முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

புதுவகையான ‘நாடாப் புழு’ சிற்றினத்தை சென்னையின் கோவளம் கடற்கரையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Chennai
24 செப் 2020
புதுவகையான ‘நாடாப் புழு’ சிற்றினத்தை சென்னையின் கோவளம் கடற்கரையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

சென்னையின் கோவளம் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட டெட்ராஸ்டேமா ப்ரியே நாடாப் புழு (படம்: மோகன்தாஸ் S. விக்னேஷ்)

‘கோவளம் கடற்கரைப்’ பகுதி - சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள மீன் பிடித்தல் தொழிலை அடிப்படையாக கொண்ட நகரமயமாக்கப்பட்ட ஒரு கிராமம் ஆகும். முன்பு ஒரு காலத்தில் துறைமுக நகரமாக விளங்கியதால், இந்தியாவில் காலடி எடுத்து வைத்த சமயத்தில் ஆங்கிலேயர்களாளும் பிரஞ்சுக்காரர்களாளும் கோவளம் கடற்கரை கைப்பற்றப்பட்டது. இந்த துறைமுக கிராமம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.  இத்தகைய கோவளம் கடற்கரை, தற்போது, அலைகளின் நடனத்தை கண்டு ரசிக்க விரும்பும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் இருக்கிறது. இவ்வாறு, பலர் வந்து செல்லும் இந்த கடற்கரையில் பல்லுயிரியம் பன்மயத்தோடு தழைத்தோங்கி இருக்கிறது. இதற்கு சான்றளிக்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதுவகையான ‘நாடாப் புழு’ (ribbon worm) சிற்றினத்தை பாறைகள் நிறைந்த கோவளம் கடற்கரையில் கண்டுபிடித்துள்ளனர்.

அண்மையில் மேற்கொண்ட ஒரு கூட்டு ஆய்வின் மூலம், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SIST), சென்னை, ரஷ்ய அறிவியல் கழகம், ரஷ்யா மற்றும் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், ஸ்மித்சோனியன் நிறுவனம், அமெரிக்கா முதலிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நெமர்டியா (nemertea) தொகுதியைச் சார்ந்த ஒரு புதிய நாடாப் புழுவை கண்டுபிடித்து அதற்கு டெட்ராஸ்டேமா ப்ரியே (Tetrastemma freyae) என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஆய்வு, Zootaxa எனும் “விலங்கு பகுப்பாய்வு” (Animal Taxonomy) ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

நெமர்டியன் புழுக்கள் என்றும் அழைக்கப்படும் நாடாப் புழுக்கள், பாறை விரிசல்களிலும் வண்டல்களிலும், பாசிகள் அல்லது கடலில் உள்ள பிற அசையா தாவரங்கள் மற்றும் விலங்குகள் மேல் பற்றிக் கொண்டு வாழ்பவையாகும். அவை, வளைத்தசை புழுக்கள், சிப்பிகள், கிளிஞ்சல்கள் மற்றும் பிற ஓடுடைய உயிரினங்களை உணவாக எடுத்துக்கொண்டு பெருங்கடலில் ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்து வாழ்கின்றன.

“டெட்ராஸ்டேமா பேரினத்தின் கீழ் உள்ள நெமர்டியன் புழுக்கள், சுமார் 110 சிற்றினங்களுக்கும் மேல் நம் உலகில் இருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் இதன் பல்வகைமை குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடுகிறார் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இந்த ஆய்வின் ஆசிரியர் திரு. விக்னேஷ்.

ஆச்சர்யமளிக்கும் வகையில், இந்த புதுவகையான புழு சிற்றினம் அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் உள்ள ஓகு (Oahu) தீவிலும் இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியிலும் ஒரே சமயத்தில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

“தமிழ்நாட்டின் கடற்கரை முழுவதும் விரிவான களப்பணி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு சிற்றினங்களின் மாதிரிகளை சேகரித்து, அதை நுண்ணோக்கி பரிசோதனையினால் ஆராய கிட்டத்தட்ட இரண்டு வருடம் செலவானது” என்கிறார் இந்த ஆய்வில் பங்காற்றிய ஐ.ஐ.டி. மெட்ராஸின் ஆய்வு மாணவியான  செல்வி. ருச்சி P. ஜெயின்.

டெட்ராஸ்டேமா ப்ரியே எனப்படும் இந்த புதிய சிற்றினத்தைச் சேர்ந்த புழுக்கள், வெளிர்-மஞ்சள் நிறத்தோடு தலையில் கருப்பு நிறமியுடன் வட்டமான வாலைக் கொண்டிருக்கின்றன. அப்புழுக்கள் சாய்சதுர  வடிவத்துடன், சுமார் 2-5 சென்டிமீட்டர் நீளத்தில் இருக்கின்றன. இந்த புதிய சிற்றினத்தை, உட்புற  மற்றும் வெளிப்புற உருவவியல் மற்றும் தாயனை (DNA) பகுப்பாய்வின் அடிப்படையால் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த செல்வி. ப்ரியா கோட்ஸ் (Ms Freya Goetz) என்பவரின் களம் மற்றும் ஆய்வக பணியை கௌரவிக்கும் விதத்தில்  இந்த சிற்றினத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

“டெட்ராஸ்டேமா பேரினம் என்பது ஒரு சிக்கலான சிற்றினக்குழு ஆகும். எங்கள் தரவுகளின்படி, இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய பல நெமர்டியன் சிற்றினங்கள் வெப்பமண்டல கடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன” என்று முனைவர். அலெக்ஸி செர்னிஷேவ் கூறுகிறார். அவர் ரஷ்ய அறிவியல் கழகத்தில் பேராசிரியராகவும் இந்த ஆய்வின் தலைமை ஆசிரியராகவும் விளங்கிறார். “இந்திய கடற்கரைப் பகுதிகளில் நெமர்டியன் புழுக்களின் பல்வகைமையை ஆவணப்படுத்துவதற்கு தீவிரமான களப்பணி மிகவும் அவசியம்” என்கிறார் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். ராசய்யன் P . ராஜேஷ்.

மேலும், தாயனைச் சார்ந்த பாகுபாட்டியலின் வளர்ச்சியைக் கொண்டு பற்பல சிக்கலான நெமர்டியன் புழுக்களின் சிற்றினங்களையும் பின்வரும் காலத்தில் கண்டுப்பிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைக் கொள்கின்றனர்.

“எங்களின் இந்த ஆய்வில், நெமர்டியன் புழுக்களின் இனங்காட்டல் பண்புகளையும் தாயனை குறியீடுகளையும் வருங்கால ஆய்வுகளுக்காக தரப்படுத்தியுள்ளோம்”, என்று சொல்லி முனைவர். சஞ்சீவி பிரகாஷ் விடைப்பெறுகிறார்.
 

Tamil