முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

அழிவு நிலையில் இருக்கும் இந்தியாவின் வெண்-வயிற்று நாரைகள்! எச்சரிக்கின்றது அப்பறவைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு

Mysore
10 டிச 2020
அழிவு நிலையில் இருக்கும் இந்தியாவின் வெண்-வயிற்று நாரைகள்! எச்சரிக்கின்றது அப்பறவைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு

நிழற்படம்: சாகர் கோசாவி

“நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்………..”
-நாரைவிடு தூது

குமரியிலிருந்து வடக்குநோக்கி வலசை செல்லும் ஒரு இணை “நாரைகள்” வாயிலாக மதுரைக்கு வேலை நிமித்தமாக வந்த ஒருவன் வடநாட்டில் வசிக்கும் தன் மனைவிக்கு தன் நிலைப்பற்றியத் தூதினை விடுப்பதாக ஒரு சிற்றிலக்கியம் படைத்துள்ளார் சத்திமுத்தப்புலவர். சங்ககாலம் துவங்கி சிற்றிலகியங்கள் தொட்டு, இன்றும் மதுரையின் ஆவணி மூலத்திருவிழாக்களில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் இலக்கியப்பறவைகளாக நாரைகள் இருந்து வருகின்றன. ஆனால் இமய மலைகளில் வாழும் ஒரு வகை நாரைகளின் நிலை கவலையளிக்கும் விதத்தில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?

உலகின் நாரை இனங்கள் அனைத்திலும் இரண்டாம் பெரிய இனமாக விளங்குவது வெண்-வயிற்று நாரைகள்.  ஆர்டியா இன்சிக்னிசு (Ardea insignis) என்னும் அறிவியல் பெயர்க்கொண்ட இது வடகிழக்கு இந்தியா, பூட்டான், வடமேற்கு மியான்மர் மற்றும் சீனாவில் காணப்படும் ஒரு சிறப்புமிக்க பறவையாகும். நதிக்கரை சார் பறவையான இது, “மிகவும் அருகிவரும்” இனமாக சர்வதேச இயற்கை வளங்காப்பு ஒன்றியத்தின் செம்பட்டியலில் (IUCN Red list) வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பறவையின் வாழிடங்களில் நிகழ்த்தப்படும் அதீத மீன்ப்பிடிப்பு, சுரங்க வேலைகள் மற்றும் அணைக்கட்டுமானங்கள் போன்ற மனித நடவடிக்கைகளே இப்பறவைகளை இந்நிலைக்கு தள்ளிய காரணிகளாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

இப்பறவைகளைப் பாதுகாக்க வேண்டுமாயின், இயற்கை சூழலில் எத்தனை பறவைகள் இருக்கின்றன என்னும் எண்ணிக்கையை முதலில் நாம் அறிய வேண்டும். முதல் முறையாக வெண்-வயிற்று நாரைகளுக்கான அத்தகைய ஒரு  கணக்கெடுப்பினை பெங்களூருவின் இயற்கை வளங்காப்பு அறத்தளத்தைச் (Nature Conservation Foundation (NCF))  சார்ந்த ரோகன் மென்சிஎசு, மேகா ராவ் மற்றும் ரோகித் நானிவாடெகார் முன்னெடுத்துள்ளனர். இந்தியாவின் கிழக்கு இமயமலை பகுதிகளில் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பானது வனவுயிர் வளங்காப்பு அறக்கட்டளை (Wildlife Conservation Trust,), ரவி சங்கரன் அறத்தளம் (Ravi Sankaran Foundation) மற்றும் ருஃப்பர்டு குறுநல்கை (Rufford Small Grants for Nature Conservation) போன்ற அமைப்புகளின் நிதிநல்கையுடன் நடந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் பேர்ட் கன்சர்வேசன் இன்டர்னேசனல் (Bird Conservation International) என்னும் பறவையியல் ஆய்விதழில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ஆராய்ச்சிக்காக அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமின் மானாசு தேசியப் பூங்கா முழுவதுமுள்ள 81 இடங்களில் ஆய்வாளர்கள் இந்த பறவையைக் கணக்கெடுத்துள்ளனர். இந்தியாவில் இவ்வகை நாரைகள் பற்றிய பெரும்பாலான தகவல்கள்  நமக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் நாம்தாப்பா புலிகள் காப்பகத்திலிருந்துதான் இதுவரை கிடைத்துள்ளன. இந்த நாரைகள் வாழ ஏற்றதாக விளங்கும் பல நதி வடிகால்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளதால் இப்பறவைகளின் உலகளாவிய பரப்பளவின் மூன்றில் ஒரு பங்கினை இம்மாநிலம் கொண்டுள்ளதாக ஒரு காலத்தில் கருதப்பட்டது.

தற்போதைய கணக்கெடுப்பின் மூலம், வெண்-வயிற்று நாரைகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதும் பின்னர் அவற்றை நாரைகள் இல்லாத இடங்களுடன் ஒப்பிடுவதுமே  ஆய்வாளர்களின் நோக்கமாக இருந்துள்ளது. இக்குறிக்கோளுடன் களம் இறங்கிய ஆய்வாளர்களுக்கு ஆறுகளும் மலைகளும் நிறைந்த வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் களப்பணி ஆற்றுவது ஒரு பெரும் சவாலாக திகழ்ந்துள்ளது. இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் 2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2018 ஏப்ரல் வரை அருணாச்சலப் பிரதேசத்திலும் 2019 சனவரியில் அசாமிலும்  அவர்கள் இந்தப் பறவையினத்தின் கணக்கெடுப்பை நிகழ்த்தியுள்ளனர்.

“இப்பறவைகளை பாதுகாக்க வேண்டுமாயின் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அறிவியல் வட்டாரத்திலும் இப்பறவைகள் குறித்து ஒரு ஆர்வத்தை உருவாக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது” என்று இதுபோன்ற கணக்கெடுப்புகளின் தேவையை விவரிக்கிறார் மேகா.

நதிகளை ஒட்டிய சுமார் 101.3 கி.மீ பகுதிகளைச் சுற்றி இருந்த இருபத்தி மூன்று தனித்துவமான வட்டாரங்களிலுள்ள 81 குறிப்பிட்ட இடங்களிலும் நாரைகள் வாழக்கூடிய பகுதிகளை ஆய்வாளர்கள் கணகெடுத்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் உள்ளும் வெளியும் இவர்களின் கணக்கெடுப்பு எல்லைகள் நீண்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் இவர்கள் பறவைகள் இருக்கின்றனவா என்பதை குறித்துள்ளனர். மேலும் கடல் மட்டத்திலிருந்து அத்தளத்தின் உயரம், அங்கே ஓடும் ஆற்றின் அகலம் மற்றும் நீரோட்டம், ஆற்றங்கரையில் இருப்பது பாறைகளா அல்லது மணலா என்றும், அப்பகுதிகளில் சுரங்கவேலைகள், மீன்பிடிப்பு, குப்பைக்கொடுதல் அல்லது பாறை உடைத்தல் போன்ற பறவையின் வாழ்விற்கு அச்சுறுத்தலைத் தரக்கூடிய நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளனவா போன்றத் தரவுகளையும் சேகரித்துள்ளனர். மேலும் இந்த அரிய வகை நாரைகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை அந்நிலப்பரப்புகளைப்பற்றி நன்கு அறிந்த அவ்வூர் மக்களின் உதவியோடு ஆய்வாளர்கள் திரட்டியுள்ளனர்.

“ஆற்றை அதிகம் பயன்படுத்தும் அவ்வூர் மக்களுக்கு அப்பகுதியின் உயிர் பல்வகைமை குறித்த புரிதல் நன்றாகவே இருந்தது. அருகிவரும் நாரைப்போன்ற இனங்களின் நிலையை கண்டறிய அம்மக்களின் அறிவு மிகவும் உதவியாக இருந்தது” என்கிறார் ரோகித்.

கணக்கெடுக்கப்பட்ட பகுதிகளில் ஆறு முறை ஆய்வாளர்கள் வெண்-வயிற்று நாரைகளை நேரடியாக பார்த்துள்ளனர். இவ்வனைத்துமே நாம்தாப்பா புலிகள் காப்பகத்திற்குள்ளே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஐந்து முறை அவர்கள் ஒரு தனிப்பறவையையும்  ஒரு முறை இணைப் பறவைகளையும் கண்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமின் மற்ற எந்தப்பகுதியிலும் பறவைகளை நேரடியாக ஆய்வாளர்களால் காணமுடியவில்லை. அவ்வூர் மக்களிடம் இப்பறவைகளின் நடமாட்டம் குறித்து கேட்ட போது பெரும்பாலானோரால் அவற்றை இனம்காண முடியவில்லை. இது அப்பகுதிகளில் அப்பறவையினம் இல்லை என்பதை குறிக்கின்றது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் சிலர் அப்பறவைகளை கண்டதாகவும் அவற்றை காண்பது மிகவும் அரிதானது எனவும் கூறியுள்ளனர். கடந்த ஓராண்டு கணக்கெடுக்கப்பட்ட 23 இடங்களில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே இந்நாரைகள் இருப்பதாக தெரியவந்தது. அவ்விரு இடங்கள், நாம்தாப்பா புலிகள் காப்பகம் மற்றும் அசாம்-அருணாச்சலப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள டி’எர்ரிங்கு வனவுயிர் சரணாலயமும் ஆகும்.

நாம்தாப்பா புலிகள் காப்பகத்துள் மட்டும் இந்நாரைகள் காணப்படுவதின் காரணம் என்ன? “காப்பகத்தின் உட்பகுதிகளில் மட்டும் அதிகமாகவும், வெளிப்பகுதிகளில் அரிதாகவும் நாரைகள் காணப்படுவதற்கான காரணம் என்னவென்று இன்னும் சரியாக தெரியவில்லை. இதற்கான விடையை நாம் பலகோணங்களில் அனுகலாம்” என்று ஒரு உத்தேச காரணிகளை பட்டியலிடுகிறார் ரோகித். “காப்பகத்தின் உள்ளே வேட்டை நிகழ்வுகள் குறைவாக இருப்பதோ, காப்பகத்தின் உள்ளே ஓடும் நதிகள் நாரைகளிற்கு தேவையான பல வகையான மீன் இனங்களை அதிகம் கொண்டுள்ளதனாலோ அவை உள்ளே அதிகம் காணப்படலாம். அங்கே உள்ள இதர நதிகளிலுள்ள மீன் இனங்களின் நிலைப்பற்றி இன்னும் நமக்கு தெரியாது. ஆனால் இப்பகுதிகளில் வெடிவைத்து, நஞ்சூட்டி, மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்கும் அழிவுப்பூர்வமான உத்திகளை மக்கள் பயன்படுத்துவதை நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இதுபோன்ற நடவடிக்கைகள் மீன் எண்ணிக்கையை குறைப்பதோடு அவற்றை சார்ந்து வாழும் இந்த அரியவகை நாரைகளையும் பெரிதும் பாதிக்கக்கூடும்” என விவரித்தார் ரோகித். நாரைகள் காணப்படும் மற்றும் காணப்படா நதிக்கரைகளை ஒப்பிட்டு எதிர்காலத்தில் ஆய்வுகள் மேற்கொண்டால் அவை ஏன் நாம்தாப்பா புலிகள் காப்பகத்திற்கு வெளியே அரிதாக காணப்படுகின்றன என்பதை நாம் அறியக்கூடும்.

நதிகளை ஒட்டிய பகுதிகளில் சுரங்க வேலைகளோ அல்லது குப்பைக்கொட்டுதலோ பாதுகாக்கப்படாத பகுதிகளை விடக் காப்பகதற்குள் குறைவாகவே இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் நாம்தாப்பாவின் உயரம் பிறப்பகுதிகளை விடக்குறைவாக இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதை வைத்து இப்பறவைகள் குறைந்த உயரங்களைத்தான் விரும்புகின்றன என நம்மால் கூறமுடியாது. “பூட்டானில் வெண்-வயிற்று நாரைகள் குறிப்பிடத்தக்க அதிக உயரங்களிலும் காணப்படுகிறது. இந்தியாவில் அவற்றைப்பற்றிய தரவுகள் குறைவாக இருப்பதால் நம்மால் அவற்றின் வாழ்வு நிலையைத் தற்போது கூறமுடியாது.  ஆனால் நாங்கள் அவற்றை நாம்தாப்பாவில் மட்டுமே கண்டோம்” என்கிறார் ரோகன்

“இப்பறவையின் பரவல் எல்லைகள் மற்றும் நடத்தைப்பண்புகளை எடுத்துக்கொண்டோமானால், அவை மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் காணப்படுவதில்லை. ஆனால், நாம்தாப்பாவில் ஒரு பழங்குடி சமூகத்தின் வாழ்விடத்தின் அருகில் இவை பல காலமாக ஒருங்கே வாழ்கின்றன” என்கிறார் மேகா.

கிழக்கு இமயமலைகளின் இந்தியப்பகுதிகளில் இந்நாரைகள் அழியும் நிலையில்தான் தற்போது இருந்துவருகின்றன. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலும் சிறியக்குழுக்களில் மட்டுமே இங்கே காணப்படுகின்றன. தற்போதைய நிலையில், காயம், நோய் அல்லது இரையாக கொன்றுண்ணிகளால் கொல்லப்படுதல் போன்ற இயற்கை காரணிகளால் ஏதேனும் ஒரு பறவை இறந்தாலும்கூட அது இந்த இனத்தின் விரிவாக்கத்திற்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும்.

பறவைகள் குறைவாக காணப்பட்டதற்கு இப்பகுதிகளின் அனைத்து இடங்களிலும் கணக்கெடுப்பு நடத்தபடாததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், மனித நடவடிக்கைகள் அவற்றின் எண்ணிக்கை மீது அதீத தாகத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நம்மால் மறுத்துவிட முடியாது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள அணைக்கட்டுத்திட்டங்கள் இங்கே ஓடும் நதிகளின் இயற்கை போக்கை பெரிதும் மாற்றியமைக்கக் கூடியவை. இதனால், வருங்காலத்தில் இப்பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும்  அவற்றின் இயற்கை வாழ்விடங்கள் சிறிய பரப்பளவுகளிலும் மற்றும் சில சிறு பகுதிகளாக சிதறியுமே இருக்கும். நாம்தாப்பா போன்ற தனித்துவமான நிலப்பரப்புகளில் தற்போது வாழும் இப்பறவைகளின் ஒரு குழுவையாவது காக்கவேண்டுமானால், இவற்றின்  சூழலியலை பற்றிய ஆய்வுகளோடு சேர்ந்து உடனடி பாதுகாப்புத் திட்டங்களை வகுப்பதும் தற்போது அவசியமாகிறது. இவ்வாறு செய்தால் இந்த நாம்தாப்பா குழு, இப்பறவைகளுக்கான ஒரு மூலக்குழுவாக திகழ்ந்து அவை எதிர்காலத்தில் இச்சுற்றுவட்டாரத்தில் பல்கிப்பரவும் வாய்ப்புகள் உள்ளது.  

இந்தியாவில் இப்பறவைகளின் வாழ்வியலை பாதிக்கக்கூடிய ஆபத்துக்களைப்பற்றி அறிய ஒரு நீண்டகால கண்காணிப்புத் திட்டம் தேவை  என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

“நாம்தாப்பாவிலுள்ள வெண்-வயிற்று நாரைகளின் சூழலியல்  மற்றும் பாதுகாப்புத் தேவைகள் குறித்தப் புரிதலை அதிகரிக்கும் வகையில் ஒரு ஆய்வுத்திட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியில் நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம்” எனக்கூறி விடைப்பெறுகிறார் ரோகித்.  நாம்தாப்பாவைத்தவிர இப்பறவைகள் ஏன் பிறப்பகுதிகளில் காணப்படுவதில்லை என்பதை கண்டறியும் ஆய்வுகள் தேவை என நினைக்கும் இக்குழு அதுகுறித்தத் திட்டங்களுடன் இந்த அரிய பறவையினத்தின் காக்கும் திட்டத்தை நோக்கி நகர்கின்றது. 

Tamil