முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

வறண்டுவரும் இந்திய ஆறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகள் - ஆய்வில் தகவல்

Read time: 1 min
இந்தூர்
4 ஜூலை 2019
வறண்டுவரும் இந்திய ஆறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகள் - ஆய்வில் தகவல்

மனித செயல்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பாதிக்கும் மேற்பட்ட இந்திய ஆறுகளின் நீர்பிடிப்புப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல்.

"ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" என்கிறது நல்வழி. அழகுக்கு மட்டுமல்லாது, மனித வரலாற்றில் மிகச்சிறந்த நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரைகளில் பிறந்தவைகளே. இந்திய நாகரீக வளர்ச்சியில் இன்றியமையாத பங்கினை வகித்த ஆறுகள் சமீப காலமாக, வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலை மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணிகளால் பெரிதும் மாறுதலுக்கு உட்பட்டுவிட்டன. அணைகள் கட்டுதல், பாசனம், வனங்களை மனித வாழ்விடமாக  மாற்றுதல், அதீத நிலத்தடி நீர் பயன்பாடு முதலிய மனித செயல்பாடுகள் காரணமாக ஆறுகளின் நீரோட்டம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. மனித செயல்பாடுகள் நீர்பிடிப்பு பகுதியின் தன்மையை எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கு, 2015ல் சென்னையின் ஏற்பட்ட வெள்ளமும், தற்சமயம் நிலவும் தண்ணீர் பஞ்சமும் சான்றாகும்.

இந்தோர் மற்றும் குஹாத்தியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில், மனித செயல்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றங்களினால் ஆற்றின் நீர்ப்பிடிப்புபகுதிகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு தரவுகள் சயின்டிபிக் ரிப்போர்ட் எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியானது. இதில் மனித மாற்றங்களால் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர் சுழற்சிகளில் ஏற்படும் இடையூறுளிலிருந்து எவ்வாறு மீள்கிறது என்பது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வினை தீபகற்ப இந்தியாவின் சுமார் 55 நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இதில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட நீர்பிடிப்புப் பகுதிகள் பருவநிலை மாற்றங்களுக்கு ஒப்புக் கொடுக்க முடியாமல் உள்ளன என்றும் இந்த பகுதிகள் எதிர்காலத்தில் வற்றிவிடவும் கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்திய தீபகற்பத்தில் உள்ள பெருமளவு ஆறுகள் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழைநீரால் வாழ்பவை. "மண்ணில் விழும் மழைநீர் ஓடும் நீர் மற்றும் ஆவியாகும் நீர் என இரண்டு வகைகளில்  இயங்குகிறது. இந்த நீர் பிடிப்புப்பகுதிகள் பாதிக்கப்பட்டதால், அதிகமான மழைநீர் ஆவியாகும் நிலை உள்ளது" என்கிறார் இந்த ஆய்வினை நடத்திய ஆய்வாளர்களில் ஒருவரும் இந்தோர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியருமான மணீஷ் குமார் கோயல்.

ஆறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகள் வறட்சியுற்றால், அதிகப்படியான மழைநீர் ஆவியாகும், மேலும் ஓடும் நீரின் அளவு குறைந்து நாளடைவில் ஆறுகள்  மரணித்துப்போக வழி வகுத்துவிடும். இந்த நீர்ப்பிடிப்பு பகுதிகள் அதிகமாக பாதிப்பிற்குள்ளாவதற்கு மனித செயல்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் காரணிகளாக அறியப்பட்டுள்ளது. இவ்வகை நீர்பிடிப்புப் பகுதிகள் சூழலியல் ரீதியாக அவற்றினை   புதுப்பித்துக் கொள்ளாவிடில் ஆறுகள் தற்காலிகமாக வற்றிப்போகவும், பின்னாளில் முழுவதுமாக வற்றிப்போகும் நிலைக்கு உள்ளாகக் கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வில், ஆறுகளின் புதுப்பித்துக்கொள்ளும் திறன் மீது மனித செயல்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்பினை பதினேழு ஆறுகளில், 55 நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆராய்ந்தனர். இவற்றுள் காவேரி மற்றும் கோதாவரி ஆறுகளும் அடக்கம். மனித செயல்பாடுகள் வெவ்வேறு நிலைகளில் இருந்த இரு வேறு காலகட்டங்களில் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். 1988 முதல் 1997 வரை குறைந்த மனித குறுக்கீடுகள் மற்றும் செயல்பாடுகள், 2001 முதல் 2011 வரை அதிக மனித குறுக்கீடுகள் மற்றும் செயல்பாடுகள் உள்ள காலகட்டங்களில் நீரின் போக்கு பற்றிய தரவுகளை சேகரித்துள்ளார்கள்.

ஆய்வாளர்கள் ஆறுகளின்  புதுப்பித்துக்கொள்ளும் திறனை இரண்டு வழிகளில் அளவிட்டனர். ஒன்று, பருவநிலை வெப்பமயமாகும் சூழலில், ஆறுகள் அதன் இயல்பான ஓட்டத்திலிருந்து விலகுதலை அடிப்படையாகக் கொண்டது. 1971 முதல் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் இந்தியாவில் வெப்பநிலை 0.22 டிகிரி செல்சியசாக உயருகிறது. இது முன்னர் 0.05 டிகிரி செல்சியாசாக இருந்தது. மற்றொரு அணுகுமுறை, நீர்ப்பிடிப்பு பகுதிகள் வெப்பமயமாதல் காலத்தில் மற்றும் சாதாரண காலத்திலும் ஓடும் நீர் மற்றும் ஆவியாகும் நீருக்கும் இடையேயான பகிர்வினை பராமரிக்கும் திறனை அடிப்படையாகக் கொண்டது.

இந்த ஆய்வின் முடிவுகள், 55 நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெறும் 23 நீர்ப்பிடிப்பு பகுதிகள் மட்டுமே பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு தங்கள் புதுப்பித்துக்கொள்ளும் திறனை தகவமைத்துக் கொள்கின்றன என்று தெரிவிக்கின்றன. இருப்பினும் எந்த நீர்ப்பிடிப்பு பகுதிகளும் அவற்றினை முழுமையாக  புதுப்பித்துக்கொள்ளவில்லை. குறிப்பாக 60 சதவீதத்திற்கும் அதிகமாக மனித குறுக்கீடு மற்றும் குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் ஆறுகளுக்கு  புதுப்பித்துக்கொள்ளும் திறன் அறவே இல்லை என்றும் தெரியவருகின்றது. பைதரணி, பிரம்மணி, கோதாவரி, கிருஷ்ணா, மாகி, நர்மதா, சாபர்மதி மற்றும் தாபி முதலிய ஆறுகளின் கரைகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளின் ஓட்டமும் அருகி வருகின்றதாகவும் அறியப்படுகின்றன. பொதுவாக மழைபொழிவின் அளவே ஆற்றின் நீரோட்டத்துக்கு மிகமுக்கிய காரணியாக கருதப்பட்டு வருகின்றது. "இந்த ஆய்வில் பல நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீரோட்டம் வெகுவாகக் குறைந்து வருகின்றது, மாற்றாக அவற்றின் மழைபொழிவின் அளவு அதிகரித்திருக்கிறது. ஆற்றின் நீண்டகால ஓட்டத்தில் மழைபொழிவினை மட்டுமே முதன்மை காரணியாக கருத முடியாது" என்கின்றனர் இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள். மாறாக, பருவநிலை மாற்றத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படும் நீர்பிடிப்புப்பகுதிகளில் 60 சதவீதம் மீள்வரும் திறனுடன் இருக்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள், இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவின் கிழக்கு மற்றும் மேல் தெற்குப் பகுதிகளை சார்ந்தவை. இந்தியாவின் மேற்குப் பகுதியினை சார்ந்த பகுதிகளில் உள்ள ஆறுகள் மீள்வரும் திறன் அற்றவை என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

"இந்த ஆய்வின் மூலமாக பருவநிலை மாற்றமும் மனித செயல்பாடுகளும் ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை எப்படி பாதிக்கின்றன என தனித்தனியாக ஆய்வு செய்துள்ளோம், அனால் இந்த இரண்டிற்குமான தொடர்பு மிகவும் நுட்பமானது" என்கிறார் பேராசிரியர் மணீஷ் குமார் கோயல்.

ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பசுமையை அதிகரித்து மண் அரிப்பினை தடுப்பது, மழை நீரை சேகரித்து குளங்கள் மற்றும் நீர்நிலைகளை பராமரித்து நீர் மேலாண்மையை கடைபிடிப்பது, காடுகளை பேணுதல் முதலிய உத்திகள் மூலமாக மனித செயல்பாட்டினால் ஆறுகளில் ஏற்படும் மாற்றங்களை தடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள். "ஆறுகளில் இருந்து மனித பயன்பாட்டிற்காக நீர் எடுக்க சரியான வழிகாட்டுதல்கள் தேவை, இவ்வாறு ஆறுகளின் நீரோட்டத்தினை காப்பதன் மூலமாக சுற்றுசூழலை பாதுகாக்க முடியும்" என்கிறார் பேராசிரியர் கோயல். தங்களது அடுத்தகட்ட ஆய்வில் வெவ்வேறு மனித செயல்பாடுகளான மாசு ஏற்படுத்துதல் மற்றும்  காடுகளை அழித்தல் எப்படி ஆறுகளை பாதிக்கின்றன என ஆய்வு செய்து வருவதாக ஆய்வாளர்கள் கூறினர்.

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு"

உலகின் தேவைக்கு மட்டுமன்று, வாழ்வியலுக்கும், நாகரீகத்துக்கும் நீரே ஆதாரம். நதிகள் நீர் தேக்கத்திற்கான இடங்கள் மட்டுமல்ல, அவைகள் மனித நாகரீகம் கடந்து வந்த நெடும் பயணத்தின் சாட்சிகள். இன்றளவும் நம் வாழ்வியலுக்கு துணை புரிந்துவரும் நதிகளை பேணுவது இன்றியமையாதது.