முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

2020இல் ரிசர்ச் மேட்டர்சு வெளியிட்ட பிரபலமான தமிழ் கட்டுரைகள்

Read time: 1 min
Bengaluru
31 டிச 2020
2020இல் ரிசர்ச் மேட்டர்சு வெளியிட்ட பிரபலமான தமிழ் கட்டுரைகள்

கொண்டைக்கடலையின் விளைச்சலை மேம்படுத்தும் உள்ளூர் வேர்முடிச்சு நுண்ணுயிரி

கொண்டைக்கடலையின் விளைச்சல் பெருகி வருவதற்கு ‘உழவர்களின்’ கடும் உழைப்பு, ஒரு முக்கிய காரணம் என்று நாம் நன்கு அறிவோம். கண்ணுக்கு தெரியாதா ‘ரைசோபியம்’ (Rhizobium) என அழைக்கப்படும் ‘வேர்-முடிச்சு  நுண்ணுயிரியும்’ கொண்டைக்கடலையின் விளைச்சலுக்கு காரணம் ஆகும். தாவர வளர்ச்சிக்கு உப்பியம் (Nitrogen) ஒரு அத்தியாவசமான ஊட்டச்சத்து ஆகும். இது காற்றில் மிகுதியாக காணப்பட்டாலும், அதனை தாவரங்களால் நேரடியாக  நிலைநிறுத்த முடியாது. பருப்பு வகை தாவரங்களின் வேர்களில் மணி போன்ற முடிச்சுகளாக வாழ்பவை ரைசோபியம் எனப்படும் பற்றுயிரிகள். அப்பற்றுயுரிகளுக்கு, காற்றில் உள்ள உப்பிறப்புவளியை (Gaseous Nitrogen) தாவரங்களினால் உள்ளடக்கி கொள்ளும் வடிவங்களாக மாற்றி அமைக்கும் வினோதமான திறன் உள்ளது. இந்த ஆராய்ச்சி உலகின் பலநாடுகளிலிருந்து பெறப்பட்ட வேர்-முடிச்சு நுண்ணுயிரின் மரபணுக்களைப் பகுப்பாய்வு செய்து வேறு இனவகைகளிடையே இருக்கும் பரிணாமத் தொடர்புகளையும் விளக்குகிறது. இந்த முயற்சி, வேர்-முடிச்சு நுண்ணுயிரி இனவகைகளின் பரிணாமத்தையும், மேலும் இவை உலகம் முழுவதும் எவ்வாறு பரவியிருக்கலாம் என்பதற்கான விடையையும் தேடுகிறது.

 

அழிவு நிலையில் இருக்கும் இந்தியாவின் வெண்-வயிற்று நாரைகள்! எச்சரிக்கின்றது அப்பறவைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு

உலகின் நாரை இனங்கள் அனைத்திலும் இரண்டாம் பெரிய இனமாக விளங்குவது வெண்-வயிற்று நாரைகள்.  ஆர்டியா இன்சிக்னிசு (Ardea insignis) என்னும் அறிவியல் பெயர்க்கொண்ட இது வடகிழக்கு இந்தியா, பூட்டான், வடமேற்கு மியான்மர் மற்றும் சீனாவில் காணப்படும் ஒரு சிறப்புமிக்க பறவையாகும்.  முதல் முறையாக இப்பறவைக ளுக்கான ஒரு  கணக்கெடுப்பினை பெங்களூருவின் இயற்கை வளங்காப்பு அறத்தளத்தைச் (Nature Conservation Foundation (NCF))  சார்ந்த  ஆய்வாளர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.  கிழக்கு இமயமலைகளின் இந்தியப்பகுதிகளில் இந்நாரைகள் அழியும் நிலையில்தான் தற்போது இருந்துவருகின்றன என்பதை இவர்களின் ஆய்வு நமக்கு உணர்த்துகின்றது.

 

இமயமலைகளில் ஏற்படும் பனி உருகல் அரபிக்கடலை கடற்சுடர் பாசிகளால் ஒளிர்விக்கின்றது

கடல்நீரின் மீது ஒளிவண்ணம் தீட்டியது போல,   நீல ஒளியுடன் மிளிரும்  அழகிய கடல் அலைகளை நம் இந்தியக்கடற்கரைகளில் சமீபத்தில் அதிகம் காணமுடிகிறது. இது நாக்டிலுகா (Noctiluca) என்னும் ஈர்கசைவாழி (Dinoflagellates) வகையைச் சேர்ந்த மிதவைப் பாசிகளின் பெருக்கால் ஏற்பட்ட பாசித்திரளின் விளைவாகும்.  சமீபமாக அதிகரித்துவரும் இந்த நிகழ்வானது, புவி வெப்பமயமாதலின் விளைவாக இமயமலைகளில் ஏற்படும் பனி உருகலுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் தலைமையேற்று நடத்திய  ஆய்வு கூறுகின்றது.

 

இந்திய மக்களின் பொருளாதார நிலை உணவுகளின் பன்முகத்தன்மையை பாதிக்கின்றதா? ஆய்வில் தகவல்

உணவே எல்லா உயிர்களுக்கும் முதன்மை ஆதாரம். மனித சமூகத்தின் வளர்ச்சியினைக் உணவினைக்கொண்டே வரையறுக்க முடியும். அப்படிப்பட்ட உணவு, ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க அதன் பன்முகத்தன்மை மிக அவசியம். உணவுப் பன்முகத்தன்மைக்கும் மக்களின் பொருளாதார நிலைக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வுகளை இந்தக் கட்டுரை எடுத்தியம்புகிறது. குழந்தைகளின் உணவுத் தேவைகளை தேர்வு செய்ய இந்தியப் பெற்றோர்களின் கல்வியறிவு போதுமானதாக இல்லை என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உயர் சமூக-பொருளாதார நிலையில் உள்ள மக்கள் பெரிதும் தொகுக்கப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வதாகவும் அதன் விளைவுகள்  குறித்தும் விளக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட ஆய்வு அவதானிப்புகள் தான் இந்தியக் குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பான தேசிய  அளவிலான  முன்னெடுப்புகளுக்கு வழிகோலும்.

 

நிலநடுக்கங்களின் தாக்கத்தினை கண்டறியும் புதிய அறிவியல் யுக்தி - ஆய்வில் தகவல்

நமது பூமியில் சராசரியாக ஒவ்வொரு நாளும் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக தரவுகள் அறிவிக்கின்றன.  ஒரு நிலநடுக்கம் உண்டாக்கும் சேதமானது அதன் மையப்பகுதியிலிருந்து நிலநடுக்கம் உண்டாகும் நிலப்பரப்பின் தூரத்தினைப் பொறுத்தது.  பொதுவாக நிலநடுக்கங்களின் தாக்கத்தினைக் கண்டறிய, நறுக்கு விசையினை அளவீடு செய்யும் விலையுயர்ந்த கருவிகள் தேவை. அப்படிப்பட்ட கருவிகளின்றி எளிதில் நிலநடுக்கத்தின் தன்மையினைக் கண்டறியும் அறிவியல் யுக்தியினைப் பற்றிய ஆய்வு முடிவுகளை இந்தக் கட்டுரை சுட்டுகிறது.