முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

இந்திய மக்களின் பொருளாதார நிலை உணவுகளின் பன்முகத்தன்மையை பாதிக்கின்றதா? ஆய்வில் தகவல்

Read time: 1 min
Mumbai
17 செப் 2020
How the purse affects the platter

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்" - 942 திருக்குறள்

உண்டு சீரணமானதை நன்கு உணர்ந்த பின் உண்பதே மருந்து என்கிறது உலகப்பொதுமறையான குறள். இன்று உணவே மருந்து எனும் கோட்பாடு உலகம் முழுமையும் பரவலாக ஓங்கி ஒலிக்கின்றது. மனித வாழ்வின் மிக அடிப்படையானது உணவு. இவ்வுலகம் பல்வேறு தரப்பட்ட மக்களையும், நாகரீகங்களையும் உள்ளடக்கியது போல் தன்னகத்தே பல்வேறு வகையான உணவு வகைகளையும் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள உணவு கலாச்சாரமும், உணவு வகைகளும் கணக்கில் அடங்காதவை. வெறும் பசி போக்கும் பொருளாக மட்டுமல்லாது, உணவே உடலுக்கு ஊட்டமும் வலிமையையும் நல்குகிறது. பலவகையான சத்துக்கள் மிகுந்த உணவினை உட்கொள்வதே உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். சரியான நேரத்தில் உண்ணும் சரியான உணவே உடலின் வளர்ச்சிக்கும், மூளையின் செயல்பாடுகளுக்கும் பெரிதும் துணை புரிகின்றது. உண்ணும் உணவின் அளவும், சமச்சீர் சத்துக்களும் குறையும்போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உண்டாகின்றது, குறிப்பாக குழந்தைகளில் உடல் வளர்ச்சி குன்றல் மற்றும் உடல்நலம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்க “போஷன் அபியான்” போன்ற பல திட்டங்கள் இந்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய திட்டங்கள் இருந்தபோதிலும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பரவலாக ஊட்டச்சத்து குறைபாடுகள் காணப்படுகின்றன. அரசு மற்றும் பல தனியார் நிறுவனங்கள் முன்னெடுக்கும் இந்தத்திட்டங்கள் பொதுவாக, வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவுகளில் அதிக கவனம் செலுத்துகின்றன, உணவு வகைகளின் பன்முகத்தன்மை குறித்து மிகக் குறைந்த அளவிலேயே நாட்டம் செலுத்தப்படுகின்றன. டாடா தொண்டு நிறுவனம், இந்திய பொருளாதார வளர்ச்சி மையம் (Institute of Economic Growth) மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களையும், உணவு பன்முகத்தன்மையினையும் அவர்களின் சமூகப்-பொருளாதார நிலை எப்படி தீர்மானிக்கின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் யுரோப்பியன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷன் (European Journal of Clinical Nutrition) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வுக்காக, 2015-16 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பிலிருந்து, 29 மாநிலங்கள் மற்றும் 7 ஒன்றிய பிரதேசங்களில் இருந்து மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த தரவுகளை ஆய்வாளர்கள் சேகரித்துள்ளார்கள். இந்த ஆய்வில் ஆறிலிருந்து இருபத்திமூன்று மாதங்களுக்குட்பட்ட 74,000 குழந்தைகளின் ஊட்டச்சத்து, குழந்தைகள் கடைசி 24 மணி நேரத்தில் எடுத்துக்கொண்ட உணவுகள் குறித்தும் அவர்களின் தாய்மார்களிடம் பெறப்பட்ட தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதலின்படி, ஆய்வாளர்கள் உணவு வகைகளை ஏழு வகைகளாக பிரித்தனர். முதல் குழுவில் தானியங்கள், வேர்கள், கிழங்கு வகைகளை உள்ளடக்கிய உணவுகளை வகைப்படுத்தினர். பருப்புகள் மற்றும் கொட்டை வகைகள் சார்ந்த உணவுக்குழுவில் அவரை விதைகள், பருப்பு மற்றும் பயிறுகள் போன்றவைகளை வகைப்படுத்தினார். செம்மங்கி, பரங்கி, பீர்க்கை முதலியவைகள், கீரை வகைகள், மா, பப்பாளி போன்ற கனி வகைகளை உயிர்ச்சத்து ஏ நிறைந்த உணவுக்குழுவில் சேர்த்தனர். பால் சார்ந்த பொருட்கள் ஒரு குழுவாகவும், இறைச்சி சார்ந்த உணவுகள் ஒரு குழுவாகவும், முட்டை சார்ந்த உணவுகளை ஒரு குழுவாகவும், இறுதியாக ஏனைய காய் கனிகள் ஒரு குழுவாகவும் பகுக்கப்பட்டன. இந்த குழுக்களில் மொத்தமாக 21 வகை உணவுகள் வரையறுக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் உண்ணும் உணவில் இந்த குழுக்களில் இருந்து குறைந்தது ஏதேனும் நான்கு உணவுகளை உண்டிருந்தால் அவர்களுடைய உணவுப் பன்முகத்தன்மை கொண்டவர்களாக கணக்கில் கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் ஏழு உணவு வகை குழுக்களில் 74 சதவீத குழந்தைகள் தானியங்கள், கிழங்குகள் சார்ந்த உணவுகளை உட்கொள்வதாகக் கண்டறிந்தனர். 55 சதவீத குழந்தைகள்  பால் பொருட்கள் சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதாகவும், 37 சதவீதம் மற்றைய காய்கனிகள் உண்பதாகவும் தெரிய வந்துள்ளது. 29 சதவீதம் குழந்தைகள் உயிர்சத்து ஏ உணவுகள் உண்பதாகவும், 14 சதவீதம் குழந்தைகள் முட்டை சார்ந்த உணவுகள் உண்பதாகவும் தெரிய வந்துள்ளது. 13 சதவீதத்தினர் பருப்புகள் மற்றும் கொட்டைகள் உண்பதாகவும், 10 சதவீதத்தினர் மட்டுமே இறைச்சி உண்பதாகவும் இந்த ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.

குறிப்பிடப்படும்படியாக, பழச்சாறு, செறிவூட்டப்பட்ட குழந்தை உணவுகள் மற்றும் தயிர் சார்ந்த உணவு வகைகள் குறைந்த வருவாய் உள்ள குடும்பங்களைக் காட்டிலும் வசதியான குடும்பங்களில் நான்கு  மடங்கு அதிகமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவதாக இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது. இதைப்போலவே வளமான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் செறிவூட்டப்பட்ட பால், ஆணம், பாலடைக்கட்டிகள், தயிர் மற்றும் பால் பொருட்களை வறிய குழந்தைகளைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர்.


6 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளால் உட்கொள்ளப்படும் உணவுகளின் வகைகள் (தரவு)

இந்த ஆய்வில் மூலமாக ஏழை மற்றும் பணக்காரர்களின் உணவு பன்முகத்தன்மையினில் பெரிதளவில் மாற்றம் இல்லை என்று தெரிகிறது. உணவுப் பன்முகத்தன்மை என்பது 0 முதல் 7 வரை உள்ள உணவு குழுக்களில் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும் எண்ணிக்கையினை பொறுத்து மதிப்பெண்ணாக வரையறுக்கப்பட்டது. 0 மதிப்பெண் பெற்றுள்ள குழந்தைகள் வரையறுக்கப்பட்டுள்ள 21 உணவுகளில் ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், 7 மதிப்பெண் எடுத்துள்ள குழந்தைகள் இந்த ஏழு குழு வகை உணவுகளில் இருந்தும் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட உணவுகள் எடுத்துள்ளன என்று கணக்கிடப்பட்டது. இந்த மதிப்பெண்கள் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களில் 2 ஆகவும் பொருளாதாரத்தில் மேம்பட்ட குடும்பங்களில் 2.5 ஆகவும் இருந்தது. மேலும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களில் கூட 18 சதவீத குழந்தைகள் போதிய அளவு உணவு பன்முகத்தன்மையை பெற்றிந்தருந்தனர். இது பொருளாதாரத்தில் மேம்பட்ட குடும்பங்களில் 28 சதவீதமாக இருந்தது.

மேலும் வியப்பளிக்கும் விதமாக, தாய்மார்களின் கல்வியறிவுக்கும் குழந்தைகளின் உணவு நுகர்வுகக்குமான நெருங்கிய தொடர்பினைப் பற்றி இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. உதாரணமாக, குழந்தைகளுக்கு செறிவூட்ட பால் கொடுப்பதில் கல்வியறிவு பெறாத தாய்மார்களுக்கும் உயர்நிலை கல்வி வரை பயின்ற தாய்மார்களுக்கும் நான்கு மடங்கு வேறுபாடு உள்ளது எனத் தெரியவந்துள்ளது. இந்த வேறுபாடுகள் பழச்சாறுகள் மற்றும் தயிர் சார்ந்த பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதில் மூன்று மடங்கும், ஆணம், பழங்கள், மீன், பாலடைக்கட்டிகள் மற்றைய பால் பொருட்கள் கொடுப்பதில் இரு மடங்கும் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

"பரங்கி, செம்மங்கி, பீர்க்கை, கீரைகள், இறைச்சி, மீன், ஓடுடை மீன், பயிர் வகைகள் மற்றும் கொட்டைகள்  முதலிய உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும் தாய்மார்களின் கல்விக்கும் பெரிதும் தொடர்பு உள்ளது என்றும், பொருளாதாரத்திற்கும் உணவு பல்வகைத்தன்மைக்கும் பெரிதும் தொடர்பில்லை என்றும் தெரிய வருகின்றது" என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் மூலம், ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தைக் காட்டிலும், பெண்களின் கல்வியே குழந்தைகளின் உணவு முறைக்கு பெரிதும் வலு சேர்க்கும் என்றும் ஆய்வில் தெரிகின்றது. "விலை குறைந்த காய் வகைகளான பரங்கி, செம்மங்கி, கீரைகள் முதலியவைகளை உணவில் சேர்ப்பதன் மூலமாக உணவின் பன்முகத்தன்மையினை அதிகரிக்க முடியும்" என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்த ஆய்வில், குழந்தைகளின் உணவு தேவைகளைத் தேர்வு செய்ய பெற்றோர்களின் கல்வியறிவு போதுமானதாக இல்லை என்பதையும், உயர் சமூக-பொருளாதார நிலையில் உள்ள மக்கள் பெரிதும் தொகுக்கப்பட்ட உணவினையே உட்கொள்வதாக தெரிய வருகிறது. இந்த நிலை மிகவும் ஆபத்தானது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். சமச்சீர் உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் தொடர்பான சரியான தகவல்களை பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கற்பிப்பதன் மூலமாகவே இந்தியாவில் சரியான ஊட்டச்சத்து மாற்றத்தினை முன்னெடுக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

"இந்திய குழந்தைகளுக்காக வடிவமைக்கப்படும் உணவு நுகர்தல் மற்றும் உணவு பன்முகத்தன்மை குறித்த கோட்பாடுகள் உலகளாவியதாக இருக்க வேண்டும், இதுவே எதிர்காலத்தில் இந்திய மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுகாதாரத்தில் முன்னெடுக்க வழிவகை செய்யும்" என்று முடித்தனர் ஆய்வாளர்கள்.