
ஒரு நபரின் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் இல்லாதபோது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கும் இது, இந்தியாவின் பெரும் சுகாதார நெருக்கடியாகும். ஊட்டச்சத்து குறைபாடு, புறக்கணிக்கப்பட்டால், குழந்தைகளின் உடல், மனவளர்ச்சிக் குறைபாடு, உடல் எடை குறைபாடு, மற்றும் உயிரிழப்பிற்குக்கூட வழிவகுக்கும். 2019 ஆம் ஆண்டின் யுனிசெப் அறிக்கையானது, ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 69% இறப்புகளுக்குக் காரணமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது.
ஊட்டச்சத்து குறைபாட்டினைப் போக்குவதற்காக இந்திய அரசாங்கத்தின் பல திட்டங்கள் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு முதன்மையாகப் பொருந்துகின்றன. ஆனால், இத்திட்டங்களால் அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறங்களில் உள்ள குடிசைவாசிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூக மக்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டைச் சமாளிக்க முடிவதில்லை. நிதி ஆயோக் (இத்திட்டங்களுக்குப் பொறுப்பான அரசு நிறுவனம்) சமீபத்தில் வெளியிட்ட முன்னேற்ற அறிக்கையானது, 6 முதல் 36 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் உணவு அமைப்பைத் திருத்த வேண்டிய அவசியம் குறித்த ஆலோசனைகளை அறிவுறுத்துகின்றது. மேலும், தற்போது வழங்கப்படும் ஊட்டச்சத்து மாற்று உணவுகள் சுவையற்றதாகவும், உண்பதற்கு சலிப்பானதாகவும் உள்ளன. மேலும் இவை ஊட்டச்சத்து குறைபாட்டினை சரிசெய்வதற்கு ஏதுவானதாக இல்லை.
பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சமீபத்திய ஆய்வொன்று, முன்பு கருத்தில் கொள்ளப்படாத காரணிகளைக் கருத்தில் கொண்டு, 45 வகையான நுண்ணூட்டச்சத்து மாற்று உணவு வகைகளை வடிவமைத்து அறிமுகப்படுத்தியது. இந்த ஆய்வில் அறிமுகப்படுத்தப்பட்ட நுண்ணூட்டங்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட உணவு வகைகள் அரசு வழங்கும் உணவுப்படிகளைவிட பயனுள்ளதாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பீடீயாட்ரிக் ஆன்கால் (Pediatric Oncall) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. மேலும், இந்த ஆய்வு பம்பாய் ஐ.ஐ.டி.யில் உள்ள டாட்டா தொழில்நுட்ப மையத்தினால் நிதி அளிக்கப்பட்டுள்ளது. நகர மக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டினை அறிந்துகொள்வதற்காக, ஆய்வாளர்கள் மும்பாய் தாராவியில் அமைந்துள்ள சேரிப் பகுதிகளில் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டினை சரி செய்ய நுண்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட உணவினை நாம் வழங்க முடியும். உதாரணமாக, பாலில் வைட்டமின் டி மற்றும் ஏ சேர்த்து வழங்க முடியும். தயாரிக்கும் செயல்முறை, ஊட்டச்சத்து அளவு மற்றும் உணவு வகையைப் பொறுத்து பல்வேறு வகையான செறிவூட்டப்பட்ட உணவுகள் உள்ளன. தற்போது துத்தநாகம், இரும்பு, கால்சியம் மற்றும் நுண்சத்து ஏ மற்றும் சி போன்றவற்றால் செறிவூட்டப்பட்ட சோயா மாவு அல்லது கடலை மாவு ஆகியவை இந்திய அரசாங்கத்தால் உணவுப்படியாக வழங்கப்படுகின்றது. இந்த மாவுப்பொருட்களை வீடுகளில் பதப்படுத்தி ரொட்டி அல்லது கஞ்சியாக சமைத்து உண்ணப்படுகின்றது. இந்த உணவைக் குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்து உண்ணுவதால் குழந்தைகளுக்கு அன்றாடம் தேவைபடும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.
"அரசு நிறுவனங்கள் பொதுவாக ஒரு அளவு-பொருந்தக்கூடிய அணுகுமுறையை கடைபிடிக்கின்றன. இது செயல்படுத்த மிகவும் எளிதானது, ஆனால், பல நேரங்களில் இது பயனுள்ளதாக இருப்பதில்லை" என்கிறார் இந்த ஆய்வின் மூத்த ஆய்வாளரான பேராசிரியர் பார்த்தசாரதி. இந்த ஆய்வு செறிவூட்டப்பட்ட மாவுக்கு மாற்றான பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் குறித்து அறிவிக்கின்றது.
உணவுப்படியாக வழங்கப்படும் மாவுப் பொருட்கள் சுவை குறைவாக இருப்பதால், ஆய்வாளர்கள் செறிவூட்டப்பட்ட உணவு பொருள் தயாரிப்புக்காக வெவ்வேறு வகையான உணவுப்பொருட்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். மும்பையில், வீடுகளில் குழந்தைகளுக்குப் பரவலாக வழங்கப்படும் உணவுப் பண்டங்களான உப்புமா, பாயாசம் மற்றும் ஜூங்கா முதலிய உணவுகள் குறித்த தரவுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். ஒவ்வொரு குழந்தையின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், பலதரப்பட்ட உணவு வகைகளை அவர்களுக்கு வழங்க வேண்டிய இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, அதன்படி செறிவூட்டப்பட்ட 7 உணவு வகைகளை உள்ளடக்கிய உணவுத் தொகுப்பினை ஆய்வாளர்கள் வடிவமைத்தனர்.
பொதுவாக உணவுப் படியாக வழங்கப்படும் மாவுப் பொருட்கள், சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து நெடுநேரம் சமைக்க வேண்டி உள்ளது. இவ்வகை உணவுக்காக அதிக பொருட்களும் நேரமும் பணமும் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஆய்வாளர்கள் மசாலா, கொழுப்பு மற்றும் சுவையுடன் கூடிய உடனடி தயாரிப்பு உணவு வகைகளை வடிவமைத்தனர். இதன் மூலம் சமைக்கும் நேரம் மற்றும் அதற்கான செலவு ஆகியவற்றைக் குறைக்க வழிவகை செய்தனர். பொதுவாக உணவு தயாரிக்க 20 நிமிடங்களுக்கு மேல் நேரம் செலவாகும். செறிவூட்டப்பட்ட இந்தத் தொகுப்பில் உணவு சமைக்க ஐந்து நிமிடங்களே போதுமானது.
இந்த ஆய்வு தாராவி பகுதியில் உள்ள 300 அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு ஆதரவளிக்கும் குழந்தைகள் நல மையங்களில் நடத்தப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 முதல் 60 மாத குழந்தைகள் வரை உலக சுகாதார மையப் பரிந்துரைப்படி இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். மூன்று மாதங்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு குழுவில் ஆய்வாளர்கள் வடிவமைத்த செறிவூட்டப்பட்ட உணவுகளை உண்ணும் குழந்தைகளும் மற்றொரு குழுவில் உணவுப்படி மூலம் உணவு உண்ணும் குழந்தைகளும் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதற்காக அங்கன்வாடி பணியாளர்களுக்கு செறிவூட்டப்பட்ட உணவுகள் குறித்தும் அவற்றின் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
மேலும், குழந்தைகளின் வயதிற்கேற்ப, உணவாற்றல் மற்றும் புரதத் தேவையைக் கணக்கில் கொண்டு, செறிவூட்டப்பட்ட உணவுகளை உண்ணும் குழந்தைகள் 2 உப குழுக்களாகப் பிரிக்கப்பட்டது (6 முதல் 24 மாதங்கள் மற்றும் 25 முதல் 60 மாதங்கள்). 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரை திண்ம நிலை உணவுகளான உப்புமா, பாயாசம் மற்றும் சத்துமாவுக் கஞ்சி முதலியவை வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர்களுக்கு நாளொன்றுக்குத் தேவையான உணவு ஆற்றல் 250 முதல் 300 கிலோ கலோரிகளும் 10 முதல் 12 கிராம் புரதமும் வழங்கப்பட்டது. பெரிய குழந்தைகளுக்குத் திண்ம உணவுகளும் மகராஷ்டிரா பாரம்பரிய உணவு வகைகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம் 450 முதல் 500 கிலோ கலோரிகளும் 12 முதல் 15 கிராம் புரதமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மாறாக உணவுப்படி உணவுண்ணும் குழந்தைகள் குழு ஒரே வகையான உணவுகளை உட்கொண்டனர்.
மூன்று மாத ஆய்வு முடிவில் ஆய்வாளர்கள் செரிவூட்டப்பட்ட உணவு உண்ணும் குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு 39.2 சதவீதம் குறைந்திருப்பதைக் கண்டறிந்தனர். உணவுப்படி உணவு உண்ணும் குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு 33% குறைந்திருப்பது அறியப்பட்டது. குழந்தைகளின் வயதிற்கேற்ப வழங்கப்பட்ட உணவு வகைகளாலும், சுவையினாலும் ஆய்வாளர்களால் வடிவமைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட உணவுத் தொகுப்பு பெரும் வரவேற்பினைப் பெற்றது. இதனால் 75 முதல் 80% வரை செறிவூட்டப்பட்ட உணவு உண்ணும் குழந்தைகளின் உணவு உட்கொள்ளல் விகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்தது. இருப்பினும், அங்கன்வாடி ஊழியர்களால் இரு குழுக்களின் நுகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படுவது ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்க பங்களித்திருக்கக்கூடும் என்று அறிந்தனர் ஆய்வாளர்கள்.
"பொதுவாக மராட்டிய மாநிலத்தில் நுண் சத்து குறைபாடு குறையாததன் காரணமாகவே இப்படிப்பட்ட மாற்று உத்திகளை நாம் ஆராய வேண்டி உள்ளது. இது குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டினை சரி செய்வதற்கு உதவும்" என்கிறார் பேராசிரியர் ஷா.
அரசு ஊட்டச்சத்து குறைபாட்டினை எதிர்கொள்ள ஆய்வாளர்கள் தங்களது மாற்று உத்திகள் மூலம் வழிகாட்ட விழைகின்றனர். இதன் நீட்சியாக அவர்கள் இந்த உணவு தயாரிக்க ஏற்படும் செலவு மற்றும் மனித வளம் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காக மராட்டிய ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையம் மற்றும் டாட்டா ஊட்டச்சத்து குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
"இதன் மூலம் அரசு வழங்கும் உணவுப்படியில் ஏழு பொருட்கள் கொண்ட உடனடித் தொகுப்பினை வழங்க வலியுறுத்தி உள்ளோம் என்கிறார் பேராசிரியர் ஷா.