முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

நச்சாகும் வளிமண்டலம் - காற்று மாசுபாட்டில் இந்தியாவின் நிலை

Read time: 1 min
பெங்களூரு
7 ஜூன் 2019
நச்சாகும் வளிமண்டலம் - காற்று மாசுபாட்டில் இந்தியாவின் நிலை

காற்று - நாம் உயிர் வாழ முதன்மைத் தேவை. இன்றைய சூழலில், மனித செய்கைகளின் விளைவாக வளிமண்டலம் நச்சு மண்டலமாக மாறி வருகின்றது.  இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் மிகப்பெரும் சவால்களில் காற்று மாசுபாடு மிக முக்கியமான ஒன்றாகும்.  உலகில் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் 15 நகரங்களில், 14 நகரங்கள் இந்தியாவிலேயே உள்ளது என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இந்தியாவில் காற்று மாசுபாடு குறித்த ஆழமான ஆய்வுகள் இன்றைய முக்கிய தேவையாகும். இப்படிப்பட்ட ஆய்வுகள்தாம் உரிய மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த வழிகோலும். இந்தியாவில், வெவ்வேறு மாநிலங்களில் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவற்றின் இறப்பு விகிதங்கள், நோய்கள் மற்றும் மனிதர்களின் ஆயுட்காலக் குறைவு பற்றிய  விரிவான ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் 'லான்செட் பிளானட்டரி ஹெல்த்' (Lancet Planetary Health) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வு இந்திய மாநிலங்கள் அளவிலான நோய்கள் கட்டுப்படுத்தல் திட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், இந்திய பொது சுகாதார மையம், சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீடு நிறுவனம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் இணைந்து சுமார் 100 இந்திய நிறுவனங்களில் உள்ள நிபுணர்களினால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், சுகாதார ஆய்வுத் துறை, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் பில் மெலிண்டா மையத்தினால் நிதியுதவியுடன் மேற்க்கொள்ளப்பட்டது.

வளிமண்டலத்தில் பி.எம் 2.5 (PM 2.5) எனப்படும் 2.5 நுண்மீட்டர் விட்ட அளவுள்ள மாசு துகள்களின் எண்ணைக்கைகளைக் கொண்டே காற்று மாசுபாட்டின் அளவு கணிக்கப்படுகிறது. இந்த துகள்கள் மனித மயிரிழையின் விட்டத்தில் 3 சதவீத அளவு மட்டுமே கொண்ட மிக மிக நுண்ணிய துகள்களாகும். 2017 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும், சுற்றுப்புறம் மற்றும் வீட்டு சூழலில் உள்ள இந்த மாசு துகள்களின் அளவு மற்றும் அதனுடைய தாக்கம் பற்றியும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

"நான்கில் மூன்று இந்தியர்கள் அதீதமான காற்று மாசுபாட்டிற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். இந்திய தேசிய சுற்றுப்புற தர நிர்ணய அளவினைக் காட்டிலும் அதிகமாக நுண் துகள் காற்றில் நிறைந்திருப்பாதால், பலர் பல்வேறு சுவச வியாதிகளுக்கு உள்ளாகிறார்கள்" என்கின்றனர் ஆய்வாளர்கள். சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காற்று மாசுபாட்டினால் உயிரிழந்து உள்ளனர். இது இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் எட்டில் ஒரு பங்காகும். சுற்றுப்புற மாசு துகள் காரணமாக இறந்தவர்கள் ஆறு லட்சத்து எழுபதாயிரம் என்றும், வீடுகளில் உள்ள காற்று மாசுபாட்டின் காரணமாக இறந்தவர்கள் நான்கு லட்சத்து எண்பதாயிரம் என்றும் இந்த ஆய்வறிக்கை அச்சமூட்டும் செய்தியை கூறுகிறது. 56 சதவீத இந்தியர்கள் எரிபொருள் பயன்பாட்டிற்காக, திட எரிபொருள்களான விறகு, எரு, நிலக்கரி மற்றும் கரி ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள் என்றும், இவ்வகை எரிபொருள்கள் தான் வீட்டு சூழலில் மாசு ஏற்படுத்த பெரும் காரணிகளாக விளங்குகின்றன என்றும் அறியப்படுகிறது.

காற்று மாசுபாட்டினால் பாதிப்புக்குள்ளாகுபவர்களில் ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமானோர் எழுபது வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இந்தியா உலகின் 18 சதவீத மக்கள் தொகையினைக் கொண்டிருப்பினும், சுமார் 26 சதவீத அகால மரணங்கள் காற்று மாசுபாட்டினால் தான் நடக்கின்றது என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக காற்று மாசுபாடு நுரையீரல் பாதிப்புகளையே அதிகமாக உண்டாக்கும் என்று அறியப்படுகின்றது. அனால் இந்த ஆய்வு முடிவுகள்,  காற்று மாசுபாடு, 38 சதவீதம் இருதயம் மற்றும் நீரிழிவு தொடர்பான நோய்களுக்கு வழிவகை செய்வதாக தெரிவிக்கின்றன. "இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்தியாவில் காற்று மாசுபாடு புகை பிடித்தல் தொடர்பான நோய்களான குருதி ஊட்டக்குறை, இதய நோய், மாரடைப்பு, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு காரணிகளாகின்றன" என்கின்றனர் ஆய்வாளர்கள். 

இந்த காற்று மாசுபாடு மனித வாழ்நாளினைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. "தற்போதைய மாசுபாடு அளவு முந்தைய அளவினைக் காட்டிலும் அதிமாக உள்ளது, இதனால் இந்தியர்களின் சராசரி வாழ்நாளில் 1.7 ஆண்டுகளை குறைத்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் மனிதர்களின் சராசரி வாழ்நாளில் 2 ஆண்டுகள் குறைத்துள்ளது" என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்தக் காற்று மாசுபாட்டின் அளவு மாறுதலுக்கு உட்படுகின்றது. இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், டெல்லி மற்றும் ஹரியானா முதலிய இடங்களில் காற்று மாசுபாடு துகள்களின் அளவு அதிகமாக உள்ளதாகவும் இதில் இந்தியாவின் தலைநகரான டெல்லி முதலிடத்தில் இருப்பதாகவும் அறிய முடிகிறது. ஒவ்வொரு மாநில வாரியான தரவுகள் மூலமாக மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"ஒவ்வொரு மாநிலங்களிலும் காற்று மாசுபாட்டினால் உண்டாகும் தீமைகள் மற்றும் அதன் காரணிகளை அறிந்து கொண்டு, உரிய மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை சரியாக செயல்படுத்துவதன் மூலமாக, காற்று மாசுபாட்டினால் உண்டாகும் நோய்கள் மற்றும் மரணங்களை கட்டுப்படுத்த முடியும்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.