இந்தியப் பெருங்கடலில் சுனாமி எனும் ஆழிப்பேரலை கோரத் தாண்டவம் ஆடியதற்குப் 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும், அது ஆயிரக்கணக்கான மக்களின் மனங்களிலும் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய சொல்லொணா தாக்கம் இன்னும் அழியவில்லை.
இந்தியக் கடலோரங்களில் அமைந்த இயற்கை தடுப்புகளான (natural barriers) அலையாத்தி மரங்கள் (mangroves) இல்லாமல் போயிருந்தால், அழிவும் தாக்கமும் இன்னும் அதிகமாகியிருக்குமென்பது உண்மை. இந்த இயற்கை பேரிடர், பேரலைகளின் வேகத்தைக் குறைக்கும், அடித்து வரப்படும் குப்பைக் கூளங்களைத் தடுக்க உதவும். ஒவ்வொரு ஆண்டும் ‘புயல் எழுச்சி’ நிகழ்வுகளின்போது, கடல் உயர்ந்து சூறாவளிகள் ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்குகள் கடலோரப் பகுதிகளை பாதிக்கின்றன. இந்தப் பேரழிவுகளுக்கு எதிராக உயிர்கவசமாக அலையாத்தி மரங்கள் செயல்படுகின்றன. கடல்சுவர்கள் (sea walls) போன்ற வழக்கமான பாதுகாப்பு முறைகளை அமைப்பது சாத்தியமானதுதான். ஆனால், அது மிகுந்த பொருட்செலவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இயற்கை செயல்முறைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அபாயமும் உள்ளது.
மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT Bombay) ஆராய்ச்சியாளர்கள், நீரில் மிதக்கும் கடலோர தாவரங்கள், ஆழிப்பேரலையின் தாக்கத்திற்கெதிராக இயற்கை அரணாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்தனர்.
அவர்களது சமீபத்திய ஆய்வில், சுனாமியால் உருவாகும் குப்பைக் கூளங்கள் கட்டிடங்கள் மற்றும் பாலங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை, அலையாத்தி மரங்கள் (mangroves) எவ்வாறு குறைக்க முடியும் என்பதையும் ஆய்வு செய்தனர். இதற்காக, ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் எண்ணளவு முறைகளை (numerical methods) பயன்படுத்தினர்.
அவர்கள் சீராக்கியத் துணிக்கை நீரியக்கவிசையியல் (Smoothed Particle Hydrodynamics) முறையில் கணினி மாதிரியை உருவாக்கினர். இதன் மூலம், திரவங்கள் எவ்வாறு நடந்துக் கொள்கின்றன என்பதை கணிப்பதோடு, நீர், தாவரங்கள், மற்றும் கூளங்கள் போன்றவற்றுக்கிடையேயான சிக்கலான தொடர்புகளை ஆய்ந்து விளக்க முடிந்தது.
இயற்கை மிக உயர்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் இயற்கைக்கு ஏற்ப செயல்பட வேண்டுமே தவிர, அதற்கு எதிராகச் செல்லக்கூடாது. கடல் அலைகள், கடலோர நீரோட்டங்கள் (coastal currents), மற்றும் கடற்கரை வண்டல் படிவக் கடத்துமை (coastal sediment transport) போன்றவை முக்கியமான இயற்கை செயல்பாடுகளாகும். எனவே, எந்தவிதமான கடலோர பாதுகாப்பு திட்டமும் இயற்கை செயல்முறைகளுக்கு குறுக்கீடாக அமையக்கூடாது," என்று மும்மை இந்திய தொழில்நுட்ப கழகத்தி குடிமுறைப் பொறியியல் துறையின் பேராசிரியர் பெகரா தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்விற்கு, கடற்கை பகுதிகளில் காணப்படும் பலவகை தாவர வகைகளில், ஆராய்ச்சியாளர்கள் நீரில் மிதக்கும் தாவர வகையைத் தேர்வு செய்தனர். இந்த வகை தாவரங்கள் நீருக்குள் வேரூன்றி, அவற்றின் தண்டு, இலைகள், மற்றும் மலர்கள், நீரின் மேற்பரப்பிற்கு மேல் வெளிப்பட்டு இருக்கும். அலையாத்தி மரங்கள் தண்ணீருக்குள் வேரூன்றி, திடமான தண்டுகளைக் கொண்டிருப்பதால், பேரலைகளின் வேகத்தை ஆற்றும் தன்மைக் கொண்டவை.
அலையாத்தி மரங்கள் கடல் பேரிடர்களுக்கு எதிரான இயற்கைக் கவசங்களாக (bio-shields) செயல்படுகின்றன. ஒடிசாவின் பிதர்கணிகா (Bhitarkanika) பகுதியில் இருக்கும் அலையாத்தி மரங்கள், ஒவ்வொரு ஆண்டும் தாக்கும் சூறாவளிகளிலிருந்து கடற்கரைகளை பாதுகாக்கும் முக்கியமான பங்கு வகிக்கின்றன," என்று பேராசிரியர் பெகரா தெரிவித்தார்.
இதற்குப் பதிலாக, மிதக்கும் தாவரங்களும் (floating vegetation) முழ்கிய தாவரங்களும் (submerged vegetation), ஆழிப்பேரலைகளால் எளிதில் அடித்துச் செல்லப்படுவதோடு, அலையின் வேகத்தைக் குறைக்கும் அளவிற்கு போதுமான சக்தி கொண்டதாக இல்லையென ஆய்வில் கண்டறியப்பட்டது.
பரிசோதனைக்காக, கடலோர சூழலை ஒத்திருக்கும் ஒரு பெரிய நீர்தொட்டி உருவாக்கப்பட்டது. அதில், கடலோர கட்டிடங்களை பிரதிபலிக்க ஒரு தூண் மற்றும் அலுமினியக் கூள மாதிரியாகப் பயண்படுத்தப்பட்டது. மேலும் கப்பலின் கொள்கலன்களை (shipping containers) ஒத்த மாதிரியாக பயன்படுத்தப்பட்டன. ஒரு செங்குத்தான வாயிற்கதவு திடீரென திறக்கப்பட்டபோது, நீர் அதிவேகமாக பாய்ந்து ஆழிப்பேரலையின் தாக்கத்தை உருவாக்கியது. தூணில் பொருத்தப்பட்ட உணரிகள்(sensors), கூளங்கள் ஏற்படுத்தும் அழுத்தத்தைக் பதிவுசெய்தன. அதேபோல், கூள மாதிரியில் உள்ள முடுக்க அளவி (accelerometer) அதன் வேகத்தைக் கணித்தது.
இந்த ஆய்வில், அடித்து வரப்படும் கனரக கூளங்களே கட்டிடங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது கண்டறியப்பட்டது. இது, ஆழிப்பேரலைகளின்போது பெரிய பொருட்கள் அடித்து வருவதால் ஏற்படும் அபாயத்தை முன்வைக்கிறது.
ஒப்புருவாக்கப்பட்ட கடலோர பாதுகாப்பு முறை. படம்: முனைவர். ஆதித்ய குப்தாவின் PhD ஆய்வறிக்கை, IITB-மொனாஷ் கல்விக்கழகம், IIT மும்மை (மேற்பார்வையாளர் பேரா. பெஹேரா).
எண்ணளவு முறை பகுப்பாய்வில் கணினி ஒப்புருவாக்கத்தைக் (computer simulations) கொண்டு தாவரங்களின் செயல்திறனை அளவிட்டார்கள். சீராக்கியத் துணிக்கை நீரியக்கவிசையியல் கொண்டு தூணின் (column) மீது கூளத்தின் தாக்கத்தையும், அலையின் வேகத்தை ஆற்றுவதில் தாவரங்களின் செயல்திறனையும் கண்டறிந்தனர். குறிப்பாக, உறுதியான, நேராக நிற்கும் தாவரங்கள் மற்றும் அலைகளின் அழுத்தத்தால் சாயக்கூடிய தாவரங்கள் ஆகிய இருவகை தாவரங்களின் மீது அலையிக்கத்தை ஆய்வு செய்தனர்.
நீரியக்கவிசையியல் (Hydrodynamics) ஆய்வில் மூன்று முக்கிய குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு, தாவரங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யப்பட்டது:
- அலைவேகத்தை குறைக்கும் அளவு – Reduced Fluid Force Index (RFI)
- நகரும் குப்பைகூளங்களின் வேகத்தைக் குறைக்கும் அளவு – Reduced Momentum Index (RMI)
- அலை உயரத்தை குறைக்கும் திறன் – Transmission Coefficient (CT)
அலையாத்தி மரங்களைச் சேர்ந்த உறுதியான தாவரங்கள், சாயக்கூடிய தாவரங்களை விட நீர் மற்றும் கூளங்களை அதிக அளவில் தடுத்தன. தூண்களில் குப்பைகூளங்களின் தாக்கத்தை உறுதியான தாவரங்கள் உறுதியான தாவரங்கள் 96% வரை குறைத்தன, ஆனால் சாயக்கூடிய தாவரங்கள் 89% மட்டுமே குறைக்க முடிந்தன.
"கடற்கரையின் ஓரத்தில் உறுதியான, நேராக நிற்கும் வகை தாவரங்களை நடுவதன் மூலம், மண்ணரிப்பைத் தடுக்கலாம், புயல் எழுச்சிகள் (storm surges) மற்றும் கடல் வெள்ளப்பெருக்குகளுக்கு (coastal floodings) எதிரான பாதுகாப்பை வழங்க முடியும். உயிர்கவசங்களாக செயல்படும் இந்தத் தாவரங்கள், சுற்றுசூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், கரிமத் தேக்கங்களாக (carbon sinks) செயல்பட்டு, இந்தியாவின் நிகர் சுழிய (Net zero) இலக்கை அடைய உதவலாம்," என பேராசிரியர் பெகரா தெரிவித்தார்.
இந்த ஆய்வு, ஆழிப்பேரலைகளால் கடலோர கட்டிடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் சிறந்த பாதுகாப்பு அமைப்பு நேராக நிற்கும் வகை தாவரங்களே என்பதைக் காட்டுகிறது.
அடுத்த கட்டமாக, இயற்கை சூழலில் பிற தாவர வகைகளை ஆய்வு செய்வது முக்கியமானது. மேலும், அலை இயக்க முறைகள் மற்றும் வேறு வகையான குப்பைகூளங்களை உள்ளடக்கிய ஆய்வுகளும் தேவையாகின்றன. அதோடு, உயர்தர கணினி ஒப்புருவாக்கங்கள் (advanced simulations) மூலம் அதிக துல்லியமான முடிவுகளைக் கண்டறிவது அவசியம்," எனப் பேராசிரியர் பெகரா தெரிவித்தார்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், கடற்கரை பாதுகாப்பு திட்டமிடுபவர்களுக்கு, பேரிடரின் ஆபத்தைக் குறைக்கும் பொருட்டு எந்த வகையான தாவரங்களை பயன்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டியாக செயல்படுகின்றன. மேலும், கொள்கை வகுப்பாளர்கள் (policy makers) மற்றும் பொறியாளர்களை (engineers), குறைந்த செலவில் நீடித்து வலுவாகவும் செயல்படும் ஒரு பாதுகாப்பு முறையை உருவாக்க ஊக்குவிக்கிறது.
Editor's Note: The story was updated to rectify the writer's name. The error is regretted.