முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

வெண்முதுகுப் பாறூக்கழுகுகளின் வாழ்வியல் ரகசியங்கள்- ஆய்வு முடிவுகள்

Mumbai
4 பிப் 2021
வெண்முதுகுப் பாறூக்கழுகுகளின் வாழ்வியல் ரகசியங்கள்- ஆய்வு முடிவுகள்

வெண்முதுகுப் பாறு என்பது உலகெங்கிலும் அதிகம் காணப்பட்ட கழுகு இனத்தைச் சேர்ந்த ஒரு வேட்டைப் பறவையாகும். இந்த பறவை தற்போது இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசிய பகுதிகளில் மட்டும் வாழ்ந்து வரும் ஒரு அருகிய நிலையில் உள்ள இனமாகும். கால்நடைகளுக்கு புகட்டப்படும் டைக்லோபினாக் (Diclofenac) எனும் மருந்தினால், அவைகளின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளாக குறைந்து வருகின்றது. டைக்லோபினாக் மருந்து புகட்டப்பட்ட கால்நடைகளின் உடல்களை, இந்த பறவைகள் உண்ணும்போது மூட்டு நோய் மற்றும் வாதம் போன்ற உறுப்பு செயலிழப்பு நோய்களின் தாக்கத்தால் இப்பறவைகள் இறந்துவிடுகின்றன. டைக்லோபினாக்கை கால்நடைகளுக்கு  புகட்டுவதை குறைத்தல் அல்லது தடைசெய்தல், கழுகுகளுக்கான சிறப்பு பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்க மையங்களை உருவாக்குதல், இந்த  பாறுக் கழுகுகள் தற்போது அதிகம் புழங்கும் வாழிடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்தல் முதலிய முன்னெடுப்புகள் வழியாக இந்த பறவையினத்தினை பாதுகாக்கமுடியும்.

தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகூர் பீடபூமி பகுதியில், பாம்பே இயற்கை அறிவியல் மையம் நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்தப் பறவையினங்கள் வாழத்தோதுவான பகுதிகளை கண்டறிந்துள்ளனர். இந்தப்பகுதி வெண்முதுகு பாறூக்கழுகிற்கான காப்பகம் அமைக்க சரியான பகுதி என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் ஜர்னல் ஆப் த்ரெட்டண்டு டாக்சா (Journal of Threatened Taxa) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுக் கட்டுரையில் பாறூக் கழுகுகள் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கும் பொதுமக்களின் கருத்தோட்டங்களும் வெளிடப்பட்டுள்ளன.

இந்திய தீபகற்ப்பத்தின் இரண்டு மலைத்தொடர்களான கிழக்குத் தொடச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இரண்டையும் இணைக்கும் சிகூர் பீடபூமியானது தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடகத்தின் பண்டிபூர் புலிகள் காப்பகம் என மூன்று புலிகள் காப்பகங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 778.80 கிலோமீட்டர்களாகும். தோரயமாக இது பெங்களுர் நகரத்தின் பரப்பளவிற்கு இணையான பகுதியாகும். சிறு  எண்ணிக்கைகளில்  உள்ள  பாறூக் கழுகுகள் இங்குள்ள  காட்டுயிரிகளின் சடலங்களை புசித்து வாழ்வதனால், இவைகள் டைக்லோபினாக் மருந்தினால் பாதிக்கப்படுவதில்லை. இந்த ஆய்வில், அவைகளின் எண்ணிக்கை, இனப்பெருக்கம் மற்றும் உணவுப்பழக்கங்கள் குறித்த தரவுகளை ஆய்வாளர்கள் செப்டம்பர் 2001 முதல் மே 2012 வரையிலான காலகட்டத்தில் சேகரித்துள்ளனர்.

“2011  முதல், இந்தப் பாறூக் கழுகுகளின் எண்ணிக்கை குறித்து நாங்கள் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் கண்காணித்து வருகிறோம். இன்றளவில் வெண்முதுகுப் பாறு, செந்தலைப் பாறு மற்றும் இந்தியப் பாறு என்றழைக்கப்படும் கருங்கழுத்துப் பாறு முதலிய பறவையினங்கள் எண்ணிக்கைககள் இருநூற்றி இருபதிற்கும் மேல் அதிகரித்துள்ளன” என்கிறார் இந்த ஆய்வில் பங்குபெற்ற ஆரோக்கியநாதன் சாம்சன்.  இவர் மும்பை, பாம்பே இயற்கை ஆய்வு மையத்தின், பாறுக் கழுகுகள் ஆய்வு திட்டத்தில் உயிரியல் ஆய்வாளராக உள்ளார்.

ஆய்வாளர்கள், காலை மற்றும் மாலை வேளைகளில், பாறூக்கழுகுகள் கூடு மற்றும் உண்ணும் இடங்களில் அவைகளின் எண்ணிக்கைகள் குறித்த தரவுகளை சேகரித்தனர். எழுபது முதல் நூற்றிப்பதினைந்து பாறூக்கழுகுகள் இரண்டு தொகுப்புகளாக இங்கு வாழுகின்றன. ஆய்வாளர்கள் சிகூர் மற்றும் குண்டத்திகல்லா ஆற்றுப்பகுதியில் 68 பாறூக்கழுகுகளின் கூடுகளை கண்டறிந்துள்ளனர். இந்த 68 கூடுகள் 41 மரங்களில் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் அதிகமான கூடுகளின் எண்ணிக்கை மருத மரங்களில் (Terminalia arjuna) கட்டுப்பட்டுள்தாகவும், இந்த கூடுகள் சராசரியாக சுமார் 28 மீட்டர் உயரத்தில் காணப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“தற்போது முதுமலை புலிகள் காப்பகம் அதிக மருத மரங்களை ஆற்றங்கரையோரம் நட்டு வருகின்றனர். இதனால் இந்த பறவையினங்கள்  கூடுகட்டுவதற்கும், இதன் எதிர்கால பாதுகாப்பிற்கும் வழிகோலும்” என்கிறார் சாம்சன். பாறுகள் இடும் முட்டைகளில், பத்தில் ஒன்பது குஞ்சுகள்  பொரித்துவிடுவதாக கண்டறிந்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட காட்டுயிர்  சடலங்களை இந்தக் கழுகுகள் உண்ணுகின்றன. தோட்டிகளாக செயல்படும் இந்த பறவையினங்கள், சூழலில் ஊட்டச்சத்து சுழற்சியில் பெரும்பங்காற்றுகின்றன. மேலும் யானைகள் மற்றும் காட்டெருமைகளை உண்ணுவதில் இந்தப் பறவைகள் பெரிதும் விரும்புகின்றன என்றும் ஆய்வில் தெரியவருகின்றது.

இந்தப் பறவையினங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் கருத்தோட்டமும் பெரும்பங்காற்றுகின்றது. இதற்காக ஆய்வாளர்கள் கால்நடை வளர்க்கும் அல்லது கால்நடைகள் தொடர்பான தொழிலில் ஈடுபட்டிருக்கும் 109 நபர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. பத்தில் ஒன்பது பேர் பாறுக்கழுகுகளை பாதுகாப்பது சூழலியலுக்கு உகந்தது என்று கருதுகிறார்கள். கிராம மக்கள் இறந்துபோன தங்கள் கால்நடைகளை பெரும்பாலும் காடுகளில், தங்கள் வசிப்பிடங்களில் இருந்து சுமார் 300 முதல் 500 மீட்டர் தூரத்தில் விட்டுவிடுகிறார்கள். மேலும் பறவைகளுக்கு ஊறு விளைவிக்காத மேலோக்சிகேம் (meloxicam) எனும் மருந்தினையே கால்நடைகளுக்கு புகட்டுகின்றனர். மனிதர்களின் பயன்பாட்டிற்குக் கூட, இந்தப் பிராந்தியங்களில் நான்கு மருந்துக்கடைகள் மட்டுமே டைக்லோபினாக் மருந்தினை விற்கின்றனர்.

இந்த ஆய்வு முடிவுகள் மூலமாக, பாறுக்கழுகுகளுக்கு போதுமான உணவு இந்தக் காடுகள் வழங்குவதாலும் மற்றும் சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இருப்பதாலும், சிகூர் பீடபூமி இவற்றின் பாதுகாப்பிற்கு ஏற்ற இடமாக ஆய்வாளர்கள்  கருதுகின்றனர்.

Tamil