் இந்தியா முழுதுமிருக்கும் உலர் இலையுதிர் காடுகளைச் சார்ந்த 75 மற்றும் பசுமையிலைக்காடுகளைச் (evergreen forests) சார்ந்த 95 மரச்சிற்றினங்களில் இருந்து அளந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் சிர்சி மற்றும் செட்டிஹல்லி மற்றும் குடகு பகுதிகள், ஆந்திர மாநிலத்தில் திமுகுட்டு மற்றும் நாகர்சுனசாகர் பகுதிகள், தெலுங்கானாவில் அம்ராபாத் மற்றும் தமிழ்நாட்டின் களக்காடு முண்டந்துறை பகுதிகள் இவர்களின் பிரதான ஆய்வுத்தளங்களாக இருந்துள்ளன.
ஈரப்பதம் கொண்ட வெப்பமண்டலப்பகுதிகளில் சமதளப் புல்வெளிகளும் பசுமையிலைக்காடுகளும் பெரும்பாலும் அருகருகில் அமையப்பெற்ற சூழல் மண்டலங்களாகவே உள்ளன. இருப்பினும், இவைகளை பிரிக்கும் முக்கிய காரணியாக இருப்பது காட்டுத்தீக்களாகும். புற்களால் எரியூட்டப்படும் காட்டுத்தீயானது சமதளப் புல்வெளிகளில் அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகும். ஆனால் இது நிழலூட்டப்பட்ட மூடிய காடுகளில் அரிதானதொரு நிகழ்வு. இதனால் சமதளப் புல்வெளிகளில் இருக்கும் மரங்கள், தங்களை காட்டுத்தீயிலிருந்து காத்துக்கொள்ளும் வண்ணம், தடிமனான மரப்பட்டைகள், சிறிய மரக்கவிகைகள், மற்றும் குறைவான திட்டவட்ட இலைப்பரப்பளவையும் கொண்டிருந்து அவற்றின் பெரும்பாலான உயிர் எடையை நிலத்திற்கடியில் வேர்களிலே சேமித்து வைத்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. பசுமையிலைக்காடுகளில் காட்டுத்தீகள் அரிதானதாக இருப்பதால் அங்கே மரங்கள் தடிமன் குறைந்த மரப்பட்டைகளுடனும் விரிவான இலைகளுடனும் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கப்பட்டது.
உலர் இலையுதிர் காடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள காடுகளில் இருக்கும் மரங்கள் காட்டுத்தீக்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ளும் வகையில் தடிமனான மரப்பட்டைகளுடன் இருப்பதை இவ்வாய்வு கண்டறிந்துள்ளது. மேலும் இம்மரங்கள் வறட்சி காலங்களில் நீரிழப்பை தடுக்கும் வண்ணம் குறுகிய பரப்பளவைக்கொண்ட இலைகளையும் கொண்டிருக்கின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. காட்டுத்தீ ஏற்படும் அதிக சாத்தியக்கூறுகளுடனும் பருவமாற்றத்தால் வறட்சியை சந்திக்கும் தன்மையுடனும் இருக்கும் வாழ்விடங்களில் இருப்பதால் சமதளப் புல்வெளிகளின் மரங்கள் தங்களை அச்சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் வண்ணமாகவே அதீத விறகடர்த்தி, குறைவான திட்டவட்ட இலைப்பரப்பளவு மற்றும் தடிமனான மரப்பட்டைகள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை இவ்வாய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் மரங்கீழ் புல்வெளிகளால் ஆதிக்கம் செழுத்தப்பட்டுள்ள இவ்வகை உலர் இலையுதிர் காடுகளானது உன்மையில் ஈர்ப்பத்ததுடனிருக்கும் இலையுதிர் சமதளப் புல்வெளிகளே என்பதையும், நீர்வறட்சி மற்றும் காட்டுத்தீக்கள் இக்காடுகளின் பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதையும் இவ்வாய்வு உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலப்பரப்புகளில் பிற ஊடுறுவித்தாவர சிற்றினங்கள் உள்நாட்டுத்தாவரங்களைவிட வேகமாக பரவி வளராமல் அவற்றை கட்டுப்படுத்தும் காரணியாகவும், உள்நாட்டுத்தாவரங்களின் மீளுருவாக்கத்தை தூண்டும் காரணியாகவும் காட்டுத்தீக்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய வனக்கொள்கையானது (Indian Forest Policy) காட்டில் தீ வைப்பதை ஒரு தண்டிக்கப்படும் குற்றமாக அறிவித்துள்ளது. இதனால் ஊடுருவித்தாவரங்கள் உள்நாட்டுத்தாவரங்கள் மீது ஆதிக்கம் செழுத்தி அதிவேகமாக பரவும் சிக்கல் இங்கே உருவாகியுள்ளது.
“இந்த ஆய்வின் பெரும்பாலான சமதளப் புல்வெளி நிலப்பரப்புகள், ஆசிய யானைகள், காட்டெருதுகள் மற்றும் புலிகள் போன்ற அருகிய உயிரிகளின் வாழ்விடங்களாக இருப்பதால் அவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலப்பரப்புகள் தங்களின் பாதுகாக்கப்பட்ட நிகழ்நிலையை தக்கவைத்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாததாக இருப்பினும், இச்சூழல் மண்டலங்கள் தங்கள் சூழலியல் செயலாற்றல்களை செயல்படுத்த இயற்க்கையிலேயே இவை காட்டுத்தீக்களுடன் இணைந்து பரிணாமித்துள்ளன என்பதை அவற்றின் பராமரிப்பு கொள்கைகள் கருத்தில் கொள்ள வேண்டும்” எனக்குறிப்பிடுகிறார் முனைவர் ரத்னம்.
“பரிந்துரைக்கப்பட்ட காட்டுத்தீயானது ஒரு பராமரிப்பு யுக்தியாக உலகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மரம்-புல்வெளிக்கலவை மண்டலங்களாக விளக்கும் இவ்வகை உலர் இலையுதிர் காடுகளின் கலப்புமரபுத் தன்மை மற்றும் பல்லுயிர்மத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும்” எனக்கூறி முடிக்கின்றார் முனைவர் ரத்னம்.