வலி என்பது உடலில் ஏற்படும் வேதனையளிக்கும் உணர்வு. நமது தினசரி அலுவல்களில் வலிகள் தவிர்க்க முடியாதவை. சிறு காயங்கள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் வலிகளானது சில மணித்துளிகள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கக்கூடியவை. சிகிச்சைகளின் காலம் முடிந்தாலும், சில நேரங்களில் வலிகள் நாட்பட்ட வலிகளாக பல ஆண்டுகள் கூட நீடிப்பதுண்டு. இந்த நாட்பட்ட வலிகள் என்பவை மிகவும் துயர் நிறைந்தவை. உலகெங்கிலும் நாட்பட்ட வலிகளின் சிகிச்சைக்காக வருடத்திற்கு பல கோடி ருபாய்கள் செலவிடப்படுகின்றன., நரம்புகளில் ஏற்படும் சேதங்களால் வரும் தொடர்ச்சியான நரம்பு வலிகள் நாட்பட்ட வலிகளில் ஒன்றாகும். 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள், எச். ஐ. வி. தோற்று உள்ளவர்களில் 35 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் நாட்பட்ட வலிகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துகள், அறுவை சிகிச்சைகள், புற்றுநோய், வேதிசிகிச்சைகள், தண்டுவட மரப்பு நோய், முதுகெலும்பு காயம், ஊட்டச்சத்து குறைபாடுகள் முதலிய காரணிகளாலும் நாட்பட்ட நரம்பு வலிகள் ஏற்படக்கூடும். உலக மக்கள் தொகையில் 7 முதல் 10 சதவீதத்தினர் இப்படிப்பட்ட நரம்பு வலிகளால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை முறைகள் பல இருப்பினும் அச்சிகிக்சைகள் பல வேளைகளில் மிகப் பொருத்தமானதாக இருப்பதில்லை. மேலும், இந்த நரம்பு வலிகளின் பின்னணியில் உள்ள இயங்கமைவு குறித்த கருத்தியல்களை இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட நாட்பட்ட வலிகளுக்கு புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
பெங்களூரு இந்திய அறிவியல் மையத்தினை (Indian Institute of Science, Bangalore) சேர்ந்த பேராசிரியர் அவதேஷா சுரொலியா மற்றும் முனைவர் சவுரப் யாதவ் அவர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வொன்றில் இந்த வலிகளுக்கான காரணிகள் குறித்து விளக்கியுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் சைன்ஸ் ட்ரான்ஸ்லாஷனல் மெடிசின் (Science Translational Medicine) என்னும் ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் நாட்பட்ட வலிகளுக்கு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான புதிய சாத்திய கூறுகளை வெளியிட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி குழுமம் (Council for Scientific and Industrial Research) மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் (Science and Engineering Research Board) நிதி நல்கையுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனிதர்களின் உடலில் பல்வேறு புரதங்களும், நொதிகளும் பல வேதியல் நிகழ்வுகளுக்கு காரணிகளாக விளங்குகின்றன. அவற்றுள் லைசோசைம் (lysozyme) எனும் புரதநொதி மிக முக்கியமான ஒன்று. லைசோசைம் மனிதர்களின் கண்ணீர், உமிழ்நீர் மற்றும் தாய்ப்பால் போன்ற மனித சுரப்புகளில் இயல்பாக காணப்படுகின்றது. இந்த புரதம் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகும். இந்த புரதமே தொற்றுநோய் நுண்கிருமிகளின் செல் சுவர்களை சிதைத்து, நம்மை அவற்றின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றது. வணிகவியல் நோக்கிலும் உணவு மற்றும் மருத்துவத் துறைகளில் இந்தப் புரதநொதி பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கூறிய இந்த ஆய்வு எலிகளின் நரம்பு உயிரணுக்களின் மீது இந்த புரதத்தினைக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. நரம்பு காயத்திற்கு பிறகு நரம்பணுக்களில் லைசோஸிமின் அளவு அதிகரித்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். இந்த புரதநொதியினை உயிரணுக்களின் உள்ளே செலுத்தினால், அது நரம்பணுக்களின் உத்வேகத்தினை ஊக்கப்படுத்தி வலி உண்டாக்குவதாக கூறுகின்றனர். இந்த ஆய்வு அவதானிப்புகள் நாட்பட்ட வலி ஏற்படுவதில் லைசோசைமின் பங்கை உறுதிப்படுத்துகின்றன.
ஆரோக்கியமான நரம்பு செல்களில், இந்த லைசோசைமின் அளவு குறைவாக இருக்கின்றது, நரம்பணுக்கள் பாதிப்படையும் போது இதன் அளவு அதிகரிக்கின்றது. உயிரணுக்களின் மேற்புறத்தில் பல ஏற்பிகள் (receptors) உள்ளன. உயிரணுக்கள் மற்றைய உயிரணுக்களுடன் தொடர்பு மற்றும் தகவல் பரிமாறிக்கொள்ளவும், நுண்சத்துக்களை ஏற்கவும், நுண்ணுயிரிகளின் தாக்கத்தினை பற்றி உள்ளே தகவல் அனுப்பவும் உயிரணுக்களால் இந்த ஏற்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. டால்-லைக் ஏற்பி - 4 (toll-like receptor - 4) எனும் ஏற்பி நரம்பணுக்களின் மேற்புறத்தில் உள்ளது. இந்த ஏற்பி உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படும் போது தூண்டப்படுகிறது. நரம்பு வலிகளில் இந்த குறிப்பிட்ட ஏற்பியின் பங்கு அறியப்பட்டிருந்தாலும் அதனுடைய செயலியக்க வழித்தடங்கள் பற்றிய தரவுகள் போதுமானதாக இல்லை.
"நரம்பு உயிரணுக்களில் காயம் ஏற்படும்போது, லைசோசைம் நொதியானது இந்த டால்-லைக் ஏற்பியினை ஊக்குவித்து வலியினை உண்டாக்குவதாக இந்த ஆய்வில் அறிகிறோம்" என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த அவதானிப்புகள் மூலமாக நரம்பு உயிரணுக்களால் அதற்கேற்படும் சேதத்தினை அறிந்துகொள்ள முடியும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
மனித நரம்பு உயிரணுக்களின் மீது லைசோசைம் புரதநோதியினை செலுத்தி ஆய்விற்கு உட்படுத்திய போது கிடைத்த முடிவுகள் எலிகளில் கிட்டிய முந்தைய முடிவுகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட நோயாளிகளின் தண்டு வடத்தில் இந்த லைசோசைம் நொதி அதிகமாக இருக்கும். இது நரம்பணுக்கள் காயம் படும்போது ஏற்படும் ஒரு நிகழ்வாகும்.
அனெக்சின் ஏ-2 (Annexin A-2) எனும் மற்றொரு புரதமும் வலி ஏற்படும் போது செயல்படுகிறது. இந்த அனெக்சின் புரதத்துடன் லைசோசைம் நொதி இணைந்து வினைபுரிந்து டால்-லைக் ஏற்பி தூண்டப்படுகின்றது. அனெக்சின் புரதம் இல்லாத போது இந்த லைசோசைம் நொதியினால் மட்டும் தனியாக வலியினை உண்டாக்க முடிவதில்லை. இந்த லைசோசைம் புரதத்துடன் வினைபுரியும் கைடோபையோஸ் (chitobiose) எனும் வினைத்தடுப்பான் ஒன்றினை செலுத்திய போது அது எலிகளின் நரம்பணுக்களில் வலியினை நீக்கியிருப்பதாக கண்டறிந்துள்ளனர். பொதுவாக வலிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் உயிரணுக்களின் ஏற்பிகளுடன் அல்லது வலி தொடர்பான மூலக்கூறுகளுடனோ வினைபுரிந்து வலியினை கட்டுப்படுத்துகின்றன. லைசோசைம் நொதியினை கட்டுப்படுத்தும் இந்த முறை மிகவும் பாதுகாப்பானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்பட்ட நரம்பு வலிகளின் சிகிச்சைக்கு இந்த ஆய்வு முடிவுகளின் மூலமாக வழிகாண முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
"லைசோசைம் வினைத்தடுப்பான்கள் நாட்பட்ட நரம்பு வலிகளுக்கு இயற்கையான பாதுகாப்பான மாற்று என எங்கள் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன" என்கிறார் இந்த ஆய்வினை மேற்கொண்டவர்களுள் ஒருவரான பேராசிரியர் சுரோலியா
முதுமறதி (Alzheimer's disease), நடுக்குவாதம் (Parkinson's disease), தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis) முதலிய நரம்புசார் நோய்களிலும் அதீதமான லைசோசைம் நொதிகள் காணப்படுகின்றன. இவ்வகையான நோய்களிலும் இந்த நொதியின் பங்களிப்பை மேற்கொண்டு ஆய்வு செய்ய இந்த அவதானிப்புகள் பெரிதும் உதவக்கூடும் என்றனர் ஆய்வாளர்கள்.