முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்ட பாரம்பரிய சித்தவைத்திய மருந்து 'பட்டுக்கருப்பு' - ஆய்வில் தகவல்

பெங்களூரு
28 நவ 2019
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்ட பாரம்பரிய சித்தவைத்திய மருந்து 'பட்டுக்கருப்பு' - ஆய்வில் தகவல்

தற்போது பரவலாக இருக்கும் அலோபதி எனும் நவீன மருத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திருந்து தான் பரவலாகி வந்தது. இதற்கு முன்னர், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளே வழக்கத்தில் இருந்தன.  தனியாக பிரிக்கப்பட்ட  வேதியல் மூலக்கூறுகளைக் கொண்டு நோயின் அறிகுறிகளுக்கேற்ப சிகச்சைகள் செய்வதே அலோபதி மருத்துவ முறை. அலோபதி மருத்துவத்தில் பொதுவாக சொல்லப்படும் குறைபாடுகளில் ஒன்று அதன் பக்கவிளைவுகள். இதனால் இன்று உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றைய வழக்கில் கொண்டு வருவத்திற்கான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். கர்நாடகாவை சேர்ந்த மணிபால் தொழில்நுட்பக் கழகமும், தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வொன்றில் ‘பட்டுக்கருப்பு’ எனும் சித்த மருத்துவ சேர்மத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.

சித்தமருத்துவம் தமிழ்நாட்டில் தோன்றிய மிகப் பழமையான மருத்துவமுறை. ஆயுர்வேதத்தினைப் போன்றே தாவரங்களின் வெவ்வேறு பகுதிகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பட்டுக்கருப்பு என்பது பாதரசத்தின் கலப்புடன் செய்யப்படும் ஒரு சித்த மருந்தாகும். இது அமிலம் மற்றும் காரத் தன்மையுள்ள பொருட்களின் கலவைகளால் தயாரிக்கப்படுவது. பாதரசம் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பினும் அது இயல்பிலேயே நச்சுத்தன்மை கொண்டது. இந்த பட்டுக்கருப்பில் இருக்கும் கந்தகைடு (sulfide) எனும் வேதிமம் பாதரசத்தின் நச்சுத்தன்மையினை மட்டுப்படுத்தி   மருந்தின் வீரியத்தையும் கூட்டுகிறது.

பொதுவாக பட்டுக்கருப்பு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கும், மாதவிலக்கின்மை மற்றும் உளத்தடுமாற்ற சிகிச்சைக்கும்  பயன்படுகிறது. இதுவரை இந்த மருந்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் குறித்த ஆய்வுகள் பெரிதும்  மேற்கொள்ளப்படாமல் இருந்தன. தற்போது முதல் முறையாக ஆய்வாளர்கள் சித்த மருத்துவ சேர்மத்தின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகள், நோயற்ற செல்களின் மீது இதன் செயல்பாடுகள் முதலியவற்றை  கண்டறிந்துள்ளனர்.

ஆய்வாளர்கள் பட்டுக்கருப்பிணை மின்னணு நுண்ணோக்கியில் பரிசோதித்து அதில் இந்த சேர்மம் சுமார் 20-80 நானோ மீட்டர் அளவுள்ள மீநுண் துகள்களாக (nano particle) இருப்பதாகவும், இந்த துகள்கள் ஒன்றிணைந்து பூக்கோசு போன்ற வடிவில் இருப்பதாகவும்  கண்டறிந்துள்ளனர் . இந்த சேர்மத்தின் வேதியல் பண்புகளை ஆராய்ந்த போது, இவைகளில் பிரதானமாக கரிமம் மற்றும்  ஆக்சிசனும், சிறிதளவு பாதரசம், ஆர்சனிக் மற்றும் கந்தகமும் இருப்பது தெரிய வந்துள்ளது . "இந்த துகள்கள் நிலையான கோள வடிவில் மீநுண் துகள்களாக இருக்கின்றன. எதிர்மறை மின்னூட்டமும் அதிகமான மேற்பரப்பளவும் கொண்டிருப்பதால் இதன் உயிரியல் செயல்பாடுகளை  அறிய விழைந்தோம்" என்கின்றனர் இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.

பட்டுக்கருப்பின் வெவ்வேறு அளவிகளை ஆய்வாளர்கள் ஆய்வகத்தில் உள்ள செல்களின் மீது பரிசோதித்தப்பின்   இச்சேர்மம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியினை தடுப்பதாக கண்டறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த மருந்தின் மாதிரிகளை ஜீப்ரா மீன்கள் எனப்படும் ஆய்வுக்கு பயன்படும் மீன்களின் மீது பரிசோதித்துள்ளனர். அதிகச்செறிவுகளில் இந்த மருத்துவ சேர்மத்தினை மீன்களுக்கு கொடுத்த போது மீன்களில் இருதயத் துடிப்பில் பிரச்சினை, ரத்த அணுக்கள் உறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. இந்த ஆய்வின் முடிவில் 100 மைக்ரோ கிராம்/மி.லி செறிவே உகந்த அளவு என்றும் இதுவே மற்ற பாதரச நச்சுகளில் இருந்து இந்த மருந்து வேறுபடும் அளவு என்றும் தெரியவந்துள்ளது.

கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சைகளின் பக்க விளைவால் பாதிக்கப்பட்டுள்ள புற்றுநோயாளிகளுக்கு இந்த ஆய்வு புதிய நம்பிக்கையினை விதைத்துள்ளது. இந்த ஆய்வின் அடுத்த இலக்காக இந்த மருத்துவ சேர்மத்தினை எலிகளின் மீது பரிசோதித்து இந்த ஆய்வு நோக்கத்தினை மனித குலம் நோக்கி செறிவூட்ட  இருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
 

Tamil