முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

ப்ரோஅஹேடுல்லா அன்டிகுவா - மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பல லட்சமாண்டுகள் வரலாற்றுடன் உலவும் பச்சைப்பாம்பினம்!

Read time: 1 min
Bengaluru
1 ஆக 2019
ப்ரோஅஹேடுல்லா அன்டிகுவா - மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பல லட்சமாண்டுகள் வரலாற்றுடன் உலவும் பச்சைப்பாம்பினம்!

“சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கரு இருந்து ஈன்று.....”
– 53 - நந்திகலம்பகம் - சீவகசிந்தாமணி

அரும்பிவரும் நெல் பயிர்களானது பார்பதற்கு பச்சைப்பாம்பின் உடலை ஒத்திருக்கும் என்னும் உவமையுடன் துவங்குகிறது திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணி பாடலொன்று. பச்சைப்பாம்புகளின் உருவவியலை உற்றுநோக்கி பல நூற்றாண்டுகளுக்கு முன் இலக்கியங்களில் பதிவிட்டதன் மூலம் நம்மைச்சுற்றியுள்ள நிலப்பரப்புகளில் அன்றே பச்சைப்பாம்புகள் உலவியிருந்ததை ஆவணப்படுத்தியுள்ளனர் நம் தமிழ் மறவர்கள்.

இதுபோன்ற உயிர்களின் வரலாற்றை ஆராய்வதும், ஆவணப்படுத்துவதும் என்றுமே எளிதானதல்ல. காலத்தை பின்னோக்கி கடக்கும் இதுபோன்ற பயணங்களில் நாம் பல்வேறு புதிர்களை கடந்தால் மட்டுமே நாம் தேடும் பதில்களை அடையமுடிகின்றது.   சில நேரங்களில், பல லட்சமாண்டுகளின் வரலாற்றை நம் கண் முன்னே காட்டும் காலச்சுவடிகளை தயாளத்துடன் நமக்கு பரிசளித்துவிடுகிறாள் இயற்கை அன்னை. சமீபத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வுதான் சில ஊர்வனவியலாளர்களுக்கு நடந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் களப்பணிகளின்போது  சற்றே வழக்கத்திற்கு மாறான ஒரு பச்சைப்பாம்பை கண்டபோது அது உள்ளடக்கி வத்திருந்த வரலாற்றுத் தகவல்களை அவர்கள் உணர்ந்திரவில்லை. இந்த புதுப்பாம்பை ப்ரோஅஹேடுல்லா அன்டிகுவா (Proahaetulla antiqua) என அவர்கள் அழைக்கின்றனர்.

“2011 ஆம் ஆண்டு, நாங்கள் அகஸ்தியமலைக்காடுகளில் வழக்கமாக காணப்படும் அஹேடுல்லா டிஸ்பார் (Ahaetulla dispar) என்னும் சிறிய பச்சைப்பாம்பினத்தை போன்ற உடலமைப்பைக்கொண்ட ஒரு பச்சைப்பாம்பை கண்டோம். அதை உடனே ஒரு புதுப் பச்சைப்பாம்பு சிற்றினமாகவும் அடையாளப்படுத்தினோம். ஆனால் அந்த பாம்பானது வரலாற்று ரீதியில்  ஆழமான பரிணாம வரலாற்றை பெற்றிருந்திருப்பதை நாங்கள் அப்போது உணரவில்லை”  என்கிறார் இவ்வாய்வின் முதன்மை ஆசிரியரான இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த முனைவர். அசோக் மாலிக்

பெங்களூருவின் இந்திய அறிவியல் நிறுவனத்தை (Indian Institute of Science) சார்ந்த ஊர்வனவியலாளர்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலிருக்கும் பாம்பினங்களை முறையாக வகைப்படுத்தி ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுதே அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தென் பகுதிகளில் மட்டுமே காணப்படும் ப்ரோஅஹேடுல்லா அன்டிகுவாவினை கண்டுள்ளனர். சுவாரசியமாக இப்பாம்பானது 260 லட்சமாண்டுகளுக்கு முந்தைய காலமான இடைநிலை ஒலிகோசீன் (mid-Oligocene) காலத்தில் பரிணாமித்திருக்கக் கூடியதாக கருதப்படும் ஒரு தொன்மை வாய்ந்த சிற்றினம் என்பதையும் இவர்களின் ஆய்வு கண்டறிந்துள்ளது.

“தீவிர களப்பணிகளின் விளைவாக, இந்தியா முழுவதும் பச்சைப்பாம்புகளின் உருவவியல் தரவுகள், திசு மற்றும் உயிர் மாதிரிகளை சேகரித்து அவற்றின் மூலம் பச்சைப்பாம்பு சிற்றினங்களின் பரவல் பாங்குகள் மற்றும் பரிணாம வரலாற்றை புரிந்துகொள்ள முயற்சித்தோம்” என்கிறார் முனைவர் அசோக் மாலிக். ப்லாஸ் ஒன் எனும் ஆய்விதழில் வெளியான இவ்வாய்வில் சென்னை பாம்பு பூங்கா (Chennai Snake Park) மற்றும் பம்பாய் இயற்கை வரலாற்று  குழுமத்தைச் (Bombay Natural History Society) சார்ந்த ஆய்வாளர்களுடன்  இணைந்து இப்பாம்பின் தனித்துவமான தன்மைகளை இவர்கள் விவரித்துள்ளனர். இவ்வாய்வு இந்தியாவின் உயிர்தொழில்நுட்ப துறை (Department of Biotechnology), சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forests and Climate Change),  உயிர் தொழிநுட்பத்துறை-இந்திய அறிவியல் நிறுவன கூட்டாண்மைத்திட்டம் (DBT-IISc Partnership Programme) மற்றும் சூழ்மண்டல நுண்ணாய்வு கூட்டாண்மை நிதி (Critical Ecosystem Partnership Fund) போன்ற அமைப்புகளின் நிதி நல்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தன் பச்சை நிறத்தோற்றத்தால் இப்பாம்புகள் தமிழில் “பச்சைப்பாம்பு” என்றும் தன் ஒல்லியான கொடிபோன்ற உருவத்தால் ஆங்கிலத்தில் “வைன்” (vine = கொடி) அதாவது கொடிப்பாம்புகளெனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வகை கொடிப்போல் இருக்கும் பச்சைப்பாம்புகள் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்பட்டாலும், ஆசிய பச்சைபாம்புகள் அனைத்தும் அஹேடுல்லா (Ahaetulla) என்னும் பேரினத்தை மட்டுமே சார்ந்தவையாக உள்ளன. இந்தியா முழுவதும் இதுவரை நான்கு சிற்றினங்கள் பரவலாக அறியப்பட்டிருந்தன.  மேலும் ஒரு சிற்றினம் சமீபத்தில் ஒடிசாவில் இருந்து   விவரிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் ப்ரோஅஹேடுல்லா அன்டிகுவாவின் இனவரலாற்று வம்சாவளி மரத்தினை ஆராய்ந்தபோது, இப்பாம்பினமானது இதர பச்சைப்பாம்பு சிற்றினங்களிலிருந்து சுமார் 260 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தனி சிற்றினமாக பிரிந்து பரிணாமம் அடைந்துள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். எனவே இப்பாம்பு ஒரு புது சிற்றினம் மட்டுமல்லாமல் ஒரு புது பேரினமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் இந்த வரலாற்று தொன்மையினால் “பழமை” அல்லது “தொன்மை” என பொருள் கொள்ளும் இலத்தீன் சொல்லான “ஆன்டிகுவா”வினை இதன் அறிவியல் சிற்றின பெயராக ஆய்வாளர்கள் சூட்டியுள்ளனர். உடலின் மேற்பரப்பில் “கீல்” எனப்படும் அடித்தட்டைகளைக் கொண்டுள்ளதால் இப்பாம்பிற்கு “கீல்ட் பச்சைப்பாம்பு” எனும் பொதுப்பெயரை பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.

“தன் அதீத மரபியல் பரிணாமத்தால் இந்த ப்ரோஅஹேடுல்லா பேரினம் இதர பச்சைப்பாம்பு சிற்றினங்களிலிருந்து உருவவியல் பண்புகளால் வேறுபட்டு நிற்கின்றது. மேலும் விழிகளிற்கு பின்னிருக்கும் செதில்கள், அடித்தட்டைகளுடனான முதுக்குப்புற செதில்கள், அதிக எண்ணிக்கையிலான துருவுத்தாடைப்பற்கள், முதுகுப்புற செதில்கள், அடிப்புற மற்றும் வாலின் கீழுள்ள கவசங்கள் போன்ற அம்சங்களிலும் இப்பாம்பு இதர சிற்றினங்களிலிருந்து மாறுபட்டே நிற்கின்றது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருக்கும் இதர பச்சைப்பாம்புகளைவிட இந்தப்புது பாம்பினம் நீளமான ஒன்றாகவும் இருக்கின்றது” என இந்தப்புது பாம்பினத்தின் தோற்றக்கூறுகளைப்பற்றிக் விவரிக்கிறார்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளான தமிழகத்தின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் (Kalakkad Mundanthurai Tiger Reserve) மற்றும் கேரளாவின் செந்துர்ணி வனவுயிர் காப்பகத்தில் (Shendurney Wildlife Sanctuary) கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாம்பு மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்தப்புது சிற்றினத்தை ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர்.

“இவ்விரண்டு பாம்புகளுமே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை. மேலும் இவை ஒரு சிறு எல்லைகளுக்குள்,  அதாவது மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தென் பகுதிகளில் மட்டுமே வாழக்கூடிய பாம்பினமாகவே இருக்கக்கூடும்” என்கிறார் முனைவர் மல்லிக். இந்த கண்டுபிடிப்பானது பச்சைப்பாம்புகளின் பரிணாமத்தை மட்டுமன்றி இமயமலைகளைவிட பழமையான நிலப்பரப்பான மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பரிணாம வரலாற்றையும் புரிந்துகொள்ள உதவியுள்ளது.

இந்தியாவில் ஊர்வனவியலாய்வுகள் தற்போது வளர்ந்து வருவதன் விளைவாக ஊர்வனங்களின் பல்வகைமையையும் அவற்றின் பரிணாம வரலாற்றையும் நாம் நங்கு உணர ஆரம்பித்துள்ளோம். மேற்குத்தொடர்ச்சி மலைகளானது ஆங்கிலேயர்கள் காலம் முதல் ஆய்விற்குட்படுத்தப்பட்ட ஒரு நிலப்பரப்பாக இருந்துவருகிறது. இருப்பினும் இத்துனை தொன்மையான ஒரு பாம்பினை இந்நாள்வரையில் நாம் இனம்காண மறந்தது எப்படி என்ற கேள்வி எல்லோருக்கும் எஞ்சி நிற்கிறது. மேலும், இத்தகைய கண்டுபிடிப்புகள் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அறியப்பட பல்வகைமையை எடுத்துரைக்கிறது.

“இந்தியாவில் வகைப்பாட்டியல் ஆய்வுகளில் பெரிதும் நாட்டமில்லாமல் இருந்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.  இதுபோன்ற  திட்டமிட்ட ஆய்வுகளை மேற்கொள்ள பெரிய அளவிலான களப்பணியும் மற்றும் நிதியுதவிகளும் தேவை. ஆனால் இங்கே அது அவ்வளவாக இருப்பதில்லை. மேலும் ப்ரோஅஹேடுல்லா  மேலோட்டமாக அஹேடுல்லா டிஸ்பர் எனப்படும் “குந்தரின் பச்சைப்பாம்பைப்” போல் தோற்றமளிப்பதால், ஒருவேலை இந்த பாம்புகள் அ. டிஸ்பராக தவறாக வகைப்படுத்தப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது ” என பகிர்கிறார் முனைவர் அசோக் மாலிக்.

ப்ரோஅஹேடுல்லா ஆன்டிகுவா போன்ற தொன்மையான சிற்றினங்களை கண்டறிவதன் மூலம் நம் தேசத்தில் மறைந்திருக்கும் இனம்கண்டிறாத பல்லுயிர்களின் பல்வகைமைகளை அறியமுடிகின்றது. “வளர்ந்துவரும் மனித செயல்பாடுகளின் விளைவாக முற்றிலும் அழிந்துவிடுவதற்குமுன் நம்மால் கண்டெடுக்கப்படவேண்டிய இதுபோன்ற சிற்றினங்கள் பல இன்னும் அங்கே மறைந்துக் கொண்டிருக்கின்றன” என்கிறார் முனைவர் அசோக் மாலிக்.  இந்த பாம்பினமானது இதுவரை எந்த ஒரு அச்சுறுத்தலிற்கும் ஆளாகாமலிருப்பது சற்றே மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியாகும்.

இந்திய மக்கள் சரியாக புரிந்துகொள்ளாமலிருக்கும் உயிரினங்களில் பாம்புகள் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் இந்தியாவில் அவை பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஆனால் இதே இந்தியாவில்  தான் இப்பாம்புகள் தெய்வமாகவும் வழிபடப்படுகின்றன. இந்த புரிதல் இடைவெளியினை நிரப்புவதும் ஆய்வாளர்களின் முக்கிய செயலாகிறது.

“பெரும்பான்மையான பாம்புகள் தாங்கள் வாழும் பகுதிகளின் சூழலியலில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை பலநிலப்பரப்புகளில் முக்கிய கொன்றுண்ணிகளாக இருப்பதால் எலிகள் போன்ற சிறிய இரை உயிரிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. எனவே  பாம்புகள் பற்றியும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவங்கள் மற்றும் பயங்கள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது  சற்று அதிகமாக இருப்பது அவசியமாகிறது” எனக்கூறி முடித்தார் முனைவர் அசோக் மாலிக்.