முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

பல்லிகளின் வண்ணமிகு வால்களும் வெண்கருப்பு வரிகளும்!

Read time: 1 min
திருவனந்தபுரம்
12 ஜூன் 2019
புகைப்பட கடன் : விக்னேஷ் காமாத்

சிலவகை பல்லிகளில் காணப்படும் வரிகளும் வண்ணமிகு வால்களும், அவற்றை தங்கள் கொன்றுண்ணிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுவதாக கண்டறிந்துள்ளது ஆய்வு!

வரிக்குதிரைகளின் வெண்கருப்பு வரிகள் அல்லது பட்டைக்கோடுகள் நமக்கு கவர்ச்சிகரமாக விளங்கினாலும், அவை தங்களின் கொன்றுண்ணிகளை குழப்பும் நோக்கத்திற்காகவே அவ்வாறு பரிணாமம் அடைந்துள்ளன என்பதை நாம் அறிவோமா? கொன்றுண்ணி விலங்குகள்  நகர்விலிருக்கும் தங்கள் இரை உயிரிகளின் வேகம் மற்றும் நகர்வு திசையினை கணிப்பதை, அவற்றின் மேலுள்ள வரிகள் கடினமாக்குகின்றன. இரை உயிரிகள், நகர்விலிருக்கும் பொழுது தங்கள் கொன்றுண்ணிகளை வரிகளின் மூலம்  இவ்வாறு குழப்பும் இந்த “நகர்ச்சி பகட்டு” யுக்தியானது  “மோஷன் டாசில்” (motion dazzle) என அழைக்கப்படுகிறது.  முதலாம் உலகப்போரின் போது கடற்படை கப்பல்களின் மீது கருப்பு வெள்ளை சாயம்பூசி வரிகள் தீட்டப்பட்டன. இது  அக்கப்பல்கள் இந்த “நகர்ச்சி பகட்டு” யுக்தி மூலம், எதிரி நீர்மூழ்கி கப்பல்களின் ஏவுகனைகளிடமிருந்து  தப்பித்துக் கொள்ளவேயாகும். சமீபத்தில் ஐசர் - திருவனந்தபுரம் எனப்படும் திருவனந்தபுரத்தின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும்  (Indian Institute of Science Education and Research Thiruvananthapuram (IISER-TVM))  பின்லாந்தின் துருக்கு பல்கலைக்கழகமும் இணைந்து பல்லிகளில் இந்த “நகர்ச்சி பகட்டு” எனும் நகர்வுப்பகட்டு யுக்தியின்   விளைவை ஆராய்ந்துள்ளனர். ஜர்னல் ஆஃப் எவலூசினரி பையாலஜி (Journal of Evolutionary Biology) எனும் ஆய்விதழில் ஆய்வறிக்கையாக வெளியாகியுள்ள இவ்வாய்வானது, மெய் விலங்குகளின் தரவுகளைப் பயன்படுத்தி “நகர்ச்சி பகட்டு” யுக்தியின் பரிணாம முக்கியத்துவத்தை உணர முயலும் முதல் ஆய்வுகளில் ஒன்றாகும்.   

உலகில் சில வகை பல்லி இனங்கள் மட்டுமே வரிகளுடன் காணப்படுகின்றன. உதாரணமாக இந்தியாவில் காணப்படும் அரணை இனமான இயூற்றோபிஸ் பிப்ரொனீ (Eutropis bibronii) முதுகில் நீள்வாக்கு வரிகளுடன் காணப்படுகின்றன. மேலும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் மட்டும் காணப்படும் அரணை இனமான லைகோசோமா பங்க்டாடா (Lygosoma punctata) முதுகில் நீள்வாக்கு வரிகளுடனும், ஒரு பிரகாசமான வண்ணமிகு வாலுடனும் காணப்படுகின்றன.  பல்லிகளின் உடலிலுள்ள வரிகளும் வண்ணமிகு வால்களும் கொன்றுண்ணிகளின் தாக்குதல்களை தங்கள் உடலில் இருந்து வாலுக்கு திசைத்திருப்பி அக்கொன்றுண்ணிகளிடமிருந்து தப்பிக்க உதவுகின்றன என்பதை முந்தைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. 

“சில பல்லி வகைகளில் வால்கள் துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் வளரும் தன்மை படைத்தவை. இந்த நிலையிலே, அப்பல்லிகளின் உடலில் வரிகள் இருந்தால் நகர்விலிருக்கும்போது அவற்றைத் தாக்கும் கொன்றுண்ணிகளுக்கு அது ஒரு வகை தோற்றமயக்கத்தை ஏற்படுத்தி தாக்குதல்களை உடல் அல்லாமல் வாலுக்கு  திசைத்திருப்ப உதவக்கூடும்” என்கிறார் இவ்வாய்வின் முதன்மை ஆய்வாசிரியரான ஐசர் திருவனந்தபுரத்தை சார்ந்த திரு கோபால் முரளி அவர்கள். இவ்வாய்விற்கு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் (Department of Science and Technology) ஐசர் திருவனந்தபுரமும்  இணைந்து நிதிநல்கியுள்ளன .

பல்லிகளின் சூழல்சார் பண்புகள் மற்றும் வண்ணத் தோற்றுருக்களிற்கு இடையே இருக்கக்கூடிய இடைத்தொடர்பை “நகர்ச்சி பகட்டு” (வரிகளுக்கு)  மற்றும்  “தாக்குதலை திசைத்திருப்பல்” (வண்ணமிகு வால்களுக்கு) யுக்திகளின் அடிப்படையில் யூகிக்கும் பல கருத்துக்கோள்களுடன் ஆய்வாசிரியர்கள் இவ்வாய்வை துவக்கியுள்ளனர். பின்னர், சுமார் 1600  பல்லி சிற்றினங்களிடமிருந்து எடுக்கப்பட்ட சுமார் 8000 நிழற்படங்களைக் கொண்டு அவர்களின் கருத்துக்கோள்களை சோதித்துள்ளனர்.

இதன் விளைவாக இயூற்றோபிஸ் பிப்ரொனீ போன்ற வரியுள்ள பல்லி சிற்றினங்கள், வரியில்லா இனங்களைவிட அதிக உடல் வெப்பத்தை கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.   தங்கள் உடல் வெப்பத்தை சீரமைக்க இயலா விலங்குகளான எக்டோதெர்மிக் (ectothermic) எனப்படும் புறவெப்ப விலங்குகளின் நகராற்றல் அவற்றின் உடல் வெப்பத்தை நம்பியே அமைந்திருக்கும். பல்லிகளும் இப்படிபட்ட புறவெப்ப விலங்கினமே ஆகும். எனவே, நீள்வாக்கு வரிகள் மற்றும் அதிக உடல்வெப்பத்தைக் கொண்டுள்ள பல்லிகள் அதீத நகராற்றலுடனிருந்து கொன்றுண்ணிகளிடமிருந்து அதிவேகமாக தப்பிக்கவல்லவையாக திகழ்கின்றன.

“இந்த இடைத்தொடர்பு எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான் ஏனெனின், மோஷன் டாசில் தோற்றுருக்கள் விலங்குகள் நகர்கிவிலிருக்கும் பொழுதே செயலாற்றக்கூடியவை ஆகும்” என்கிறார் திரு முரளி. மேலும், இவ்வாய்வு, உடல் வரிகள்ளும் வண்ணமிகு வால்களும் பகல்வாழ் நடத்தைப்பண்புடன் இணைப்புற்று இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த பல்லிகளும் பகலிலேயே இயங்கக்கூடியவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இருள் நேரங்களில், பார்வையை பிரதானமாக நம்பி வாழும் கொன்றுண்ணிகளிற்கு எதிராக வண்ணங்கள் செயலற்றுப் போகும் சூழல் இருப்பதால்  இந்த இணைப்பானது உருவாக்கியிருக்கலாம். இதனால்  உடல் வரிகள் மற்றும் வண்ணமிகு வால்களானது பகல்வாழ் பல்லிகளிலேயே பரிணாமித்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதோடு நிற்காமல், இதன் பரிணாமம், பல்லிகளின் வால் துண்டிக்கப்படும் ஆற்றலினாலும் தூண்டப்பட்டிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் யூகிக்கின்றர். இவ்வாறு ஆபத்து நேரங்களில் வாலினை துண்டித்து தப்பித்துக்கொள்ளும் தற்காப்பு முறையானது ‘காடல் ஆட்டோடமி’ (caudal autotomy) என அழைக்கப்படுகிறது. இது சுமார் 28 கோடி ஆண்டுகளுக்கு முன் ஊர்வனங்களில் முதலில்  பரிணாமம் பெற்றுள்ளது. இம்முறையானது இருந்திராவிட்டால், பல்லிகள் தங்களின் உடலிற்குவரும் தாக்குதல்களை வால்களுக்கு திசைத்திருப்பும் யுக்தி அர்த்தமற்றாதாகி இருக்கும்! இந்த யூகத்தை சோதித்தப் பின் ஆய்வாளர்கள் வாலின் வண்ணங்கள் காடல் ஆட்டோடாமியுடன் (caudal autotomy) இணைந்தே பரிணாமம் அடைந்திருக்க கூடுமென கண்டறிந்துள்ளனர்.  மேலும் வரிகளிற்கும் வால் வண்ணங்களுக்கும் ஒரு வலுவான இடைத்தொடர்பும் இங்கே காணப்பட்டுள்ளது.

“ஏதேனும் ஒரு அம்சத்தின்  திசைத்திருப்பும் விளைவானது மற்றொன்றின் மூலம் மேலும் அதிகரிக்கப்படலாம் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என யூகிக்கின்றோம்” என்கிறார் திரு முரளி   

விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட கவனிப்புகளுடன் இந்த ஆய்வு ஒத்துப்போவது மட்டுமல்லாமல், இது உலகின் பெரும்பான்மையான பல்லி இனங்களிற்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக விளங்குகிறது.   உதாரணமாக, லைகோசோமா பங்க்டாடாவின் இளம் பருவத்தில் அவற்றின் உடலில் நீள்வாக்கு வரிகளும் ஒரு பிரகாசமான செந்நிற வாலும் காணப்படும். அவற்றின் கொன்றுண்ணிகளாக பல பறவைகள், பாம்புகள் மற்றும் பாலூட்டிகள் விளங்குகின்றன. பகல்வாழ் அரணையான இது தாக்கப்படும் தருவாயில் தன் வாலினை துண்டித்துக்கொண்டு அதன் உயிர்பிழைத்தல் சாத்தியக்கூறுகளை அதிகரித்துக்கொள்ளும் ஆற்றலையுடையது. எனவே இவ்வினம், அதன் உடலிற்கு வரும் தாக்குதல்களை வால் பகுதிக்கு திருப்பிவிடக்கூடியதாக திகழ்கிறது. ஆனால் வங்காள நில உடும்பான (Bengal monitor)  வாராமஸ் பெங்காலன்சிஸ் (Varanus bengalensis) போன்ற பல்லி இனங்களின் வால்களில் பிரகாசமான வண்ணங்களோ, வாலினை துண்டித்துக்கொள்ளும் ஆற்றலோ இருப்பதில்லை. இந்த பெரும் பல்லி இனத்திற்கு இயற்கையில் மிக குறைவான கொன்றுண்ணிகளே இருப்பதால், இவை மேற்குறிப்பிட்டது போன்ற எந்த ஒரு தற்காப்பு யுக்திகளையும் பரிணாமித்துக்கொள்ளாமல் இருந்திருக்கக்கூடும்.

அடுத்த முறை நம் முன் பிரகாசமான வாலுடனோ வரிக்குதிரைப்போன்ற வரியுடனோ ஓடும் ஒரு அரணையை கண்டால், அவ்வால்களிற்கு பின்னால் புதைந்திருக்கும் வரலாற்றையும் சற்று சிந்திப்போமாக!