முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

பாடல் பறவைகள் எவ்வாறு தங்கள் பாடல்களைப் பயில்கின்றன?

21 எப்ரல், 2022 - 17:46

பறவைகளின் கூட்டிசையோடு துவங்கும் ஒரு நாளைவிட ஒரு அழகான நாள் இருந்துவிட முடியுமா? பல்வேறு சுருதி மற்றும் இசை நுணுக்கங்களுடன் இப்பறக்கும் பாடகர்கள், கவனிப்பவர்களின் காதுகளுக்குத் தினந்தோறும் ஓர்  இசை விருந்து வைக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. தங்களின் பெயர்களுக்கேற்ப பாடல் பறவைகள் விரிவான பாடல்களைப் பாடும் திறன் கொண்டவை. சிட்டுக்குருவிகள், ராபின்கள், கதிர்க்குருவிகள், காகங்கள் போன்ற 5000க்கும் மேற்பட்ட சிற்றிங்களைக்கொண்ட பாடல் பறவைகள் சராசரியாக ‘அழைப்பு’ மற்றும் ‘பாடல்’ என்னும் இரண்டு வகை சத்தங்களை  எழுப்பக்கூடியவை. அழைப்புகள் எளிமையான குறுகிய சத்தங்களாகும். வருடம் முழுதும் பயன்படக்கூடிய இவை பறக்கும் போதோ ஆபத்துகளை அறிவிக்கும் நேரங்களிலோ எழுப்பப்படுபவை. ஆனால் பாடல்கள் நேர்த்தியான, நீளமான சத்தங்களாகும். இனப்பெருக்கக் காலத்தில், ஓர் இணையை ஈர்க்கவும் தங்கள் எல்லைகளைத் தற்காத்துக்கொள்ளவும் இப்பாடல்கள் எழுப்பப்படுகின்றன. பல இனங்களில் ஆண் பறவைகளே சிறந்த  பாடகர்களாக விளங்குகின்றன.

பறவைப் பாடல்கள் பல்வகை அசைவுகளின் வரிசைகள் அல்லது சுருதிகளின் திரள்களைக் கொண்டு அமைந்துள்ளன. ஒவ்வொரு பறவையும் தனக்கென ஒரு பாடல் பதிப்பைக்கொண்டுள்ளன. இத்தகைய பாடல் பதிப்புக்குழுக்கள் சிற்றனங்களுக்கிடையே மாறக் கூடியவை. சில பாடல் பறவைகள் ஒருசில பாடல்களை மட்டுமே பாடும் ஆற்றல் கொண்டவை. ஆனால், டாக்சொ சிடோமா ருஃபம் (Toxostoma rufum) என்னும் பறவை இனம் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேலான பாடல்களைப் பாடும் திறன் கொண்டவை.

இப்பறவைகளின் சிறிய மூளைகளில் உள்ள உயர் குரல் மையம் என்னும் ஒரு பிரதான பகுதியானது இவற்றின் பாடல் பயிலும் ஆற்றலுக்குத் துணைபுரிகின்றது. இருப்பினும், நம்மைப்போலவே, இப்பறவைகளுக்கும் பாடல்களைப் பயிற்றுவிக்க ஒரு ‘குரு’வின் உதவி தேவைப்படுகிறது. அதோடு ஆண்மை இயக்குநீர் என்ற ஹார்மோன்  (testosterone) ஒரு நிலையான பாடல் உருவாவதற்கு உதவியாக இருக்கின்றது. பிறந்த முதல் இரு மாதங்களில் இளங்குஞ்சுகள் பாடல்களைக் கற்க ஆரம்பித்துவிடுகின்றன. குழந்தைகளின் மழலைப் பிதற்றலைப் போல் அவை சில ‘ஒழுங்கற்ற’ சுருதிகளை இக்கற்றல் காலத்தில் எழுப்பும். பின்னர் காலப்போக்கில், அவை தங்களின் ‘குரு’வின் பாடல்களைக் கேட்டும்  பாவித்தும் தங்களுக்கென ஒரு தனித்துவமான பாடலை முறைப்படுத்துகின்றன. மிகவும் விரிவான மற்றும் இசைவிணக்கமான பாடல்களைத் தன்வசம் வைத்துள்ள ஆண் பாடகர்களையே பெண் பறவைகள் தேர்ந்தெடுக்கின்றன.

மனிதர்கள் பேசப் பழகுவதற்கும் இப்பறவைகள் பாடப் பழகுவதற்கும்  பல ஒற்றுமைகள் உள்ளன. பலவகை பாடல்களைப் பறவைகள் பயிலுவதைப்போல் நாம் பல மொழிகள் மற்றும் வட்டார வழக்குகளைப் பயில்கிறோம். இவை இரண்டிற்குமே ஒரே வகையான நரம்பியல் பாதைகள்தான் அடித்தளமாகத் திகழ்கின்றன. மனிதப் பேச்சாற்றலின் வளர்ச்சியின் அடிப்படையைப் புரிந்துகொள்ள இப்பறவைப் பாடல்களை ஆய்வாளர்கள் மாதிரிகளாகப் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாகப் பேச்சுப்பயிற்சிக்கு ஆதாரமாக விளங்கும் சில நரம்பணுக்களையும் ஒலி பாவனைக்குத் தேவைப்படும் சில மரபணுக்களையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகின் பாடல் பறவைகளின் எண்ணிக்கையில் பெரும்பாலானவை நமக்கு மிக அருகில்தான் அறியப்பட்டுள்ளன – இமய மலைகளில். மரபியல் வேறுபாட்டின்  அடிப்படையில் ஆய்வாளர்கள் சுமார் 500 விதமான சிற்றினங்களை இமயத்தின் நிலப்பரப்புகளில் கண்டறிந்துள்ளனர். இத்தனை  பாடல் பறவைகள் உலவும் மாசற்ற இமய மலைகளில் காலை நேரங்கள் எத்தனை  ரம்மியமான இசையுடன் துவங்கும் என ஒரு நொடி சிந்திப்போமாக.