முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

உறைபனியால் பல்லாண்டுகள் பேணப்பட்ட சமதளப்புல்வெளிகளை மிரட்டும் ஊடுறுவல் தாவரங்கள் மற்றும் வெப்பமையமாதல்

Read time: 1 min
பெங்களூரு
24 ஏப் 2020
Fostered by frost for years, shola grasslands now threatened by invasive plants and the warming climate

ஓங்கி உயர்ந்த மலைகளிற்கிடையே, பரந்து விரிந்த புல்வெளிகளால் நிரம்பிய ஒரு வனப்பகுதி! இந்த வர்ணனை,  திரைப்படங்களில் வரும் ரம்மியமான ஒரு காதல் பாடலை படமாக்க சிறந்த இடம் போல தோன்றலாம்.  ஆனால், புல்வெளிகளுடன் கூடிய இதுபோன்ற ரம்மியமான நிலப்பரப்புகள் மலை உச்சிகளில் அமைந்திருப்பதை சங்கப்புலவர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆவணப்படுத்தியதோடு தங்களின் இலக்கியங்களில்  உவமைகளாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

இன்றளவிலும் இதுபோன்ற "காடுகளுடன் இணைந்த புல்வெளி பல்லடுக்குகள்” உலகின் பல பகுதிகளில்   காணப்படும் முக்கியமானதொரு நிலப்பரப்பாகும் – ஆப்பிரிக்காவின் மலாவி மற்றும் மடகாசுகர், இலங்கை, தெற்கு பிரேசில், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஏன் இந்தியாவில் கூட இவ்வகை நிலப்பரப்புகள்  காணப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள சமதளப் புல்வெளிக்காடுகள் (shola forests) இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். வனப்பகுதிகளை மனிதர்கள் அழித்ததால்தான் இப்புல்வெளிகாடுகள் உருவானது என்று சிலர் நம்பினாலும் இவ்வகை புல்வெளிக்காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு இருந்துவருகின்றன என்பதே ஆய்வுகளின் கூற்று. மேலும், இந்த பல்லடுக்கு சூழல்மண்டலத்தின் செயலாற்றலில் இக்காடுகள் ஒரு முக்கிய பங்கு  வகித்து வருகின்றன.

“சமதள புல்வெளி சூழல் மண்டலங்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் உச்சியில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான இயல் வாழ்விடமாகும்.   இருபதாயிரம் ஆண்டுகளுக்கு மேல்  இங்கு இருக்கும் இவை கடையூழிக்கடுத்த ஈற்றயலடுக்கு (pleistocene) காலத்தின்  எச்சங்களாக திகழ்கின்றன” என்கிறார் பெங்களூருவின் தேசிய உயிர் அறிவியல் மையத்தை (National Centre for Biological Sciences (NCBS) சார்ந்த முனைவர் அதுல் ஜோஷி அவர்கள்.

இச்சூழல்மண்டலங்கள் பருவநிலை மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாக இருப்பதோடு, இங்குள்ள காடுகளும் புல்வெளிகளும் கடந்தகால பருவநிலை மாற்றங்களினால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக அதிக வறட்சி, குறைந்த கரியமிலவாயு மற்றும் குறைந்த வெப்பநிலைக் காலங்களில் இப்புல்வெளிகள் விரிவைடைந்துள்ளன. “இச்சூழல் மண்டலங்கள் பல்வேறு பகுதிக்குரித்தான மற்றும் அருகிவரும் தாவரங்கள்/விலங்கினங்களை உள்ளடக்கியுள்ளன. மேலும் தென் இந்திய மாநிலங்களில் ஓடும் பல நதிகளிற்கு நீர்பிடிப்பு பகுதிகளாகவும் இப்புல்வெளிகள் திகழ்கின்றன.” என இவற்றின் முக்கியத்துவத்தை அவர் விளக்குகிறார். 

ஆனால் ஆங்கிலேயர் காலத்தில், விறகு ஈனும் வெட்டுமரங்களான சீமைக்கருவேலம் மற்றும் தைலமரங்கள் (இயூக்கலிப்டஸ்) இங்கே நடப்பட்ட இம்மரங்கள் இந்த நிலப்பரப்புகளை அழிக்கும் ஒரு பெரும் கவலைக்குரிய காரணியாக இன்றும் விளங்குகிறது. சமீபத்திய ஆய்வொன்றில் முனைவர் ஜோஷி மற்றும் அவரின் சகாக்கள் மலைசார் சமதள புல்வெளிகளின் சாராம்சங்களான உறைபனி மற்றும் உறைதல் வெப்பநிலை முதலியவை இப்புல்வெளிக்காடுகளில் உள்ள பூர்வீக மற்றும் வெளியிலிருந்து கொண்டுவந்து நடப்பட்ட அந்நிய மரங்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்துள்ளனர். இவ்வாய்வை இவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் தென் பகுதியில் ஒரு பல்லுயிர் வெப்பமையமாக விளங்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் (Nilgiri Biosphere Reserve) நடத்தியுள்ளனர். இவர்களின் கண்டுபிடுப்புகள் ஜர்னல் ஒஃப் ஈகாலஜி (Journal of Ecology) என்னும் ஆய்விதழில் ஆய்வறிக்கையாக வெளியாகியுள்ளது.

இப்புல்வெளிக்காடுகளின் அகப்பருவநிலை மற்றும் மண் இந்த பூர்வீக மற்றும் அந்நிய மரங்களின் அரும்புதல் மற்றும் உயிர் பிழைத்தல் திறனில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை புரிந்துகொள்ள ஆய்வாளர்கள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். சிசிஜியம் கிராண்டே (Syzygium grande) எனும் பூர்வீக மரம் மற்றும் அகாசியா மியரன்சீ  (Acacia mearnsii) எனும் அயல்நாட்டு மரத்தின் விதைகளை காடுகள் மற்றும் புல்வெளிகளின் மண்ணில் அவற்றின் அகப்பருவநிலைகளில் அரும்பவைத்து சோதித்துள்ளனர். இவர்களின் சோதனைக்காலம், இம்மரங்கள் அவற்றின் இயற்கை சூழலில் அரும்பக்கூடிய காலத்துடன் ஒத்துப்போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விரண்டு மரவிதைகளுமே புல்வெளி மற்றும் காட்டுப்பகுதிகளில் வளர்ந்தன எனவும் அவற்றின் அரும்பாற்றல் காட்டுப்பகுதிகளைக் காட்டிலும் புல்வெளிகளிலே அதிகரித்திருந்தது என்பதையும் இவர்களின் சோதனை முடிவுகள் ஆவணப்படுத்தியுள்ளன. இரு பகுதிகளிலுமே இவ்விதைகள் அரும்பியமையால், அரும்பாற்றல் மட்டுமே இம்மரங்களின் நிறுவுதலிற்கு முக்கியமல்ல என்பதை ஆய்வாளர்கள் உணர்ந்ததோடு அடுத்தக்கட்டமாக இவ்விதைகளின் உயிர் பிழைத்தல் திறனை சோதிப்பதில் கவனம் செழுத்தியுள்ளனர். 

இதன் விளைவாக மேலும் சில சோதனைகளை முன்னெடுத்த இவர்கள் தற்போது புல்வெளிப்பகுதிகளில் உறைதல் மற்றும் இளஞ்சூட்டு வெப்பநிலைகள் எவ்வாறு இவ்விதை நாற்றுகளின் உயிர் பிழைத்தலை பாதிக்கின்றன என்பதை உற்று நோக்கியுள்ளனர். பனிக்காலத்தில் “பூர்வீக” மரத்தின் நாற்றுகள் சொர்ப அளவிலேயே பிழைத்திருந்ததையும் பனிக்காலமுடிவில் இவற்றின் பெரும் பகுதி இறந்திருந்ததையும் இவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் காட்டுப்பகுதிகளில் இவற்றின் நாற்றுகள் கனிசமாக பிழைத்திருந்துள்ளது. இதற்கு நேர்மாறாக “அயல் நாட்டு” மரத்தின் நாற்றுகளின் உயிர் பிழைத்தல் திறன் காடு மற்றும் புல்வெளிகளில் ஒரே அளவிலேயே இருந்துள்ளன. மேலும் புல்வெளிகளில் இவை பூர்வீக மரங்களின் நாற்றுக்களை விட 50% அதிகமாக உயிர் பிழைத்துள்ளன என்பதையும் இவர்களின் சோதனை முடிவுகள் கூறுகின்றன.

இதே சோதனைகளை இளஞ்சூட்டு வெப்பநிலைகளில் நடத்தியபோது இரு மர நாற்றுகளுமே புல்வெளிகளில் நல்ல உயிர் பிழைத்து வளர்ந்துள்ளன. ஆனால் அயல் நாட்டு மரமான அகேசியா பூர்வீக மரத்தை விட அதிக உயிர் பிழைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளது.

சமதள புல்வெளிகளாலான இச்சூழல் மண்டலத்தில் பூர்வீக காடுகள் புல்வெளிகளிற்குள் ஊடுறுவி விரிவடைவதற்கு விதை அரும்புதலை விட நாற்று வளர்ச்சி மற்றும் உயிர் பிழைத்தலே முக்கிய காரணிகளாக திகழ்கின்றன என்பதை  இவர்களின் ஆய்வு முடிவுகள் விளக்கியுள்ளன. அகாசியா போன்ற அயல் நாட்டை பூர்வீகமாய் கொண்ட மரங்களில் உள்ள அதீத அரும்பாற்றல், உறைபனி வெப்பநிலைகளை தாங்கும் சகிப்பாற்றல் போன்ற திறன்களே இவை புல்வெளிக்களில் விரைந்து ஊடுறுவ உதவியாக இருக்கின்றன. அதிகரித்துவரும் வெப்பமையமாதலின் விளைவால் இந்நிலப்பரப்பில் பூர்வீக மற்றும் அந்நிய மரங்களின் வளர்ச்சி அதிகரிக்க அதீத வாய்ப்புள்ளது. இது இப்புல்வெளிகளின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கக்கூடும்.

“கணிக்கப்பட்டுள்ள பருவநிலை மாற்றம் குறிப்பாக வெப்பமையமாதல் நம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேற்பரப்பில் அகேசியாவின் ஊடுறுவல் அடர்த்தியினை இரட்டிப்பாக்க அதீத வாய்ப்புள்ளது” என எச்சரிக்கிறார் முனைவர் ஜோஷி.

ஆனால் உரிய அதிகாரிகள் இப்பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர் என்பது இங்கே ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி.

“சென்னை உச்சநீதி மன்ற மதுரைக்கிளை இச்சூழல் மண்டலங்களில் அகேசியா ஊடுறுவுவதை தடுக்கும் வண்ணம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க தமிழக வனத்துறையினை கேட்டுக்கொண்டுள்ளது. நான் அறிந்த வரை தமிழக வனத்துறையும் அகேசியா அகற்றல் திட்டங்களை சிலபகுதிகளில் முன்னெடுத்துள்ளனர்” என இத்தனித்துவமான புல்வெளிகளை பாதுகாக்கும் நம்பிக்கையுடன் விடைபெற்றார் முனைவர் முனைவர் ஜோஷி.