கடந்த 2019 பிப்ரவரி மாதம், மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் மாவட்டத்திலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த எட்டு நபர்களை ஓநாய் ஒன்று தாக்கியதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதைப் போல், பக்கத்து கிராமத்தில் குளிர்காய்ந்துக் கொண்டிருந்த மூன்று நபர்களை ஒரு ஓநாய் தாக்கியதையும், அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதையும் உள்ளூர் நாளிதழ் ஒன்று ஆவணப்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் இதுபோன்ற ஓநாய் தாக்குதல் சம்பவங்கள், வயல்களில் வேலை செய்யும் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியன. இறுதியில் ஒரு நாள், செம்மறியாடு ஒன்றை வேட்டையாட முயன்ற ஒரு ஓநாயை அக்கிராம மக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதன்பிறகு, எப்பொழுது ஆடுமாடுகள் காணாமல் போனாலும், அக்கிராம மக்கள் ஓநாய்களை அடித்தோ விஷம் வைத்தோ கொன்று விடுகின்றனர். இது போன்ற சம்பவங்களின் விளைவாக, மனிதர்கள் ஓநாய்களால் பாதிப்படைவதைக் காட்டிலும் ஓநாய்களே மனிதர்களால் அதிகளவு தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் வருகின்றன என தரவுகள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கால இந்தியாவில், ‘ஊறுவிளைவிலங்குகள்’ (Vermin) என்று ஓநாய்கள் அறிவிக்கப்பட்டதற்குப் பின், சுமார் இரண்டு லட்சம் ஓநாய்கள் கொலை செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மனித-ஓநாய் மோதல்கள், இந்தியாவில் மட்டும் அறியப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்காண ஓநாய்கள் மனிதர்களால் உலகின் பல பகுதிகளில் கொல்லப்பட்டுத்தான் வருகின்றன. இந்திய விலங்கியல் மதிப்பீட்டுத்துறையைச் (Zoological Survey of India - ZSI) சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் மூலம், அதிக அளவில் நடைபெறும் இதுபோன்ற மனித-ஓநாய் மோதல்களிற்கான காரணங்களை புரிந்துக்கொள்ள முயன்றுள்ளனர்.
அதன் முதற்கட்டமாக, கிழக்கு இந்தியாவில் குறிப்பாக கீழ் கங்கைச் சமவெளி மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதிகளில், இந்திய சாம்பல் நிற ஓநாய்களின் வாழ்விடங்களை வரைப்படமிட்டுள்ளனர். அதில், இந்திய சாம்பல் நிற ஓநாய்கள் என்றழைக்கப்படும் இந்திய ஓநாய்கள், தீபகற்ப இந்தியா முழுவதிலும், குறுநிலங்களில் சூழலியல்படி குறைந்த அடர்த்தியிலே காணப்படுகின்றன. இதன் விளைவாக, இந்திய ஓநாய்களை ‘பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள்’ என்று ‘வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972)’ வகைப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் ஆராய்ச்சியாளர்கள், இந்திய ஓநாய்களின் கிழக்கு வரம்பில் பெரும்பகுதியை உள்ளடக்கிய பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் முதலிய மாநிலங்களும் அடங்கும். ஏறக்குறைய 4.2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக் கொண்ட அப்பகுதிகளில், சுமார் 18,000 சதுர கிலோமீட்டர் மட்டுமே ஓநாய்களுக்கு மிகவும் பொருத்தமான வாழ்விடமாக உள்ளது என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த 18,000 சதுர கிலோமீட்டரிலும் வெறும் 1,332 சதுர கிலோமீட்டர் மட்டுமே ‘பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்’ அடங்குகிறது. இதனால், ‘இந்திய ஓநாய்களின் நல்வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விட அதன் வெளிப்பகுதியிலே உள்ளன’ என்று நன்கு உணரமுடிகிறது. இந்த நிலை, சமீபத்தில் அதிகரித்துவரும் மனித-ஓநாய் மோதல்களை நன்கு விளக்கக்கூடும்.
“கீழ் கங்கைச் சமவெளி மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமியின் எல்லைப்பகுதிகள், இந்நிலப்பரப்பில் எஞ்சியுள்ள ஓநாய் கூட்டங்களுக்கு ஒரு வாழ்விடத்தை அளித்து ஆதரிக்கிறது என்று நாங்கள் முன்னிலைப் படுத்தியுள்ளோம். மேலும், ஓநாய்கள் நடமாடும் வழித்தடங்களாக பயன்படுத்தக்கூடிய உயிரியற் தாழ்வாரங்களையும் நாங்கள் வரைப்படமிட்டுள்ளோம்” என்கிறார் இந்திய விலங்கியல் மதிப்பீட்டுத்துறையைச் சேர்ந்த முனைவர் லலித்குமார் சர்மா.
இவ்வாய்வில், கீழ் கங்கைச் சமவெளி மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமியை இணைக்கும் இரு முக்கிய ஓநாய்கள் பயன்படுத்தக்கூடிய வழித்தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் முதல் வழித்தடம், பிம்பந்த் மற்றும் கோதர்ம மலைத்தொடர் வழியில் சோட்டா நாக்பூர் பீடபூமியின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. மற்றொன்று, கிழக்குப்பகுதியில் பாங்குறா மற்றும் மேற்கு மிதுனப்பூர் மாவட்டங்கள் வழியாக இடம் பெற்றுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், ஒடிசாவின் சட்கோசியா புலிகள் காப்பகம் மற்றும் சிம்லிபால் தேசியப்பூங்கா, ஜார்கண்டிலுள்ள டால்மா மற்றும் கோதர்ம வனவிலங்கு சரணாலயம், பீகாரிலுள்ள பிம்பந்த் மற்றும் நாகி அணை வனவிலங்கு சரணாலயம் முதலிய பகுதிகள் ஓநாய்களுக்கான பொருத்தமான வாழ்விடங்களை கொண்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஓநாய்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தரவுகள், 2015-2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள், ZSI இன் முந்தைய பதிவுகள், உலக பல்லுயிர் தகவல் வசதி (Global Biodiversity Information Facility) மற்றும் வனத்துறை ஊழியரிடம் மேற்கொண்ட நேர்காணல் முதலியவற்றின் மூலமாக சேகரிக்கப்பட்டன. மேலும், ஆராய்ச்சியாளர்கள் கணினி-சார்ந்த வழிமுறையைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் காரணிகளான வெப்பம், மழைவளம் மற்றும் வனப்பரப்பு முதலியவற்றின் தரவுகள் மூலமாக ஓநாய்களின் புவிப்படர்வினை கணித்துள்ளனர்.
இந்த ஆய்வு கணித்துள்ள ஓநாய்களின் படர்வு எல்லை மற்றும் நடமாடும் வழித்தடங்களாக விளங்க சாத்தியமுள்ள தரவுகள், ஓநாய்களை பாதுகாப்பதற்காகவும் மனிதர்களிடம் உண்டான மோதல்களை தடுப்பதற்காகவும் ஒரு மேலாண்மை திட்டத்தை உருவாக்க வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“இதற்கு முன்பே, இந்திய வனப்பாதுகாப்பு மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை பின்பற்றியுள்ளன. ஆனால், அவை அனைத்தும், அதிகம் கவனத்தை ஈர்க்கக்கூடிய புலி, சிறுத்தை மற்றும் யானை முதலிய பாலுட்டிகளை மைய்யப்படுத்தியே இருந்துள்ளன. ஆகையால், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விட அதன்வெளிப் பகுதியில் வசிக்கும் ஓநாய்களுக்கு மாற்று மேலாண்மை உத்திகளே தேவைப்படுகின்றன” என்று முனைவர். சர்மா கருதுகிறார்.
இப்பகுதி முழுவதிலுமுள்ள ஓநாய்களுக்கான ஒரு ஆற்றல் வாய்ந்த மேலாண்மை உத்தியின் அம்சங்களை, ஆய்வாளர்கள் இவ்வாய்வின் மூலம் விவரிக்கின்றனர். “இப்பரந்து விரிந்த நிலப்பரப்பில் ஓநாய்களுக்கான பாதுகாப்பு உத்திகள், ஒரு சில குறுநிலத்திற்கானதாக மட்டும் அடங்கிவிடக்கூடாது” என்கிறார் இந்திய விலங்கியல் மதிப்பீட்டுத்துறையின் இயக்குனரான முனைவர். கைலாஷ் சந்திரா.
“அதற்கு மாறாக வாழ்விடங்களின் இயற்கையான கட்டமைப்பை பேணுவதிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே, உயிரியற் தாழ்வாரங்களின் சீரான செயல்பாட்டையும் குறுநில வாழ்விடங்களின் தொடர்பையும் மேம்படுத்தும். இதுபோன்ற முயற்சிகள், இறுதியில் மனித-ஓநாய் மோதல்களை குறைப்பதற்கு வழிவகுக்கும்” என்று சொல்லி விடைப்பெறுகிறார் முனைவர் சந்திரா.