முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

கொண்டைக்கடலையின் விளைச்சலை மேம்படுத்தும் உள்ளூர் வேர்முடிச்சு நுண்ணுயிரி

Read time: 1 min
பெங்களூரு
2 ஜூலை 2020
கொண்டைக்கடலையின் விளைச்சலை மேம்படுத்தும் உள்ளூர் வேர்முடிச்சு நுண்ணுயிரி

கொண்டைக்கடலை (Chickpea) என்றாலே நம்மில் பலருக்கு நினைவில் வருவதுச் கோவிலில் கொடுக்கப்படும் சுண்டல் தான். ஒவ்வொரு வருடமும், கொண்டைக்கடலையின் விளைச்சல் பெருகி வருவதற்கு ‘உழவர்களின்’ கடும் உழைப்பு, ஒரு முக்கிய காரணம் என்று நாம் நன்கு அறிவோம். ஒரு தாழ்மையான ‘பற்றுயிரி’யும்  (Bacteria) இதற்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்! ‘ரைசோபியம்’ (Rhizobium) என அழைக்கப்படும் ‘வேர்-முடிச்சு  நுண்ணுயிரி’ - இயற்கை உரமாக  செயல்பட்டு கொண்டைக்கடலையின் விளைச்சலைக் கூட்டுகிறது. இதனால், சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன உரங்களின் தேவை, இல்லாமல் போகிறது. இந்தியாவில் கொண்டைக்கடலைச் செடிகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு துருக்கியிலிருந்து கொண்டு வரப்பட்டுளது  என நம்பப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், கொண்டைக்கடலை எங்கிருந்து தன் கூட்டாளியான  வேர்-முடிச்சு  நுண்ணுயிரியைப் பெற்றது? துருக்கியிலிருந்தே தன்னுள் கூட்டிக்கொண்டு வந்துள்ளதா? அல்லது, வந்த இடத்திலுள்ள வேறு சில ரைசோபிய இனவகையைப் தன்னுடன் உள்ளடக்கிக் கொண்டுள்ளதா? இதற்கான பதில்கள், இந்திய மற்றும் பிற பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு சமீபத்திய ஆய்வில் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

தாவர வளர்ச்சிக்கு உப்பியம் (Nitrogen) ஒரு அத்தியாவசமான ஊட்டச்சத்து ஆகும். இது காற்றில் மிகுதியாக காணப்பட்டாலும், அதனை தாவரங்களால் நேரடியாக  நிலைநிறுத்த முடியாது. பருப்பு வகை தாவரங்களின் வேர்களில் மணி போன்ற முடிச்சுகளாக வாழ்பவை ரைசோபியம் எனப்படும் பற்றுயிரிகள் ஆகும். அப்பற்றுயுரிகளுக்கு, காற்றில் உள்ள உப்பிறப்புவளியை (Gaseous Nitrogen) தாவரங்களினால் உள்ளடக்கி கொள்ளும் வடிவங்களாக மாற்றி அமைக்கும் வினோதமான திறன் உள்ளது. உப்பியம் நிலைநிறுத்துதல் செயல்பட்டின் மூலம் உப்பிறப்புவளியை நைட்ரேட் (Nitrate) உப்புகளாக மாற்றுகின்றன. அவை, இரசாயன உரங்களைப் போலவே தாவரங்களுக்கு ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. அதற்கு கைமாறாக, உணவையும் இருப்பிடத்தையும் அப்பற்றுயுரிகளுக்கு  தாவரங்கள் அளிக்கின்றன. ஆகையால், உலகின் பல்வேறு இடங்களிலுள்ள உழவர்கள், உப்பியம் நிலைநிறுத்தத்தில் கைதேர்ந்த ரைசோபிய இனவகைகளை கொண்டைக்கடலை விளைநிலங்களில் அறிமுகப்படுத்துகின்றனர்.

அதே சமயம், விளை நிலங்களில் அறிமுகப்படுத்தப்படும் ஆய்வக ரைசோபியத்தால், தன்னை உள்ளடக்கும் கொண்டைக்கடலை செடியிடம் நீண்ட காலம் கூட்டுறவு வைக்க முடிவதில்லை. இந்த நிலை பாதகமாக விளைவது மட்டுமல்லாமல் பல கேள்விகளையும் எழுப்புகிறது. அதில் சில பின் வருகிறது:

  • ஆய்வக ரைசோபியத்தால், எல்லா வாய்ப்புகளிலும் தக அமைந்த உள்ளூர் ரைசோபிய இனவகையிடம் போட்டிப்போட்டு நிலைக்க முடியுமா?
  • கொண்டைக்கடலை, தனது தோற்றுவித்த இடத்திலிருந்து உலகம் முழுவதும் பரவும்போது இந்தப் போட்டியின் விளைவு என்ன?
  • துருக்கியிலிருந்து வந்த ஆதி ரைசோபிய இனவகைக்கு என்ன நேர்ந்தது?  

இதற்கான சில நுண்ணறிவுகளை, PNAS எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளிவந்துள்ள தற்போதைய ஆய்வு அளித்துள்ளது.

இந்த ஆய்வின் முதற்கட்டமாக, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மொரோக்கோ, எத்தியோப்பியா மற்றும் இந்தியா போன்ற உலகின் பல்வேறு இடங்களில் பயிரிடப்படும் கொண்டைக்கடலையிலிருந்து அதன் வேர்-முடிச்சு நுண்ணுயிரியின் இனவகைகளை, ஆய்வாளர்கள் சேகரித்தனர். மேலும், அவர்கள் தென்கிழக்கு துருக்கியை பூர்வீகமாக கொண்ட நாட்டுவகை கொண்டைக்கடலைச் செடிகளிலுள்ள வேர்-முடிச்சு நுண்ணுயிரியின் மாதிரிகளையும் சேகரித்தனர். பிறகு, இந்த நுண்ணுயிரி  இனவகைகளின் மரபணுக்களைப் பகுப்பாய்வு செய்து வேறு இனவகைகளிடையே இருக்கும் பரிணாமத் தொடர்புகளையும் நிர்மாணிக்க முயன்றனர். இந்த முயற்சி, வேர்-முடிச்சு நுண்ணுயிரி இனவகைகள் உலகம் முழுவதும் எவ்வாறு பரவியிருக்கலாம் என்பதற்கான விடையை அளிக்கக்கூடும். மேலும், இந்த நுண்ணுயிரி இனவகைகளின் பரவல், வெவ்வேறு இடத்தின் மண்ணின் நிலைகளினால் எவ்வாறு பாதிப்படைகிறது என்பதையும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வில் கண்டறியப்பட்டதை வைத்து, வேர்-முடிச்சு நுண்ணுயிரியின் இத்தகைய பரவல் தன்மைக்கு துணைபுரிவது என்ன? என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கொண்டைக்கடலை, துருக்கியிலிருந்து பரவ தொடங்கியபோதே அதனுடன் உள்ளடங்கிய ரைசோபிய இனவகையும் ஒட்டிக்கொண்டு வந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், அந்த ரைசோபிய இனவகை உள்ளூர் இனவகைகளிடம் கடுமையான போட்டியை சந்திக்க நேர்ந்து, அதனுடன் தோற்றும் போயிருக்கலாம். இதற்கு காரணம், உள்ளூர் ரைசோபிய இனவகைகள் கொண்டைக்கடலைச் செடிகளிடம் உள்ளடங்கிக் கொள்ள உதவும் மரபணுக்களை ஆதி ரைசோபிய இனவகையிடம் பரிசாகப் பெற்றிருக்கலாம் என தெரிகிறது. இதன்பின்னர், ஆதி ரைசோபிய இனவகையை அங்கிருந்து வெளியவும் ஏற்றிருக்கலாம். இந்த மரபணு பரிமாற்றம், ‘கிடைமட்ட மரபணு பரிமாற்றம்’ (Horizontal gene transfer) எனும் இயங்குமுறையின் மூலம் நடைப்பெற்றிருக்கிறது என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. கிடைமட்ட மரபணு பரிமாற்றம் என்பது தூர தொடர்புடைய சிற்றினங்களிடத்திலும் நிகழும் ஒருவகை மரபணு பரிமாற்றம் ஆகும்.

இந்த ஆய்வின் முடிவுகள், கொண்டைக்கடலை உற்பத்தி இன்றைய தினத்தில்  எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை நன்கு ஊகித்துள்ளது. சில தசாப்தத்திற்கு முன்னர் இருந்த கொண்டைக்கடலையின் சராசரி வருடாந்திர உற்பத்தி 4.88 மில்லியன் டன்களில் இருந்து 7.38 மில்லியன் டன்களாக இன்று உயர்ந்துள்ளது. இப்பொழுது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருப்பு வகைகளில் கிட்டத்தட்ட பாதி கொண்டைக்கடலையே ஆகும். கொண்டைக்கடலையின் நல்ல விளைச்சலுக்கு, உள்ளூரில் தக அமைந்த, உப்பியத்தை நன்கு நிலைநிறுத்தும் தேர்ந்தேடுக்கப்பட்ட பற்றுயிரி இனவகைகளை உழவர்களிடம் பயன்படுத்த கொடுக்கும்படி இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன்மூலம், உழவர்களால் கொண்டைக்கடலைச் செடிகளிடம் ஒரு நீண்டகால பயனுள்ள கூட்டமைப்பை பேண முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.