முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

மரப்பல்லியே! எப்போது? எவ்வாறு? பரிணாமமும் பல்வகைமையும் அடைந்தாய்?

பெங்களூரு
31 ஆக 2020
மரப்பல்லியே! எப்போது? எவ்வாறு? பரிணாமமும்  பல்வகைமையும் அடைந்தாய்?

இந்தியாவில் காணப்படும் ஒரு வகை வீட்டுப்பல்லியான ஹெமிடாக்டிலஸின் (Hemidactylus Geckos) பரிணாம வளர்ச்சியையும் பல்வகைமையடைதல் நிலையையும் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

சுமார் 3.3 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பூமி ஒரு கடுமையான காலநிலை மாற்றத்தை சந்தித்தது. அதனால், பல விலங்குகளும் தாவரங்களும் அழிந்தன. ஈயோசீன்-ஒலிகோசீன் (Eocene-Oligocene) குளிர்காலம் என்றழைக்கப்படும் அக்காலத்தில், வெப்பநிலை குறைவதும் துருவத்தில் பனிக்கட்டிகள் உருவாகுவதுமாக இருந்தது. இதையடுத்து 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, நமது அண்டம், காலநிலை மாற்றத்தில் மற்றொரு சீற்றத்தைப் பதிவு செய்தது. பிந்தைய மியோசீன் (Late Miocene) உலர் காலம் எனப்படும் காலத்தில், முன்னர் உறைந்து போன அலைகள் உயிர்த்ததும் வெப்பநிலை குளிர்வும் நிகழ்ந்தன.

அக்காலக்கட்டங்களின் சூழ்நிலை மாற்றங்கள், அப்போது வாழ்ந்த சில விலங்குகள் மற்றும் தாவரங்களை அழித்தொழித்தாலும், பிற உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையும் பல்வகைமை அடைதல் நிலையையும் ஊக்குவித்தன. அவ்வாறு வளர்ச்சியடைந்த ஒரு வகை ஊர்வன விலங்கு, கெக்கோ (House Gecko) எனப்படும் ஒரு வகை வீட்டு மரப்பல்லி ஆகும். அன்றாடம், இதனை நம் வீட்டின் சுவர்களிலும் தோட்டங்களிலும் நாம் காண முடியும்.

இந்திய அறிவியல் கழகம், பெங்களூருவைச் (IISc, Bengaluru) சேர்ந்த முனைவர். அபர்ணா லாஜ்மி மற்றும் முனைவர். பிரவீன் கராந்த் அவர்களின் ஒரு தொடர் ஆய்வுகளின் மூலம், முற்கால காலநிலை மாற்றத்தில் ஹெமிடாக்டிலஸ் அல்லது இலை-கால்விரல் பல்லிகள், எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று கண்டுபிடித்துள்ளார்கள். அதில் முதல் ஆய்வு - மாலிகுலார் பைலோஜெனிடிக்ஸ் அண்ட் எவல்யூஷன் (Molecular Phylogenetics and Evolution) என்ற ஆய்வு சஞ்சிகையில் வெளியானது. அந்த ஆய்வானது, இந்திய தீபகற்பத்தில் காணப்படும் பல்லிகளின் பரிணாம வளர்ச்சியை காலநிலை மாற்றம், எவ்வாறு பாதித்தது என்று உற்று நோக்கியிருந்தது.

இந்த ஆராய்ச்சியின் மற்றொரு பகுதி - இந்த மரப்பல்லிகள் எவ்வாறு உருவ ரீதியாக பன்மயம் அடைந்தன என்பதைப் பற்றியிருந்தது. அதன் முடிவுகள்,  ஜர்னல் ஆப் எவல்யூஷனரி பயாலஜி (Journal of Evolutionary Biology) எனும் ஆய்விதழில் அண்மையில் வெளியாகியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையாலும் (DST), ரஃபோர்ட் சிறு உதவித்தொகை அறக்கட்டளையாலும் (Rufford Small Grants Foundation) அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தாலும் (SERB), இந்த ஆய்வுகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளன.

“பல்லிகள் - ஒரு சிறந்த மாதிரி உயிரினங்கள் ஆகும். ஏனெனில், அவை சேகரிக்க எளிதானவை, ஏராளமானவை மற்றும் உயிரின வாழ்விடவியல் பற்றி அறிந்துக்கொள்ள ஏற்ற மாதிரி உயிரினங்களாக விளங்குபவை ஆகும்”. மேலும், “பல்லிகளின் பரிணாம வளர்ச்சியில் உள்ள கேள்விகளை முன்னிறுத்துவதற்கு மூலக்கூறு உத்திகளை நான் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். இந்த இரண்டு நோக்கங்களும் இந்த ஆராய்ச்சி நடக்க காரணமாக அமைந்தது” என்று கூறுகிறார் ஊர்வன உயிரினங்களிடத்தில் அதிகம் ஈடுபாடுள்ள  முனைவர் லாஜ்மி.

ஹெமிடாக்டிலஸ் வகைப்பல்லிகள், கெக்கோனிடே குடும்பத்தில் ஹெமிடாக்டிலஸ் பேரினத்தை சேர்ந்தவை ஆகும். அவை, ஒரு மூதாதையரிடமிருந்து, வெவ்வேறு சிற்றினங்களாகப் பல்வகைமை அடைந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு, பல லட்சம் ஆண்டுகளில் நிகழ்ந்த திடீர் வெப்பக்குறைவு அல்லது கடும் வறட்சி போன்ற சூழலியல் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்கு பகுதியில், பிந்தைய மியோசீன் காலக்கட்டத்தில் ஏற்பட்ட வறட்சியின் விளைவால் திறந்த வாழ்விடங்களும் வறண்ட புல்வெளிகளும் உருவானது. அந்த வாழ்விடங்கள், இந்திய ஹெமிடாக்டிலஸ் வகை மரப்பல்லிகளின் தற்போதைய பல்வகைமைக்கு மிகவும் ஏற்புடைவதாக விளங்குகின்றன.

இந்த ஆய்விற்காக, ஹெமிடாக்டிலஸ் பேரினத்தைச் சேர்ந்த 32 சிற்றின மாதிரிகளை சேகரித்து அதன் தாயனையை (DNA) ஆராய்ச்சியாளர்கள் பிரித்தெடுத்தனர். முன்னர் ஆய்வு செய்யப்பட்ட பொது மூதாதையரை உடைய, பிற ஹெமிடாக்டிலஸ் வகைப் பல்லிகள் மற்றும் சிர்டோடாக்டிலஸ் (Cyrtodactylus) அல்லது வளை-கால்விரல்  பல்லிகளிடம் அதனை ஒப்பிட்டனர். இவ்வகைப் பல்லிகள், பெரும்பாலும் வறண்ட வாழ்விடங்களையே விரும்பும். ஆகையால், ஒரு பகுப்பாய்வு முறையை பயன்படுத்தி வறண்ட மற்றும் ஈரமான வாழ்விடங்களிலுள்ள பல்லிகளின் உருவ பரிணாம வளர்ச்சியை ஆய்வாளர்கள் படித்துள்ளனர். இந்த முயற்சி, வறண்ட வாழ்விடத்தில் வாழ்ந்த மூதாதையரினம் எப்போது பரிணாமம் அடைந்தது? என்பதை தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது ஆகும். 

ஹெமிடாக்டிலஸ் வகை மரப்பல்லிகள், சுமார் 3.9-3.2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பல்வகைமை அடைய ஆரம்பித்தது என்று இந்த பகுப்பாய்வு கண்டுபிடித்துள்ளது. அந்த நிகழ்வு, உலர் வாழ்விடம் உருவான ஈயோசீன்-ஒலிகோசீன் குளிர் காலக்கட்டத்தோடு ஒத்துப்போகிறது. அந்த காலக்கட்டம், ஒரு குளிர்ந்த வறண்ட காலநிலையை நோக்கிய ஒரு உலகளாவிய மாற்றத்தை குறிக்கின்றது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இவ்வகை மரப்பல்லிகளின் பன்மயம் அடையும் பண்பு, வறண்ட காலநிலையின் வளர்ச்சியைப் பொறுத்து அதிகரிக்கின்றது என்று இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

இதைப் போல மற்றொரு ஆய்வில், மரபணு பகுப்பாய்வுகளை செயல்படுத்தி சிற்றினங்களுக்கு இடையேயான தோற்றம் மற்றும் குணங்களின் மாறுதல்களை ஆய்வாளர்கள் அறிய முற்பட்டனர். இந்தியாவில், பல்லிகள் இரு பெரும் பிரிவுகளில் காணப்படுகின்றன. அதில் முதலாவது, செங்குத்தானப்  பரப்புகளில் வசிக்கின்ற பற்றுக்கால் இனங்கள் ஆகும். இரண்டாவது, நிலத்தில் வாழ்கின்ற தரைவாழ்வினங்கள் ஆகும். பிந்தைய மியோசீன் காலகட்டத்தில், இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதியில் புல்வெளி தாவரங்கள் அதிகம் காணப்பட்டது. அது, திறந்த வாழ்விடங்களும் புல்வெளிகளும் அமைய வழிவகுத்தது. அந்தப் பகுதியில், தற்போது, பற்றுக்காலின பல்லிகள் இல்லாது தரைவாழ்வினங்களே வசித்துக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில், இந்த பல்லிகளின் பரிணாம வளர்ச்சியும் பல்வகைமையடைதலும் பிந்தைய மியோசீன் காலக்கட்டத்திலோ அல்லது அதன் பின்னரோ நிகழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், பல்வேறு அருங்காட்சியகங்களில் இருந்து 249 பாதுகாக்கப்பட்ட பல்லி மாதிரிகளின் தரவுகளையும் ஆய்வாளர்கள் சேகரித்தனர். அதில், உடல் அளவு, வடிவம், தலை அளவு மற்றும் விரல்களின் அமைப்பு போன்ற உருவ அளவீடுகளை மதிப்பீடு செய்தனர். இதையடுத்து, ஓவ்வொரு பண்பின் அளவீடுகளின் சராசரி மதிப்பை கணக்கிட்டனர். பிறகு, ஆய்வு செய்யப்பட்ட பல்லிகளின் சிற்றினங்களை இருநிலைகளில் வகைப்படுத்தினர். அதில் முதல் நிலை, பல்லிகளின் வாழ்விடங்களை பொருத்திருந்தது. இரண்டாம் நிலை,  தரைவாழ் மற்றும் பற்றுக்கால் இனங்களை அடிப்படையாக கொண்டிருந்தது.

ஒரு முழுமையான பகுப்பாய்வின் மூலம், பாறைகளில் வாழும் ஒரு வகை பற்றுக்கால் பல்லிகளின் உடல் அளவு, தரைவாழ் இனங்களைவிட மாறுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில் குறிப்பாக, பற்றுக்கால் பல்லிகளின் உடல் அளவும் விரல்களின் அளவும்  தரைவாழ் இனங்களைவிட பெரிதாக உள்ளது தெளிவானது. பற்றுக்கால் பல்லிகளின் சிற்றினங்கள், பெரும்பாலும் மூதாதையர் தலை முறையாக விளங்குகின்றன என்று இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது. இதைத்  தொடர்ந்து, தரைவாழ் பல்லிகளின் வழித்தோன்றல்கள், அண்மையில் பன்முறை பரிணாம வளர்ச்சி அடைந்த இனங்களாக திகழ்கின்றன என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. அதில், ஆரம்பக்கட்ட பரிணாம வளர்ச்சியின் காலம், 1.9-1.2 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும் சமீபத்திய வளர்ச்சி கடந்த 60 லட்சம் ஆண்டுகளிலும் நிகழ்ந்தவையாகும்.

இந்த ஆய்வின் முடிவுகள், பல்லிகளின் உருவமைப்பு அதன் வாழ்விட மாறுதலுக்கு ஏற்ற படி எவ்வாறு வேறுப்பட்டுள்ளது என்று நன்கு உணர்த்துகின்றன. அதில் ஒரு உதாரணம், பற்றுக்கால் மரப்பல்லிகள் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்வதற்காகவும் நகர்வதற்காகவும் பெரிய கால்விரல்களைக் கொண்டிருப்பது, பரிணாம வளர்ச்சியின் உந்துதலை நன்கு உணர்த்துகிறது.

இந்த ஆய்வின் மூலம், பற்றுக்கால் பல்லிகளிடம் உண்டான போட்டியை தவிர்க்கவே தரைவாழ் இனங்கள் புதிய வாழ்விடங்களுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டன என்று ஆய்வாளர்கள் ஒரு கோட்பாட்டை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், அக்கோட்பாட்டை உறுதிப்படுத்த கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன. மரப்பல்லிகளின் இப்பல்வகைமை, வறண்ட வாழ்விடங்களான புல்வெளியும் திறந்தவெளியும் உருவான காலத்தோடு ஒத்துப்போகிறது. மேலும், உருவமைப்பில் தென்படும் மாற்றங்களும் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் ஒரே நேரத்தோடு ஒத்துப்போகின்றது.

இது போன்ற ஆய்வில்,  பல்லிகளிடம் முனைவர். லாஜ்மி கொண்டுள்ள  பற்று தொடர்வதோடு-

“இவ்வகைப் பல்லிகளை மையப்படுத்தி ஒரு புதிய ஆராய்ச்சித் திட்டத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும்” என்ற நம்பிக்கையோடு அவர் விடைபெறுகிறார்.  

 

Tamil