முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

நிலநடுக்கங்களின் தாக்கத்தினை கண்டறியும் புதிய அறிவியல் யுக்தி - ஆய்வில் தகவல்

பெங்களூரு
30 ஐன 2020
நிலநடுக்கங்களின் தாக்கத்தினை கண்டறியும் புதிய அறிவியல் யுக்தி - ஆய்வில் தகவல்

நமது பூமியில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து நிலநடுக்கங்கள்,  5.0 அல்லது அதற்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் நிகழ்கின்றன. நிலநடுக்கங்கள் அவற்றின் மூலமாக மட்டுமல்லாமல் சுனாமி போன்ற நிலநடுக்கத்திற்க்கு தொடர்புடைய சில இயற்கை பேரிடர்களால் பேரழிவினை உண்டாக்குகின்றன. பொதுவாக நிலநடுக்கத்தால் உண்டாகும் சேதம் என்பது அதன் தீவிரம் மற்றும் அதன் மையப்பகுதியிலிருந்து நிலநடுக்கம் உண்டாகும் நிலப்பரப்பின் தூரத்தினைப் பொறுத்தது. இருப்பினும் நிலநடுக்கம் உண்டாகும் நிலத்தின் மண்ணின் தன்மையும் அதன் சேதாரத்திற்கு ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.

பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம், சவுதி அரேபியா கிங் சவுத் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை பாபா அணு ஆய்வு மையமும் ஒன்றிணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் நிலநடுக்கங்களால் சேதமடையக்கூடிய மண்ணைக் கொண்ட கட்டிடக் தளங்களை சிறப்பாக அடையாளம் காணும் முறையை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். இந்த ஆய்வு முடிவுகள் பிளாஸ் ஒன் (Plos One) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளிவந்துள்ளன.

மண்ணென்பது பூமி கோளத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைத் துகள்களாகும். பூமியின்  பல அடுக்குகளில் மண் என்பது மேல் அடுக்காகும். இந்த அடுக்குகள் இறுதியாக பாறைப்படுகையில் முடிவடைகின்றது. நிலநடுக்கத்தின் போது ஏற்படும் அதிர்வானது இந்த பாறைப்படுகையினை தாக்கி அதன் பின்னர் பூமியின் மற்றைய மேல் அடுக்குகளை நோக்கி பிரதிபலிக்கின்றது.

பாறைப்படுகைக்கும் பூமியின் மேற்பரப்பிற்கும் இடைப்பட்டமைந்த மண் அடுக்குகளானது மாறுபட்ட நெகிழ்வுத் தன்மை கொண்ட சுருள்வில் போல இயங்கக்கூடியது. கடினமான பாறைகளைக் கொண்ட மண் அடுக்குகள் அதிக விரைப்புள்ள ஒரு சுருள்வில் போலவும், மென்மையான மண் அடுக்குகள் மிக நெகிழ்வுள்ள சுருள்வில் போலவும் செயல்படுகின்றன. இந்த மென்மையான மண் அடுக்குகள் பலவீனமானவை, இவைகள் நிலநடுக்கத்தின் பொழுது அதிகமான இடப்பெயர்வுக்கு வழிவகுக்கக்கூடும். இதனால் கட்டிடங்கள் கட்டப்படும் போது மண்ணின் தன்மையினை கணிக்க வேண்டும் இல்லையெனில் நிலநடுக்க சமயங்களில் அது மண்ணினை அதிர்விற்குள்ளாகி பெரும் சேதமடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பூமியில் ஒரு இடத்தின் திடநிலையானது அதன் மேற்பரப்பிலிருந்து பாறைப்படுகை வரையிலுள்ள நிகர திடநிலையே. "மண்ணின் இந்த நிகர திடநிலையானது ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடக்கூடியது. அருகருகில் இருக்கக்கூடிய இடங்களில் கூட இது ஒரே நிலையில் இருப்பதில்லை" என்கின்றனர் இந்த  ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள். ஒவ்வொரு இடமும் அதன் திடத்தினைப் பொறுத்து ஆறு வகைளில் வகைப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மண் அடுக்குகளின் உறுதித்தன்மையானது அதனினூடே பாயும் நறுக்கு விசையினைப் பொறுத்தது. ஒரு தெளிந்த நீர் நிலையின் நடுவில் கல்லெறியும் பொழுது அதில் எழும் சிற்றலைகள் எப்படி வெளிப்புறமாக நகர்கிறதோ, அதனை ஒத்ததாகவே இந்த நறுக்கு விசை நகருகிறது. திடமான மண்ணிலேயே இந்த நறுக்குவிசை வேகமாக நகர்கிறது.

நறுக்கு விசையின் வேகத்தினை அளவிடுவதற்கு விலையுயர்ந்த உபகரணங்கள் தேவையாக உள்ளன.  இதற்கு குறைந்தது ஒரு துளையாவது இட  வேண்டியுள்ளது. மாற்றாக, கட்டிடத்தின் தரத்தினை நிலையான ஊடுருவல் எதிர்ப்பு (Standard Penetration Resistance) எனும் அளவியைப் பயன்படுத்தலாம். நிலையான ஊடுருவல் எதிர்ப்பு என்பது ஒரு உலோகக் குழாயை 63.5 கிலோ எடையுள்ள சுத்தியலால் 760 மில்லி மீட்டர் தூரத்திலிருந்து அடித்தால், அதை மண்ணில் ஒரு அடி புதைப்பதற்கு எடுக்கும் அடிகளின் எண்ணிக்கையினைக் கணக்கில் கொள்வதாகும். இந்த அளவி முறை மிகவும் விலை குறைவானதாகும். இதன் அளவினைப் பொறுத்தே மண்ணின் கடினம் கணிக்கப்படுகிறது. இவ்வகை எதிர்ப்பு அதிகமுள்ள மண் தான் அதிகமான  அசைவுக்கும் ஈடு கொடுக்க முடியும்.

மண்ணின் திடநிலையினை கண்டறிய பூமியின் மேற்பரப்பிலிருந்து 30 மீட்டர் தூர அளவில் அதன் நறுக்கு விசையினையும், நிலையான ஊடுருவல் எதிர்ப்பு அளவினையும் கணக்கிட்டு அறிய முடியும். இந்த மேற்பரப்பின் திட அளவே அந்தப் பகுதியின் கீழுள்ள மண்ணின் திடநிலையாகும். "ஆனால் மண்ணின் மேற்பரப்பிலேயே அதிகமாக பாறைப்படுகைகள் இருந்தால், இந்த செயல்முறை மண்ணின் திடத்தினை மிகைப்படுத்தி மதிப்பிடுகிறது" என்கின்றனர்  ஆய்வாளர்கள். இதற்குமாறாக, பாறைப்படுகைகள் 30 மீட்டர்களிற்கு மேல் ஆழமாக இருந்தால் வேகம் மற்றும் எதிர்ப்பு அளவீடுகளை மேற்பரப்பு வரையே பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

தென்னிந்தியாவை சேர்ந்த நகரங்களான பெங்களூரு, கோயம்பத்தூர், சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 63 தளங்களில் பாறைப்படுகைகள் 30 மீட்டருக்கும் மேல் ஆழமற்ற பகுதிகளில் நறுக்கு விசை வேகத்தினை ஆய்வாளர்கள் அளவிட்டனர். இந்த பகுதிகளின் சராசரி நறுக்குவிசை வேகம் பாறைப்படுகை வரை ஏறத்தாழ ஒன்றாக இருப்பதாக அறிந்துள்ளனர். ஆய்வாளர்கள் இதே ஆய்வுக்கருத்தியலை ஜப்பானில் உள்ள கிபான்-கியோஷின் எனும் நிலா அதிர்வு வலையமைப்பில் உள்ள 12 தளங்களின் தரவுகளுக்கு பயன்படுத்தினர்.

இந்த வலையமைப்பில் உள்ள தரவுகள் இலவசமாக தரவிறக்கம் செய்யக்கூடியவை. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தளங்களில் பாறைப்படுகைகள் 30 அடி ஆழத்திற்கும் குறைவானது. இந்த தளத்தில் தரை மற்றும் பாறைப்படுகைகளின் அளவில் உள்ள நில அதிர்வுகள் பற்றிய அளவீடுகள் உள்ளன. இந்த அளவீடுகள், நிலநடுக்கத்தின் போது, நிலத்தில் துளைக்குழியில் உணர்கருவிகளைப் பொருத்திஅளக்கப்படுபவை. தரை தளம் மற்றும் பாறைப்படுகைகளின் நில அதிர்வுகளின் விகிதத்தினைக் கொண்டு நிலநடுக்கத்தின் சேதாரத்தினை  முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இந்தக் கண்டுபிடிப்பு, நாங்கள் ஆய்வு செய்த சிறு நிலப் பகுதிகளுக்கு மிகப் பொருந்தி வருகின்றது. இந்த ஆரம்பகட்ட கண்டுபிடிப்பு பெரு நிலப் பகுதிகளிற்கும் பொருந்துமா என இனிவரும் ஆய்விகளில் தெரியவரும்" என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த அளவீடுகளில் இருந்து நிலநடுக்கத்தின் சேதாரங்களை நம்மால் வண்ணமே உணர முடியும். அதற்கேற்றவாறு கட்டிட அமைப்புகளையும் நம்மால் உருவாக்கி பெரும் பொருள் மற்றும் உயிர் சேதங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

 

Tamil