முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

சிவப்பு நண்டுகளின் சிலிர்க்கவைக்கும் இடப்பெயர்வின் கத

Read time: 1 min 5 மேய், 2022 - 18:35

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ்  தீவுகளில் பிற இடங்களைப்போல் விலங்குகள்-கடக்கும் பாதைகள் உள்ளன. ஆனால், அங்கே அந்தப் பாதைகளைக் கடப்பது எச்சரிக்கை பலகைகளை வாசித்துவிட்டு சாதாரணமாக கடந்துசெல்லக்கூடிய எளிதான காரியம் இல்லை. மாறாக, போக்குவரத்து சீரமைப்பு, பொது அறிவுப்புகள், நிரந்தர பாலங்கள் என பல ஏற்பாடுகள் தேவை! இது அங்கே கூட்டமாகச் சாலைகளைக் கடந்து செல்லக்கூடிய நண்டுகளை வழியனுப்ப மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள். இந்தக் கண்கவர் நிகழ்வு வருடந்தோறும் நிகழும் ஓர் இயற்கையின் விந்தையாகும்.

இந்தத் தீவானது கிகார்கொய்டியா நாடாலிசு (Gecarcoidea natalis) என்னும் அழகுமிகுந்த சிவப்பு நிற, நிலத்தில் வாழும் நண்டுகளின் ஒரே வாழ்விடமாகும். நிலத்தில்  லட்சக்கணக்கில் தனியாக வாழக்கூடிய கூச்ச சுபாவம்  மிகுந்த இந்த ஓட்டுடலி உயிரிகள் பெரும்பாலும் காய்ந்த இலைதழை, பொந்துகள், வெடிப்புகள், மற்றும் தோட்டங்களில் வாழக்கூடியவை. இவை விதைகள், இலைகள்,  இறந்த விலங்குகளின் உடல் போன்றவற்றை உட்கொண்டு இந்தத் தீவின் சூழலியலைச் சமநிலையில் வைத்துக்கொண்டு வருகின்றன. 

ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இந்தத் தீவில் மழைக்காலம் ஆரம்பித்துவிடும். அப்போது ஆண் நண்டுகள் தங்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவந்து கடலைநோக்கிய ஒரு கடினமான பயணத்தைத் துவங்கிவிடுவர். இதற்குப் பின் ஆண்களின் இந்தப் பிரம்மாண்ட கூட்டத்தில் பெண் நண்டுகளும் இணைந்து திரளாக வெளியேற ஆரம்பித்துவிடுவர். இந்த நிகழ்வு நிலவு சார்ந்த மாற்றங்களுடன் சீராகவும் துல்லியமாகவும் ஒத்திருப்பது கூடுதல் விந்தை.

தீவின் நகர்ப்புற சாலைகளைக் கடந்து கடற்கரையை அடைய நண்டுகள் சுமார் 7 முதல் 9 நாட்கள் வரை எடுத்துக்கொள்கின்றன. இந்தப் பயணப்பாதையில் பருவநிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த நண்டுகள் தங்கள் பயணத்தைச் சற்று நிறுத்தி ஒரு சிறு மகிழுலா செல்லவும் தயங்குவதில்லை. ஆண்களே கடற்கரையை முதலில் அடைகின்றன. பின்னர் கடல்நீரில் ஒரு புத்துணர்வு குளியல் போட்டுவிட்டு  பொந்துகளைத் தோண்ட துவங்கிவிடுகின்றன. இது நிகழும்போதே பெண் நண்டுகள் கடற்கரையை அடைந்து, குளியலை முடித்து இணைசேர ஆண்களின் பொந்துகளைச் சென்றடைகின்றன. இனப்பெருக்கத்திற்குப் பின் ஆண்கள் மீண்டும் ஒரு சிறு குளியலுக்குப் பிறகு  திரும்பி தீவுக்குள்ளான பயணத்தைத் துவங்கிவிடுகின்றனர்.

ஆனால், பெண் நண்டுகள் அந்தப் பொந்துகளுக்குள்ளேயே இருந்து தங்கள் வயிற்றின் வெளிப்புறப் பையில்   சுமார் 100000 முட்டைகளை அடைகாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இந்த நிகழ்வு  சுமார் 2-3 வாரங்களுக்குத் தேய்பிறை அரை நிலவுகாலம்வரை தொடர்கிறது.  பின்னர், விடியலுக்குச் சற்று நேரத்துக்கு முன்னே  இந்த நண்டுகள் கீழிறங்கி வந்து சிற்றலைகளால் தள்ளப்பட்டு சற்றே குதித்து நீரில் தங்களின் முட்டைகளை விடுவிக்கின்றன. இதற்குப் பின் அவை நீரில் மெதுவாக நீந்தி வந்து கரையை எட்டியப் பின் தங்களின் வாழ்விடம் நோக்கி தீவினுள் பயணப்படத் துவங்கிவிடுகின்றன.

விடுவித்தவுடனே முட்டைகள் பொரிந்துவிடுவதோடு புழு பருவத்தில் இருக்கும் குஞ்சுகள்  ஒரு மாதக் காலம் அங்கேயே இருக்கின்றன. ஓர் இறால்-போன்ற நிலையை அடைந்த பின்னர் இவை கரையை நோக்கி நீந்தி வந்து சுமார் 5-மில்லிமீட்டர் அளவிலான சிறு நண்டுகளாக மாற்றம் அடைகின்றன. பின்னர் இச்சிறு நண்டுகள் சற்றும் தாமதிக்காமல் தீவை நோக்கிய ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துவிடுகின்றன. தீவினுள் இவை சிறு குகைபோன்ற வாழ்விடங்களை அமைத்து மறைவாக அடுத்த 3 முதல் 4 வருடங்களைக் கழித்து, பின்னர் முதிர்ந்த நண்டுகளாக வளர்ச்சிஅடைகின்றன.

துல்லியமான காலக்கணிதம், உயிரைப் பணயம் வைத்த பயணங்கள் என பல அதீத முயற்சிகளைத் தங்களின் அடுத்த தலைமுறைகளுக்காக இந்த நண்டுகள் மேற்கொண்டாலும் இவற்றின் புழு பருவக் குஞ்சுகள்  கடலில் இருக்கும் அந்த ஒரு மாதக் காலத்தில் பெருமளவு இரையாகின்றன.  இருப்பினும் சில வருடங்களுக்கு ஒரு முறை, பெரும் எண்ணிக்கையில் உயிர்பிழைத்த நண்டுகள் நிலத்துக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன.  இந்த இயற்கை நிகழ்வுகள் தானாகவே இந்த நண்டுகளின் எண்ணிக்கையை இந்தத் தீவினுள் கட்டுக்குள் வைத்து வருகின்றன.