முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

உயிர்த்தெழும் காடுகள் - காடுகளின் மீளுருவாக்கம் எப்படி நிகழ்கின்றன?

Read time: 1 min
பெங்களூரு
17 ஜூலை 2019
அசோகா சுற்றுசூழலியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் குப்பி ஆய்வகமும் சேர்ந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாகக் காடுகள் 11 வருட காலத்தில் எப்படி மீளுருவாக்கம் அடைகின்றன என்று காப்பகப்படுத்திஇருக்கின்றன.

காடுகள் பல்வேறு பறவைகள் மற்றும் மிருக இனங்களுக்கு இருப்பிடமாக இருப்பதோடு அல்லாமல் மரங்கள் மூலமாக வளிமண்டலத்தில் உள்ள கரிமத்தினையும் சேமித்து வைக்கின்றன. காடுகள் இல்லையென்றால் இந்த கரிமம் கரியமிலவாயுவாக காற்றுமண்டலத்தில் பரவி புவி வெப்பமயமாகுதல் அதிகரித்துவிடும். உலகில் காடுகளாக இருந்த நிலப்பகுதிகள் பல்வேறு காரணங்களுக்காக தோட்டங்களாக மாற்றப்பட்டன, அவைகளை மீட்டெடுப்பதன் மூலமாக காடுகளுக்கு மறு உயிர்ப்பு கொடுக்கமுடியும் என்றும் அவற்றிற்கான முயற்சிகள் குறித்தும் அண்மையில் பெங்களூரு ஏட்ரீ (ATREE) என்று வழங்கப்படும் அசோகா சுற்றுசூழலியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் குப்பி ஆய்வகமும் (Gubbi Labs)  சேர்ந்து நடத்திய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பதினோரு வருடங்களில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாகக் காடுகளின் மீளுருவாக்கம் காப்பகப்படுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களைக் கழிக்க மலைப்பிரதேசங்கள்  செல்லும் நாம் அங்கு சூழ்ந்துள்ள காபி, தேயிலை போன்ற செயற்கை தோட்டங்களின் பசுமையினையும், எழிலினையும் கண்டு ரசித்திருப்போம். அனால் உண்மை இதற்கு புறம்பானது. இவ்வகை செயற்கை தோட்டங்கள் ஒரே வகையான தாவரங்களை கொண்டிருப்பதல்லாமல் அவற்றின் பசுமைக்கவர்ச்சி வெறும் பார்வைக்கே அன்றி அது பல்லுயிர் தொகுப்பினை ஆதரிப்பதில்லை. ஆனால் இயற்கை காடுகள் பல்லுயிர் தொகுப்பினை ஆதரிப்பதோடு கணக்கில் அடங்கா சுற்றுசூழலியல் நன்மைகளையும் நமக்கு வாரி வழங்குகின்றன. பொதுவாக காடுகளை அவற்றின் அடர்த்தி மற்றும்  உயிரின  அமைப்புகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. மிகக்குறைந்த மனிதக் குறுக்கீடுகள், தனக்கே உரித்தான தாவர அமைப்பு மற்றும் அடர்த்தி மிக்க காடுகளை முதன்மைநிலைக் காடுகள் என்றும், முதன்மைநிலைக் காடுகளை ஒத்த தாவர அமைப்புள்ள மனித குறுக்கீடுகளுக்குப் பிறகு அமையப்பெற்ற காடுகள் இரண்டாம்நிலைக் காடுகள் எனவும் உயிரியாளர்கள்  வகைப்படுத்துகின்றனர்.

ஜர்னல் ஆப் ட்ராபிகல் எக்காலஜி (Journal  of Tropical Ecology) எனும் ஆய்வு சஞ்சிகையில் காடுகளின் மறு உயிர்ப்பு பற்றிய இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 1960களில் களக்காடு முண்டந்துறை வனப்பகுதியின் பகுதிகள் அழிக்கப்பட்டு அருகில் உள்ள தேயிலை தோட்டங்களின் எரிபொருள் தேவைகளுக்காக யூக்கலிப்டஸ் (Eucalyptus) என்று அழைக்கப்படும் தைல மரங்கள் நடப்பட்டன. பின்னர் இந்த பகுதிகள் மீட்கப்பட்டு, அரசாங்கத்தால் இவ்வகை தைல மரங்கள் நட தடை செய்யப்பட்டு இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. பாதுகாக்கப்பட்ட பின்னர் இந்த செயற்கை தைல காடுகள் எப்படி காட்டு தாவரங்களால் மீண்டும் மீளுருவாக்கம் அடைந்திருக்கின்றன என்று அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2005 மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் அங்கு இருந்த தாவர இனங்களின் தரவு முடிவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

"முன்னர் தைல காடுகளாக மாற்றப்பட்டு, பிறகு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இவ்வகை காடுகள், சொந்த தாவரங்கள் மூலமாக எப்படி மீளுருவாகி தங்களை உயிர்ப்பித்துக் கொள்கின்றன என்று அறிந்துகொள்ள மிகப்பெரும் வாய்ப்பினை நமக்கு நல்குகின்றன" என்கின்றார் இந்த ஆய்வினை மேற்கொண்ட குப்பி ஆய்வகத்தினை சேர்ந்த திரு. விக்னேஷ் காமத்.

பொதுவாக காடுகளில் தாவரங்களின் அமைப்பினை ஆராய்ச்சி செய்பவர்கள், ஆய்வு செய்யும் காடு அல்லது நிலப்பகுதிகளை மாதிரிகளாக பகுத்து, அந்த மாதிரிகளில் உள்ள தாவர எண்ணிக்கை மற்றும் இன வகைகளை கணக்கெடுப்பார்கள். தாவரங்களின் தண்டு விட்டத்தினைக் கொண்டு தாவர வயதும் கணக்கிடப்படும். இவ்வாறே இந்தக் காடுகளும் பகுக்கப்பெற்று தாவரங்களின் எண்ணிக்கை மற்றும் வயது கணக்கிடப்பட்டன. தாவர விதை பரவல்  காடுகளின் மீளுருவாக்கத்தில் பெரிதும் துணை புரிகின்றன. ஒவ்வொரு  தாவர வகைகளுக்கும் வெவ்வேறு முறைகளில் அவற்றின் விதைகள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக பறவைகள் மூலமாக பரவுபவை, பாலூட்டி முதலிய விலங்கினங்கள் மூலமாக பரவுபவை என தாவர விதைப் பரவலை உயிரியலாளர்கள் வகைப்படுத்துகின்றனர். இந்த ஆய்வில், கணக்கிடப்பட்ட தாவரங்களின் விதைகள் எப்படி பரப்பப்பட்டன என்று ஆய்வாளர்கள் வகைப்படுத்தியிருந்தனர். இவற்றில் பறவைகளால் பரப்பப்படும் குறைந்த எடையுள்ள தாவரங்கள் முதலாவதாக ஆக்ரமித்திருக்கக்கூடும் என்றும், பெரிய விதைத் தாவரங்கள் அதற்கடுத்து ஆக்ரமித்திருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். "2005 மற்றும் 2016ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தரவுகளை ஒப்பீடு செய்வதின் மூலமாக, எந்தெந்த சொந்தத் தாவர வகைகள்  காடுகளின் மீளுருவாக்கத்திற்கு எவ்வளவு துணை புரிகின்றன என்று இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது" என்கிறார்  திரு.விக்னேஷ் காமத். 

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த தைல காடுகளில் 67 சதவீதம் தாவர பன்முகத் தன்மை அதிகரித்து இருப்பதாகவும், அவற்றில் 156 சதவீதம் முதன்மைநிலைக் தாவர வகையை சார்ந்தவை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மீளுருவாக்க காடுகளில் இரு பங்கு தாவரங்கள் பறவைகளால் பரப்பப்பட்டவை என்றும் மூன்று பங்கு பாலூட்டிகளாலும் பரப்பப்பட்டவைகள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காடுகளில், தாவர கவிப்புகளால் (canopy) ஏற்படுத்தப்பட்டிருக்கும் வனப்பகுதி அடர்த்தியே அங்கிருக்கும் தாவரங்கள் உயரமாக வளரவும், அதிகமான கரியமில வாயு சேமிக்கவும் வழிவகை செய்கின்றன. முதன்மைநிலைக் காடுகளில் இவ்வகை தாவர கவிப்புகளின் அடர்த்தியானது தைல காடுகளைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாகும். செயற்கை காடுகள் மீளுருவாக்கம் கொள்ளும்போது இந்த கானகக்கவிப்புகள் உடனடியாக உருவாகிவிடுவதில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2005 ஆம் ஆண்டு இந்த தாவர கணக்கெடுப்பு எடுக்கும் பொழுதே, இந்த தைலக் காடுகள் மனித குறுக்கீட்டிலிருந்து பாதுகாக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியிருந்தன. 2016 ஆம் ஆண்டு 36 ஆண்டுகள் எவ்வகை மனித குறுக்கீடுகளும் அற்று அவைகள் சொந்த தாவரங்கள் கொண்டே மீளுருவாக்கம்  அடைய முற்பட்டிருக்கின்றன. "இந்த ஆய்வின் மூலமாக செயற்கை காடுகளின் மீளுருவாக்கத்தின் அமைப்பினை பற்றி அறிய முடிகிறது, இன்னும் சில காலங்களில் முதன்மைநிலைக் காடுகளைப் போலவே இந்த தைல காடுகளும் மீளுருவாக்கம் பெற வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இவ்வகை காடுகள் சூழலியல் செயல்பாட்டில் முதன்மைநிலைக் காடுகளின் தன்மையினை அடைவதை அறிய இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்" என்கிறார் அட்ரீயை சேர்ந்த ஆய்வாளர் திரு. ஆஷிஷ் நெர்லேகர்.

"இந்தியாவில் இவ்வகையான பல முதன்மைநிலைக் காடுகளின் நடுவில் செயற்கை தோட்டங்கள் அமையப் பெற்றிருக்கின்றன. நாளுக்கு நாள் அவைகளின் பரப்பும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன, பலதரப்பட்ட காடுகளின் அமைப்பினையும் செயல்பாடுகளையும்  ஒப்பீடும் ஆய்வுகள் இந்தியாவில் மிகக்குறைந்த அளவே நடத்தப்படுகின்றன, இவ்வகை ஆய்வுகளே வனஉயிர்ப்பிற்கும், அவற்றின் பாதுகாப்பிற்கும் உதவ வழிவகை செய்யும்" என்று இவ்வகை ஆய்வின் முக்கியத்துவத்தினை பற்றி கூறுகிறார் திரு. நெர்லேகர்.