பல்வேறு கலாச்சாரங்களைக்கொண்டு பன்முகத்தன்மையுடன் விளங்கும் ஒரு தேசம் இந்தியா. இங்கே பேசப்படும் எண்ணற்ற மொழிகளே இதற்கு சான்றாக திகழ்கிறது. இந்தியாவில் வழக்கிலிருக்கும் மொழிகளை கற்பது உற்சாகமூட்டும் ஒரு செயலாக இருந்தாலும், இந்திய துணைக் கண்டத்தில், இந்தோ-ஆரிய மொழிகளின் வருகைக்கு முன், அதாவது கி.மு 1500ஆம் ஆண்டுக்கு முன்னிருந்தே வாழ்ந்து வரும் திராவிடர்களின் வரலாற்றை புரிந்துகொள்ள முக்கிய காரணிகளாக இந்தியாவின் மொழிகள் திகழ்கின்றன. இந்தியாவில் திராவிடர்களின் தோற்றம் மற்றும் பரவல்குறித்த வரலாறு இன்றும் முழுதாக அறியப்படாமலே உள்ளது. தற்போது, திராவிட வரலாற்றை புரிந்துகொள்ளும் முயற்சியாக நெதர்லாந்தில் உள்ள மாக்சு பிளாங் சைக்கோலிங்குவிஸ்டிக்ஸ் நிறுவனத்தைச்சேர்ந்த (Max Planck Institute for Psycholinguistics) ஆராய்ச்சியாளர்கள், திராவிட மொழிக்குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை கிளைவிட்டு காட்டும் ஒரும் பரிணாமவரலாற்று மரத்தை வரையறுக்குமொரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இதன் விளைவாக இவர்கள், திராவிட மொழிகள் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என கண்டறிந்துள்ளனர்.
திராவிட மொழிக்குடும்பமானது, உலகின் ஆதிமொழிக்குடும்பங்களில் ஒன்றாகும். தென், மத்திய மற்றும் வட இந்தியாவில் சுமார் 20 கோடிக்கும் மேலான மக்கள் பேசும் 80 வகையான மொழிகளை இக்குடும்பம் உள்ளடக்கியது. சுவாரஸ்யமாக, நேப்பாளத்தின் ‘குருக்’ மொழியும் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ‘பிராகுயி’ மொழியும் திராவிட மொழிக்குடும்பத்தினுள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்குடும்பத்தில் சில மொழிகள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்து வடிவம் பெற்றுவிட்டமையால், அவை வேத சமஸ்கிருதம் மற்றும் நவீன இந்தோ-ஆரிய மொழிகளில் ஆளுமை செழுத்தியுள்ளன. மேலும் இவை இந்தோ-ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரோ-ஆசிய மொழிக்குடும்பங்களை இணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளது.
திராவிட மொழிக்குடும்பத்தின் உட்கட்டமைப்பை புரிய முனைந்த முந்தய ஆய்வுகள் அவற்றுள் 4 பிரதான துணைக்குழுக்களிருப்பதை கண்டறிந்துள்ளன. தென் திராவிட துணைக்குழு 1, தமிழ், மலையாளம், இருலா, கொடவா, குரும்பா, கோத்தர், தோடர், படகர், கன்னடம், கொரகா மற்றும் துளு மொழிகளை உள்ளடக்குகிறது. தென் திராவிட துணைக்குழு 2, தெலுங்கு, கோண்டி மற்றும் குயி மொழிகளை கொண்டுள்ளது. மத்திய திராவிட துணைக்குழுவில், கடபா, பார்ஜி மற்றும் கொலமி மொழிகளும், வட திராவிட துணைக்குழுவில் பிராகுயி, குருக் மற்றும் மால்டோ மொழிகளும் வகுக்கப்பட்டுள்ளது.
மொழிகளின் சொல்லகராதிகளின் வேற்றுமைகளை தொடர்புபடுத்தும் ஒரு நெய்பர்நெட் (NeighborNet) உருவாக்கம். நிறக்குறியீடுகள் துணைக்குழுக்களைக் குறிக்கின்றன: சிகப்பு, தெற்கு 1I; நீலம், மத்திய; கருநீலம், வடக்கு; மஞ்சள், தெற்கு 2. (மூலம்: rsos.royalsocietypublishing.org R. Soc. open sci. 5: 171504)
திராவிட மொழிக்குடும்பத்தில் இன்னும் ஆராயப்படாத பல சிறிய மொழிகள் வழக்கிலிருப்பது இக்குடும்பத்தின் சுவாரஸியமான அம்சமாக திகழ்கிறது. ராயல் சொசைட்டி ஓப்பன் சையின்சஸ் (Royal Society Open Science) எனும் ஆய்விதழில் பிரதியான இந்த குறிப்பிட்ட ஆய்வில், திராவிடமொழிக்குடும்பத்தின் பரிணாம மரத்தை வரையறுக்க அம்மொழிகளை பிரதிபலிக்கும் மொழி மாதிரிகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
“பல்வேறு திராவிட மொழிகளின் மாதிரிகளைப்பெற இம்மொழிகளை அன்றாடம் பயன்படுத்துபவர்களிடமிருந்து சுமார் 100 அடிப்படை சொற்களை நாங்கள் சேகரித்தோம்” என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட முனைவர்.
அன்னிமேரி வெர்கெர்க், வழக்கிலிருக்கும் மொழிகளிக்கும் காலத்திற்கேற்ப அவை அடைந்த மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பை அடிப்படை சொற்களின் மூலம் மதிப்பிட இவர்கள் மாரிஸ் சுவதேஷ் எனும் மொழியியலாளர் உருவாக்கிய சுவதேஷ் பட்டியலைப் பயன் படுத்தியுள்ளனர்.
எத்னலாகிலிருந்து (Ethnologue) தழுவி எடுக்கப்பட்ட இந்தியா, பாக்கீஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளத்தில் திராவிடமொழிகளின் வரைப்படம் (மூலம்: rsos.royalsocietypublishing.org R. Soc. open sci. 5: 171504)
திராவிடக்குடும்பம் சார்ந்த முந்திய மொழி ஆய்வுகள் அகராதிகளிலிருந்து தரவுத்தொகுப்புக்களை எடுத்தபோதிலும், இந்த ஆய்வானது மக்களிடமிருந்து சேகரித்த தரவுகளையும் முந்திய தரவுகளுடன் இணைத்து ஒரு மேம்பட்ட புள்ளியல் பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளது.
“சுவதேஷின் பட்டியலைப்பயன்படுத்தி 20 மொழிகளுக்கு சொல் தரவுகள் மொழிப்பேச்சாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன. பதில்கள் பதிவுசெய்யவும் முடிந்த இடங்களில் எழுதிக்கொள்ளவும் பட்டது. சில மொழிகளில் பேச்சாளர்கள் தங்கள் மொழியல்லா வேறு மொழிகளில் எழுதமுன்வரவில்லை. இவ்வாறு பதிவுசெய்யப்பட்ட மற்றும் எழுதப்பட்ட படிகள் சர்வதேசஒலிப்பு எழுத்துக்களாக (International Phonetic Alphabet (IPA)) மாற்றப்பட்டது. பின் இந்த பதில்கள் (தொடர்புடைய) உறவுடைமை குறியீடுகளாக திராவிட மொழியியல் அகராதி (Dravidian Etymological Dictionary)மூலம் மாற்றப்பட்டது” என இந்த ஆய்வில் பயன்படுத்திய அடிப்படை முறைகளைப்பற்றி விவரிக்கிறார் முனைவர். வெர்கெர்க்.
இங்கே ஆய்வாளர்கள் பேசியன் பைலோஜெனிடிக் இன்ஃபெரென்ஸ் (Bayesian phylogenetic inference) எனும் ஒரு அணுகுமுறையை பயன்படுத்தியுள்ளனர். இது முந்தைய தரவுகளை வைத்து மொழிகள் அல்லது சிற்றினகளின் பரிணாம வரலாற்றை மதிப்பிடும் நிகழ்தகவு-சார்ந்த ஒரு புள்ளியியல் அணுகுமுறையாகும். சூழலியலில் பெரிதும் பயன்படுத்தப்படும் இந்த அணுகுமுறை, மொழி பரிமாணம் நிகழ்ந்ததை காட்டும் ஒரு சிறந்த பரிணாம மரத்தை கண்டறிவதை விட, அதிக சாத்தியக்கூறுகள் உள்ள ஒன்றிற்கு மேற்பட்ட மொழி பரிணாம மரங்களை கண்டறிந்தது தொகுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, திராவிட மொழிகளை தெற்கு 1 மற்றும் 2, மத்திய மற்றும் வடக்குக் குழுக்களாக வகுக்குத்துள்ள, மொழி பரிணாமத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் மேற்கோளான கிருஷ்ணமூர்த்தியின் மொழிக்குடும்ப மரத்துடன் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஒப்பிடப்பட்டுள்ளது., திராவிட மொழிக்குடும்பங்களின் தொடர்புகளை கண்டறிய பல நவீன ஒப்பீட்டு மொழியியல் கோட்பாடுகளை பயன்படுத்திய ஒரு முக்கியமான திராவிட மொழியியலாளர் திரு பி. கிருஷ்ணமூர்த்தி ஆவார். இவரின் ஆய்வு முடிவுகள் பல்வேறு திராவிட மொழிக்குடும்ப ஆய்வுகளுக்கு பிரதான மேற்கோளாக விளங்குகின்றன.
குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்த ஆய்வு தெற்கு 1 மற்றும் 2ஆம் மொழிக்குழுக்களும் மற்ற மொழிக்குழுகளுக்குமிடையே ஒரு கணிசமான பிளவு சுமார் 2500-3000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாக கண்டறிந்துள்ளது. இந்த பிளவு தெற்கு கற்கால நாகரீகம் விரிவடந்த காலமான சுமார் 3000-4000 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிறது இவ்வாய்வு. இந்தக்காலத்தில் வழக்கிலிருந்த விவசாய பயிற்சிகள் இம்மொழிகளிலுள்ள பயிர்கள் சார்ந்த சொற்தரவுகளை விளக்கி இந்த ஆய்விற்கு கூடுதல் பலம் சேர்கிறது.
மேலும், திராவிட மொழிகள் இந்தியாவில் முதலில் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தும் காலம் சார்ந்த ஆதாரங்கள், மொழியியல் மற்றும் வரலாற்று தரவுகளை தங்களின் திராவிட மொழிப்பரிணாம மரத்துடன் இணைத்து இவ்வாய்வாளர்கள் திராவிட மொழிக்குடும்பத்தின் வயதை கணித்துள்ளனர். இதன்மூலம் திராவிடமொழிக்குடும்பமானது சுமார் 4500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது எனவும், இது தொல்லியல் கால அளவுக்கோட்டில் ஒரு பிரதான காலமாக திகழ்ந்த தெற்கு கற்காலத்தின் தொல்லியல் ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகிறது எனவும் கண்டறிந்துள்ளனர். சுமார் 5000 ஆண்டுகள் முதல் 3400 ஆண்டுகள் தொட்டு நிகழ்ந்த இந்தியாவின் தெற்கு கற்காலத்தின் பிரதான அம்சங்களாக பூர்வக்குடி வேளான் சமூகங்களால் உருவாக்கப்பட்ட சாம்பல் திட்டுகள் மற்றும் கலைப்பொருட்கள் விளங்குகின்றன.
திராவிட மொழிகள் இந்தியாவில் எவ்வாறு தோன்றி பரவியது என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்தியபோதும், இந்த நிகழ்வுகள் எங்கே நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதைப்பற்றி எதுவும் இவ்வாய்வு பெரிதாக கூறவில்லை.
“இந்த ஆய்வு மொழிகளின் பாரம்பரியத்தை ஆராயும் ஒரு முயற்சி. இம்மொழிகளின் தற்போதைய புவியியல் சார்ந்த தகவல்களோ திராவிட மொழிகளின் முன்னோர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது போன்ற தகவல்களோ இவ்வாய்வில் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஆனாலும் இதுபோன்ற தகவல்களைக் கருத்தில்கொண்ட ஆய்வுகள் வேறு சில மொழிக்குடும்பங்களில் நடந்துள்ளது. அதனால் இங்கும் இது சாத்தியமே” என்கிறார் முனைவர். வெர்கெர்க்
பேசியன் பைலோஜெனிடிக் முறையை மொழியியலிற்கு பயன்படுத்தியதே இவ்வாய்வின் சிறப்பம்சமாக விளங்குகிறது.
“இந்த முறை மொழியியல் ஆய்வில் 2000ஆம் ஆண்டு முதல் வழக்கில் உள்ளது. மொழியியல் வரலாற்றை படிக்க பயன்படுத்தப்படும் 'தரமான' முறையாக கருதப்படும் ஒப்பீட்டு முறையை உருவாக்கிய வரலாற்று மொழியியலாளர்களிடையே இந்த பேட்சியன் பைலொஜெனிடிக் முறை பல ஐயுறவுகளுக்கு உள்ளாகியுள்ளது. பகிரப்பட்ட மூதாததேயர்களைக்கொண்ட 2 அல்லது 3 மொழிகளின் அம்சங்களை தனித்தனியாக ஒப்பிட்டு, அதன் மூலம் அந்த மூதாதேயரின் அம்சங்களை மதிப்பிடுவதே இந்த ஒப்பீட்டு முறையாகும். தற்போதைய பைலோஜெனிடிக் முறைகள், ஒப்பீட்டு முறைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படுவதால் இவை இப்போது பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்று விளக்குகிறார் முனைவர். வெர்கெர்க்.
திராவிட மொழிகளின் பரிணாமத்தை புரிந்துகொள்ள பயன்படும் வெகுசில ஆய்வுகளில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. மேலும் இந்த ஆய்வு பண்டைய மக்கட்குழுக்கள் தெற்காசியாவில் பரவிய வரலாற்றை அறியவும் அடிப்படையாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற ஆய்வுகள் மொழிகளின் வயதை கண்டறியவும் ஐரோப்பிய-ஆசிய கண்டங்களின் வரலாற்றை தெளிவாக புரிந்துகொள்ளவும் திரவுகோல்களாக விளங்குகின்றன என்பது மறுக்கமுடியாத உன்மையாகிறது.