முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

அருகிவரும் இந்தியப் பறவையினங்களும், அவற்றின் பாதுகாப்பும்

Bengaluru
2 டிச 2020
அருகிவரும் இந்தியப் பறவையினங்களும், அவற்றின்  பாதுகாப்பும்

1300 பறவை இனங்களுடன், இந்தியா பறவைகள் பல்லுயிரியலில் உலகின் தலைசிறந்த பத்து நாடுகளில் ஒன்றாக உள்ளது. நீங்கள் ஏதேனும் ஒரு  இந்தியப்பெரு நகரங்களில் பிறந்து  வளர்ந்திருந்தால், காகங்கள் அல்லது புறாக்கள் தவிர மற்றைய பறவையினங்களை கண்டிருக்கும் வாய்ப்புகள் குறைவே. அண்மையில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இனங்கள் குறித்த பதிமூன்றாவது அறிவியல் மாநாட்டில் வெளியிடப்பட்ட பறவைகளின் நிலை எனும் அறிக்கையில் கடந்த இருபது ஆண்டுகளில்  இந்தியாவின் பறவையினங்கள் வீழ்ச்சி குறித்து தெரியவந்துள்ளது. இந்த அறிவியல் மாநாடு  குஜராத் மாநில தலைநகர்  காந்திநகரில்  நடைபெற்றது. இந்த அறிக்கையில் கொன்றுண்ணிப் பறவைகள், இடம்பெயர் பறவைகள், நீர்வாழ் பறவைகள் மற்றும் அரிதான வாழ்விடங்களைக் கொண்டுள்ள பறவையினங்களின் எண்ணிக்கைகள் பெருமளவு குறைந்துள்ளன என தெரியவந்துள்ளது. மேலும் மயில்கள் மற்றும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியாவிலுள்ள பல்வேறு ஆய்வு மையங்கள் மற்றும் சூழலியல் பாதுகாப்பு நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ள ஆய்வுகளின் மூலமாக இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அசோகா சூழலியல் ஆய்வு மையம், பாம்பே இயற்கை வரலாற்று மையம், தேசிய பல்லுயிரியல் மையம், தேசிய உயிரியல் அறிவியல் மையம், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், சர்வதேச தெற்காசிய சதுப்புநில அமைப்பு, இந்திய வனவிலங்கு நிறுவனம், நேச்சர் இந்தியாவுக்கான உலகளாவிய நிதி முதலிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வினை நடத்தியுள்ளன. பொதுமக்களின் அறிவியல் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்திய பறவைகளின் எண்ணிக்கை குறித்து இந்த ஆய்வு முடிவுகள் கண்டறிந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 15,500 மேற்பட்ட பறவைக் கண்காணிப்பு ஆர்வலர்களால் அளிக்கப்பட்ட தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், ஒரு கோடிக்கும் அதிகமான அவதானிப்புகளில் இருந்து சுமார் 867  வகையான பறவை  இனங்களை ஆய்வு செய்திருப்பது இதுவே  முதன்முறையாகும்.

“பொதுவாக  பறவைகள்  தொடர்பான  பல  கொள்கை  முடிவுகளுக்கு பெரும்  அறிவியல்  ஆதாரங்கள்  இல்லை. இவ்வகை நடைமுறை சிக்கல்களுக்கு  தீர்வு காண இந்த ஆய்வு முடிவுகள் உதவும்” என்கிறார் இந்திய வனஉயிரியல் மைய ஆய்வாளர் முனைவர் தனஞ்சய் மோகன்.

இந்த  ஆய்வறிக்கை  பாதுகாக்கப்பட  வேண்டிய  101 பறவை இனங்களையும்  ஒவ்வொரு  மாநிலம் வாரியாக அல்லது ஒருங்கிணைந்த பிராந்தியங்கள் வாரியாக அடையாளம் காட்டுகின்றது. மேலும் இந்தப் பறவை இனங்களை பாதுகாக்கத் தேவையான  கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் அவசியத்தையும்,  இது தொடர்பான அதிகமான ஆய்வுகளின் தேவைகள் குறித்தும் இந்த ஆய்வு வலியுறுத்துகின்றது.

பறவைகளை பாதுகாக்க விரும்பும் மக்கள் மற்றும்  பறவைகள் பாதுகாப்பு அமைப்புகளின் குரல்களை வலுப்படுத்தும் ரீதியில் எங்கள் தரவுகள்  மொழிபெயர்க்கப்பட்டு அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றதையும் என நாங்கள் நம்புகிறோம்” என்கிறார் இந்த பறவை ஆய்வில் பங்கெடுத்தவரான தேசிய உயிரி அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த முனைவர் மௌசுமி கோஷ்.

வெற்றியாளர்களும் தோல்வியாளர்களும் 

சிறு முதுகெலும்பிகளை இரையாகக்கொள்ளும் வேட்டைப் பறவைகளான வல்லூறுகள், கழுகுகள் மற்றும் பூனைப்பருந்து முதலியவைகளின் எண்ணிக்கைகள் பெருமளவில் சரிந்துள்ளன என்று இந்த அறிக்கையில் தெரியவருகின்றது. கால்நடைகளுக்கு புகட்டப்படும் டைக்லோபினாக் (Diclofenac) எனும் மருந்தின் காரணமாக, 1990 முதல் பல நூறு வல்லூறுகளின் எண்ணிக்கை பெரும்  சரிவை கண்டுள்ளது. வெண்முதுகு-பாறுக்கழுகு (White-rumped vulture), இந்திய பாறுக்கழுகு (Indian vulture) மற்றும் மஞ்சள்முக-பாறுக்கழுகு (Egyptian vulture) முதலிய பறவை இனங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மற்றைய கொன்றுண்ணிப் பறவையினங்களான வெள்ளைக்கண் பருந்து (White-eyed Buzzard) மற்றும் சிற்றேழால் (Common Kestrel) முதலிய பறவை இனங்களும் பெருமளவில் குறைந்துள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில்  மாமிச உண்ணிப்பறவைகளின் எண்ணிக்கை 50 வீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

நீர்வாழ் பறவைகளுக்கும் இதே நிலை தான் நீடிக்கின்றது என நெடுங்கால  தரவுகள் தெரிவிக்கின்றது. இவற்றுள் கரையோரப் பறவைகளான கடற்காகங்கள் (gulls) மற்றும் ஆலா (terns) முதலியவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினூடே மற்றைய நீர்பறவையினங்களில் வாத்து வகைகளும் பெருமளவில் எண்ணிக்கையில் குறைந்துள்ளன. இந்த அறிக்கையில் இவ்வெண்ணிக்கை குறைவிற்கான காரணிகள் அறியப்படாத போதும், அது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்போவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பறவைகள் வனங்களின் சூழலியலில் பெரும் பங்காற்றுவதால் இத்தகைய பறவைகளின் எண்ணிக்கைக் குறையாடு வன உயிரிகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் எற்படுத்துகிறது இந்த ஆய்வறிக்கை. இதோடு மட்டுமல்லாமல், புல்வெளிக்காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் போன்ற வாழ்விடங்களில் வாழும் பறவையினங்களும் அருகி வருகின்றனவாம். இந்திய துணைக்கண்டத்தையே வாழ்விடமாகக் கொண்ட கானமயில் (Great Indian Bustard) எனும் பறவையினம் தற்போது மிகவும் ஆபத்திற்குள்ளான இனங்களுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளன. 

நெடுந்தூரம் புலம்பெயரும் பறவைகள்,  குறிப்பாக கொடிக்கால் வாலாட்டி (Forest Wagtail), பச்சைக்காலி (Common Greenshank) முதலியவைகளின் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. சிறுதூரம் புலம்பெயரும் பறவைகளான பெரிய-அலகு கதிர்குருவிகளின் (Large-billed leaf warbler) எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளன. நம் நாட்டுன் இருப்பிட இனமான (Resident Species) இனமான  குள்ளத்தாராவின் (Cotton Teal) எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், இதே வாழிடத்தில் வாழும் மற்ற வாத்து இனங்களின் எண்ணிக்கையில் சில இடங்களில் குறைந்தும் சில இடங்களில் அதிகரித்தும் உள்ளன. 

“புலம்பெயரும் கடற்கரை பறவைகள் குறித்து சில சுவாரசியமான தகவல்கள் இந்த ஆய்வறிக்கையில்  கிடைக்கின்றன. ஆர்ட்டிக் பகுதிகளில் இருந்து புலம்பெயரும் இப்பறவை இனங்கள் அங்கும் பெரும் சரிவுகளை சந்திக்கின்றன. மனித நடமாட்டமில்லாத அப்பகுதிகளில் இந்தப்பறவையினங்கள் குறித்த தரவுகளை சேகரிப்பது மிகவும் சவாலானதாகும். இந்தப் பறவைகள் இங்கு புலம்பெயரும் பொழுது அவைகளின் இனப்பெருக்கம் மற்றும் இவற்றின் உயிர்த்தொகைகள்  குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும்” என்கிறார் இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த முனைவர் அஸ்வின் விஸ்வநாதன்.

இதில் நாம் பெரிதும் மகிழக்கூடிய செய்தி என்னவென்றால், 1972 வருடம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட இந்திய மயில்களின் எண்ணிக்கை பெரிதும் உயர்ந்திருப்பது தான். கேரளாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி   மற்றும் மயில்களின் வாழிட விரிவாக்கங்களும் மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது. மயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நாட்டின் சில பகுதிகளில் மயில்கள் பயிர் சேதங்களை ஏற்படுத்துகின்றன.

அடுத்ததாக, கைபேசி  கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு காரணமாக மறைந்துவிட்டதாக கருதப்பட்ட சிட்டுக்குருவிள் நமக்கு ஒரு நற்செய்தியினை அறிவிக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக, சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கைகள் உயர்த்திருக்கின்றன என  ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும் பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் அவைகளின் எண்ணிக்கைகள் குறைந்தே உள்ளது என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

உதவிக்காக அழும் சிற்றுயிர்கள் 

இந்த அறிக்கை பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள இந்தியாவின் உள்ளூர் பறவைகளின் அவலநிலையை எடுத்துக்காட்டுகிறது.  ஆய்வு செய்யப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் 12 இடங்களில், 2000 ஆம் ஆண்டிலிருந்து 75% பறவைகளின் எண்ணிக்கை  குறைந்து வருவதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. தேன்சிட்டுகள் (Crimson-backed Sunbird) மற்றும் மஞ்சள் புருவச் சின்னான் (Yellow-browed Bulbul) முதலிய பறவையினங்களின் எண்ணிக்கை இன்றளவில் நிலையாக இருப்பினும், எதிர்காலத்தில் சரியக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சோலைக்காடுகளின் பரப்புகள் தேயிலைத் தோட்டமாக மாற்றப்படுவதால், நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit) மற்றும் நீலகிரி பூங்குருவி (Nilgiri Thrush) முதலிய பறவையினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. கானமயில் (Great Bustard) மற்றும் மாடுபிடிங்கி பாறுக்கழுகு (Gyps vultures) முதலிய பறவைகளின் எண்ணிக்கைகள், பல புறக்கணிக்கப்பட்ட உயிரினங்களின் இழப்பில் பாதுகாப்பின் வெளிச்சம்  பரப்புகின்றது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் பசுஞ்சில்லை பறவையினம் (Green Munia), செல்லப்பிராணி வர்த்தகத்திற்காக அதிகளவில் சிக்கி வருவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணமயில் மற்றும் ராசாளி போன்ற பறவைகள் மட்டுமே உயிரியல் பாதுகாப்பில் பெரும்பாலும் முதன்மை பெறுகின்றன. இதனால் பல்வேறு சிறு பறவையினங்கள் சூழலியல் பாதுகாப்பில் தங்கள் முக்கியத்துவத்தினை இழக்கின்றன. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் பச்சை முனியா எனப்படும் தினைக்குருவிகள் வளர்ப்பு பிராணிகள் வர்த்தகத்திற்காக அதிக அளவில் பிடிக்கப்படுகின்றன. சதுப்பு கதிர்குருவிகள் (Swamp Grass Babbler) பிரம்மபுத்ரா நதியின் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு அறிய இனமாகும். வடகிழக்கு இந்தியாவில் இதுபோன்ற பல சிறிய பறவைகள் உள்ளன, அவற்றின் வாழிடங்களை புரிந்துகொள்ள இன்னும் அதிக கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேவை என்று அறிக்கை கூறுகிறது.

குடிமக்கள் அறிவியல்: பாதுகாப்பிற்கான வினையூக்கி

இந்த அறிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு பறவை தன்னார்வளர்களிடமிருந்து வந்துள்ளது. பறவை கண்காணிப்பில் நாட்டம் கொண்ட பொதுமக்கள் நாடு முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் கண்ட பறவை இனங்களின்  தரவுகளே இந்த ஆய்விற்கு பெரிதும் துணைபுரிந்துள்ளது.

“பறவைக் கண்காணிப்பாளர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு முழுவதும் இதுபோன்ற தகவல்களைச் சேகரிப்பது சாத்தியமில்லை” என்கிறார் பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தைச் (BNHS)சேர்ந்த டாக்டர் கிரிஷ் ஜாதர்.

இந்த பறவைக் கண்காணிப்பாளர்கள் பல்வேறு உத்திகள் மூலமாக பறவைகள் சார்ந்த தரவுகளை சேகரிக்கின்றனர். இன்றைய இணையம் மற்றும் செல்லிடைப்பேசி போன்ற சாதனங்களால் இந்த செயல்முறையை முன்பை விட எளிதாக்கியுள்ளது. இதுபோன்ற பறவைகள் கண்காணிப்பு ஆய்வுகளில், பொதுமக்கள் பங்கேற்பதற்காக உருவாக்கப்பட்டதே ஈ-பேர்ட் (eBird) வலைத்தளம் ஆகும். இதன் மூலமாக பறவைகள் கண்காணிப்பில் பெரிதும் பொதுமக்கள் ஈடுபட முடியும். இணையம் மூலம் செயல்படும் இந்தத் தளத்தினை இந்திய பறவை எண்ணிக்கை (பேர்ட் கவுண்ட் இந்தியா (பி.சி.ஐ)) எனும் அமைப்பு நிர்வகித்து வருகின்றது. இதன் மூலம் பறவையியலாளர்கள்  தங்கள் தரவுகளை இங்கு பதிந்து கொள்ளமுடியும். பி.சி.ஐ பல்வேறு தேசிய அளவிலான பறவைகள் கண்காணிப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றது. இந்த நிகழ்வுகளின் மூலமாக நம் வீடு மற்றும் அலுவலக சரகங்களில்  நாம் காணும் பறவையினங்களை ஆவணப்படுத்த முடியும். இந்த நாடுதளுவிய   திட்டங்களின் வாயிலாக  சேகரிக்கப்பட்ட  தகவல்களைக் கொண்டு, பெருநகரங்களில் இருந்து கடைக்கோடி வரையிலும் உள்ள இந்தியப் பறவைகளின் வாழிடங்கள், எண்ணிக்கைகள் மற்றும் பருவநிலை  மாற்றத்தின் பங்கு  முதலியவற்றினை நாம்  புரிந்துகொள்ளவும்  ஆவணப்படுத்தவும்  முடியும். இந்தத் தரவுகளைக்  கொண்டே இந்தியப் பறவைகளின் தற்போதைய நிலை குறித்த இந்த  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “உலகளவில் பறவையினங்களின் எண்ணிக்கை பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இந்நிலையில் நம்  பறவையினங்களின் இன்றைய நிலை குறித்து அறிந்தால்  மட்டுமே நம்மால் அவற்றைப் பாதுகாக்க முடியும். பல பறவை இனங்கள் வசிப்பிடம் மற்றும் எண்ணிக்கை குறித்த பல தகவல்கள் முன்னர் நம்மிடம் குறைவாகவே இருந்தன. இந்த இணைய தொழில்நுட்பம் மூலம், நாட்டில் பல்வேறு பறவையியலாளர்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான பறவையினங்கள் குறித்த தரவுகள் நம்மிடம் உள்ளன. இந்த தரவுகளைக் கொண்டு பல அவதானிப்புகளை நாம் மேற்கொள்ள முடியும்” என்கிறார் முனைவர் விசுவநாதன். 

ஆசிய நீர்ப்பறவை கணக்கெடுப்புகள் போன்ற முன்னெடுப்புகள் மூலமாக கடலோர மற்றும் உள்நாட்டு சதுப்புநிலப் பகுதிகளில் இருந்து 1400க்கும் மேற்பட்ட நீர்ப்பறவை  இனங்கள் கண்காணிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பி.என்.எச்.எஸ்ஸின் பறவை கண்காணிப்பு திட்டத்தின் வாயிலாக, பொதுமக்கள் தங்கள் வீட்டினருகில் அல்லது தாங்கள் உலவும் பகுதிகளில்  உள்ள பறவையினங்களை கண்காணிக்க ஊக்குவிக்கும் ஒரு மிகப்பெரும்  முயற்சியாகும். இதனால் இன்று  பறவை கண்காணிப்பு என்பது ஒரு பொதுமக்கள் அறிவியலாகிவிட்டது. மக்கள் தங்கள் மாநிலத்தின் பறவையினங்களை நன்கு அறிந்துகொள்ளவதற்காக கேரள மாநிலம் தனது சொந்த பறவைகள் கோப்பு ஏட்டினை உருவாக்கிக்கியுள்ளது. இதன்மூலமாக மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பறவைகள் குறித்து ஆவணப்படுத்துவதில்  முன்னோடி மாநிலமாக கேரளா உள்ளது. 

மேலும், இந்த அறிக்கை உயிரினங்களின் வகைகள் மற்றும் மிகுதிகளைக் கண்காணிக்க உதவக்கூடிய ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் குறித்து  வலியுறுத்துகின்றது. அருகி வரும் உயிரினங்களின் வீழ்ச்சிக்கான காரணங்களை அறிந்துகொள்ளவதும், அவற்றினை தணிக்க உதவும் உத்திகள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்த ஆய்வுகள் பெரிதும் மேற்கொள்ள வேண்டியவற்றை எடுத்துரைக்கின்றது. தவிர, கண்காணிப்பு திட்டங்களை ஆழப்படுத்தவும் பலப்படுத்தவும் ஆய்வாளர்கள், பறவைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் குடிமக்கள், விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிக்கை கோருகிறது. குறைவாக அறியப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட பறவை  இனங்களை பாதுகாக்கும் ஆய்வுகள் பெரிதும் விரிவுபடுத்தப்பட வேண்டும். பறவை பாதுகாப்பிணை மேம்படுத்துவதற்காக பறவைகள் கண்காணிக்கும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கு குறித்து இந்த அறிக்கை எடுத்துரைக்கின்றது. 

அழிவின் விளிம்பில் இருக்கும் பறவையினங்கள் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கும் திட்டங்கள், அவற்றிற்கான நிதியுதவி குறித்த கொள்கை முடிவுகளுக்கும் இந்த அறிக்கையினை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று முடித்தார் முனைவர் விசுவநாதன். தற்சமயம் கவனத்தைத் தேவைப்படும் இனங்கள், பறவை வாழ்விடங்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி நிதியுதவிகளுக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் இந்த அறிக்கையைப் பயன்படுத்தலாம்

நீங்கள் ஒரு பறவை கண்காணிப்பாளராக வேண்டுமா? நீங்கள் தொடங்க சில குறிப்புகள் இங்கே

Tamil