“ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்ற…”
-326- பருத்திப் பெண்டின் சிறு தீ!
வல்லாளன் எனும் போர் வீரனின் ஊரை விவரிக்கும் ஒரு புறநானூற்றுப் பாடலில், தங்கள் ஊரின் பழமையான வேலிகளில் நடந்து வந்து இரவு நேரத்தில் இளம் பெண் கோழிக்குஞ்சுகளை வேட்டையாடும் “வெருகு” என்னும் காட்டுப்பூனையின் குறிப்பை ஆவணப்படுத்தியுள்ளார் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்னும் சங்கப்புலவர். இதன் மூலம் நம் நாட்டின் நிலப்பரப்புகளில் காட்டுப்பூனைகள் ஒரு கவனிக்கத்தகுந்த வனவிலங்காக பலநூறு ஆண்டுகளாக இருந்து வருவது தெளிவாகிறது.
இத்தகைய வரலாற்று சான்றுகள் ஒருபுறம் இருக்க, அருணாசலப் பிரதேசத்தின் திபாங்கு பள்ளத்தாக்கில் உள்ள வனப்பகுதிகளில் 2014ஆம் ஆண்டு, முனைவர் சாஹில் நிஜாவான் தலைமையில், இதூ மிஷ்மி மக்களை உள்ளடக்கிய ஒரு குழுவானது பெரிய மற்றும் இடைநிலை அளவிலான பாலூட்டிகளின் படர்வு எல்லைகளை புரிந்துகொள்வதற்காக நிழற்படக்கருவிகளை அப்பகுதிகளில் நிறுவியுள்ளனர். 20 மாதங்களிற்குப் பின்னர் இக்கருவியினால் எடுக்கப்பட்ட படங்களை இவர்கள் உற்றுநோக்க ஆரம்பித்தப்போது, எதிர்பாராத ஒரு வினேதத்தை அவர்கள் கண்டனர். இடைநிலை அளவிலான பூனைகளான ஆசிய பொற்சாயற் பூனைகளின் (Asiatic golden cats) பல்வேறு படங்களே அந்த வினோதமாகும்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் வடகிழக்கிந்தியாவின் திபாங்கு பள்ளத்.
படம்: (மேல் இடமிருந்து, கடிகாரம் வாரியாக) இறுக்கமாக-ரோசெட் செய்யப்பட்ட மார்ப், கிரே மார்ப், ஓசலட் மார்ப், மெலனிஸ்டிக் வடிவம், இலவங்கப்பட்டை மார்ப் மற்றும் ஆசிய தங்கப் பூனையின் கோல்டன் மார்ப்.
பட கடன்: சாஹில் நிஜவன் / பாந்தேரா / ஏ.பி.எஃப்.டி.
தாக்கானது தான் உலகிலேயே ஒரு காட்டுப்பூனை இனத்தின் அதிக மாற்றுருக்களை, அதாவது ஆறு மாற்றுருக்களைக் கொண்டுள்ள நிலப்பரப்பு என்பது அறியப்பட்டுள்ளது. இவ்வாய்வானது ஈகாலஜி (Ecology) என்னும் ஆய்விதழில் ஆய்வறிக்கையாக பிரதியாகியுள்ளது. இது, சூழல்சார் மற்றும் மானிடவியல் சார் அணுகுமுறைகள் மூலம் திபாங்கு பள்ளத்தாக்கில் மனித-வனவிலங்கு இடைவினைகளை புரிந்துகொள்ள முனைந்த ஒரு மைய ஆய்வின் ஒரு பாகமே ஆகும்.
“உள்ளூர் மக்களின் உதவியுடன் திபாங்கு பள்ளத்தாக்கிலுள்ள இதூ மிஷ்மிக்கு சொந்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஒரு கணக்கெடுப்பில் ஈடுபட்டோம். ஆய்வாளர்களும் உள்ளூர் மக்களும் ஒன்றாக இணைந்து அறிவை வளர்த்துக்கொள்ளும் இந்த முயற்சி ஒரு புது செயல்முறையாகும். என் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் திபாங்கு பள்ளத்தாக்கின் இதூ உள்ளுர் மக்களும் இணை ஆசிரியர்களாகவே இருந்து வருகின்றனர்” என்கிறார் இவ்வாய்வின் முதன்மை ஆய்வாசிரியரான முனைவர் சாஹில் நிஜாவான்.
இவர் லண்டனின் விலங்கியல் சங்கம் (Zoological Society of London (ZSL)) மற்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் (University College London (UCL)) சார்ந்துள்ளார். திபாங்கு பள்ளத்தாக்கின் இதூ மிஷ்மி மக்கள் பொற்சாயற் பூனைகளை, குறிப்பாக அடர் தோல் கருமையுடனுள்ள மாற்றுருவானதை அதீத சக்திகளுடன் இருப்பதாக நம்புவதோடு இங்குள்ள எந்தவொரு பூனை இனத்தையும் வேட்டையாடாமல் பாதுகாத்து வருகின்றனர்.
ரூட்யார்ட் கிப்லிங்கின் தி ஜங்கிள் புக் கதையில் வரும் பாகீரா என்னும் கரும் சிறுத்தை நினைவில் உள்ளதா? கருப்பாக இருந்தாலும் அது இந்திய சிறுத்தைகளின் ஒரு நிற மாற்றுருவே ஆகும். அதுபோல ஒரே இனத்தின் தனி நபர்கள், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நிற மாற்றுருக்களை கொண்டிருக்கும் நிகழ்வு பலவுருத்தோற்றம் (polymorphism) என்று அழைக்கப்படுகிறது. சிறுத்தைகள், ஆசிய பொற்சாயற் பூனைகள், ஆப்பிரிக்க பொற்சாயற் பூனைகள் மற்றும் ஆன்சில்லா போன்ற பூனை இனங்கள் இந்த பலவுருத்தோற்றத்தினால் பெரிதும் பயனடைகின்றன. இரை விலங்குகளை ஏமாற்றி வேட்டையாடவோ தங்கள் கொன்றுண்ணிகளை ஏமாற்றித் தப்பிக்கவோ இவ்வினங்கள் இந்த தோற்றுருக்களை உருமைத்தோற்றங்களாக (camouflage) பயன்படுத்துகின்றன.
ஆசிய பொற்சாயற் பூனைகள் (காடொபுமா டெம்மிங்கீ (Catopuma temminckii)) வடகிழக்கிந்தியா, மியான்மார், வங்கதேசம், சீனா மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படும் இடைநிலை அளவிலான காட்டுப்பூனைகளாகும். பசுமை மாறாக்காடுகள், புதர் மற்றும் இரண்டாம் நிலைக்காடுகளில் துவங்கி, அதிக உயரமுள்ள மலைப்பகுதிகள் வரை பரந்த வாழ்விட எல்லைகளை இப்பூனைகள் கொண்டுள்ளன. பறவைகள், ஊர்வன விலங்குகள் மற்றும் சிறு பாலூட்டிகளை இவை வேட்டையாடக்கூடியவை. சமீபத்திய ஆண்டுகளில், வாழ்விட இழப்பின் காரணத்தால், இப்பூனைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இவை தற்போது “அச்சுறுத்தலுக்கு அருகிலிருக்கும்” (Near Threatened) சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பொற்சாயற் பூனைகள் மற்றும் பல விலங்கினங்கள் திபாங்கு பள்ளத்தாக்கின் சமூகங்களுக்கு சொந்தமான வனப்பகுதிகளிலேயே அதிக அடர்த்தியுடன் காணப்படுகின்றன என இங்கே மேற்கொள்ளப்பட்ட முந்தைய ஆய்வுகள் ஆவணப்படுத்தியுள்ளன. இந்த நிலப்பரப்பில் கட்டப்படவிருக்கும் 15க்கும் மேற்பட்ட நீற்திறன் உற்பத்தி அணைகள் போன்ற திட்டங்களின் விளைவால் பெரிதும் பாதிக்கப்படப்போவது இதுபோன்ற அதிகம் அறியப்படாத சமூக வனப்பகுதிகளே ஆகும்.
இவ்வாய்வு இப்பூனைகளின் ஆறு வகை நிற உருபுகளை (colour morphs) கண்டறிந்துள்ளது. அவை “பொன்னிறம்”, “சாம்பல் நிறம்”, “தோல்கருமை”, “ஓசிலாட்” (புள்ளிகளுடனானவை), “இலவங்கம்”, மற்றும் “இருக்கமான-ரோஜாவிதழ்” (ரோஜாவிதழ் போன்ற உருவப்படிமத்துடனான ஒரு அடர் உருபு) ஆகும். இதில் “இருக்கமான ரோஜாவிதழ்” உருபானது உலகில் முதல் முறையாக இவ்வாய்வே கண்டுபிடித்துள்ளது.
சுவாரசியமாக, கண்டுபிடிக்கபட்டுள்ள இந்த ஆறு நிற உருபுகளும் வெவ்வேறு உயரங்களில் காணப்பட்டுள்ளன. வடிவங்களுடன் கூடிய உருபுகளான ஓசிலாட் மற்றும் இருக்கமான-ரோஜாவிதழ் உருபுகள் அதிகமாக 3000 மீட்டர் உயரத்திற்கு மேலேயேயும், ஒரு நிற உருபுகளான இலவங்கம், பொன்னிறம் மற்றும் தோல் கருமை வகை உருபுகள் 1700 மீட்டர் உயரத்திற்கு கீழ் மட்டுமே காணப்படுகின்றன. மேலும், சாம்பல் நிறம் மற்றும் வடிவங்களுடன் கூடிய உருபுகள் இரவுவாழ் விலங்குகளாகவும், ஒரு நிற உருபுகள் அனைத்தும் பகல் வாழ் விலங்குகளாகவும் விளங்குகின்றன. இதன் மூலம் இந்த நிற மாற்றுருக்களின் நடத்தைப் பண்புகளிலும் கணிசமான வேற்றுமைகள் இருப்பது புலனாகிறது.
“முந்தைய ஆய்வாளர்கள் இந்த மாற்றுருக்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வாழ்விடங்களை விரும்பி தேர்ந்தெடுத்து வாழலாம் என ஊகித்திருந்த நிலையில், இவ்வாய்வானது அதை முதல் முறையாக ஆதாரங்களுடன் உறுதி செய்கின்றது” என்கிறார் முனைவர் நிஜாவான்.
இந்த வெவ்வேறு நிற மாற்றுருக்கள் இப்பூனைகளிற்கு பல்வேறு சூழல் சார் பயன்களை வழங்குவதோடு அவற்றை பல்வேறு வாழ்விடங்களிற்கு தகவமத்துக்கொள்ளவும் உதவுகின்றன என ரிசர்ச்சு மேட்டர்சுவிற்கு அளித்த நேர்காணலில் இவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறம் மற்றும் வடிவங்களுடனான தோல்கள் இப்பூனைகளிற்கு வேட்டையாட உதவக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறைந்த உயரமுள்ள பசுமை மாறா வனப்பகுதிகளில் ஊர்வனவிலங்குகள், மற்றும் எலிகள் போன்ற கொறித்துண்ணிகளையும் அதிக உயரமுள்ள பனிநிலை புதர்க்காடுகளில் இமாலய பீக்கா போன்ற சிறு எலிகளையும் உருமைத்தோற்ற (camouflage) யுக்தியினை பயன்படுத்தி வேட்டையாட இப்பூனைகள் இவ்வகை தோற்றங்களை பயன்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் இப்பூனைகளில் வாழ்விடப் பகுதிகளில் காணப்படும் சிறுத்தைகள், புலிகள், செந்நாய்கள் போன்ற பெரிய கொன்றுண்ணிகளிடம் இருந்து தப்பிக்கவும் இந்த தோல் வடிவங்கள் இப்பூனைகளிற்கு உதவக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“கிழக்கு இமயமலை போன்ற போட்டிகள் நிறைந்த ஒரு சூழலில் வாழுவதற்கு தேவையான தகவமைப்புகளையே பொற்சாயற் பூனைகள் வெளிப்படுத்துகின்றன. இங்கே வாழக்கூடிய இதர பலவுருத்தோற்ற உயிரிகளும் இது பொருந்தக்கூடும்” எனக் கூறுகிறார் முனைவர் நிஜாவான். இது உன்மையானால், அதிக போட்டிகளும் வாழ்விட வேற்றுமைகளும் இருக்கும் எந்தவொரு சூழலிலும் இதுபோன்ற பலவுருத்தோற்றங்கள் இருக்குமா? “பொற்சாயற் பூனைகளை மையமாக கொண்ட இந்த குறிப்பிட்ட ஆய்வானது, அதற்கு துணைநிற்கும் சில அறிகுறிகளை நமக்கு காட்டியுள்ளாது. இருப்பினும் இந்த கருதுகோளை ஆராய இன்னும் பலவகை தரவுகள் தேவைப்படுகின்றது” என அவர் கூறுகிறார்.
“தற்போதைய நிலையில் இந்த அனைத்து மாற்றுருக்களும் தங்களுக்குள் இனைச்சேர்கின்றன என நாங்கள் நம்புகின்றோம். எனினும் ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்த இனைச்சேர்க்கை தடைபட்டால் இவை ஒவ்வொன்றும் தனித்தனி உள்ளினங்கள் அல்லது சிற்றினகளாக பிரிவதற்கு அதுவே ஒரு துவக்கமாக அமையக்கூடும்”, எனக்கூறி, எதிர்கால ஆய்வுகளின் சாத்தியக்கூறுகளுக்கான சிறு நினைவுக்குறிப்புடன் விடைபெற்றார் முனைவர் நிஜாவான்.