“ஒற்றை மரம் தோப்பாகாது என்ற பழமொழிப் போல் ஒற்றை இனத் தோட்டமும் காடாகாது”
மரங்களை நடவு செய்வதன் மூலம் சிதைந்த காடுகளை மீட்டேடுப்பது புவி வெப்பமயமாதலை தணிப்பதற்கான மாற்று வழியாக தொடர்ந்து கருதப்பட்டு வருகிறது. பசுங்குடில் வாயுவான கரியமில வாயுவை மரங்கள் எடுத்துக் கொண்டு தாவரத்திலும் மண்ணிலும் பிற வடிவங்களாக சேமித்து கொள்கிறது. இதனால், மரங்கள் நடுவதை ஒரு சிறந்த உத்தியாக பல்வேறு பருவநிலை கொள்கைகள் கருதி, அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இருப்பினும், கரிமத்தை நீண்ட காலம் சேமித்து வைக்கும் திறனிலும் காலநிலையின் தடுமாற்றங்களுக்கு ஏற்றவாறு நிலை பெறுவதிலும் அனைத்து காடுகளும் ஒன்றானது அல்ல. இந்த விடயங்களில், இயற்கை வனங்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட காடுகளும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் நாம் புரிந்துக் கொண்டால், காலநிலையின் நெருக்கடியை கடப்பதற்கு ஒரு முக்கியமான வழியாக அமையும்.
கரிமத்தை கவர்வதிலும் அதனை நீண்ட காலம் சேமித்து வைப்பதிலும், இயற்கை வன இனங்கள் மற்றும் ஒற்றை இனத் தோட்டங்களின் ஆற்றல் எவ்வாறு இருக்கின்றன என்பதை அண்மையில் மேற்கொண்ட ஒரு ஆய்வு என்விரான்மென்ட்டல் ரிசர்ச் லெட்டர்ஸ் (Environmental Research Letters) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியிட்டுள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் நேச்சர் கண்சர்வன்சி, மற்றும் மைசூரின் நேச்சர் கண்சர்வேசன் பவுண்டேசன் முதலிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு நேச்சர்நெட் சயின்ஸ் பெல்லோஸ் திட்டம் மற்றும் எர்த் இன்ஸ்டிடியூட் பெல்லோஸ் திட்டம் நிதியளித்துள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஐந்து புலிகள் காப்பகத்தில் இந்த ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். முந்தைய காலத்தில், அதிகளவு வெட்டு மரங்களே அப்பகுதிகளில் காணப்பட்டன. மேலும், தேக்கு மரம் (Tectona grandis) மற்றும் நீலகிரித் தைலமரம் (Eucalyptus) போன்ற மரங்களும் முன்பு இங்கு வளர்ந்தன. 1950-1980களில் இந்தியாவின் பாதுகாப்பு சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டதால், வர்த்தகரீதியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட வெட்டு மர சாகுபடியிலிருந்த கவனம் காடுகள் மற்றும் பல்லுயிரியப் பாதுகாப்பிற்கு திரும்பியது. இந்த முயற்சி, 40 ஆண்டுகளுக்கும் மேலான முதிர்ந்த தேக்கு மற்றும் நீலகிரித் தைலமரங்களை இயற்கையிலே அமைந்த பசுமை மாறா மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளுடன் சேர்ந்து வளர்வதற்கும் நிலைப்பெறுவதற்கும் வழிவகுத்தது.
“எங்களின் ஆய்வுத் தளங்கள், முன்னதாக வெட்டு மரம் மற்றும் தோட்டங்களுக்காக பராமரித்த பகுதிகளுக்குள் இருந்தன. இந்த பகுதிகள், சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய பூங்காக்களாகவும் வன உயிர் சரணாலயங்களாகவும் கடுமையான பாதுகாப்பின் கீழ் உட்படுத்தப்பட்டிருந்தது” என்று கூறுகிறார் முனைவர். ஆனந்த் ஒசூரி. அவர், நேச்சர் கண்சர்வேசன் பவுண்டேசனின் விஞ்ஞானியாகவும் இந்த ஆய்வின் முக்கிய ஆராய்ச்சியாளராக இருக்கிறார். “இந்த மாறுதல்கள், முதிர்ந்த தோட்டங்கள் மற்றும் வனங்களின் கரிமம் சேமிக்கும் திறன்களை ஒப்பிட்டு பார்ப்பதற்கான அறிய வாய்ப்பினை உருவாக்கியது”, என்று அவர் மேலும் கூறுகிறார்.
பல்வேறு மர வகைகள் நிறைந்த இயற்கையான காடுகள், வருடம் முழுவதும் கரிமத்தை கவர்வதில் மிகுந்த நிலைத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. மேலும், வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கு ஒற்றை இனத் தோட்டங்களை விட குறைந்த அளவே இக்காடுகள் உள்ளாகுகின்றன. மேல் குறிப்பிட்டுள்ள இந்த கருதுகோளை, ஆண்டுதோறும் நிகழும் கரிம கவர்தல் விகித மாற்றங்கள் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் சோதித்து பார்த்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் ஆரம்பக்கட்ட முடிவுகள், இலையுதிர் காடுகள், தேக்கு மற்றும் தைலமரத் தோட்டங்களைக் காட்டிலும் பசுமை மாறாக் காடுகள் அதிகளவு பல்வகைமையைக் கொண்டுள்ளது என்று காண்பிக்கின்றன. அதிக மரவகைகளைக் கொண்டுள்ள பகுதிகள், அதிகளவு கரிமத்தை கொண்டிருக்கும் என்றும் அதனை தரை மேலுள்ள மரங்களின் பாகங்களில் சேமித்திருக்கும் என்றும் அம்முடிவுகள் காட்டுகின்றன. இதனால், பசுமை மாறாக் காடுகளே அதிகளவு கரிமத்தை கொண்டிருக்கும் என்று நன்கு புரிகின்றது.
இதன் அடுத்த கட்டமாக, 2000-2018 காலக்கட்டத்திற்கான தொலை உணர்தல் (Remote Sensing) தரவுகளைப் பயன்படுத்தி மரங்களின் ஒளிச்சேர்க்கையின் மூலம் கரிமம் கவர்தலின் சராசரி விகிதங்களை வைத்து கரிமம் கவர்தலின் நிலைத்தன்மை மதிப்பீடு செய்யப்பட்டது. இது ஆனைமலை, பரம்பிக்குளம், ராஜிவ் காந்தி மற்றும் பத்ரா புலிகள் காப்பகங்களிலும் வயநாடு வன உயிர் சரணாலயத்திலும் நிகழ்த்தப்பட்டன. ஈரமான (செப்டம்பர்-டிசம்பர்) மற்றும் உலர் பருவங்களுக்கான கரிம கவர்தல் விகிதங்களிலுள்ள வேற்றுமைகளையும் மதிப்பீடு செய்துள்ளனர். பருவத்திற்கு ஏற்றவாறு மாறுபடும் கரிமம் கவர்தல் விகிதங்களை புரிந்துக் கொள்வது வறட்சி போன்ற காலநிலையின் இடையூறுகளுக்கு மரங்களின் எதிர்வினைகளை குறிப்பாக தெற்காசியாவில் விளக்க முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஈரமான பருவகாலத்தில் பசுமை மாறா மற்றும் இலையுதிர் காடுகளை விட தேக்கு மற்றும் தைலமரத் தோட்டங்களில் கரிமம் கவர்தல் விகிதங்கள் 4-9% அதிகமாக இருக்கின்றன என்று இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், உலர் பருவத்தில் சராசரி கரிமம் கவர்தல் விகிதம் பசுமை மாறா மற்றும் இலையுதிர் காடுகளை விட 3-29% குறைந்துள்ளது. எனவே, ஈரமான பருவத்தில் மட்டுமே ஒற்றை இனத் தோட்டங்கள் அதிகம் அல்லது இயற்கையாக உருவான காட்டு மரங்களுக்கு ஒத்த கரிமம் கவர்தல் விகிதங்களை கொண்டிருக்கும் என்று புரிகின்றது. இயற்கை வனங்களின் கரிமம் கவர்வதலின் நிலைத்தன்மை தொடர்ந்து அதிகமாக இருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. கரிமக் கவர்தலின் அடிப்படையில் காடுகளை வரிசைப்படுத்தினால், பசுமை மாறா காடுகள் > இலையுதிர் காடுகள், தைலமரத் தோட்டங்கள் > தேக்கு தோட்டங்கள் என வரிசைப்படுத்தலாம்.
மொத்ததில், ஒற்றை இனத் தோட்டங்களைக் காட்டிலும் பல்லுயிர் மிகுந்த இயற்கை வனங்களே கரிமம் கவர்வதில் மிகவும் நம்பகமானவையாகவும் குறிப்பாக வறட்சிக் காலத்தில் மிகவும் நிலையானவையாகவும் திகழ்கின்றன என்று இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வின் முடிவுகள், மரங்களை நடவு செய்யும் ‘கேம்பா’ (CAMPA) போன்ற காடு வளர்ப்பு திட்டத்தின் இடத்திலும் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளன. மேலும், பல்லுயிர் மிகுந்த இயற்கை வனங்களை அழிப்பது, மரங்களை, குறிப்பாக ஒற்றை இன மரங்களை நடுவதன் மூலம் நிச்சயமாக ஈடுக்கட்ட முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக, தற்போது உள்ள காடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு வன மறுசீரமைப்பு மற்றும் பூர்வீக சிற்றினங்களை பயன்படுத்தி கலப்பு-இன தோட்டங்களை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
“ஒற்றை இன வளர்ப்பு தோட்டங்களுக்கு மாறாக வேறு வழிகள் பற்றிய நமது புரிதலை விரிவுப்படுத்த வேண்டும். மேலும், பல்லுயிர்மத்தை பாதுகாப்பதில், கரிமத் தன்மயமாக்கம், நீர் கட்டுப்பாடு மற்றும் வாழ்வாதாரங்கள் போன்ற சூழல்சார் நன்மைகளை வழங்குவதில் ஒற்றை இனத் தோட்டங்கள் எந்த அளவில் பயனுள்ளதாக இருக்கின்றன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று சொல்லி விடைபெறுகிறார் முனைவர். ஒசூரி.