கண்கவர் வண்ணங்கள், வியத்தகு வடிவங்கள், திடமான நறுமணம் என பல இயல்புகள் மூலம் மலர்கள் தங்களின் மகரந்தச்சேர்க்கையாளர்களை ஈர்க்கின்றன. சொல்லப்போனால், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் இதர மகரந்தச்சேர்க்கை செய்யும் பூச்சிகள் தங்களுக்கென ஒரு விருப்பப்பட்டியலை வைத்து மலர்களைத் தேர்ந்தெடுத்துச் செல்லும் திறன் கொண்டவை என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த மலர்த்தேர்வு விருப்பங்கள் சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடியவை என்பது கூடுதல் தகவல்.
இந்தியா முழுதும் காணப்படக்கூடிய கொன்னை வெள்ளையன் (common emigrant) என்னும் வண்ணத்துப்பூச்சியின் பெண் இனமானது, இயல்பாக மஞ்சள் நிறத்தை விரும்பி நாடுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், அதே பூச்சிகளின் ஆண் இனமானது நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களை விரும்பி நாடுகின்றன என்பதையும் அறிந்துள்ளனர். இப்பூச்சிகளுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் இப்பிறவி நிற விருப்பத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றவும் ஆய்வாளர்களால் முடிந்துள்ளது. இப்பயிற்சிகளின் மூலம் மலர்களின் நிறத்தோடு, வாசனையும் ஒரு முக்கியக் காரணியாகச் செயலாற்றுகிறது என்பது அறியப்பட்டுள்ளது. இத்தகைய நிற விருப்பத்தை ஒரு வலிமையான/கவர்ச்சிகரமான வாசனையால் மாற்றவோ நேர்மாறாக திருப்பவோ முடியும்.
மலர்களும் பல மகரந்தச்சேர்க்கையாளர்களை ஈர்ப்பதற்காகத் தங்களின் இயல்புகளை மாற்றியமைக்கும் திறன் படைத்துள்ளன. இமயமலையின் தாழ்வான சரிவுகளில் காணக்கூடிய ரோடோடென்றான் என்னும் தாவரம், நீளமான, நீர்த்த தேன் கொண்ட மலர்களைக் கொண்டுள்ளன. இதே தாவரம் இமயமலைகளின் உயர்வான பகுதிகளில் தங்கள் இயல்புகளை மாற்றி சிறிய, செழுமையான தேன் திணிக்கப்பட்ட மலர்களைக் கொண்டுள்ளன. இம்மாற்றம் அங்குள்ள ஈக்கள் மற்றும் பம்பில்பீ (bumblebee) எனப்படும் ஒருவகை பெருந்தேனீ இனத்தையும் அதிகம் ஈர்ப்பதற்காகும்.
சில மலர்கள் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப, தங்களின் நிறப்பண்பு மூலக்கூறுகளை அதிகரிப்பதன் மூலம் தங்கள் நிறங்களை மாற்றியமைத்து வருகின்றன என ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். இத்தகைய மலர்களை மகரந்தச்சேர்க்கையாளர்கள் புறக்கணிக்கும் ஆபத்துள்ளதோ என சில ஆய்வாளர்கள் கவலைக்கொள்கின்றனர். தாவரம் மற்றும் மகரந்தச்சேர்க்கையாளர்களுக்கு இடையில் காணப்படும் இடைவினைகளைப் புரிந்துகொள்வதால் மட்டுமே இத்தகைய மாற்றங்கள் உலகின் மகரந்தச்சேர்க்கையாளர்களையும், அதன் நீட்சியாக நம் உணவு விநியோகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை அறியமுடியும்.