முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

மண்புழுவின் உயிரியற்பல்வகைமை மண்ணிற்கு நன்மை சேர்க்கும்

Read time: 1 min
கோட்டயம்
14 ஏப் 2019

மண்ணில் உள்ள கரிமவளத்தினை பொறுத்தே மண்வளம் கணிக்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்சத்துகள் தாவர வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. மண்புழுக்கள் மண்ணில் நுண்சத்துக்கள் மற்றும் மண்வளம் பெருகுவதற்கு வழிவகை செய்கின்றன. கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், சுற்றுசூழலியல் துறை பேராசிரியர் ஈ.வி. ராமசாமி மற்றும் ஆய்வாளர் எஸ். என். ஸ்ருதி அவர்களின் சமீபத்திய ஆய்வில் மண்புழுவின் உயிரியற்பல்வகைமை மண்ணின் கரிமவளத்தினை அதிகப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். இவ்வாய்வு முடிவுகள் “நேச்சர் சயின்டிபிக் ரிப்போர்ட்” எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

ஆய்வாளர்கள் சுமார் பன்னிரெண்டு மாத காலம் மண்ணில் மண்புழு உண்டாக்கும் மாற்றங்களை கண்டறிந்துள்ளனர். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தினுள் உள்ள ஜீவகா உயிரியல் ஆய்வகத்தில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. மனித குறுக்கீடு அற்ற, இயற்கை சூழ்ந்த இடத்தில் 1 சதுர மீட்டர் அளவுள்ள நிலத்தில் மூன்று பிரிவுகள் செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலாவது பிரிவு மண்ணில் 100 மண்புழுக்கள் விடப்பட்டு, அதற்கு தண்ணீர் மற்றும் பசுஞ்சாணம் இடப்பட்டது. அடுத்த பிரிவு மண்ணில் வெறும் தண்ணீர் மற்றும் பசுஞ்சாணம் மட்டுமே விடப்பட்டது. மூன்றாவது பிரிவு மண்ணில் எதுவும் சேர்க்கப்படாமல் மண்ணின் தன்மை அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆய்வு ஆரம்பிக்கும் முன்னரும், ஆய்வு தொடங்கி மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் மண் மாதிரிகள் எடுத்து சோதனைகள் செய்யப்பட்டன.

மண்ணின் கரிம அளவே நுண்சத்துகளின் இருப்பினை அதிகரிக்கின்றது. மேலும் மண் தண்ணீரினை தக்கவைத்துக்கொள்ளும் தன்மையினையும் அதிகரிக்கின்றது. இந்த ஆய்வு மண்புழுக்களின் இருப்பு மண்ணில் உள்ள கரிம அளவை அதிகப்படுத்தி மண்ணின் நுண்சத்துக்கள் மற்றும் தண்ணீர் தக்கவைத்துக்கொள்ளும் திறனை சுமார் 50% அதிகரிப்பதாக கூறுகிறது. மேலும் ஒரே வகையான மண்புழுவை விட,  பல்வேறு இனங்கள் கொண்ட மண்புழுக்கள் மண்ணிற்கு அதிக நன்மை சேர்க்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடு மண்ணின் வளங்களை கூட்டும். மண்ணில் மண்புழுவின் பல்வகைதன்மை அதிகரிக்க அதிகரிக்க மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாடும் அதிகரித்து மண்ணின் வளம் கூடும் என்று இந்த ஆய்வு முடிவுகளில் தெரியவருகிறது. மண்ணில் உள்ள கரிம துகள்கள் மண்ணின் வளமையை உணர்த்தும் ஒரு கூறுபாடு ஆகும். இந்த ஆய்வு முடிவு மண்புழுக்கள் இந்த கரிம துகள்களை 35.4 சதவீதம் உயர்த்துவதாக அறிவிக்கின்றன. மண்புழு சேர்க்கப்படாத மண்ணில் இது வெறும் 9.1 சதவீதம் மட்டுமே இருந்தது.

"மண்புழுவின் உயிரியற் பல்வகைமை நேரடியாக நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கின்றன, அது மண்ணின் கரிம வளத்தினை மேலும் அதிகப்படுத்தி, மண்ணின் நீர் மற்றும் நுண்சத்துகள் தக்கவைக்கும் தன்மையினை வலுவாக்கி, தாவர வளர்ச்சிக்கு பெரிது துணைபுரிகின்றன" என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மண் வளத்தினை உயர்த்த மண்புழுக்கள் மூலமாக மண்ணின் கரிம வளத்தினை ஊக்கப்படுத்த நடத்தப்பட்ட இவ்வகை ஆய்வு இந்தியாவில் இதுவே முதன்முறை.

"பல்வேறு இனங்கள் கொண்டு, மண்புழுவின் உயிரியற்பல்வகைமை மண்வளத்தினை உயர்த்துவதோடு அல்லாமல் உழவர்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்தக்கூடும். மண்ணின் கரிம வளம் மேம்பட்டால், ரசாயன உரங்கள் இல்லாமல் மண்ணின் வளம் பலகாலம் பாதுகாக்கப்படலாம்" என்று தங்கள் ஆய்வு முடிவுகள் குறித்து ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.